அரசாங்கம் ஆலோசனை செய்து கொண்டிருக்கும் சில நேரங்களில் அவர்கள் ஒரு முடிவெடுத்து விட்டால், நடைமுறைப்படுத்தி விட்டார்கள் என்றால் வேறு என்ன விதமான மாறுதல்களை செய்யலாம் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

இதில் மிகப் பெரிய அபரிதமான மாற்றத்தை அவர்கள் தெரிவிக்கிறார்கள். அபரிமிதமான மாற்றம் வரும்போது, அதில் சின்ன தீர்வு சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. அபரிமிதமான மாற்றம் செய்யக் கூடாது என்று கேட்பதுதான் சரியாக இருக்கும். தேர்வு ரத்து என்பது தீர்வே கிடையாது. ஓட்டப் பந்தயப் பயிற்சி ஒரு நூறு பேருக்கு நாம் தருகிறோம். 15 நாள் ஓடுகிறார்கள். அப்புறம் எல்லோருக்கும் சான்று கொடுத்துவிட்டால் போதுமா? முதலாவது யார்? இரண்டாவது யார்? எவன் சரியாகப் பயிற்சி செய்திருக்கிறான்? எவனுக்கு ஆற்றல் இருக்கிறது. எவனுக்கு ஆர்வம் இருக்கிறது என்பதைத் தீர்மானிப்பதற்கு இறுதியாக ஒரு தேர்வு வேண்டும் அல்லவா?Ilangovan

பத்தாண்டுக் காலம் என்பது 5 வயதிலிருந்து 16 வயது வரை ‘இம்ப்ரஷனபல் ஏஜ்' என்று சொல்கிறார்கள். கற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்வதும், ஆர்வத்தை மேம்படுத்திக் கொள்வதற்குமான வயது அது. இம்ப்ரஷனபல் ஏஜ் என்று சொல்லப்படும் பருவத்தில், 10 ஆண்டுகள் என்னதான் படித்திருக்கிறான்? என்னதான் சாதித்திருக்கிறான்? இதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் மனப்பாட பாடத்தைச் சொல்லவில்லை. அவன் படித்த கல்வியை எந்தளவுக்கு உள்வாங்கிக் கொண்டிருக்கிறான். எந்தளவுக்கு அவன் படித்திருக்கிறான் என்பது ஒரு அளவுகோல். அப்படியான சீர்திருத்தம் என்றால் எல்லோருக்கும் தேர்வு நடத் தட்டும். பாஸ், பெயில் என்று சொல்லாமல் போகட்டும். எல்லோருக்கும் தேர்வு நடத்துங்கள். இவன் 100 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான். இவன் இந்த நிலையில் இருக்கிறான். இவன் 17 மதிப்பெண் பெற்றிருக்கிறான் என்று அறிவித்து விடுங்கள். அவரவர் திறமைக்கேற்பப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்றுக் கொள்ளட்டும். மன அழுத்தத்தைக் குறைக்க தேர்வு ரத்து என்பது, எலியை ஒழிக்க வீட்டுக் கூரையை எரிப்பதற்குச் சமம்.

பள்ளிகளில் தேர்வு நடத்தும்போது மதிப்பெண்கள் போடுவதில் பாரபட்சம் இருக்கிறது. அதிகமான மதிப்பெண் போடுவதற்கோ, குறைத்து மதிப்பெண் போடுவதற்கோ வாய்ப்பிருக்கிறது. ஆனால் பொதுத் தேர்வைக் கொண்டு வரும்போது, யாரோ ஒருவர் மதிப்பீடு செய்யும்போது, மதிப்பெண்களில் ஒரு நடுநிலை இருக்கும் என்று சொல்கிறார்கள். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இந்தக் கூற்றில் சில உண்மைகள் இருக்கின்றன. ஒரு பள்ளிக்கூடத்திலே படிக்கும் மாணவியருக்கும் ஆசிரியருக்குமிடையே பாரபட்சம். ஒரு பள்ளிக்கூடத்திற்கும் இன்னொரு பள்ளிக் கூடத்திற்கும் இடையே ஒரு பாரபட்சம். இதில் ஒரு ‘ஹியூமன் எலிமென்ட்' நிச்சயம் இருக்கத்தõன் செய்யும். அந்த மாணவி சொன்னது போல பாரபட்சம் இல்லாமல் கண்ணுக்குத் தெரியாத எவரோ ஒருத்தர் ‘சென்டர் வேல்யூவேஷனில்' திருத்துகிறார்.

தேர்வுகள் தற்கொலையில் முடிகிறதே?

