ஒன்றியத்தில் மைனாரிட்டி பாஜக அதிகாரத்துக்கு வந்தவுடனே தனது அடக்குமுறைகளை ஏவத் தொடங்கிவிட்டது. உலகப் புகழ்ப்பெற்ற எழுத்தாளரும், புக்கர் பரிசைப் பெற்றவருமான அருந்ததி ராய் மீது உஃபா சட்டத்தை ஏவுவதற்கான பணிகளை தற்போது தொடங்கி விட்டனர். அவர் மட்டுமின்றி காஷ்மீர் பேராசிரியர் சேக் சவுகத் உசைன் என்பவர் மீதும் இந்த சட்டத்தை ஏவுவதற்கான வேலைகளை செய்து வருகின்றனர். அப்படி என்ன குற்றத்தை செய்துவிட்டார் அருந்ததிராய்…

arundhathi roy 303சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு 2010ஆம் ஆண்டு டெல்லியில் காஷ்மீர் விவகாரம் குறித்து நடைப்பெற்ற கருத்தரங்கம் ஒன்றில் அருந்ததி ராய் பேசினார். அப்போது காஷ்மீர் குறித்த தனது கருத்துகளை அங்கு பதிவு செய்தார். பேராசிரியர் சேக் சவுகத் உசைனும் இதே கருத்தை தான் பதிவு செய்தார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக இந்த கருத்தரங்கை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் அப்போது ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், சட்டவிரோதமாக அங்கு எதுவும் பேசப்படவிடவில்லை. தேச விரோத சட்டங்கள் பாயும் அளவிற்கு அவர்களது பேச்சில் எந்தவித முகாந்திரமும் இல்லை. கருத்துரிமையின் அடிப்படையிலே தான் அவர்களது பேச்சு அமைந்திருக்கிறது என்று கூறி பாஜகவின் கோரிக்கையை நிராகரித்தது அப்போதைய காங்கிரஸ் அரசு.

ஆனாலும் டெல்லி மாநகர காவல்துறை இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி பாஜகவினர் போராட்டங்களை நடத்தினார்கள். டெல்லி மாநகர காவல்துறை வழக்குப்பதிவு செய்வதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறி மறுத்து விட்டனர். ஆனால் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிபதி தானாக முன்வந்து இந்த வழக்கை கையில் எடுத்தார். இதுகுறித்து மாநகர காவல்துறை உஃபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆணையை பிறப்பித்தார்.

தற்போது அந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது மைனாரிட்டி பாஜக அரசு. டெல்லி துணைநிலை ஆளுநராக இருக்கிற சக்சேனா, எழுத்தாளர் அருந்ததிராய் மற்றும் பேராசிரியர் சேக் சவுகத் உசைன் உள்ளிட்ட இருவர் மீதும் உஃபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்.

இதே சக்சேனா தான், கடந்த 2023ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அருந்ததிராய் மீதும், பேராசிரியர் சேக் சவுகத் உசைன் மீதும் வழக்குப்பதிவு செய்யலாம். இதை மாநில அரசின் சார்பில் வெளியிடுகிறேன் என்று அறிவித்தார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு மாநில அரசின் சார்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய பரிந்துரைத்த ஆளுநர் சக்சேனா, இப்போது ஒன்றிய அரசின் சார்பில் கிரிமினல் சட்டத்திற்கு மாற்றாக உஃபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். இதன்மூலம் அருந்ததிராய், பேராசிரியர் சேக் சவுகத் உசைன் மீது உஃபா சட்டத்தைப் பாய்ச்சி அவர்களை ஆண்டுக்கணக்கில் சிறையில் வைப்பதற்கான சாத்தியக் கூறுகள் தற்போது உருவாகியிருக்கிறது.

கருத்து தெரிவிப்பது என்பது எந்த வகையிலும் குற்றமில்லை. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஆதரித்து வைகோ பேசினார் என்பதற்காக அவர் மீது ஒடுக்குமுறை சட்டங்கள் பாய்ந்தது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றம், தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவதில் எந்தக் குற்றமும் இல்லை. அதனால் என்ன விளைவுகள் ஏற்படப் போகின்றன என்பது தான் முக்கியம் என்று கருத்துத் தெரிவித்தது.

14 ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட இந்த பேச்சுகளால் எந்தவித வன்முறைகளும் நிகழவில்லை. 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. பின்னர் காஷ்மீரை மூன்று யூனியன் பிரதேசங்களாக துண்டாடியது. காஷ்மீர் 370வது சிறப்பு அந்தஸ்து பெற்ற காலத்தில் பேசிய ஒரு கருத்தை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்ட பின்னர் அவர்கள் மீது உஃபா சட்டத்தை ஏவுவது என்பது அடக்குமுறையின் உச்சம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It