உ.பி.யின் துணை முதல்வராக இருப்பவர் தினேஷ் சர்மா எனும் பார்ப்பனர். இவர் அவ்வப்போது அதிரடியான ஆராய்ச்சிகளில் நாட்டையே கலக்குகிறார். ‘மோடிக்கு நான் சளைத்தவனல்ல’ என்று சவால் விடுமளவுக்கு அவரது அறிவியல் கண்டுபிடிப்புகள் இருக்கின்றன.

மகாபாரத காலத்திலேயே ‘இண்டர்நெட்’ வந்துவிட்டது என்று பேசினார். இப்போது தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பைப்போல் அப்போதே நேரடி ஒளிபரப்பு இருந்தது என்றும், நாரதர் தான் அந்தக் காலத்து செய்தியாளராக இருந்தார் என்பதும் அவரது கண்டுபிடிப்புகள் - தலையைச் சுற்ற வைக்கிறது. இப்படி எல்லாம் கூச்சநாச்சமின்றி பேசக்கூடிய ‘துணிவு’ தான் நம்மை மூக்கின் மீது விரலை வைக்கிறது. அவரது ‘கண்டுபிடிப்புகள்’ இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

“சோதனைக் குழாய் குழந்தை நமது இதிகாச காலத்திலேயே இருந்திருக்கிறது. சோதனைக் குழாய் வழியாக பிறந்த முதல் குழந்தை இராமாயண சீதைதான்” என்றும் கண்டுபிடித்திருக்கிறார். இதிகாச காலங்களில் பயன்படுத்தப்பட்ட புஷ்பக விமானங்களே இப்போதைய விமானங்களுக்கு முன்னோடி என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

இதிகாச புராண காலங்களிலே இருந்த விமானம், ‘இன்டர்நெட்’, ‘சோதனைக்குழாய் பிறப்பு’ எல்லாம், அதற்குப் பிறகு எங்கே போயின? இந்த கண்டுபிடிப்புகளை இந்துத்துவாவுக்கே தொடர்பில்லாத விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, அறிவியல் அடிப்படையில் பயன்பாட்டுக்கு வரும் காலம் வரை எங்கே பதுங்கிக் கொண்டிருந்தன?

மின்சாரம், பெட்ரோல், தொலைபேசி, அலுமினியம், இரப்பர் எல்லாம் கூட இதிகாச, புராண காலங்களிலே கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா? அல்லது இவைகள் இல்லாமலேயே ‘புராண நாயகர்கள்’, தங்கள் ‘அறிவியல் சாதனைகளை’ நிகழ்த்திக் காட்டினார்களா? இந்தக் கேள்விகளுக்கு பதில் கூறுங்கள் என்று இவர்களிடம் கேட்க முடியாது.

‘ஆரியர்கள் அநாதிகள்; அவர்களுக்கு தோற்றமே இல்லை; காலம் காலமாக இருந்து கொண்டிருப்பவர்கள்’ என்பது தான் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம். (ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தத்துவத்தை எழுதி வைத்த கோல்வாக்கர் அப்படித் தான் கூறுகிறார்) இப்படி ஒரு ‘அபத்தமான உளறலை’ தங்கள் சித்தாந்தமாக ஏற்றவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.

உ.பி. துணை முதல்வர் தினேஷ் சர்மா பேசியிருக்கும் இடம் லக்னோ பல்கலைக்கழகம். இதே கருத்தை பெரியாரிஸ்டுகள் கூறினால் இந்து மதத்தைப் புண்படுத்துவதாக காவல்துறையிடம் மனு கொடுத்திருப்பார்கள். சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்த பா.ஜ.க., சங் பரிவாரங்கள் அங்கே இருப்பது இராமன் கட்டிய பாலம், அதை இடிக்கக் கூடாது என்று கூறினார்கள். அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கேட்டார், ‘இராமன் என்ன என்ஜினியரா?” என்று. அப்போது இதே ‘சங்பரிவாரங்கள்’ தான் கலைஞர் தலைக்கு விலை வைத்தன. இதிகாச காலத்திலேயே ‘என்ஜினியர்கள்’ இருந்திருக்கிறார்கள் என்று மற்றவர்கள் கூறினால் அது மதத்தைப் புண்படுத்து வதாம். இதிகாச காலத்திலே விமானம், சோதனைக் குழாய், இன்டர்நெட் இருந்தது என்று ‘அவாள்’ கூறினால், அது புனிதமாம்; இந்துப் பெருமையாம். என்னய்யா, இரட்டை வேடம்?

ஒன்று மட்டும் உண்மை; இதிகாசக் காலத்திலிருந்து மோடி காலம் வரை பொய்யர்கள் புரட்டர்கள் இருக்கிறார்கள்.

அன்று இராமன், கிருஷ்ணன், நாரதன் என்றால், இன்று மோடி, அமித்ஷா, ஆதித்யநாத், தினேஷ் சர்மா வகையறாக்கள். அவ்வளவுதான்!

Pin It