“இந்துக்களின் பார்வையில் மட்டும் நாம் தாழ்ந்தவர்கள் அல்லர். இந்தியா முழுமையிலும் நாம் தாழ்த்தப்பட்டவர்கள். ஏனென்றால், சாதி இந்துக்கள் நமக்கு தாழ்ந்த நிலையை அளித்திருக்கிறார்கள். இந்த மானங்கெட்ட நிலையிலிருந்து நீங்கள் விடுதலை பெற்று, செழுமையான வாழ்நிலையை அடையவேண்டுமென்றால், அதற்கு ஒரே வழிதான் உண்டு. உங்களை பின்னிப் பிணைந்துள்ள இந்து மதச் சங்கிலியை அறுத்தெறிந்துவிட்டு வெளியேறுவது ஒன்றே சிறந்த வழி என்று உறுதியாகக் கூறுவேன்'' என்றார் டாக்டர் அம்பேத்கர்.

kumar_215அண்ணலின் வழியில் இந்து மதத்தை மறுதலித்து, சட்ட ரீதியாகவும் இந்துவாக இருக்கக்கூடாது என முடிவு செய்த சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும் பி. குமார் என்ற மாணவர், 2008 ஆம் ஆண்டில் பவுத்த நெறியை தழுவினார். இதற்கான முறையான அறிவிப்பை அரசிதழிலும் பதிவு செய்துள்ளார். தன்னுடைய சாதி சான்றிதழில் "இந்து ஆதிதிராவிடர்' என்று குறிப்பிடப்பட்டிருப்பது மிகப்பெரிய இழுக்கு என்பதால், அதை பவுத்தர் என மாற்றக் கோரி அவருடைய ஊரான சிதம்பரத்தில் உள்ள வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தார்.

ஆனால், அவ்வாறு சான்றிதழ் தர இயலாது என எழுத்துப்பூர்வமாக வட்டாட்சியர் பதிலளித்தார். வட்டாட்சியரின் இச்செயல் சட்டத்திற்குப் புறம்பானது என்று கடலூர் மாவட்ட ஆட்சியருக்கும் குமார் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், அவருக்கு சான்று வழங்கப்படவில்லை. எனவே, இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி என்.பால் வசந்தகுமார் அவர்கள் 15.4.2010 அன்று, பின்வரும் தீர்ப்பை வழங்கினார். அதில், அரசியல் சட்ட திருத்தத்தின்படி பவுத்தத்திற்கு மாறிய தலித்துகளுக்கு பட்டியல் சாதியினர் என்று சான்று வழங்கப்பட வேண்டும் என அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இந்து மதத்தை விட்டு வெளியேற விரும்பும் அனைவரும் தங்களின் அடிப்படை உரிமையான இடஒதுக்கீடு பறிபோய்விடுமோ என்று அஞ்சாமல், தோழர் குமார் காட்டியுள்ள வழியில் அவர் பெற்றிருக்கும் நீதிமன்ற ஆணையைப் பயன்படுத்தி, இந்துவாக சாகும் அவலத்திலிருந்து விடுதலைபெற ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்.

Pin It