ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு - நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி 'நீர் மறுப்பு' என்ற தலைப்பில் ஆற்றிய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி)

இந்த அரசு திட்டமிட்டு வணிகப் பயிர்களை தமிழக விவசாயத்திற்குள் நுழைக்கிறது. மறுபுறத்திலே தண்ணீரின் அளவைக் குறைக்கிறார்கள். அதே சமயத்தில் மோட்டார்களைக் கொண்டு ஆழ்துழாய் கிணற்றுப் பாசனத்தை வளர்க்கும் முறைக்கு அரசு மானியம் கொடுக்கிறது. மானியம் அளிக்கப்பட்ட பிறகு 25 விழுக்காடாக இருந்த ஆழ்துழாய் கிணற்றுப் பாசனம் இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. கால்வாயை நம்பியிருந்த பாசனம் 37 விழுக்காட்டி லிருந்து 20 விழுக்காடாகக் குறைகிறது. குளத்தின் மூலமான பாசனம் 37 விழுக்காட்டிலிருந்து 10 விழுக் காடாகக் குறைந்திருக்கிறது. இதன் காரணமாகத்தான் குளத்தை மூடுவது பற்றிய அக்கறை இல்லாமல் போனது. இன்னொரு பக்கம் காவிரியில் தண்ணீர் அளவு குறையக் குறைய ஆழ்துழாய் கிணறுகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.

இவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்தது தமிழ்நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தை முடக்குவது என்பதுதான். அதற்குக் காவிரியை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இங்கு நீதிக் கட்சி காலத்திலிருந்து, திராவிடர் இயக்கப் போராட்டங்களின் மூலமாக நமக்குக் கிடைத்த கல்வியின் மூலமாக தமிழ்நாடு தனது பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. ஆனால் விவசாய நிலப்பரப்பு என்பது தொடர்ச்சியாக அழிக்கப்படுகிறது. இன்றைய நிலையில் தண்ணீரும் வணிகப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது. மிக முக்கிய வணிகக் காரணியாகவும், ஏற்றத்தாழ்வுக்கான புதிய காரணியாகவும், தீண்டாமைக்கான காரணியாகவும் தண்ணீர் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.

பணம் இருப்பவனுக்குத்தான் தண்ணீர், இல்லாதவனுக்குத் தண்ணீர் இல்லை என்ற புதிய வகையான தீண்டாமை உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று சென்னை நகரத்தின் தண்ணீர் வணிகம் மட்டும் 1800 கோடி ரூபாய். இவ்வளவு லாபம் இங்கிருக்கிற முதலாளிகளுக்குக் கிடைக்கும் பட்சத்திலே இவர்கள் எப்படி காவிரி உரிமையைப் பெற்றுத்தருவார்கள்? இங்கே ஆண்ட கட்சி, ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் இந்த வியாபாரத்தில் பிரதிநிதித்துவம் கொண்டுள்ளார்கள். அவர்கள் எப்படி தண்ணீர் உரிமையைப் பேசுவார்கள்? இந்த சூழலில் கர்நாடகம் தண்ணீர் மிகை மாநிலமாக இந்திய அரசால் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலே தண்ணீர் தனியார்மயமாக்கல் மாநிலமாகவும் கர்நாடகாவை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமாக தேவைப் படுகிற ஒரு காரணி தண்ணீர். அதை அரசு இலவசமாக வழங்க வேண்டும். ஆனால் அதை வணிகத்திற்குப் பயன்படுத்த முடியும் என்ற சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தார்கள் கர்நாடகாவில். 13 நகரங்களில் இதற்கு அனுமதி கொடுத்தார்கள். இதில் முக்கியமாக மைசூரு நகரின் தண்ணீர் விநியோகத்தை டாடா நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார்கள். பிற இடங்களில் பிரெஞ்சு நிறுவனங்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது. தார்வாட், ஹூக்ளி போன்ற இடங்களில் நடுத்தர குடும்பங்கள்கூட தண்ணீருக்கு சராசரியாக 50,000 முதல் 60,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. ஆகவே தண்ணீரை முழுவதுமாக வணிகப் பொருளாக மாற்றும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலும் தண்ணீர் தேவையை அதிகரிப்பதன் மூலமாக ஒரு வணிக சந்தையை இங்கேயும் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டிருக் கிறார்கள். நாளை ஒருவேளை கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் ஏற்றுமதியாகலாம். இப்போது பெங்களூரு நகரத்திற்குத் தண்ணீர் விநியோகத்தை தனியாருக்கு கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அந்த தனியார் நிறுவனத்தின் லாப நோக்கத்திற்காகத் தண்ணீரை காவிரியிலிருந்து பெற்றுத்தருவது என்ற தந்திர நடவடிக்கையுடன்தான் தமிழனின் காவிரி உரிமையை மறுத்து வருகிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த அதேநாளில் டைம்ஸ் ஆஃப் இந்தியா வில் ஒரு கட்டுரை வெளி யானது. 'பெங்களூரின் தண்ணீர் தேவை அடுத்த பத்தாண்டுகளில் மிக மோசமாக இருக்கும். உலக அளவில் தண்ணீர் இல்லாத நகரங்களில் ஒன்றாக பெங்களூரு மாறப் போகிறது' என்று உலக வங்கி கூறுவதாக அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அதற்கான அவசியம் என்ன? உச்ச நீதிமன்ற நீதிபதி பேச வேண்டியதன் தர்க்கத்தை அந்த ஊடகத்தின் வாயிலாக அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அதேநேரத்தில் சென்னையின் தண்ணீர் தேவைப் பற்றி பேச அவர்கள் தயாராக இல்லை. ஆகவே திட்டமிட்டு ஒரு செய்தியை கட்டமைக்கிறார்கள். அதை உச்ச நீதிமன்றம் வழிமொழிகிறது.

