Periyar E.V.Ramasamy

இந்த நாட்டில் இன்று இரண்டே ஜாதிகள் சாஸ்திரத்தில் சட்டத்தில் இருந்து வருகின்றன அவை: 1. "பிராமண' சாதி 2. "சூத்திர' சாதி. அதாவது மேல் சாதி; கீழ் சாதி; மற்றும் நாட்டு மக்களில் ஜாதிகள் என்று சொல்லப்படுபவை எல்லாம், அந்த இரு ஜாதிகளின் அதாவது "பிராமண ஜாதி', "சூத்திர ஜாதி' என்பதன் உட்பிவுகள் தானே அல்லாமல் தனிப் பிறவி ஜாதிகள் அல்ல. எனவே, இன்று ஒழிக்கப்பட வேண்டிய ஜாதிகள், மேற்கண்ட"பிராமணன்' "சூத்திரன்' எனப்பட்ட ஜாதிகளே ஆகும்.

அதாவது, மொத்த ஜனத் தொகையில் 100க்கு 3 பேர்களே உள்ள ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஏக போகமாய் 100க்கு 75க்கும் மேற்பட்ட பதவிகளில் இருந்து வரவும், மற்ற இடைநிலைப் பதவிகளிலும் "பிராமணர்' 100க்கு 50க்கு மேல் அனுபவித்து வரவுமான தன்மையை ஏற்படுத்திக் கொண்டு, 100க்கு 97 விகிதம் உள்ள "சூத்திரர்'கள் இத்துறைகளில் தலை எடுக்கவிடாமல் அழுத்தி வரப்படுகிறது.
இந்தப்படியான சமூகக் குறையையும், வாழ்க்கை முறையையும் சரி நிலை, சரி பங்கு அடைய முடியாத தடைகளையும் ஒழிப்பதன் மூலமே ஜாதிக் கேட்டைப் பெருமளவு ஒழிக்க முடியும்.

இதற்கு அரசாங்க, அரசியல் கிளர்ச்சி என்பதன் மூலம் செய்யப்பட வேண்டிய காரியம் ஏதாவது இருக்கிறதா என்றால், ஒரே ஒரு காயம்தான் உண்டு. அதாவது, இரண்டு ஜாதி மக்களுக்கும் உத்தியோகம், பதவி, ஆட்சித் தலைமை ஆகியவைகளில் ஜனத்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதப்படி, ஜாதிவாரி உரிமை அளித்து, அந்தப்படி அந்தந்த ஜாதியை அமர்த்துதல். இந்த இரண்டு காயம் செய்வதற்கு மக்கள் சட்ட சபைக்கோ, பார்லிமெண்டுக்கோ போவதால் சாதிக்கக் கூடியதாகிவிடாது.

""இந்தக் காயங்களில் ஜாதி ஒழிந்துவிடுமோ' என்று தங்களை அறிவாளிகள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் கேட்கலாம். அப்படிப்பட்டவர்களை நான் கேட்பதாவது: "தம்பீ! ஜாதி ஒழிக்கப்பட வேண்டியது முக்கியம், முதலாவதுமான காரியம் என்று நீ நினைக்கிறாயா?'' என்பதுதான். "ஆம் நினைக்கிறேன்' என்றால், "அதற்காக இதுவரை நீ செய்தது என்ன? அதற்கு ருஜு (சாட்சியம்) என்ன? அதனால் ஏற்பட்ட பலன் என்ன?' என்பதே எனது தாழ்மையான அடுத்த கேள்வியாகும். "அதற்காக நான் பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து, பாடுபட்டு சட்ட சபைக்குப் போனேன், பார்லிமெண்டுக்குப் போனேன்'' என்று நீ சொல்லக்கூடும்.

சரி, நீ போனாய், அங்கு போய் ஜாதியை ஒழிக்க நீ என்ன செய்தாய்? கேள்வி கேட்டாயா? மசோதா கொண்டு போனாயா? ""கேள்வி கேட்டேன், மசோதா கொண்டு போகவில்லை'' என்றுதான் நீ சொல்லக்கூடும்; என்றாலும், இரண்டும் உன்னால் ஆகக்கூடிய காரியமல்ல. ஏன் என்றால் சட்டசபையில் ஜாதிப் பேச்சுக்கே இடமில்லை. ஆதலால் அங்குக் கேட்டிருக்க முடியாது. பிறகு, இதற்கு நீ என்ன செய்தாய்? செய்யப் போகிறாய்? சொல்லு தம்பீ! நான் சொல்லட்டுமா? அன்று முதல் இன்றுவரை அந்தப் பேச்சையே பேசக்கூடாது என்று கருதி மறந்தே விட்டாய் அவ்வளவுதான்.

