(இப்போது பேசப்படும் இந்துத்துவா அரசியல் குறித்து பிரபல வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் இந்து ஆங்கில நாளேட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூன் 18 2023இல் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார் புதிய சிந்தனை வெளிச்சங்களை தரும் அந்த பேட்டியில் சுருக்கமான தமிழ் வடிவம்)

• இந்துத்துவா பேசுவோர் வரலாற்றை அணுகும்முறை முற்றிலும் தவறானது என்கிறார் தாப்பர். வரலாற்றை அறிவதற்கு அது குறித்து ஆதாரங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும், பிறகு அது குறித்த தெளிவான கோட்பாடுகளை உருவாக்குதல் ஆகியவை அடிப்படை. ஆனால் இப்போது பேசப்படும் இந்துத்துவாவுக்கு இந்த அணுகுமுறை ஏதும் இல்லை. கடந்த காலங்களில் நிகழ்ந்தவை, பேசப்பட்டவை என்ற கற்பனைகளை வரலாறுகளாக கட்டமைக்கிறார்கள். கடந்த கால கற்பனை புனைவுகளை நிகழ் காலத்துக்கான அடையாளம் என்கிறார்கள். எந்த முறையான ஆதாரங்களையோ ஆய்வுகளையோ இவர்கள் முன்வைப்பது இல்லை. இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதற்கு இந்துக்களின் வரலாறுகளே ஏனைய மதங்களின் வரலாறுகளை விட மிகவும் பொருத்தமானது என்ற நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். இதற்காக வரலாற்றுப் பாடங்களையும் மாற்றி அமைக்கிறார்கள். பாடப் புத்தகத்திலிருந்து முகலாயர் வரலாறுகளை நீக்கி இருப்பதை இதற்கு உதாரணமாக கூற முடியும். கடந்த காலங்களில் சமூகத்திற்கான பங்களிப்பை இந்துக்கள் மட்டும் வழங்கிடவில்லை. ஆனால் இவர்கள் இந்துக்களுக்கு மட்டுமே உரிமை கொண்டாடுகிறார்கள். தற்போது நடக்கும் அரசியல் இந்துத்துவாவுக்கு சுமூகமான சூழலை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. நவீன அறிவியல் சிந்தனைகள் அந்த காலத்திலேயே இந்துக்களிடம் இருந்தன என்று இவர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். விமானம் இருந்தது; பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இருந்தது; ஸ்டெம் செல் குழந்தை பிறப்பும் இருந்தது என்று அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் பேசி வருகிறார்கள்.

• இந்தியாவின் பூர்வீகக் குடிகள் ஆரியர்களே என்ற இந்துத்துவா வாதத்துக்கு ரொமிலா தாப்பர் பதில் அளித்தார். காலனி ஆட்சி காலத்திற்கு முன்பு ஆரிய மொழி பேசுகிறவர்கள் ஆரியர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டனர். அவர்கள் சமூகத்தில் தங்களை மேலானவர்களாக நிலைநிறுத்திக் கொண்டனர். அரசர்கள் கூட சில நேரங்களில் தங்களை ஆரிய புத்திரர்கள் என்று அழைத்துக் கொண்டார்கள். பழங்கால ஈரான் கலாச்சாரத்தில் ஆட்சியாளர்கள் தங்களை ஆரியர்கள் என்று அடையாளப்படுத்தி பெருமைக் கொண்டாடினார்கள், ஈரானிய மத நூல்களில் ரிக் வேதம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 19ஆம் நூற்றாண்டில் இனம் என்ற அடையாளம் முதன்மைப்படுத்தப்பட்டது. உலக மக்களை இனத்தின் அடிப்படையில் அடையாளம் காண தொடங்கினர் இனம் அடையாளமாக வந்த போது அதில் உயர்வு தாழ்வுகள் உருவாயின. ஆரியர்கள் உயர்வானவர்களாக முன் நிறுத்தப்பட்டனர் ஹிட்லரும் முசோலினியும் இந்த இனப்பெருமையையே பேசினார்கள். ஆர்எஸ்எஸ் இந்து இனப் பெருமையை முன் வைத்தது. தேசம் என்பது என்ன என்பதற்கு ஒரு வரையறை தந்தார் சாவர்க்கர். இந்துக்களின் தேசம் அதன் மூதாதையர் வழிவந்த ’பித்ரு பூமி’ அங்கே தான் இந்து மதம் தோன்றியது அந்த புண்ணிய பூமியின் மைந்தர்களே இந்துக்கள் என்றார் சாவர்க்கார். இந்துத்துவா ஆரியர்களின் பூமியே இந்தியா என்று சொந்தம் கொண்டாடுவது இப்படித்தான்.

• தேசிய கலாச்சாரம் என்பது இந்து கலாச்சாரம் தான் என்று பேசுவோர் கூறித்து தாப்பர் விளக்கினார். இந்தியாவில் இரண்டு தேசியங்கள் முன்வைக்கப்பட்டன, 19வது நூற்றாண்டிலும் அனைத்து மதப் பிரிவினரையும் உள்ளடக்கிய இந்திய தேசிய இயக்கமாக உருவானது. ஒவ்வொரு குடிமகன், குடிமகளும் அவர்களின் மதம், மொழி, ஜாதிக் கடந்த இந்திய குடிமக்களாக அரவணைக்கும் தேசியமாக அது உருப்பெற்றது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து அனைவரையும் உள்ளடக்கிய ஒரு இந்தியாவை உருவாக்குவதே அதன் நோக்கம் . 1947இல் மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியா உருவானது. அது ஜனநாயகம் மதச்சார்பின்மையை பேசியது, அதே காலகட்டத்தில் மதத்தின் அடிப்படையில் இந்து தேசியம் என்ற கருத்தாக்கமும் முன்வைக்கப்பட்டது. 1920, முப்பதுகளிலேயே இந்த மதவாத தேசியம் உருப்பெற்று விட்டது. மதவாத தேசியவாதம் பிற மதங்களில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு தனது மத அடையாளத்தை உயர்த்திப் பிடித்தது. தங்களின் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் நலனுக்காகவே தேசமும் மாநிலங்களும் செயல்பட வேண்டும் என்று இது கூறுகிறது. தேசிய அரசுகள் (Nation - States) என்பது ஜனநாயகம் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு நேர் முரணானது மதவாத தேசியம், காலப்போக்கில் இது மாநில அடையாளங்களை சிதைத்து ஒற்றை தேசமாக மாறக்கூடிய ஆபத்துகள் இருக்கின்றன என்கிறார் ரொமிலா தப்பார்.

விடுதலை இராசேந்திரன்

Pin It