ஊருக்கு (சென்னை) வெளியே ஒதுக்கப்பட்டு, வறண்ட நிலத்தில் தனித்து விடப்பட்ட இந்த 10 ஆண்டுகளில், கண்ணெதிரே நடந்த கொலைகள் எத்தனை? வேலை வாய்ப்பற்ற வறுமையில் செய்து கொள்ளப்பட்ட தற்கொலைகள் எத்தனை? வெகுதூரம் வீசியெறியப்பட்டதால், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய பிள்ளைகள் எத்தனை? அள்ளப்படாத குப்பைகள், அகற்றப்படாத கழிவுகளால் விஷக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகள் எத்தனை? அடிப்படை வசதி கேட்டு அடி உதைபட்டு நடத்திய போராட்டங்கள் எத்தனை? மருத்துவமனை இல்லாததால், ஜி.எச்.க்கு போகிற வழியிலேயே இறந்துபோன அப்பாவி உயிர்கள் எத்தனை? குடிக்கவே தண்ணி இல்ல, கழுவ எங்கே போவதென்று கழிப்பதையே தள்ளிப்போட்ட கஷ்டங்கள் எத்தனை? வீட்டு வேலைக்கு போகும் அம்மாவோடு விடியற்காலையிலேயே பள்ளிக்கு ஓடும் பிஞ்சுகளின் அவலங்கள் எத்தனை? மழைக் காலங்களில் வெள்ளம் சூழ்ந்த இருளில் – உயிரை கையில் பிடித்துக் கொண்டு உறைந்து கிடந்த நாட்கள் எத்தனை? பெண் கொடுத்து, பெண் எடுக்கும் தருணங்களில், கண்ணகி நகர் என்றதும் "குற்றவாளியாய்' பார்க்கப்படும் இழிவுகள் எத்தனை? குப்பை பொறுக்கி, பிச்சையெடுத்து வயிற்றைக் கழுவும் வேதனைகள் எத்தனை? எத்தனை... எத்தனை... எத்தனை முறைதான் சொல்லிக் கொண்டிருப்பது என கொதித்தெழுகின்றனர் கண்ணகி நகர், செம்மஞ்சேரி மக்கள்.

கண்ணகி நகர்“புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் பகுதியில் உள்ள கூவம் கரையில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் அழகிய பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. லாங்ஸ் கார்டன் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 1,028 குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு ஒக்கியம் துரைப்பாக்கத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் அவர்கள் மகிழ்ச்சி பெறும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆறு ஆண்டுகளில் கூவம் ஆறு முழுமையாக சீரமைக்கப்படும்'' – என்று கூவம் நதிக்கரை ஓரத்தில் உள்ள பூங்காவை திறந்து வைத்து துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார் ("தினத்தந்தி' – 5.8.2010).

கூவம் கரையோர குடிசைகளில் வசித்து வரும் 5 லட்சம் சேரி மக்களையும் இன்னும் 6 ஆண்டுகளில், முழுமையாக சென்னையை விட்டே துரத்திவிடுவோம் என்று அப்பட்டமாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

காஞ்சிபுரம் மாவட்டம் – துரைப்பாக்கம் ஊராட்சி, மழை நீர் தேங்கி நிற்கும் ஆபத்தான நீர்பிடிப்பு நிலம். துரைப்பாக்கம் சாதி இந்து குடியிருப்புகளின் கொல்லைப்புற திறந்த வெளியில்... 1997 ஆம் ஆண்டு மூன்றாயிரம் குடியிருப்புகளை (ஒவ்வொன்றும் 150 சதுர அடி) கட்டியது தமிழ் நாடு குடிசை மாற்று வாரியம். அதை 3.2.2000 அன்று முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். அதுதான் கண்ணகி நகர். அந்த மக்களின் மொழியில் சொல்வதானால், "காறிமூஞ்ச கண்ணகி நகர்.' ஆளும் வர்க்கங்களின் வீட்டு கழிவறை அளவில் கட்டப்பட்டுள்ள தமிழ் நாடு குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள், இன்று 15 ஆயிரத்து 566 குடியிருப்புகளாக வளர்ந்து, சென்னை நகரின் மிகப் பெரிய நவீன சேரியாக விரிவடைந்து வருகிறது. புதிதாக 10 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளும் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சென்னை நகரின் மய்யப் பகுதிகளில் இருந்த 64 சேரிகளை (குடிசைப் பகுதிகளை) இடித்துத் தள்ளி, அங்கு வாழ்ந்து வந்த நகர்ப்புற கூலிகளான இம்மண்ணின் பூர்வகுடி மக்களை இந்த கண்ணகி நகரில்தான் அடைத்து வைத்துள்ளனர். ஒரு கோடியே 35 லட்சம் ரூபாயில் புதுப்பேட்டையில் பூங்கா அமைத்த அரசு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, கண்ணகி நகரில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்கு எத்தனை கோடிகள் ஒதுக்கியிருக்கிறது என்பதை அறிவிக்குமா?