பெங்களூருவின் தண்ணீர் தட்டுப்பாடு என்று இவர்கள் பேச முயல்வதெல்லாம் மைசூரைப் போல, பெங்களூரிலும் தண்ணீர் விநியோகத்தை தனியார் மயமாக்கத்தான். அதற்காகத்தான் உச்ச நீதிமன்றம் கார்பரேட்டுகளின் நலனைக் கருத்தில்கொண்டு, பெங்களூரு தண்ணீர் இல்லாமல் வாடுகிறது பேசி நடிக்கிறது. இதற்கெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து பெரிய எதிர்ப்பு வரப்போவதில்லை, அச்சுறுத்தப் போவதில்லை என்று அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். இன்று காவிரி டெல்டாவில் துணை ராணுவத்தைக்கொண்டு வந்து இறக்கியிருக்கிறார்கள். இந்த அரசு இரண்டு வருடத்திற்கு முன்பு கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது ஏன் துணை ராணுவப் படையை அங்கே இறக்கவில்லை. தமிழனுடைய நெற்றியில் துப்பாக்கியை நீட்டி நம்முடைய நிலங்களைப் பிடுங்குகின்றான். நம்முடைய கனிம வளங்களைப் பிடுங்குகின்றான். தண்ணீர் தர மறுக்கின்றான். ஆகவே நீர் மறுப்பு என்பதினுடைய பின்னணி அரசியல் என்பது இவ்வளவு இருக்கிறது.

காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் நிலக்கரி, மீத்தேன், கச்சா எண்ணெய் போன்றவற்றை எடுக்கலாம். இவற்றை எடுக்க குஜராத் மார்வாடி கும்பல்கள் வரப்போகின்றன, வந்து கொண்டிருக் கின்றன. இதை ஏற்றுமதி செய்வதற்கு சிறு துறைமுகங்களை கடற்கரையோரமாக அவர்கள் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் கடலிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள் வேறு எதிலும் தண்ணீர் கிடைக்காது என்று சூசகமாக சொல்லத் தொடங்கிவிட்டார்கள். எனவே தண்ணீரை தனியார் மயமாக்கத்தை நோக்கித் தள்ளும் விதமாகவும், தமிழின அழிப்புக்காகவும்தான் தண்ணீரை மறுக்கின்ற வேலையைச் செய்கிறார்கள்.

போர்க்காலத்தில், யுத்த காலத்தில் தண்ணீர் மறுக்கப்பட்டால் அது போர்க்குற்றமாக பார்க்கப்படு கிறது. அப்படியென்றால் அமைதி காலத்தில் தண்ணீரை நிறுத்தினார்கள் என்று சொன்னால் அது இனப் படுகொலைக்காகத்தான் செய்யப்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும். ஆகவே இந்தியா தமிழினப் படுகொலையை தமிழ்நாட்டில் நடத்துவதற்குத் தயாராகிவிட்டது. அதற்கு ராணுவத்தையும் இறக்கிவிட்டார்கள், தண்ணீரையும் தடுத்துவிட்டார்கள். இதற்குப் பிறகும் தமிழகம் அமைதி காக்க முடியாது. தனது உரிமைக்கான தொடர்ச்சியான, சமரசமில்லாத போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இந்த நெருப்பை இத்தனை ஆண்டுகளாகப் பெரியார் இயக்கங்கள் பாதுகாத்து வந்திருக்கிறது, என்றார் திருமுருகன் காந்தி.

செய்தி தொகுப்பு : ர. பிரகாசு

Pin It