தற்கொலை என்று சொல்லும்போது, தேர்வு நேரத்தில் நடக்கின்ற தற்கொலையை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த தற்கொலைக்கு காரணம் தேர்வோ, தேர்வு மதிப்பெண்ணோ கிடையாது. இந்த சமூகம்தான் அதற்கு காரணம். அவர்கள் வீட்டில் உள்ள பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் இவர்கள் எல்லாம் தேர்வு மதிப்பெண்ணிற்கு ஓர் அபரிமிதமான மரியாதையைக் கொடுத்து, நீ இந்த மதிப்பெண் வாங்கவில்லை என்றால் நீ ஒரு டல் ஸ்டுடன்ட், நீ மக்கு, நீ எதற்கும் லாயக்கில்லை என்று சொல்லி இந்த சமூகம் தான் அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுகிறதே ஒழிய தேர்வு தூண்டவில்லை. தேர்வு முடிவில் தற்கொலை என்பது 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவில் மட்டுமன்று. பள்ளி வகுப்புத் தேர்வு, கல்லூரி பருவத் தேர்வு, வேலை கிடைக்காத நிலை, வேலை செய்யும் இடத்தில் வேலைப் பளு, கடன் தொல்லையால்,காதல் தோல்வியால் என்ற நிலைகளிலும் தற்கொலை நிகழத்தான் செய்கிறது.

பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து விட்டால், ஆசிரியருக்கும் மாணவருக்கும் நல்ல உறவு இருக்குமா? மாணவன் ஆசிரியரை மதிப்பானா?

இந்த பத்தாம் வகுப்புத் தேர்வு என்பதும், ஆசிரியர் மாணவர் உறவு என்பதும் தேர்வால் மட்டும் ஆசிரியருக்கும் மாணவருக்கும் உறவு என்பது வருவதில்லை. முதல் நாளிலிருந்து இறுதி நாள் வரை ஆசிரியருக்கும் மாணவருக்கும் உறவு; 30 ஆண்டுக் காலம் கழித்தும் உறவு இருக்கும். தேர்வுகள் உறவை நிர்ணயிப்பதில்லை. ஆனால் தேர்விலே ஒரு மாணவன் தேர்ச்சி பெறவும், தேர்வை சந்திக்கவும் ஆயத்தப்படுத்துகின்ற ஆசிரியர் மாணவர் மத்தியிலே எப்பொழுதும் உறவு உள்ளவராக இருப்பார் என்பதுதான் என்னுடைய கருத்து.

எல்லோரையும் தேர்ச்சி பெறச் செய்வதுதான் ‘சர்வ சிக்ஷா அபியான்' திட்டம் என்கிறார்களே?

அனைவருக்கும் கல்வி அளிக்கும் ‘சர்வசிக்ஷ அபியான்' திட்டத்தை 2002 – 2003 இல் மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சொல்லப் போனால், இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்த பட்சம் 30 கோடி ரூபாய் கொடுக்கிறார்கள் அந்தத் திட்டத்தின் கீழ் யாரையும் பெயிலாக்கத் தேவையில்லை பத்தாம் வகுப்பு வரை. ஒரு கணக்குக்காக இதை செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் கல்வி கற்றவர்கள் என அறிவிக்கிறார்கள். வி.பி. சிங் அரசு இருந்தபொழுது அறிவொளித் திட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அந்த அறிவொளித் திட்டத்தை அய்ந்தாண்டு காலம் நடைமுறைப்படுத்தினார்கள் – கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து. ஏனென்றால் கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கள் எல்லாம் படித்தவர்கள் இந்தியாவில். அப்படியான ஒரு புள்ளி விவரம் கொடுப்பதற்காக.

அதே போல எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் செலவு செய்யக் கூடிய பணத்திற்கு கணக்கு சொல்வதற்காகவும், இது சரியானதுதான் என்று சொல்வதற்காகவும், தேர்வே இல்லாமல் பத்தாம் வகுப்பிற்கு அனுப்புவது, பத்தாம் வகுப்பு போனதும் நீங்கள் எல்லோரும் ‘பாஸ்' என்று சொல்வது. ஒரு நேயர் சொன்னது போல அரசுப் பள்ளிக்கூடத்திலே சொல்லிக் கொடுப்பது இல்லைதான். கூடவே ஒரு சின்ன திருத்தம் சொல்கிறேன். அங்கு சொல்லிக் கொடுப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை. சொல்லிக் கொடுப்பதற்கு கட்டுமான வசதிகள் இல்லை.

‘சீரியஸ் ஸ்டூடண்ட்ஸ்' தேர்வினை ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்கிறார்களே?