“மொத்தம் 1,300 குடும்பங்க. நாங்க எல்லோருமே எஸ்.சி.ங்க. குடிக்க தண்ணி இல்லிங்க. 4 நாளைக்கு ஒருமுறைதான் தண்ணீர் உடுறாங்க, ரோடு வசதி இல்ல, சாக்கடை சுத்தம் பண்றதில்ல, அதனால ஒரே கொசுத் தொல்லை, நாங்க இங்க வந்து ஒன்றரை வருசமாகுது. இன்னைய வரைக்கும் கரண்ட் இல்லீங்க, வாடகை கரண்ட்லதான் இருக்குறோம். இங்கேயிருந்து 2 பஸ் மாறி புதுப்பேட்டை இஸ்கூலுக்கு எங்க புள்ளைங்க போகுதுங்க. அதுக்கு ஏத்த பஸ்சும் இல்ல, இதனாலேயே பாதிப் பசங்க ஸ்கூலுக்கு போறதயே விட்டுட்டாங்க'' என்கிறார் சுகன்யா.

"டெய்லி வெட்டு குத்து, சண்டை நடக்குது. நாங்க நிம்மதியா வாழ முடியலை' என்கின்றனர், புதுப்பேட்டையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட கண்ணகி நகர் மக்கள். வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை என அப்பகுதியில் வாழ்ந்ததற்கான முறையான ஆவணங்கள் வைத்துள்ளவர்களுக்கு வீடு ஒதுக்காமல், சமூக விரோதிகளிடம் பத்தாயிரம், இருபதாயிரம், நாற்பதாயிரம் என லஞ்சம் வாங்கிக் கொண்டு அப்பகுதியில் வசிக்காதவர்களுக்கு, அரசியல்வாதிகள் வீடு ஒதுக்குவதை சுட்டிக்காட்டி குமுறி தீர்த்தனர், வீடு கிடைக்காத மக்கள்.

இந்த முறைக்கேட்டை தட்டிக் கேட்டவர்களின் குடும்ப அட்டையில் பச்சை மையில் "ரிஜக்ட்' என்று எழுதியுள்ளனர் பொதுப்பணித் துறை அதிகாரிகள். அதனால் எந்தப் பொருளும் கிடைக்காமல் குடும்ப அட்டையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் புதுப்பேட்டை தலித் மக்கள். “இந்த ஒன்றரை வருசமா நாங்க போய் பார்க்காத ஆபிசர் இல்ல, கொடுக்காத மனு இல்ல. கலெக்டர், தாசில்தார், சி.எம். செல், பொதுப்பணித்துறை, ஸ்லம்போர்டுன்னு எல்லா இடத்துலயும் மனு கொடுத்துட்டோம். யாரும் எதுவும் கண்டுக்கல. அலைஞ்சதுதான் மிச்சம். உங்கள மாதிரி பத்திரிகைகாரங்க கிட்டேயும் சொல்லி சொல்லி ஓய்ஞ்சு போய்ட்டோம். எங்களுக்கு வீடு கிடைக்க வழி பண்ணுங்க'' என்று அனைத்து ஆவணங்களையும் கையில் வைத்துக் கொண்டு பேசுகிறார், பூவிழி.

“வீடு அலாட்மன்ட் பண்ணும்போது 1,350 ரூபாய் வாங்குனாங்க, மாசம் 300 ரூபாய் வாடகை கட்டுறோம், மெயின் ரோட்டுல இருக்குற ஸ்கூல்ல, (ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி) "கண்ணகி நகர்'னா பிள்ளைங்கள சேர்த்துக்க மாட்டேன்னுறாங்க, கண்ணகி நகர்ன்னா எந்த வேலையும் தரமாட்டேன்னுராங்க, அப்புறம் எப்படி சார் நாங்க வாடகை கட்ட முடியும்?'' என்று கேட்கிறார் மலர்விழி. கடந்த ஆண்டு குடியமர்த்தப்பட்ட மக்களின் நிலையே இப்படி என்றால், 2000 ஆம் ஆண்டிலிருந்து இங்கு வாழும் மக்களின் துயரம் எத்தகையது?

