எதிர்க்கட்சிகளுக்கு எதிராக வருமான வரித்துறையை கூச்சநாச்ச மின்றி பயன்படுத்தி வருகிறது மோடி ஆட்சி. தேர்தல் ஆணையமோ, மல்லிகைப் பூவில் அடிப்பதுபோல் பா.ஜ.க.வினருக்கு ‘காதல் கடிதங்களை’ எழுதிக் கொண்டிருக்கிறது. அவ்வளவு நேர்மையாக ஆணையம் செயல்படுவதுபோல் மக்கள் காதில் பூ சுற்றுகின்றனர்.

தேர்தல் களத்தை நேர்மையாக நடத்துவதாக நாடகம் போடும் மோடி ஆட்சியின் முகத்திரையைக் கிழிக்கும் ஒரு செய்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இப்போது உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அது ‘தேர்தல் பத்திரம்’ தொடர்பான வழக்கு. அது என்ன தேர்தல் பத்திரம்? கடந்த ஆண்டு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிமுகப்படுத்திய திட்டம். இதன்படி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தரும் நிறுவனங்கள் ரொக்கமாகப் பணம் தருவதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட வங்கியில் மின்னணு எந்திரம் வழியாக நன்கொடை செலுத்தி தொகைக்கான பத்திரத்தைப் பெற்று அந்தப் பத்திரத்தை கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். இதற்காக இந்திய ஸ்டேட் வங்கியில் ஒரு கோடி ரூபாய் வரையில் பத்திரங்கள் கிடைக்கும். நன்கொடைக்கு உச்சவரம்பு ஏதும் இல்லை. நன்கொடையாளர் யார் என்பதும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும். இதுதான் நிதியமைச்சகம் அறிமுகப்படுத்திய திட்டம்.

தேர்தல் பிரதிநிதித்துவ சட்டம் 1951இன்படி அதன் 29சி பிரிவு, என்ன கூறுகிறது? ஒரு அரசியல் கட்சிக்கு இருபதாயிரத்துக்கும்மேல் நன்கொடை தரப்படுமானால், அக்கட்சி அந்த நன்கொடை எங்கிருந்து வந்தது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 2017ஆம் ஆண்டு பா.ஜ.க. நிதியமைச்சகம் கொண்டு வந்த திருத்தத்தின்படி நன்கொடை எங்கிருந்து வந்தது என்பதை அறிவிக்கத் தேவையில்லை.

உச்சநீதிமன்றத்தில் இத்திட்டத்தை எதிர்த்து நடக்கும் வழக்கு விசாரணையில் தேர்தல் ஆணையமும் ஒரு எதிர் மனுதாரராக இருக்கிறது. தேர்தல் நன்கொடை திரட்டுவதில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்ற ஆணையத்தின் குறிக்கோளை முறியடிக்கிறது இத்திட்டம் என்று ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள் கட்சிகளுக்கு நன்கொடை வாங்கும் சட்டத்திலும் (Foregin Contribution Regulation - FCRA) திருத்தம் கொண்டு வந்து விட்டார்கள். வெளிநாடு நன்கொடைகளை யார் வழங்கியது? எவ்வளவு தொகை என்பதை வெளிப்படுத்தத் தேவையில்லை.

இந்த சட்டத்திருத்தங்கள் நிதி மசோதாவின் கீழ் கொண்டு வரப் பட்டு நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட் டுள்ளன. நிதி மசோதாவின் கீழ் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டால் மாநிலங்களவை ஒப்புதல் தேவை இல்லை. மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டி இல்லை என்பதால் முக்கியத்துவம் பெற்ற இந்த சட்டத்திருத்தங்களை நிதி மசோதாவின் கீழ் முடக்கிவிட்டது மோடி ஆட்சி.

இப்போது இந்த ‘தேர்தல் பத்திர’ முறை அமுல்படுத்திய பிறகு ‘இந்திய ஸ்டேட் வங்கி வழியாக’ எவ்வளவு தொகைக்கு பத்திரம் வாங்கப்பட்டுள்ளது என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.

2019ஆம் ஆண்டில் இரண்டு மாதத்தில் மட்டும் ரூ.1716 கோடிக்கு பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. தொழிலதிபர்கள் நிறைந்த நகரமான மும்பையில் 2019இல் ரூ.495.6 கோடிக்கு பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. இங்குதான் பத்திர விற்பனை அமோகமாக நடந்துள்ளது. (அதாவது 28.9 சதவீதம்)

இந்த உரிமை இப்போது ‘இந்திய ஸ்டேட் வங்கி’க்கு மட்டும் அரசு வழங்கியிருக்கிறது. அரசு முழுக் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய ‘சிறப்பு உரிமைகள்’ பெற்ற வங்கி இது.

அனைத்துக் கட்சிகளும் நன்கொடை பெறலாம் என்று கூறப்பட்டாலும் இந்தத் திட்டத்தில் பயனடைந்தது யார்? இது மிக முக்கியமான கேள்வி.

பா.ஜ.க.வின் 2017-18 வரவு செலவு தணிக்கை அறிக்கையில் அதற்கான விடை இருக்கிறது.

இத்திட்டத்தின் மூலம் 94.6 சதவீதம் நிதி பா.ஜ.க.வின் கஜானா வுக்குள் வந்து சேர்ந்திருக்கிறது என்ற தகவல் பா.ஜ.க.வின் வரவு செலவு தணிக்கை அறிக்கையில் பதிவாகியுள்ளது.

தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு வருமான வரித் துறையை ஒரு இராணுவமாகப் பயன்படுத்தி எதிர்க் கட்சிகளை முடக்கும் பா.ஜ.க. ஆட்சி தனக்கான வெளிநாட்டு உள் நாட்டு தொழில் நிறுவனங்களின் தேர்தல் நிதி மழை போல கொட்டுவதற்கு உரிய சட்டப் பாதுகாப்பைத் தேடிக் கொண்டு விட்டது.

இதுதான் மோடி ஆட்சியின் யோக்கியதை!

 (தகவலுக்கு ஆதாரம் : ஏப்.7, 2019 ஆங்கில ‘இந்து’ நாளேடு, பக்.14இல் வெளி வந்துள்ள கட்டுரை)

Pin It