vinayagar temple at erode courtஈரோட்டில் அரசுக்கு சொந்தமான ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி கற்பக விநாயகர் திருக்கோவிலில் 19.05.2024 அன்று கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டது. “அரசுக்கு சொந்தமான நீதிமன்ற வளாகத்திற்குள் குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது, இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்லும் மதச்சார்பற்ற தன்மையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே மத வழிபாட்டு விழாவை தடுத்த வேண்டும்” என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி ஈரோடு மாவட்ட தலைமை நீதிபதி அவர்களிடம் 17.05.24 அன்று விண்ணப்பம் அளித்திருந்தார்.

எனினும், அரசு விதிமுறைகளை மீறி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டிருக்கிறது. ஊடகங்களிலும் அதுகுறித்த செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதுதொடர்பாக சட்ட ரீதியிலான அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

புத்துயிர் பெறும் சமத்துவபுரங்கள்!

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கியப் பணிகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில் முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் முடங்கிக் கிடந்த “பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்” புதுப்பொலிவு பெற்று வருவது குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

 “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 2021ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட 238 சமத்துவபுரங்களும் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மக்களின் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படாத 4 சமத்துவபுரங்கள் உட்பட 149 சமத்துவபுரங்களை முதற்கட்டமாக 2021-22ம் ஆண்டில் சீரமைப்பதற்காக ரூ.194.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 98% பணிகள் முடிவுற்று மீதமுள்ள சில பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. மேலும், இரண்டாம் கட்டமாக 2022-2023ம் ஆண்டில் மீதமுள்ள 88 சமத்துவபுரங்களைச் சீரமைக்க ரூ. 67.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 99% பணிகள் முடிவுற்று மீதமுள்ள சில பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன.” என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஊர்- சேரி பாகுபாடு ஒழிந்த, ஜாதிய ஆதிக்கமற்ற சமத்துவ சமுகம் எப்படி இருக்கும் என்பதற்கான முன்மாதிரித் திட்டமான “பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்” மீண்டும் புத்துயிர் பெறுவது வரவேற்புக்குரியது. மற்ற மாநிலங்களுக்கும் கடத்தப்பட வேண்டிய “திராவிட மாடல்” சாதனைகளில் இதுவும் ஒன்று.

மனிதமே முதலில்....

1936ஆம் ஆண்டு சென்னை நகராட்சி உறுப்பினர் பதவிக்கு பெத்துநாயக்கன்பேட்டையில் போட்டியிட்டார் அண்ணா. அண்ணாவுக்கு ஓட்டு போட்டால் ஆலயங்களில் விளக்கு எரியாது என்று எழுதியது ஜெயபாரதம் ஏடு. அதற்கு அண்ணா, “நகரின் சேரிகள் பன்னெடுங்காலமாக இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. முதலில் அவைகளுக்கு விளக்கு போட வேண்டும். அதற்குப் பிறகு பணமும் நேரமும் மிச்சமிருந்தால் ஆலயங்களில் விளக்கு எரியும். நண்டும் நட்டுவாக்கிளியும் கடித்துத் துன்பப்படும் சேரி மக்களுக்கு விளக்கு போடாமல் ஆலயங்களுக்குப் போட்டுப் பயனில்லை” என்று பதில் கொடுத்தார். அப்படியானால் உனக்கு ஓட்டு இல்லை என்று சிலர் கூற, உங்கள் ஓட்டு எனக்குத் தேவையே இல்லை என்று கூறிவிட்டார் அண்ணா.

- விடுதலை இராசேந்திரன்

Pin It