தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய இராஜராஜ சோழன், அவனது மனைவி உலகமாதேவி ஆகியோரின் அய்ம்பொன் சிலைகள் 60 ஆண்டுகளுக்கு முன் கோயிலிலிருந்து திருட்டுப் போனது. இப்போது குஜராத்திலுள்ள தனியார் அருங்காட்சியகத்திலிருந்து (அகமதாபாத் - சாராபாய் பவுண்டேஷன் காலிகோ அருங்காட்சியகம்) மீட்கப்பட்டு தஞ்சைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டுக் கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகளையெல்லாம் பத்திரமாக மீட்டுத் தரும் வேலையை சிறப்பாக செய்து வருகிறார், சிலைக் கடத்தல் தடுப்புக் குழு தலைமை காவல் அதிகாரி (அய்.ஜி.) பொன். மாணிக்கவேல் அவரது குழுவினர் ஒத்துழைப்புடன்! கண்டுபிடித்து மீட்டுவரும் இவர்கள் ஆகமமுறைப்படி சிலைகளுக்கு அருகே நெருங்கக் கூடாதவர்கள்; “சூத்திரர்கள்”. இந்த சிலையை 60 ஆண்டுகளுக்கு முன் திருடுவதற்குத் திட்டம் தீட்டித் தந்து, அதை விற்பதற்கு தரகராக செயல்பட்டது யார் என்றால், சீனிவாச கோபாலாச்சாரி என்ற பார்ப்பனர். தஞ்சை கோயில் ‘ஆகம விதிப்பபடி’ பகவானுக்குரிய கடமைகளை செய்து வரும் “பிராமண அர்ச்சகர்” உதவியோடுதான்இந்த திருட்டு நடந்திருக்கிறது. ஆகமத்தில் அர்ச்சகர் சிலை திருட்டுக்கு உதவலாம் என்று கூறப்பட்டிருக்கிறது போலும்!

மீட்கப்பட்ட இரண்டு சிலைகளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.150 கோடி. அருங்காட்சியகத்திலும் காவல்துறை கரங்களிலும் பட்டு ‘தீட்டாகி’ விட்ட சிலைகள் தில்லை தீட்சதர்களாலும் திருவையாறு ‘வடகயிலாயம்’ கோயில் அர்ச்சகர்களாலும் ‘வேத மந்திரம்’ ஓதி தீட்டுக் கழிக்கப்பட்டு மீண்டும் தஞ்சை கோயிலுக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் வந்து சேர்ந்திருக்கிறது.

“3 மாதங்களில் சிலைகளை நாங்கள் மீட்டிருக் கிறோம். இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு 100 வயதாக இருந்தாலும் சரி; கைது செய்து சிறையில் அடைப்போம்” என்று கூறியிருக்கிறார் அய்.ஜி. பொன். மாணிக்கவேல்.

இந்த இராஜராஜன் அவரது மனைவி சிலைகளை நிறுவ முடிவெடுத்து இராஜராஜனின் படைத்தளபதி மும்முடிச் சோழ பிரம்மராயன் கோயில் கருவறைக் குள்ளேயே வைத்தான். அப்போது ‘ஆகம விதிக’களைக் கூறி வைதிகப் பார்ப்பனர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை போலும்.

இப்போது மீட்டுக் கொண்டு வரப்பட்ட சிலைகள் மீண்டும் ‘கர்ப்பகிரகத்துக்குள்ளேயே’ வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த செய்தியை பல நாளேடுகள் மறைத்து விட்டாலும் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு மட்டும், “Reinstalled in Sanctum Sanctorum” என்று செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல சிலையைத் திருடியது சீனிவாச கோபாலாச்சாரி என்ற வைதிகப் பரம்பரையில் வந்த பார்ப்பனர்தான் என்ற செய்தியையும் பல ஏடுகள் வெளியிடவில்லை.

இராஜராஜசோழனுக்கு விழா எடுத்த தமிழக முதல்வர் கலைஞர், இராஜராஜனுக்கு ஒரு சிலை செய்து அதை கோயிலுக்குள் வைக்க முயற்சித்தபோது மத்திய தொல்பொருள் துறை கோயில் கட்டிய ‘சூத்திர’ மன்னன் சிலையை கோயிலுக்குள்ளேயே வைக்க  அனுமதி மறுத்துவிட்டது. அதனால் அன்றைய முதல்வர் கலைஞர் கோயிலுக்கு வெளியே வாசலில் அந்த சிலையை நிறுவுகிறேன் என்று எதிர்வினையாற்றும் வகையில் வாயிலில் சிலையை வைத்தார். அந்த வெண்கலச் சிலை இப்போதும் தஞ்சை கோயில் வாசலில்தான் நிற்கிறது.

மீட்கப்பட்ட இராஜராஜன் அவனது மனைவி சிலைகளின் மதிப்பு 150  கோடி ரூபாய் என்பதால் மீண்டும் கர்ப்பகிரகம் போய்விட்டது. ஆக சூத்திர மன்னன் சிலையாக கர்ப்பகிரகத்துக்குள் நுழைந்து விட்டான்; ஆனால் ‘சூத்திரர்கள்’ மட்டும் அந்த கர்ப்பகிரகத்துக்குள் நுழைய முடியாது. இதுதான் இப்போது பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் வழியாகப் பெற்று வைத்திருக்கும் பிறவி அதிகார உரிமை!

அது மட்டுமல்ல; சிலையைத் திருடிய ஆச்சாரி பரம்பரை மட்டும் ஆகம விதிப்படி கர்ப்பகிரகத்துக்குள் நுழைய முடியும். சிலையை மீட்டெடுத்த ‘பொன் மாணிக்கவேல்’ சூத்திர பரம்பரை - உரிய பயிற்சி பெற்றிருந்தாலும் கர்ப்பகிரகத்துக்குள் நுழைந்து விட முடியாது. சிலையை அரும்பாடுபட்டு மீட்டு வந்த காவல்துறை, ‘பிராமண அர்ச்சகர்களிடம்’ சல்யூட் அடித்து கோயிலுக்கு வெளியே ஒப்படைப்பதோடு அவர்களின் அதிகாரம் முடிந்து விட்டது.

இந்தியாவின் குடியரசுத் தலைவரையே அவர் ‘தலித்’ என்பதால் கோயிலுக்குள் இப்போதும் விட மறுக்கிறார்கள் பார்ப்பனர்கள். குடியரசுத் தலைவர் அதிகாரத்தைவிட அர்ச்சகர் பார்ப்பனர்களின் அதிகாரம் வலிமையானது; இதுதான் இந்தியா; இதுதான் பாரதம்!

Pin It