தொண்டு நிறுவனங்களின் மேய்ச்சல் நிலமாக இருந்துவரும் குடிசை மக்களின் துயரங்கள், எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவின் பார்வையில் பட்டு (31.07.2010), கருணாநிதிக்கு எதிரான கண்டன அறிக்கையாகப் புழுதி பறந்தது. ஆனால், ஒருநாள் கண்டன ஆர்ப்பாட்டத்தோடு அது புதைந்தும் போனது. எதற்கெடுத்தாலும் புள்ளிவிவரங்களை அள்ளிவிடுகிற முதலமைச்சர், குடிசை மக்களின் வாழ்வாதார வினாக்களுக்கு மட்டும் வாயை மூடிக் கொண்டார். அதற்காக அப்படியே இருந்துவிட்டால் சென்னை நகர சேரி மக்கள், எங்கே ஜெயலலிதாவின் பின்னாடி போய்விடுவார்களோ என்று பயந்து, 2.8.2010 அன்று குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அவர் பதில் அளித்தார். அவை :

“1. கண்ணகி நகரில் 5 நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன 2. இரண்டு தொடக்கப் பள்ளிகளும், ஒரு நடுநிலைப் பள்ளியும், ஓர் உயர்நிலைப் பள்ளியும், 16 பாலர் பள்ளிகளும் தொடங்கப்பட்டு நடை பெற்று வருகின்றன 3. ஒரு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது 4. ஒரு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது 5. 435 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன 6. புறக்காவல் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது 7. நாள்தோறும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது 8. பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு, நாள்தோறும் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் 220 தடவை பேருந்துகள் இயக்கப்படுகின்றன 9. குப்பைகளை உரமாக மாற்றும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது 10. மாதந்தோறும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கண்ணகி நகருக்கு சென்று, அங்கு வாழும் மக்களின் குறைகளைக் கேட்டு, நிவர்த்தி செய்து வருகிறார். இதைப் போலவே செம்மஞ்சேரியிலும் தேவையான அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றன.''

புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் கூவம் கரையில், மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வந்தும் வீடு கிடைக்காமல் தவிக்கும் அங்கம்மாள் மற்றும் தங்கம்மாள்கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் கண்ணகி நகர் பொதுநலச் சங்கத்தின் தலைவர் கே. ஸ்டீபன் ராஜ், “கண்ணகி நகருக்கு அடிப்படை வசதி செய்து தரக் கோரி தலைமைச் செயலகத்திற்கு 10.11.2008 அன்று 50 ஆயிரம் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தியதை நினைவு கூறுகிறார். கண்ணகி நகர், செம்மஞ்சேரி மக்களின் தேர்தல் அறிக்கை 2009 ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார். மேலும், “2.8.2010 அன்று வெளியிட்ட குடிசை மாற்று வாரியத்தின் மறுப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அடிப்படை வசதிகள் அனைத்தும், 2000 ஆம் ஆண்டில் குடியமர்த்தப்பட்ட 3 ஆயிரம் குடும்பங்களுக்கு செய்து தரப்பட்டவை. அதைத் தவிர இந்த 10 ஆண்டுகளில் அரசு எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை, சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியைத் தவிர!'' என்கிறார்.

“கண்ணகி நகர் பகுதியில் ரூபாய் 4 கோடியில் அடிப்படை வசதி. அவசர கூட்டத்தில் தீர்மானம்'' – "தினகரன்', 13.09.2010

“சென்னையில் 35 ஆயிரம் குடிசை வீடுகள் இருப்பதாக கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை அகற்றி விட்டு, அவர்களுக்கு அரசு மாற்று இடம் வழங்க உள்ளது. இதற்காக பெரும்பாக்கத்தில் 125 ஏக்கரை அரசு ஒதுக்கியது. மேலும், 95 ஏக்கர் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 23,320 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இந்த குடியிருப்புகளில் லிப்ட் வசதி உண்டு. மேலும் 10 ஏக்கர் நிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி கட்டப்படும். அனைத்து வசதிகளுடன் பிரம்மாண்டமான குடியிருப்பு வளாகத்தை அரசு உருவாக்க உள்ளது. எனவே, பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, தங்களது குடிசைகளை அகற்றி, இந்த குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டும்'' – தமிழ் நாடு குடிசை மாற்று வாரிய அமைச்சர், சுப. தங்கவேலன், "தினகரன்', 15.09.2010

சென்னையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, கண்ணகி நகரில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கும், துறைமுகம் முதல் மதுரவாயல் வரை அமைக்கப்படவுள்ள – உயர் மட்ட பறக்கும் சாலைக்காகவும், கூவம் உள்ளிட்ட சென்னையில் நீர்வழித் தடங்களை சீரமைப்பதற்காகவும் வேரோடு பிடிங்கி எறியப்படவுள்ள சென்னை நகர சேரி மக்களுக்காகவும் அரசு வீசியுள்ள அற்ப எலும்புத் துண்டுதான் மேலே குறிப்பிட்டுள்ள இந்த அறிவிப்பு.

