திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்க வலியுறுத்தி தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, மாநிலங்களவையில் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரவேற்கக்கூடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும். இதை ஒருமித்த தீர்மானமாக நிறைவேற்றிட அவையின் முழுமையான ஆதரவைப் பெறுவதற்கு ஒத்துழைத்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியையும் கருத்து மாறுபாடுகளுக்கு அப்பால் பாராட்ட வேண்டும்.

பிறப்பின் அடிப்படையில் சமூகத்தில் வேறுபாடுகளையோ, இழிவுபடுத்துதலையோ சகிக்க முடியாது. அதை ஒழித்தாக வேண்டும் என்பதே பெரியாரியல். திருநங்கைகள் உரிமைகளும் அவர்களின் சுயமரியாதையும் அங்கீகரிக்கப்பட வேண்டும். இப்போது மேலவையில் குரல் வாக்கெடுப்பு வழியாக நிறைவேற்றப்பட்டுள்ள ‘திருநங்கைகள் உரிமைச் சட்டம்-2014’  நாடாளுமன்றத்தின் விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் அனுப்பி வைக்கப்படவிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநிலங்களவை காட்டிய வழியில் வழிமொழிந்து திருநங்கைகளின் உரிமைக் கதவுகளை திறந்துவிட வேண்டும் என்பதே மனித சமத்துவம்  பேணும் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.

45 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தனிநபர் கொண்டுவந்த ஒருவரைவுத் தீர்மானம் ஒரு மனதாக ஏற்கப்பட்டு, சட்டமாக்கப்பட்டுள்ளது. இது தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவுக்கு கிடைத்துள்ள வரலாற்றுப் பெருமை. திருநங்கைகளுக்கு எதிராக உடலியல், கருத்தியல் அடிப்படையில் திணிக்கப்பட்டு வந்த வன்முறைகள் அதிகரித்த நிலையில் இப்படி ஒரு வரைவு நகலைக் கொண்டு வந்ததாக திருச்சி சிவா குறிப்பிட்டுள்ளார்.

பிறப்பில் ஊனமாகிப் போன இவர்களில் திருநங்கைகள் மட்டுமின்றி திருநம்பிகள் என்று இருபாலினத்தவர்களும் இருக்கிறார்கள். பெண், ஆண் பாலினத்தில் மாற்றுத் திறனாளிகளை வகைப்படுத்துவது போன்றே இவர்களையும் பெண்-ஆண் மாற்றுத் திறனாளிகளாகக் கருதப்பட வேண்டும் என்று, திருநங்கை லிவ்விங் °மைல் வித்யா கூறியிருக்கும் கருத்தை நாம் வரவேற் கிறோம். அதேபோல், ‘மூன்றாம் பால் இனம்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதும் ஏற்க இயலாததேயாகும். அப்படியானால் முதலாம் பால் இனம், இரண்டாம் பால் இனம் என்ற படிநிலை ஏற்றத் தாழ்வுகளை மறைமுகமாக ஏற்பதாகிவிடும்!

ஜாதியமைப்பில் நிலை நிறுத்தப்பட்டுள்ள மேல், கீழ்படி நிலைகளே ஒடுக்குமுறைகளை திணித்துக் கொண்டிருக்கின்றன. திருநங்கைகள், திருநம்பி களையும் அதே நிலைக்குத் தள்ளிவிடக் கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

பெண்-ஆண் என்ற பிறப்பின் அடிப்படை யிலான அடையாளங்களானாலும் கருப்பு-வெள்ளை என்ற இன அடிப்படையிலான அடையாளங்களாலும் பாகுபாடுகளுக்கு உள்ளாக்கப்படக் கூடாது என்பதே உலகம் முழுதும் ஏற்றுக் கெள்ளப்பட்டிருக்கிற கொள்கை.

அய்க்கிய நாடுகள் இந்த மானுட சமத்துவத்தையே உரிமைகளாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழர் சமுதாயத்துக்கு ‘சுயமரியாதை’ என்ற பெயரில் பெரியார் முன் வைத்த சிந்தனைப் புரட்சியும் இதே நோக்கம் கொண்டதுதான்.

திருநங்கைகளை அவர்கள் பிறப்பின் அடிப்படையில் இழிவுக்கு உள்ளாக்கக்கூடாது என்ற அதே சமூக நியாயம், ‘பிராமண’, ‘சூத்திர’ பாகுபாடுகளுக்கும் பொருந்தக் கூடியதேயாகும். பிறவியின் அடிப்படையில் மானுட சமத்துவத்தை மறுக்கும் எந்த கொள்கையும் ஒழிக்கப்படவேண்டும் என்ற உயரிய நிலையை எட்டும்போது மட்டுமே மனிதகுலம் அதன் முழுமையான சிறப்பை

அடையும். அதைத்தான் வள்ளுவர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார். அந்த கொள்கை வழியில் ‘திருநங்கை’ உரிமைகளுக்கு ஏற்புவழங்கிய மாநிலங்களவைத் தீர்மானத்தை வரவேற்கிறோம்.

Pin It