உலகம் ‘படைக்கப்பட்டது’; அப்படிப் படைத்தவன், எல்லாவற்றுக் கும்மேலான ‘இறைவன்’ இதுதான், அனைத்து மதங்களும் மக்களிடம் திணிக்கும் நம்பிக்கை!

அறிவியல் வளர்ச்சியடையாத - அச்சத்தால் உருவாக்கப்பட்ட கடவுள், மதங்களின் கருத்துகள் ஒவ்வொன்றாக மடிந்து வீழ்ந்து வருகின்றன. அறிவியல் அனைத்துக்கும் விடைகளைத் தந்து வருகிறது. அதற்கான தேடல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

உலகம் - எப்படி உருவானது என்பதை ‘பெரு வெடிப்பு’ அறிவியல் கொள்கையும், உயிர் எப்படி பரிணாமம் பெற்றது என்பதை டார்வின் கோட்பாடும் மனித குலத்துக்கு வழங்கிச் சென்றன.

வானவெளியில் சூரியன், நட்சத்திரங்கள், கிரகங்கள், கோள்கள் பற்றிய ஆய்வுகள் தொடங்கின. இது வரை இந்த கண்டுபிடிப்புகள் வெளிச் சங்களாக பார்வையில் மட்டுமே தெரிகின்றனவாகவே இருந்தன. இப்போது அண்ட வெளியில் அதிர்வு களின் ஓசையைக் கேட்கும் மகத்தான கண்டு பிடிப்பு நிகழ்ந்துள்ளது.

‘சார்பியல் கோட்பாடு’ என்ற அறிவியல் கண்டுபிடிப்பை வழங்கிய அய்ன்ஸ்டின் 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு கோட்பாட்டை முன் வைத்தார். அது இதுதான்:“விண்வெளியில் சூரியனைப் போல பல மடங்கு “நிறை” (Mass) கொண்ட நட்சத்திரங்கள், தங்களின் வாழ்நாளின் இறுதியில் ‘கருந்துளைகளாக’ மாறும். அப்போது கருந்துளைகள் சுற்றி வரும் சூழல்கள் உருவாகும். அதன் காரணமாக அண்டவெளியில் அதிர்வுகள் உருவாகும்.

இந்த அதிர்வுகள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் ஈர்ப்பு கவர்ச்சி அலைகளாக (Gravitational Waves) மாறும் என்று கூறினார் அய்ன்ஸ்டின்.

அது உண்மைதான் என்று இப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர்.

அமெரிக்காவின் மாசாசூட்ஸ் தொழில்நுட்ப மய்யத்தின் ‘லிகோ’ ((Ligo) எனும் விஞ்ஞானிகள் குழு, இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. இந்த குழுவில் இடம் பெற்ற 15 நாடுகளைச் சார்நத் 83 நிறுவனங்களில் பணியாற்றும் 1006 விஞ்ஞானிகள், 1997 முதல் ஆய்வில் ஈடுபட்டனர். இதில் 37 இந்திய விஞ்ஞானிகளும் இடம் பெற்றிருந்தனர்.

வானவெளியில் வெளிச்சம் படாத இருண்ட பகுதிகளில் மேலும் ஆய்வுகளை நடத்தவும், பிரபஞ்ச இரகசியங்களை வெளிக் கொணரவும் இதன் மூலம் கதவு திறக்கப்பட்டுள்ளது என்ச்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Pin It