(கார்த்திக் ராம்மனோகரன் Centre for Studies in Social Sciences,Calcutta- வில் அரசியல் அறிவியல் துறையில்,உதவிப்பேராசிரியராகப் பணியாற்றுகிறார்)
நீட் தேர்வினால் விளையும் பிரச்சனைகள் பற்றிப் பலவிமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு வருடத்திற்கு முன்பு, வங்காளக் கல்வியாளரும், சமூக ஆர்வலருமான கர்ஜாசாட்டர்ஜி “நீட் என்பது மாநிலங்களின் செலவில், மத்திய அரசையும், அதனை உருவாக்கிய உயர்குடியினரையும், சி.பி.எஸ்.இ. என்ற பாடத்திட்டத்தின் மூலம் வலுப்படுத்தும் முயற்சி” என்று கூறினார். மருத்து வரும், பகுத்தறிவாளரும், தமிழ் ஆர்வலருமான எழிலன் நாகநாதன், தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இரட்டை இருப்பிடச் சான்றிதழ்கள் மோசடியை அம்பலப்படுத்தினார். இவர்களுடன் இணைந்து சமூக ஊடகங் களிலும்,வேறுசிலதளங்களிலும்,பல ஆர்வலர்கள் நீட் தேர்வினால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றித் தொடர்ந்து குறிப்பிட்டு வந்தனர்.
அதற்குப்பின்தான், அனிதா தற்கொலை செய்துகொண்டார். தினக்கூலித் தொழிலாளியின் 16 வயது மகளான அவர், பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றவர்.நியாயமாக, அனிதா சிறந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கவேண்டும். அது நடந்திருந்தால், அரியலூர் மாவட்டத்திலுள்ள குழுமூர் கிராமத்தில்,அவரது சமூகத்திலிருந்து உருவான முதல் மருத்துவர் என்ற பெருமையை அடைந்திருப்பார்.
தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான மாணவர்களைப்போல அனிதாவும் தமிழ்வழிக் கல்வி பயின்றவர். இந்தியாவிலுள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. மாணவர்களின் எண்ணிக்கையைவிட, மகாராஷ்ட்ர மாநிலத்தில் மட்டும் மாநிலக் கல்விபயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமான தாகும் என்று கர்ஜாசாட்டர்ஜி தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
எண்ணிக்கையில் நிலவும் இந்த ஏற்றத்தாழ்வானது தமிழகத்திலும் பிரதிபலிக்கிறது. அங்கேயும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைவிட மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களே அதிகமாகும். நீட் தேர்வானது, மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் செலவில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலுள்ள சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரி இடங்களைப் பெற்றுத்தரும். இது அத்தேர்வினால் ஏற்படும் அநீதிகளில் ஒன்று.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஸ்டேட் போர்டு பள்ளிகளும், தமிழ்வழிக்கல்வி கற்பிக்கும் பள்ளிகள் அல்ல. ஆனால்,அவர்களின் பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் போலில்லாமல் மண்ணிற்கேற்ற முறையிலிருக்கும். கணிசமான எண்ணிக்கையிலான ஸ்டேட்போர்டு பள்ளிகள் தனியாரால் நடத்தப்படுகின்றன. அவற்றில் பலபள்ளிகள் சிறு நகரங்களிலும், கிராமப் புறங்களிலும் குறைந்தபட்ச உள்கட்டமைப்பு வசதிகளோடு அமைந்துள்ளன. ஆனால்,அவை சமூகத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் மாணவர்களுக்குக் கல்வியளிக்கின்றன.