சீரியஸ் ஸ்டூடண்ட்ஸ், நான் சீரியஸ் ஸ்டூடண்ட்ஸ்; சீரியஸ் பேரன்ட்ஸ், நான் சீரியஸ் பேரன்ட்ஸ் என்று சொல்லும்போது – படிப்பறிவு பெற்றவர்களும், படிப்பறிவு பெறாதவர்களும் முதல் தலைமுறையில் படிப்பவர்களும், ஏற்கனவே படித்து வாய்ப்பு பெற்றவர்களும் என இப்படித்தான் நீங்கள் பார்க்க முடியும். கல்வியின் பலனை நன்கு தெரிந்தவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு படிக்கிறார்கள். அவர்களுக்கு மன அழுத்தம் என்பதற்கே இடம் இல்லை. அவர்களுக்கு ஓய்வு இல்லை. மன அழுத்தம் எல்லாம் கிடையாது.

இரண்டாவது, தேர்வை பற்றி சொல்லும்போது, இப்பொழுது இந்தியாவிலேயே முதல் மதிப்பெண் பெற்ற பி.இ. படித்த மாணவருக்கு அய்.ஏ.எஸ். பதவி என்று சொல்லுவது கிடையாது. முதல் மதிப்பெண் வாங்கிய எம்.பி.பி.எஸ். மாணவருக்கு ‘டைரக்ட் போஸ்ட்டிங்' கிடையாது. அவர்களும் அங்கே போட்டித் தேர்வு எழுத வேண்டும். அய்.ஏ.எஸ்.

என்றால் ஒரு தேர்வு எழுத வேண்டும். ‘ரெக்ரூட்மென்ட் டெஸ்டு'க்கு போய்த்தான் ஆக வேண்டும். அதற்குப் பயிற்சி வேண்டும். பத்தாம் வகுப்புத் தேர்வும் அப்படியான ஒரு பயிற்சியே. தேர்வுப் பயிற்சி இன்றி ஒரு மாணவன் அடுத்தடுத்த பொதுத் தேர்வினை, போட்டித் தேர்வினை எப்படி எதிர்கொள்ள முடியும்?

மதிப்பெண்களை எடுத்து விட்டு ‘கிரேடு சிஸ்டம்' கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இது எந்த வகையில் வரவேற்கத்தக்க விஷயம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

இதைக்கூட மத்திய அரசில் இருக்கக் கூடிய மனித வள மேம்பாட்டு அமைச்சர் எதன் அடிப்படையில் எடுத்து சொன்னார் என்று தெரியவில்லை. நாங்கள் எல்லாம் படிக்கும்பொழுது கிரேடு சிஸ்டம்தான் இருந்தது. பி.யு.சி. படிக்கும்போது. அதைப் பள்ளிக்கு கொண்டு வர வேண்டும் என்று சொன்னார்கள். இது அறிவியல் பூர்வமான முடிவாக இருக்காது. இப்பொழுது,

எம்.பி.பி.எஸ். எடுத்துக் கொண்டாலும் சரி, பி.இ. சீட் எடுத்துக் கொண்டாலும் சரி, ரேங்கிங் போட்டால் .01 மதிப்பெண் மாறுபாட்டில்கூட இடம் கிடைக்கும், இடம் கிடைக்காமல் போகும்.

இப்பொழுது கிரேடு போட்டு விட்டார்கள் என்றால் ‘ஏ' கிரேடு, ‘பி' கிரேடு என்று போட்டு விட்டார்கள் என்றால், ‘ஏ' கிரேடில் 2000 மாணவர்கள் இருந்தால் அதில் முதல் யார்? இரண்டாவது யார்? கடைசி யார்? என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் எல்லா மாணவர்களுக்கும் மன அழுத்தம் வந்து விடும். குறைவான மதிப்பெண் வாங்கக் கூடியவர்களின் மன அழுத்தம் போய் மதிப்பெண் நிறைய வாங்கக் கூடிய எல்லா மாணவர்களுக்கும் மன அழுத்தம் வந்து விடும். அதனால் இந்த கிரேடிங் சிஸ்டமும் சரிபட்டு வராது. எஸ்.எஸ்.எல்.சி.யில் கிரேடிங் சிஸ்டம் கிடையாது. கல்லூரியில்தான் கிரேடிங் சிஸ்டம் இருந்தது. இவர்கள் எல்லாம் மேலை நாடுகளைப் பார்த்து காப்பி அடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் அந்த சிந்தனையில்தான் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இப்பொழுது ஜெர்மனியில் தேர்வு இல்லை, சீனாவில் தேர்வு இல்லை, ரஷ்யாவில் தேர்வு இல்லை என்று சொன்னால் அங்கு 7 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். அவர்களே அந்த மாணவனுடைய மதிப்பீட்டையும் உள் மதிப்பீட்டையும் செய்தார்கள் என்றால் அது சரியாக இருக்கும். ஆனால் இங்கு பள்ளியிலே இருக்கக் கூடிய ஒரு ஆசிரியருக்கு 130 மாணவர்கள் இருக்கிறார்கள். இந்த 130 மாணவர்களுக்கும் அவர் எழுதிய இரண்டு வரியைக்கூட ஒரு நாளில் படிக்க முடியாது. அப்புறம் அக மதிப்பீடு என்பது ஒரு பொய்யான விவகாரமாகிவிடும். அதனால் இந்த இந்தியக் கல்வி முறையை மாற்றாமல், ஒரு சமச்சீரான கல்வி முறையை கொண்டு வராமல், படிப்பதற்கான ஒரு கட்டமைப்புக்கு சிறப்பான வழி செய்யாமல், ஒரு புது வழி முறையை கல்வியாளர்களை கலந்து ஆலோசிக்காமல் செய்யக் கூடாது. பள்ளிக் கல்வி முறையிலே தேர்வு மட்டுமே சீர்திருத்தம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

