எஸ்.கே. பிஸ்வாஸ் எழுதி, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'பார்ப்பனிய மண்ணில் 90 ஆண்டுகளாக மார்க்சியம்' என்ற நூலின் முக்கியப் பகுதிகளை, இவ்விதழ் முதல் ஒரு தொடராக வெளியிடுகிறோம். இத்தொடருக்கான எதிர்வினைகள் வரவேற்கப்படுகின்றன.

Biswas_Bookஇந்திய அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர்கள், வருங்கால இந்தியாவை ஒரு ஜனநாயகக் குடியரசாகவே கண்டனர். அதன் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல, ஒரு சோசலிச மத சார்பற்ற நாடாகவே கண்டனர். பிரிட்டிஷ் காலனிய அதிகாரத்திடம் அதிகார மாற்றம் குறித்துப் பேசியவர்களுக்கு, தனியாரிடத்தில் சொத்துகள் குவிவது வரவேற்கத்தக்க ஒன்றாக இல்லை. இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிதர் ஜவகர்லால் நேரு, ஒரு சோசலிச முறையிலான பொருளாதார வடிவை குறித்தே பேசினார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அந்தக் கனவுக்கு நடைமுறை வடிவம் கொடுக்கும் வகையில் வங்கிகள், சுரங்கங்கள் போன்றவற்றை தேசியமயமாக்கினார். கடந்த காலத்தில் இவை உயர்மட்ட குடும்பங்களின் வளத்தைக் காட்டுவதாகவும் அவர்களின் சமூக நிலையை நிர்ணயிப்பதாகவும் இருந்தது.

நமது நாடு, வளங்களை தனியார் உடைமையாக்குவதற்கு எதிரான சமத்துவ மரபைக் கொண்ட பழமையான நாடு. புத்தர், "நடுபாதை' என்று தத்துவத்தை அறிவுறுத்தினார். அந்த தத்துவமானது, சங்கத்தில் உள்ள பிக்குகள் தனியாக சொத்து வைத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்துகிறது. கி.மு.3ஆம் நூற்றாண்டில் சக்கரவர்த்தி அசோகர், தனது அதிகாரிகளிடத்தில் "குறைந்த கையிருப்பு', "குறைந்த செலவு' என்ற வழிமுறையைப் பின்பற்ற அறிவுறுத்தினார். தனி நபர்கள் வசம் சொத்துகள் குவிவதற்கு எதிராக காந்தி அறிவுறுத்தினார். பிரிட்டிஷ் உப்பு உற்பத்தியாளர்களின் தனியாளுமைக்கு எதிராக, எளிய மக்களும் உப்பு உற்பத்தி செய்ய வேண்டுமென கூறினார்.

கடந்த சில பத்தாண்டுகளாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையும் அதன் பிரிவுகளையும் மாற்றாமலேயே, தனியார்மயமாக்குதல் அபாயகரமான வேகத்துடன் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் பழுத்த மார்க்சியவாதிகள் என அறியப்பட்ட பல தலைவர்களும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு - அரசுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பெரும் ஆதரவை நல்கி வருகின்றனர். பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்மயமாக்குதல் என்ற பெயரில், உழைக்கும் வர்க்கம் அதாவது கீழ் சாதியினரின் (சூத்திரர்கள் மற்றும் தீண்டத்தகாதோர்) மக்கள் அல்லது விவசாயிகளின் போராட்டத்தை நசுக்கவும் - மரிச்ஜாபிகளிலும் நந்திகிராம்களிலும் படுகொலை நடத்தவும் அவர்கள் தயங்கவில்லை.

ஒடுக்கப்பட்ட சாதியினரான உழைக்கும் மக்களை வேரற்றவர்களாகவும், சிதறுண்டவர்களாகவும் ஆக்கவும், நிலங்கள் மீதான அவர்களின் உரிமையைப் பறித்து, அவர்களின் பாரம்பரிய சமூக - பண்பாட்டு கட்டமைப்பை மறுக்கவும் அவர்கள் முயல்கின்றனர். மார்க்சியவாதிகள் ஆளாத மாநிலங்களான பஞ்சாப், கர்நாடகம் மற்றும் அரியானாவில் கூட இது போன்ற கொடூரமான அதீத ஒடுக்குமுறைகள் மற்றும் சுரண்டல் நடவடிக்கைகளை கையாளாமலேயே - பெரும் பொருளாதார வளர்ச்சியும் தொழில் வளர்ச்சியும் நடந்துள்ளது. இந்திய மார்க்சியவாதிகளின் இந்தப் போக்கானது, மார்க்சியத்திற்கு எதிரானதா அல்லது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதா என்பதை விளக்குவது கடினமானது. தோழர்களின் இரு குழுக்களிடையே உள்ள விரிசலானது, மிக வெளிப்படையாக கட்சி மட்டத்தைக் கடந்தும் வெளிப்பட்டுள்ளதானது நல்லதல்ல.