இதற்கு முரணாக, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் அதிகம் காணப்படுகின்றன. உள்ளூரிலும் வட இந்தியாவிலுமுள்ள மேல்தட்டு மாணவர்களுக்குக்கே கல்வியளிக்கின்றன. தமிழகத்தில் சுமார் 580 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும், 2488 அரசு மேல்நிலைப் பள்ளிகளும் (தனியார் பள்ளிகளைத் தவிர்த்து) உள்ளன. 580 என்பது ஒட்டுமொத்த சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் எண்ணிக்கையாகும். அவற்றில் மேல்நிலைக் கல்வியளிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை அதைவிடக் குறைவானதே! இந்தியாவிலேயே, மொத்தமாணவர் சேர்க்கைவிகிதம் (GER: Gross Enrollment Ratio) அதிகமாக இருப்பது தமிழகத்தில்தான்!
தமிழகத்தின் மொத்த மாணவர் சேர்க்கை விகிதமானது, இந்தியாவின் சராசரி மாணவர் சேர்க்கை விகிதத்தைவிட இருமடங்கு அதிகமானதாகும்.
தமிழகத்தின் மாணவிகள் சேர்க்கைவிகிதம் 42.7சதம். ஆனால் இந்தியாவின் சராசரி மாணவிகள் சேர்க்கைவிகிதம் 22.7 சதம் மட்டுமே. தமிழகத்தில் பள்ளிக்கல்வியைத் தொடங்கும் மாணவர்களில் அனைவருமே (100 சதம்) தொடக்கக்கல்வியை முடித்துவிடுகிறார்கள். அதில் 45 சத மாணவர்கள் கல்லூரிகளில் சேர்கின்றனர்.
சி.பி.எஸ்.இ. மாணவர்களே அதிக அளவில் கல்லூரிக் கல்விவரை படிப்பார்கள் என்று தமிழ்நாட்டில் சிலகல்வி ஆர்வலர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது. ஆனால், உண்மையில் கல்லூரிக்கல்வி (மருத்துவக்கல்வி உட்பட) வரை பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையானோர் மாநிலப்பாடத்திட்டத்தில் பயின்றவர்களே! எனவே இங்கே கடுமையான போட்டி நிலவுகிறது. அதிக மதிப்பெண்களுடைய மாணவர்களால் மட்டுமே மருத்துவம் படிக்க இயலும்.
நீட் தேர்விற்குமுன், தமிழகத்திலுள்ள சுமார் 2500 அரசு மருத்துவக்கல்லூரி இடங்களில், 69 சதவீத இடங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. எனினும்,சேர்க்கைக்கான Cut off- ல் மிகக்குறைவான வித்தியாசமே காணப்பட்டது.
உதாரணமாக, 2014-ஆம் ஆண்டில் பெருமை மிக்க சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்வதற் கான Cut off விவரம் வருமாறு:
பொதுப்போட்டி -199.5, பிற்படுத்தப் பட்டோர்-199.25, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் -198.75, தாழ்த்தப்பட்ட - பழங்குடியினர் -196.75
இம்மாணவர்களைப் போதுமான தகுதியுடையவர்கள் அல்ல என்று இந்த அறிவிலிகள் கூறுகின்றனர். சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கை யிலான மாணவர்கள் (98 சதவீதத்திற்கும் மேல் மொத்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள்) பொதுப்போட்டியின் கீழும் தங்கள் இடங்களைப் பெற்றனர்.
இத்தகைய முறையானது, நேர்மையான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்து உயர்ந்த தரத்தைப் பராமரிக்க எந்த வகையிலும் தவறவில்லை. சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்கிய நீட் தேர்வுதான் இத்தரத்தைக் குறைத்திருக்கிறது.
நீட் தேர்வின் மூலம், தமிழகத்திலுள்ள தலைசிறந்த மருத்துவக்கல்லூரிகளின் பெரும்பான்மையான இடங்கள் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்குத்தான் கிடைத்துள்ளன. மருத்துவ இடங்களைப் பெற்ற மாணவர்களில் 35 சதவீத சி.பி.எஸ்.இ. மாணவர்கள்தான், என்று சமூக ஆர்வலர்கள் குறிப் பிடுகின்றனர். இச்சதவீதத்தைப் பார்க்கும்போது, பெரும்பாலான இடங்கள் மாநிலப்பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்குச் சென்று விட்டதுபோல் தோன்றலாம்.