"அந்தப் பேச்சு' என்பதற்கு ஒரு கதை உண்டு. அதாவது: ஒருவன் காலையில் வெளிக்குப் போகக் குளத்து மேட்டுக்குப் போகிறவன் புகையிலைச் சுருட்டு வாங்க ஒரு கடைக்குப் போனான். சுருட்டை வாங்கிக் கொண்டு, காசு கொடுக்கத் தனது முடிச்சை அவிழ்த்துக் கொண்டே அந்தக் கடைக்காரனைப் பார்த்து "என்ன அய்யா, இந்தச் சுருட்டு பத்துமா? அதாவது நெருப்புப் பிடிக்குமா?'' என்று கேட்டான். அதற்கு அந்தக் கடைக்காரன், ""நம்ப கடையில் மாத்திரம் அந்தப் பேச்சை பேசக்கூடாது தெரியுமா?'' என்று பெருமிதமாய்ப் பதில் சொன்னான். சுருட்டு வாங்கியவன், ""கடைக்காரன் இவ்வளவு உறுதியாய்ச் சொல்லுகிறானே, சுருட்டு நல்லதாகத்தான் இருக்கும்'' என்ற மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு போய்க் குளத்தங்கரையில் நின்று கொண்டு சுருட்டைப் பற்ற வைக்க, ஒரு பெட்டி நெருப்புக் குச்சியை உரைத்து உரைத்துச் சுருட்டுக்கு நெருப்புப் பற்றவைக்கப் பார்த்தான்.

சுருட்டுக் கருகிக் கருகிக் குறைகிறதே ஒழிய நெருப்புப் பற்றவே இல்லை. உடனே சுருட்டு வாங்கியவன் ஆத்திரத்தோடும், கோபத்தோடும் கடைக்காரனிடம் வந்து "என்னய்யா! உன் சுருட்டு அரைப் பெட்டி நெருப்புக் குச்சிக் கிழித்தும் பத்தவே இல்லையே? எல்லாம் கருகிப் போச்சே இதுதான் யோக்கியமா? என்று கேட்டான். அதற்கு அந்தக் கடைக்காரனுக்கு அதற்குமேல் ஆத்திரம் கோபம் வந்து, ""அட மடையா! நான் தான் நீ காசு கொடுக்கிறதற்கு முன்னமேயே அந்தப் பேச்சே இங்குப் பேசக்கூடாது'' என்று சொன்னேனே; அப்புறம் தானே நீ காசு கொடுத்தே? இப்ப வந்து இது யோக்கியமா? என்று கேட்கரையே; உனக்குக் கொஞ்சமாவது புத்தி இருக்கிறதா?'' என்று கேட்டான்.

உடனே சுருட்டு வாங்கினவன், ""சரி! சரி! அதிகமாகப் பேசாதே! உன் கடையிலே வந்து நான் சுருட்டு வாங்கினேனே; என்னைப் போடவேண்டும் பழைய செருப்பாலே'' என்று சொல்லிக் கொண்டு, குளத்துக்குச் சுருட்டுப் பற்றவைத்துக் கொண்டு போகிறவர்களை எல்லாம் நிறுத்தி, நிறுத்தி, அவர்கள் சுருட்டில் தன் சுருட்டை ஒட்டவைத்துப் பற்ற வைத்துக் கொள்ளுகிறவன் போல் பாவனைக் காட்டி, அவர்கள் சுருட்டுப் புகையை எல்லாம் இவன் சுருட்டு மூலம் இழுத்துவிட்டு, தனக்கு வெளிக்குப் போகும் உணர்ச்சி வந்த பிறகு வெளிக்கும் போனான்'' என்று ஒரு கதை உண்டு. அதுபோல் சட்டசபையில் போய் சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்றால் சட்டசபைக்காரன் (கடைக்காரன்) "உனக்குப் புத்தி இல்லையா?'' என்கிறான்.

.ஆகவே, என்னைப் போல் புரட்சி, கிளர்ச்சி செய்து, அதனால் மாள உனக்குத் துணிவில்லை. ஆனால், முதலாவது எதிரியோடு சேராதே! எதிரியைக் கவிழ்க்கப் பாடுபடு! இரண்டாவது, காமராசர் ஆட்சிக்கு ஊக்கம் ஏற்படும்படி உற்சாகப்படுத்து; முட்டுக்கட்டை போடாதே! எதிரிகளுக்கு இடம் கொடுத்து வாழ நினையாதே! இந்த அளவுக்கு நீயும் மற்றத் தமிழர்களும் உணர்ந்தால் போதும் என்பதோடு, மற்றக் காயங்களை உடல் பொருள் "ஆவி'யைக் கொடுக்கும் அளவுக்கு நாங்கள் (திராவிடர் கழகத்தார்) பார்த்துக் கொள்ளுகிறோம்.

13.12.1960 அன்று 'விடுதலை'யில் எழுதிய தலையங்கம்
Pin It