சொத்துகளின் மீது தனியார் உரிமை கோருவதற்கு உலகெங்கிலும் உள்ள பார்ப்பனர்கள் ஒன்று திரண்டு ஆதரவு நல்கியிருப்பதை கவனிக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காகவோ, அது போன்றவற்றிற்காகவோ அதை விமர்சிப்பவர்கள் பார்ப்பனரல்லாத சாதிகளை சேர்ந்தவர்கள், சாதிய அமைப்பை ஆதரிப்பதற்கான நிரந்தர வழிமுறையாக பார்ப்பனர்களுக்கு இது உள்ளது. இது, அவர்களின் பலம்வாய்ந்த ஆதிக்க நிலையை கேள்விகளுக்கு அப்பாற்பட்டு தக்கவைத்துக் கொள்ள உதவும் சிறந்த கருவியாகும்.

விவேகாநந்தர் சமத்துவமின்மையின் குரலை உரத்து ஒலிக்கும் வகையில் இவ்வாறு கூறுகிறார்: “இந்து மதத்தில் சாதி என்பது ஒரு பரம்பரைத் தொழில். அனைத்து உயிரினங்களையும் வாழ வைப்பது எது? போட்டி. பரம்பரைத் தொழில் அதைக் கொல்கிறது. நீ ஒரு தச்சனா? மிக நல்லது. உன் மகனும் ஒரு தச்சனாக மட்டுமே முடியும். வேறு யாரையும் அந்தத் தொழிலுக்கு வர நீ அனுமதிப்பதில்லை. அதனால் நீ அமைதியாக அங்கேயே இருப்பாய். ஒரு சாதியை ஏற்படுத்து, அது உண்மையிலேயே போட்டியைப் புறந்தள்ளுகிறது. (விவேகானந்தரின் முழுமையான தொகுப்பு: 3, பக்கம்: 515) அதனால் வங்காளம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த கம்யூனிச பார்ப்பனர்கள், விவேகானந்தரைப் போற்றுகின்றனர். அவருடைய அணுகுமுறையை உலக நடப்புகளுக்கும் "வானுலக'த்திற்கும் பொருந்துவதான முன்மாதிரியாகக் கருதி பின்பற்றுகின்றனர். 1970 களின் காலகட்டத்தில், எனது கல்லூரி நாட்களில், எனக்கு ஒரு கனவு இருந்தது. கல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் நடக்கக்கூடிய மிகப்பெரும் செங்கொடிப் பேரணிகள், கூடிய விரைவிலேயே பகுத்தறிவுடன் கூடிய ஒரு சமத்துவ சமூகத்தை உருவாக்கும் என்றும், சீனச் சுவரால் துண்டாடப்படாத தேசமாக, சாதிகளும் பழங்குடிகளும் சமூகங்களும் பிரிவுகளும் கொண்ட, ஆனால் அன்பாலும் சகோதரத்துவத்தாலும் பிணைக்கப்பட்ட ஒரு தேசமாக இருக்கும் என்றும் கனவு கண்டேன். அந்த காலத்தில், “இந்த சுதந்திரம் போலியானது. உழைக்கும் வர்க்கம் இன்னமும் காலி வயிற்றுடன்தான் இருக்கிறது'' என்று முழக்கமிட்ட மார்க்சியவாதிகள், பொருளற்ற பழமையான சடங்குகளைக் கொண்ட பாலைவனத்தால் பாதிக்கப்படாத சுதந்திர சிந்தனை கொண்ட ஒரு சமூகத்தை அமைப்பார்கள் என்று நான் கனவு கண்டேன்.