ஆனால், நீட் தேர்வு எழுதியவர்களில், மாநிலப்பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களைவிட சி.பி.எஸ்.இ. மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவானதே! ஆனால், சி.பி.எஸ்.இ. மாணவர்களே மற்றவர்களைவிட அதிகமாகத் தேர்வாகியுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். கிடைத்த தகவல்களை ஆழ்ந்து பார்த்தோமானால், மாநிலப்பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களைவிட சி.பி.எஸ்.இ. மாணவர் களுக்கே நீட்தேர்வில் தகுதி பெறுவது எளிதாக இருந்துள்ளது என்பதை அறியலாம்.
நீட்தேர்வில், மாணவர்களின் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களைக் கணக்கில் கொள்வ தில்லை. மேலும், கேள்வித்தாளின் தன்மை மற்றும் மல்டிபில் சாய்ஸ் கேள்விகள் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கே மிக எளிதாக இருந்தது. பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கேள்விகள் சரியாகப் புரிந்துகொள்ள முடியாதபடி இருந்தன. இவை யனைத்தும் அனிதாவிற்கு எதிராக சதிசெய்தன. இத்தேர்வுமுறையானது பாரபட்சத்தோடு இருப்ப தால், போட்டி மனப்பான்மையை ஒருபோதும் ஊக்குவிக்காது.
சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஐந்து வருடங்களாகப் படித்த துன்பமான அனுபவம் எனக்குண்டு. என்வாழ்க்கையின் மிகமோசமான ஆண்டுகள் அவை!
அப்பள்ளி தமிழகத்தில் இருந்தபோதும், காலனித்துவ நிறுவனத்தைப்போல் செயல்பட்டது. அது ஆங்கிலவழியில் கல்வி கற்பிக்கும் பள்ளி. எனவே, தமிழில் பேசுவது தடை செய்யப் பட்டிருந்தது. மீறிப்பேசுவோருக்கு, உடல் மற்றும் மனரீதியாக வருத்தும் பல தண்டனைகள் வழங்கப் படும். மறுபுறம், இந்தியில் பேசுவது ஊக்குவிக்கப் பட்டது.
அதில் நல்லவிஷயம் என்னவெனில் பாலி வுட்டின் அனைத்து சமீபத்திய ஹிட்படங்களையும் அறிந்துகொள்ள உதவியது. ஆனால், தமிழ்மொழி அவமானமாகக் கருதப்பட்டது. தமிழை இரண்டாம் மொழியாகவோ, மூன்றாம் மொழியாகவோ படிக்கத் தேர்வு செய்தவர்கள்கூட தரக்குறைவாகக் கருதப்பட்டனர். மேலும், சில சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், பார்ப்பனியம் போற்றப் படுவதையும், பிறவகையிலான ஆன்மீக வெளிப்பாடுகள் மற்றும் நாத்திகம் மிகத்தீவிரமாக ஒடுக்கப்படுவதையும் நாம் அறிவோம்.
சமூகப்பொறுப்பு மற்றும் சமூகநீதியில் அக்கறையின்றி, சிறந்த மாணவர்களைக் கடைந்தெடுத்து வெளியே தள்ளிவிடும் நீட் தேர்வானது, இப்பள்ளிகளின் கரங்களில் கொடுக்கப்பட்ட ஊக்கமருந்து போன்றது. நல்லவேளை, எனக்கு பள்ளி மாறுவதற்கும், பொறியியலையும், மருத்துவத்தையும் தாண்டி என்வாழ்வை அமைத்துக்கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது.