இப்பொழுது மக்களுக்கும் மாணவர்களுக்கும் பொதுவாக நினைக்கக்கூடிய சிந்தனையாளர்களுக்கும் இந்த செய்தி எல்லாம் தெரியாது. 1:40 என்று ஓர் அர சாணை இருக்கிறது. ஒரு பள்ளிக் கூடத்தில் 40 மாணவர்கள் இருந்தால் ஒரு ஆசிரியர். 100 மாணவர்கள் இருந்தால் இரண்டு ஆசிரியர்கள்தான். 120 மாணவர்கள் இருந்தால் மூன்று ஆசிரியர்கள். ஆனால் 100 மாணவர்கள் ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்தால் அய்ந்து வகுப்புகள். மலையில் இருக்கக்கூடியவர்கள் 20 மாணவர்கள்தான் ஒரு வகுப்பில் இருப்பார்கள். பழங்குடியினர் மிகையான எண்ணிக்கையில் பள்ளிக்கு வருவதில்லை. ஒரு வகுப்பில் இரண்டு முதல் எட்டு மாணவர்கள்கூட இருப்பார்கள். ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் அய்ந்து வகுப்புகள் இருக்கும். மொத்தத்தில் 40 மாணவர்கள் இருக்கலாம். ஆனால் இவ்வரசாணைப்படி, ஒரு ஆசிரியரே இங்கு பணி நியமனம் செய்யப்படுவார். இந்த ஒரு ஆசிரியரே எப்படி ஒன்றாவது முதல் அய்ந்தாவது வரை சொல்லித் தர முடியும்?

இதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் பணக்கார வீட்டுப் பிள்ளைகள், படித்தவர்களின் பிள்ளைகள், நான்காம் அய்ந்தாம் தலைமுறை கல்வி பெற்றவர்களின் கல்வி நிலையை மனதில் வைத்தே சொல்லப்படும் இந்த ‘தேர்வு ரத்து' முடிவு ஆபத்தானது. ஏழை, எளிய மக்களின் கல்வி நலனில் மண்ணைப் போடுவது. இதனை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, 10 ஆம் வகுப்புத் தேர்வு முறையை (சி.பி.எஸ்.இ.) 2011 முதல் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதே வேளையில், தமிழக அரசு அடுத்த கல்வியாண்டிலிருந்து எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் சமச்சீர் கல்வி முறையை (1 – 6 வரை) தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. கல்விச் சீர்திருத்தத்தின் முதல்படியே இச்சமச்சீர் கல்வியாகும். வரவேற்கத்தக்க இச்சீர்திருத்தத்தை ஆங்கில வழி மெட்ரிக்குலேசன் கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பதாகவும், இதனை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளன.

ஆனால், இந்த நிலையில்கூட தமிழகத்தில் உள்ள சமூக, அரசியல் அமைப்புகள் இது குறித்து தங்களது கருத்துக்களை வெளியிடாமல் உள்ளது வருந்தத்தக்கது. ஒரு நாட்டின் முன்னேற்றம் மற்றும் சமூக மாற்றம் என்பது, அந்த நாட்டின் கல்வி முறையையே அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. இந்நாட்டின் கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டு வர மய்ய அரசும் மாநில அரசும் இருவேறு வகையில் அறிவிப்புகளை செய்துள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்காமல் இருப்பது, சமூக மாற்றத்திலும் முன்னேற்றத்திலும் இவர்களுக்கு எந்த அளவு அக்கறை இருக்கிறது என்பதையே பிரதிபலிக்கிறது.

Pin It