சுந்தரவனத்தின் மாரிச் ஜாபி கரையில் பொருளாதாரத் தடை எனும் காரிருளும், சுயமாக வாழ நினைத்த யாருடைய துணையும் இல்லாத "முடிவற்ற அகதிகள் படுகொலையும்' ஆழமான பயங்கர கனவிலிருந்து ஓர் இரவில் எழும்பியது. அந்தக் கொடூரத்தை நிகழ்த்திய பலம் வாய்ந்தவர்கள் மார்க்சிஸ்டுகள் என அறியப்பட்டார்கள். கானல் நீரைப் பின் தொடர்ந்து நெடுங்காலமாக ஓடிய ஒரு பெண் மானைப் போல எனக்கு தாகம் எடுத்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து நான் விழித்தெழுந்தேன். இந்த திட்டத்தின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தேன். எண்பதுகளின் தொடக்கத்தில் தலித்-இந்தியாவின் செயல்திட்ட அறிக்கையை எழுதத் திட்டமிட்டோம். அது வெளிவரவேயில்லை. அண்மைக் காலமாக “நந்திகிராம் தலித் கிராமம், தொமர்நாம் அமர்நான் நந்திகிராம்'' எனும் முழக்கங்களால் எனது இதயம் வெடிக்கிறது.

Biswas_250டாக்டர் சங்கர் தயாள் சர்மா 12 ஏப்ரல் 1990 அன்று நாடாளுமன்றத்தின் அரங்கில் கீழ்க்கண்டவாறு அறிவித்தார்: “இன்று, விடுதலை பெற்று 40 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மை நிலை என்னவெனில், அரசியல் ரீதியாக நமது நாடு சுதந்திரமாக விடுதலை பெற்றிருந்த போதும், ஒரு நீதியான சமூகத்தை அடைவதற்கான மனித மாண்பிலிருந்து நமது நாடு இன்னமும் வெகு தொலைவிலேயே இருக்கிறது. அடிப்படை மனித மாண்புகளும் உரிமைகளும் கூட கேள்வியற்று மீறப்படுகின்றன. உண்மை நிலை என்னவெனில், மனித இருப்புக்கான இயற்கையான மற்றும் அடிப்படையான கூறுகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்கூடிய சட்டங்களும், உயர்தரமான சிறந்த அரசமைப்புச் சட்டத்தையுமே நாம் கொண்டிருந்தாலும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் - கொடூரமான அவமரியாதைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஒதுக்குதலுக்கும் நாள்தோறும் ஆளாகிறார்கள்.'' அவருக்கு அருகில் அமர்ந்து அவரது உரையை கேட்கும் அரிய வாய்ப்பினை நான் பெற்றிருந்தேன். அதற்குப் பிறகு மேலும் இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. நிலைமை மேலும் மோசமாகவில்லையா?

மீண்டும், அதே கல்கத்தா பரேட் திடலிலிருந்து, மேதகு கான்ஷிராம் கேள்வி எழுப்பினார்: “இந்து சமூகத்தின் உயரதிகாரத்தையும் பயன்களையும் அனுபவிக்கும் பார்ப்பனர்கள், இந்து சமூக அமைப்பைத் தகர்ப்பதற்கான மார்க்சியப் புரட்சியை ஏன் முன்னெடுக்க வேண்டும்? ஓர் அமைப்பினால் பாதிக்கப்பட்டவர்களே, அந்த அமைப்பிற்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள். அந்த அமைப்பினால் பலன் பெற்றவர்கள், ஏன் அந்த அமைப்பிற்கு எதிராக நின்று தங்கள் சலுகைகளை அழித்துக் கொள்ள வேண்டும்?'' இதை சிறிது இடைவெளியிலிருந்து நான் அறிந்து கொண்டேன். உண்மையின் கதவுகள் என் முன் திறந்தன. துன்பப்படுபவர்களே துன்பத்திற்கான காரணிகளை எதிர்த்து கிளர்ந்தெழுவார்கள். இந்த முழு விஷயத்தையும் நான் சுருக்கமாக ஆராய முற்பட்டிருக்கிறேன்.

தமிழில் : பூங்குழலி

('பார்ப்பனிய மண்ணில் 90 ஆண்டுகளாக மார்க்சியம்' என்ற நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை)