3 ஆயிரம் குடியிருப்புகளோடு தொடங்கப்பட்ட கண்ணகி நகரில் இன்று 15,566 குடிசையிருப்புகள் கட்டப்பட்டு, ஒரு லட்சம் மக்கள் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். இடைப்பட்ட 10 ஆண்டுகளில் அம்மக்களின் மறுவாழ்வுப் பணிக்கு எந்த சிறப்பு உட்கூறுத் திட்டமோ, சிறப்பு நிதியோ எதுவும் ஒதுக்கப்படவில்லை என்கின்றனர், துரைப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பரம், துணைத் தலைவர் டி.சி. கோவிந்தசாமியும். மேலும் கண்ணகி நகரில் புதிதாக வீடுகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர் துரைப்பாக்கம் ஊராட்சி மன்றத்தினர்.

450 கோடி ரூபாயில் புதிய சட்டமன்றம், 171 கோடி ரூபாயில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், 100 கோடி ரூபாயில் அடையாறு பூங்கா, 8 கோடி ரூபாயில் தாவரவியல் பூங்கா, 5.61 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நகர் பூங்கா, 5 கோடியே 70 லட்சம் ரூபாயில் மின்தூக்கி நடை மேம்பாலம், 1 கோடியே 80 லட்சம் ரூபாயில் நேப்பியர் பாலம் மின் ஒளி அலங்கரிப்பு மற்றும் கூவம் சாக்கடையை சீரமைக்க 1,200 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் அக்கூவத்தின் கரையோரம் ரத்தமும், சதையுமாக வாழ்ந்து கொண்டிருக்கிற எங்களுக்கு வெறும் 4 கோடியா? என்று கேட்கின்றனர், சென்னை யிலிருந்து வெளியேற்றப்பட்ட தலித் மக்கள். விடை சொல்ல வேண்டியது தமிழக அரசு மட்டும் அல்ல; வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற நாமும்தான்!

ஒக்கியம், துரைப்பாக்கம், கண்ணகி நகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள்

 நாள்தோறும் ஒரு குடும்பத்திற்கு சுமார் 15 குடம் தண்ணீர் அதாவது, 225 லிட்டர் தர வேண்டும். ஆனால், அரசாங்கம் கொடுப்ப÷தா நான்கு நாளைக்கு ஒரு முறை அய்ந்து குடம் அதாவது, 75 லிட்டர் தண்ணீர்தான்!

 சுமார் 80 ஆயிரம் மக்கள் நாள்தோறும் வேலைக்கு சென்றுவர 36 மாநகரப் பேருந்துகள் விடப்பட வேண்டும். ஆனால், அரசாங்கமோ வெறும் 16 மாநகரப் பேருந்துகளை மட்டுமே விட்டுள்ளது. அதில் ஒரு பேருந்தில் மட்டும் சுமார் 400 பயணிகள் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்!

 தெரு விளக்கு போதிய அளவில் இல்லை. இருட்டறையில் வாழ்வதால் போதிய விளக்குகளை அமைத்திட வேண்டும். பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்து, ஆங்காங்கே தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும்.

 ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் குடியிருப்பில் ஆரம்ப சுகாதார நிலையமோ, மகப்பேறு மருத்துவமனையோ இல்லை. எனவே, சிகிச்சை பெறவேண்டுமென்றால், சுமார் 25 கி.மீ. பயணம் செய்து சென்னைக்கு தான் செல்ல வேண்டும்.

 400 முதல் 800 வரை வசிக்கும் இடத்திற்கு ஓர் அங்கன்வாடி எனக் கூறும் அரசு, ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் இடத்திற்கு சுமார் 60 பால்வாடிகளை அமைக்க வேண்டும். ஆனால், தற்பொழுது 7 அங்கன்வாடிகள் மட்டுமே உள்ளன. அரசினர் உயர்நிலைப் பள்ளியில் சத்துணவுத் திட்டமே இல்லை. அதை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

 துரைப்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப மய்யங்களில் தகுதியின் அடிப்படையில் இம்மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்திட அரசு ஆணையிட வேண்டும்.

கடைசியாக வந்த செய்தி

கண்ணகி நகரில் மருத்துவமனை கட்ட அரசு திட்ட மதிப்பீடுகள் போட்டு வேலைகளை தொடங்க உள்ளது. ஆனால், துரைப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த வன்னிய சாதி இந்துக்கள், மருத்துவமனையை கண்ணகி நகர் சேரியில் கட்டக்கூடாது என்றும், பழைய மகாபலிபுரம் சாலையில் (கண்ணகி நகரிலிருந்து மூன்று கிலோ மீட்டர்) தான் கட்ட வேண்டும் என்றும் அரசு அதிகாரிகளை மிரட்டி வருகின்றனர் என்று கண்ணகி நகர் மக்கள் கூறுகின்றனர்.

Pin It