பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டிலை ஆட்டி விடுவது’ என்ற பழமொழி ஒன்றிய பாஜ அரசுக்கு கனகச்சிதமாக பொருந்தக் கூடியது. ஒருபுறம், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் சிறப்புகளை பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. ஆனால் மறுபுறம், இந்தியை தேசிய மொழியாக்க அமித்ஷா போன்ற பாஜ தலைவர்கள், வரிந்து கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, ‘இந்தியாவில் அனைத்து பகுதியிலும் உள்ள மக்களின் தகவல் தொடர்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும். ஆங்கிலமாக இருக்கக் கூடாது. நாங்கள் மாநில மொழிகளுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கொண்டு வர வேண்டும் என நினைக்கிறோம்,’ என இந்தி திணிப்புக்கு புது விளக்கத்தை தந்தார். இதற்கான காய் நகர்த்தல் டெல்லியில் இருந்து தொடங்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புதுடெல்லி நகராட்சி கவுன்சிலில் தனது அனைத்து துறைகளுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், ‘அலுவல் மொழி அனைத்துமே இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும், அறிவிப்புகள் அனைத்தும் இந்தியில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும், பெயர் பலகைகள் அனைத்தும் இந்தி மொழியில் இருக்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது.

amit shah 422இனிவரும் காலங்களில் இதுபோன்ற உத்தரவுகள் நாடு முழுவதும் பரவலாக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஆங்கிலத்தை ஒதுக்கி விட்டு இந்தியை கொண்டு வர முடியுமா? இந்தி திணிக்கப்பட்டால், இந்தி பேசாத தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எத்தகைய கொந்தளிப்புகள் ஏற்படும் என்பதை அறியாதவர்கள் அல்ல பாஜ மேலிட தலைவர்கள். ஆங்கிலத்தின் பரவல் அந்த மொழியை ஜனநாயகப்படுத்தி உள்ளது.

ஒருகாலத்தில் மேல்தட்டு மக்கள் மட்டுமே பேசக்கூடிய மொழியாகவும், நடுத்தர, கீழ்த்தட்டு மக்கள் அஞ்சி ஒதுங்கக் கூடிய மொழியாகவும் இருந்த ஆங்கிலம், இன்று அனைவரின் நாக்கிலும் தாண்டவமாடுகிறது. இதற்கு முக்கிய காரணம், கற்றல், வேலை வாய்ப்பு. புதிய விஷயங்களை அறியவும், வேலை வாய்ப்புக்கும் ஆங்கிலம் இன்றியமையாததாக உள்ளது. கால்சென்டர்கள் முதல் கார்ப்பரேட் வேலைகள் வரை அனைத்திற்கும் ஆங்கிலம் அவசியம் தேவை. நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நம்மை செதுக்கிக் கொள்ளவும் ஆங்கிலம் தேவைப்படுகிறது.

ஆங்கிலம் ஒருகாலத்தில் மேல்தட்டு மக்கள், சக்தி வாய்ந்தவர்கள், பணக்காரர்களின் மொழியாக இருந்திருக்கலாம். ஆனால், இப்போது அது அனைவருக்கும் அதிகாரமளிக்கும் மொழியாக மாறி உள்ளது. ஆங்கில வழிப் பள்ளிகள் நாடு முழுவதும் பெருகி உள்ளன. பலவற்றிற்கான தேவை இருப்பதால் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் ஆங்கில மொழியை கற்க வேண்டுமென விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை திணிக்கும் அமித் ஷா போன்ற தலைவர்களின் பேச்சு, எவ்வளவு பிற்போக்குத்தனமானது என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.

அதே சமயம், இந்தி திணிப்பை பாஜ மேற்கொள்வது இது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் வரும் முன்பாக, 2017ல் இதே போல் இந்தி திணிப்பு முயற்சியை மேற்கொண்டனர். ஆனால், பல மொழி ஆர்வலர்கள், மாநில அரசுகளின் எதிர்ப்பால் பின்வாங்கியது. இப்போது மீண்டும் 2024 மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பாஜவின் தேர்தல் ஆயுதமாக இந்தி இருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இம்முறை பாஜ.வும் அதன் இணை அமைப்புகளும் இந்தி விஷயத்தில் மிகத் தீவிரமாக உள்ளன. இதன் விளைவுதான் சமீபத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக இந்தி இருக்கும் என அறிவிப்பு வெளியானது. ஆங்கிலத்திற்கு பதிலாக அனைத்து அலுவல் செயல்பாடுகளும் இந்தி மொழியிலேயே மேற்கொள்ளப்படும் என்ற ஒன்றிய அரசு, தமிழகத்திலும், புதுச்சேரியிலும் கடும் கண்டனத்தை பெற்றன. இதே போல், உபி அமைச்சர் சஞ்சய் நிஷாத், ‘இந்தி பேசத் தெரியாதவர்கள் இந்தியர்களே அல்ல, வெளிநாட்டினர்’ என்றார்.

அமித்ஷா கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள தனது அலுவலகத்தில் 80 சதவீதம் பேர் இந்தி அலுவல் மொழியில் பணியாற்றும் திறனை பெற்றிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. எப்போதுமே சர்ச்சையை கிளப்பி விட்டு அவை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்த்து, எதிர்ப்பு அதிகமாக இருந்தால் அவற்றை கைவிடுவதுதான் பாஜவின் தந்திரம். அந்த வகையில் தற்போது இந்தியை ஆயுதமாக்கி, மொழி ஊக்குவிப்பு என்ற கோஷத்தின் மூலம், இந்துத்துவா அமைப்புகள் நாட்டை துண்டாக்கி, வாக்கு வேட்டையாட முயற்சிக்க வாய்ப்புகள் உள்ளன.

இந்தி தெரிந்திருப்பது வேறு, அதை அமல்படுத்துவது வேறு. மக்கள் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத அப்பாவிகள் என்று ஆட்சியில் இருப்பவர்கள் நினைத்தால், தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வார்கள். மக்களை முட்டாளாக்க முடியாது என்பதை இந்தியை திணிக்க முயலும் அரசியல் தலைவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் அரசியலமைப்பின் அடிப்படை பலம் பன்மைத்துவம். இந்தி ஏகாதிபத்தியத்தை திணிப்பதாக கூறுவது நாட்டின் ஒற்றுமையைதான் குலைக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலிடத்தில் பெங்காலி : இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணை யில் இந்தி உள்ளிட்ட 22 மொழிகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இதனை அலுவல் ரீதியாக பயன்படுத்த முடியும். இந்திய அரசியலமைப்பு சட்டமானது, இந்தி உட்பட எந்த மொழியையும் தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை. 2011ஆம் ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களின்படி, இந்தி தவிர 8ஆவது அட்டவணையில் உள்ள 21 மொழிகளைத்தான் 64 கோடி பேர் பேசுகின்றனர். இதில் முதலிடத்தில் பெங்காலி மொழி உள்ளது. நாட்டில், 8.03% பேர் பெங்காலி பேசுகின்றனர். தமிழ் 4வது இடத்தில் உள்ளது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It