இந்து மதம் ஓரு ஆன்மீகப் பாசிசம்

காஞ்சா அய்லையா

பார்ப்பனிய மண்ணில் 90 ஆண்டுகளாக மார்க்சியம்' என்ற நூல், வங்காள கம்யூனிச அரசியல் பண்பாட்டின் மீதான பல மாயைகளைத் தகர்க்கிறது. மிக கவனமாக ஆராயப்பட வேண்டிய ஒரு மிகப் பெரிய முரண் இங்கு இருக்கிறது. வங்காளத்தில் கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியலிலும் சமூகத்திலும் மார்க்சியம் வெகுவாக ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு சித்தாந்தமாக இருக்கிறது. அதோடு கடந்த 30 ஆண்டுகளாக, அது ஆள்பவர்களின் அரசியல் கொள்கையாகவும் இருக்கிறது. இருந்த போதிலும் அது சாதியை ஒழிக்கவில்லை! அது மட்டுமல்ல, சூத்திரர் அல்லது தலித் சமூகத்திலிருந்து ஒரு சிந்தனையாளரையோ, ஓர் அரசியல் தலைவரையோ அல்லது புகழ் பெற்ற ஓர் இலக்கியவாதியையோ - அது கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து உருவாக்கவில்லை!

kancha_ilaiahகம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துத் தலைவர்களும், சிந்தனையாளர்களாகவும், இலக்கியவாதிகளாகவும் அறியப்படுபவர்களும் - முதல் மூன்று வர்ணங்களான பார்ப்பனர்கள், காயஸ்தர்கள். வைஸ்யர்கள் ஆகியவற்றிலிருந்தே வந்துள்ளனர். ஆனால், கம்யூனிஸ்டு கட்சிகளான சி.பி.எம்., சி.பி.அய். மற்றும் சோசலிசக் குழுக்களைக் கொண்ட இடதுசாரி முன்னணியின் அடிப்படைத் தொண்டர்கள், தலித் பெரும்பான்மை மக்களிலிருந்தும் பழங்குடி சமூகத்திலிருந்துமே வருகின்றனர். மார்க்சியக் கொள்கையினால் நடத்தப்படும் வங்காள சமூகத்திலிருந்து இதுவரை, ஏன் அகில இந்திய அளவில் புகழ் பெற்ற ஓர் அறிவுஜீவி கூட வரவில்லை?

சாதியம் இந்து மதத்தின் விளைவு என்பதும், இந்து மதம் ஓர் ஆன்மீகப் பாசிசம் என்பதும் நான் திட்டமிட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நிரூபித்தபடி, அனைவரும் அறிந்த ஒரு வரலாற்று உண்மையாகும். ஆளும் கொள்கையாக இருந்த வங்காள மார்க்சியம், இந்து மத கட்டமைப்புகளை நலிவுறச் செய்து, அதன் மூலம் கொடிய சாதிய கட்டமைப்புகளையும் நலிவுறச் செய்ததா? உழைக்கும் வர்க்கம் அதிகாரத்திற்கு வருவதான கருத்தும், நிலவுடைமைச் சமூகம் நலிவுறுவதும், அம்பேத்கரிய மொழியில் இவற்றைச் சொல்வதானால், இந்தியாவின் உழைக்கும் வர்க்கமான தலித் பெரும்பான்மை மக்கள் - அதிகார நிலையை அடைவதும், நிலவுடைமை சமூகங்களான வங்காளத்தின் "முதல் மூன்று வர்ண' சாதிகள் நலிவுறுவதும் - ஏதேனும் ஒரு வகையில் வடிவம் பெற்றிருக்கிறதா?

அகில இந்திய அளவில் வங்காளத்திலிருந்து அறிவு தளத்தில் அரசியல் மற்றும் இலக்கியத் தளங்களில் இயங்குபவர்களை எடுத்துக் கொண்டால், மூன்று வர்ணத்தினரே அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். உண்மையில், "மூன்று வர்ணத்தினரே' உலகெங்கிலும் இந்த தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். பிற சமூக சக்திகள் வெளிப்படுவதையோ, அவர்கள் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையோ அவர்கள் அனுமதிப்பதில்லை. மார்க்சிய "வர்ண' அமைப்பானது, உழைக்கும் வர்க்கம் என்ற பெயரில் தங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் மிகவும் சீர்கெட்டுள்ளது. தலித் பெரும்பான்மையினர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை மறுத்து, பார்ப்பனிய சக்திகள் தங்களை தக்க வைத்துக் கொள்ள கையாளும் இந்த முறையானது, வங்காள சமூகத்தில் எவ்வித சமூக - அரசியல் மாற்றத்தையும் ஏற்பட விடாமல் தடுக்கிறது.