கிராமப்புறப் பின்னணியில் இருந்துவரும் பலமாணவர்களுக்கு, மருத்துவராவ தென்பது அவ்வளவு எளிதானதல்ல. பலர் சுட்டிக்காட்டியபடி, அனிதாவிற்குக்கிட்டாத சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தைக் கொண்டது நீட்தேர்வு! சமூக ஊடகங்களில் சில உயர்ஜாதி மக்களிடமிருந்து, மருத்துவம் படிக்க “அனிதா தகுதியானவரல்ல!” என்பதுபோன்ற வெளிப்படையான குற்றச் சாட்டுகள் எழுந்தது அபத்தமானதாக இருப்பினும், அவை நாம் எதிர்பார்த்த ஒன்றே! ஒரு மீனின் திறனை மதிப்பிட, அதை மரம் ஏறச்சொல்லும் அட்டூழியத்தை இனியாவது மறந்துவிடுங்கள்!
மருத்துவத்தில் மற்ற மாநிலங்களைவிட மிகச் சிறந்து விளங்கும் தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு நீட்தேர்வு உதவும் என்று நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. அதேபோல், அனிதாவைப் போன்றோரின் மருத்துவ இடங்களைப் பறித்த உயர்ஜாதியினரும், மேட்டுக் குடியினரும், இந்திமொழி இல்லாத மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மருத்துவர்களைப் போன்று சிறந்து விளங்குவார்கள் என்பதற்கும் எவ்விதத் தரவுகளோ சமூக வாதங்களோ இல்லை!
பொருளாதாரரீதியாகவும், சமூகரீதியாகவும் ஒடுக்கப்பட்ட பின்னணியைக் கொண்டு, ஒரு பின்தங்கிய கிராமத்தில், தன்தாயையும் இழந்து வளர்ந்த அனிதா, தன் கிராமத்திலிருக்கும் பிற பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஊக்கப் படுத்துவதற்குப் பயன்படுத்தும் ஓர் வெற்றிக் கதையாக இருந்திருப்பாள்!
அனிதா ஒரு சாதனையாளர்! தன்னைப்போல் பாதிக்கப்பட்ட பலமாணவர்களுக்காக நீட்தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியவர்! ஆனால், தனது இலட்சியம் தடைப் பட்டதாலும், முயற்சிகள் பலனளிக்காததாலும், சாதனைகளுக்குப் போதிய அங்கீகாரம் கிடைக் காததாலும் தற்கொலையை நோக்கித் தள்ளப் பட்டார் என்பதே உண்மை!
நீட்தேர்வு குறித்து ஆரம்பத்திலிருந்தே தமிழகத்தில் நிலவி வந்த குழப்பங்களுக்கும்,நீட்டை எதிர்த்துப் பல நம்பகமான வாதங்கள் இருந்தாலும் அத்தேர்வைத் தமிழகத்தில் திணித்தே தீரவேண்டும் என்ற பா.ஜ.க.-வின் பிடிவாதத்திற்கும், தற்போதைய அ.இ.அ.தி.மு.க. அரசின் மிதமான எதிர்வினைக்கும் அனிதாவின் மரணத்தில் பங்குண்டு.
அரைநூற்றாண்டுக்குமுன், முன்னாள் காங்கிரஸ் அரசாங்கம் இந்தியைத் திணிக்க ஒருதலைப் பட்சமாக எடுத்த முடிவினால் அக்கட்சி தமிழகத்தில் அரசியல் அழிவைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்துதான், திராவிட ஆட்சி அமைக்கப் பட்டது. நீட்தேர்வும், தமிழகத்திலுள்ள பல சமூகநீதித் திட்டங்களைச் சிதைக்க பா.ஜ.க. மேற்கொள்ளும் முயற்சிகளும் எதைநோக்கி நம்மை இட்டுச் செல்லும்? அனிதாவின் மரணத்தின் மூலம் தூண்டப்பட்டு, அவளுடைய தியாகம் வீணாகக்கூடாது என்ற நம்பிக்கையுடன், தமிழக மாணவர்கள் ஏற்கனவே வீதிகளில் போராடிக் கொண்டிருக்கின்றனர்!
தமிழில்: யாழ்மொழி