சமத்துவத்திற்கு நேர் எதிரான பார்ப்பனியம், தனது பெயரால் நிலை பெறுவதை அறிந்தால் மார்க்ஸ் சவக்குழிக்குள் அழுவார். ஒரு தலித்தான எஸ்.கே. பிஸ்வாஸ், இந்நூலின் மூலம் வங்காளத்தில் உள்ள மார்க்சிய பார்ப்பனியத்தின் வடிவமைப்பை வெளிப்படுத்துகிறார். பிஸ்வாஸ், பல நூல்களை எழுதியுள்ளார் என்ற போதிலும், இந்த நூல் ஒரு முக்கியப் பங்கை ஆற்றவிருக்கிறது. தீண்டத்தகாதவர்கள், பிற பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் போன்றவர்களின் வாழ்க்கையை மாற்றத்தக்க அரசியல் புரட்சியாக மார்க்சியம் மாறிவிடாதவாறு - எம்.என்.ராய், எஸ்.ஏ. டாங்கே, ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் ஆகியோர் தொடக்கம் முதலே ஒரு பார்ப்பனிய சதித்திட்டத்தை வடிவமைத்தனர் என்பதை இந் நூலில் பிஸ்வாஸ் எடுத்துக் காட்டுகிறார்.

வங்காளத்திலும் கேரளத்திலும் கம்யூனிஸ்டுக் கட்சிகள் ஆளுங்கட்சிகளாக உருப்பெற்றன என்பது, அனைவரும் அறிந்த உண்மை. சிறிய அளவிலான நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் தலித் பெரும்பான்மை மக்களுக்கு கூலியை சற்று உயர்த்திக் கொடுத்ததைத் தவிர, அவர்கள் சாதியம் மற்றும் பிற வடிவிலான பழமைகளிலிருந்து விடுதலை பெறாமல் இருப்பதை உறுதி செய்து கொண்டனர். கம்யூனிஸ்டு கட்சிப் பொறுப்புகளிலிருந்த பார்ப்பன அறிவுஜீவிகள், மக்கள் நவீன ஆங்கில வழிக் கல்வி பெறாதிருப்பதை உறுதி செய்தனர். "வர்ண' கம்யூனிஸ்டுகள் தங்கள் குழந்தைகளை சிறந்த ஆங்கில வழி தனியார் பள்ளிகளில் சேர்த்தனர். ஆனால், அனைத்து அரசுப் பள்ளிகளும் தரந்தாழ்ந்த வங்காள வழியிலேயே இருக்க நிர்பந்திக்கப்பட்டன. பள்ளிக் கல்வி நவீனமாகவும் ஆங்கில வழியிலும் அமைந்து விட்டால், அது கிராமப்புற மக்களின் விடுதலைக்கு வழிவகுத்து விடும் என்பதால், ஒட்டுமொத்த பள்ளிக் கல்வியும் தரம் தாழ்ந்ததாகவே வைக்கப்பட்டிருந்தது.

வங்காளத்தைச் சேர்ந்த தலித் பெரும்பான்மை மக்கள், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தரமான ஆங்கில வழி கல்விக்கான போராட்டத்தை நடத்த வேண்டும். பார்ப்பனிய சக்திகள் பல நூற்றாண்டுகளாக தலித் பெரும்பான்மை மக்களை கல்வியறிவற்றவர்களாகவே வைத்திருந்தனர். தற்போது அவர்களை ஆங்கிலம் மற்றும் நவீன அறிவு பெறாதவர்களாகவே வைத்திருக்கின்றனர். பிஸ்வாஸ் போன்றவர்கள் வங்காளத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஒரே மாதிரியான ஆங்கில வழி கல்வி முறையை ஏற்படுத்துவதற்கான இயக்கத்தைத் தொடங்க வேண்டும். நாட்டில் உள்ள பிற மாநில அரசுகளைக் காட்டிலும், ஒரு கம்யூனிச அரசு இதனை எளிதாக செய்திருக்க முடியும். தலித் பெரும்பான்மை தலைவர்கள் ஆங்கில வழி கல்விக்கான ஒரு கல்வி இயக்கத்தைத் தொடங்க வேண்டும். இந்திய சமூகத்தில் நிலச் சீர்திருத்தமோ, தொழில்களை தேசியமயமாக்குவதோ - சமச்சீர் ஆங்கில வழி கல்வி அளவிற்குப் பயனளிப்பதாக இருக்க முடியாது. அதைத் தொடங்க வேண்டும்.

(எஸ். கே. பிஸ்வாஸ் எழுதியுள்ள 'பார்ப்பனிய மண்ணில் 90 ஆண்டுகளாக மார்க்சியம்' என்ற நூலுக்கு அய்லையா எழுதியுள்ள அணிந்துரை)

தமிழில்: பூங்குழலி

 

Pin It