aanaimuthu veபூலாம்பாடி கு. வரதராசன் தொகுத்துப் பதிப்பித்துள்ள ‘பெரம்பலூர் மாவட்டத்தில் பெரியார் முழக்கம்’ நூலை வெளியிட்டுத் தோழர் வே.ஆனைமுத்து ஆற்றிய உரை

தோழர் கு.வரதராசன் தொகுத்து இங்கே வெளியிடப்படுகின்ற ‘பெரம்பலூர் மாவட்டத்தில் பெரியார் முழக்கம்’ என்கின்ற இந்த நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் தலைவர் ஓவியர் முகுந்தன் அவர்களே! மதிப்பிற்குரிய மய்ய அரசின் முன்னாள் அமைச்சர் திரு.ஆ.இராசா அவர்கள் வரமுடியாத நிலையில் இந்த நூலை நான் வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட, தலைசிறந்த கல்வியாளர் - ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.வரதராசன் அவர்களே! எனக்கு முன்னாலே உரையாற்றி அமர்ந்திருக்கிற தி.மு.க.வின் கொள்கைப் பரப்புத் துணைச்செயலாளர் பெருநற்கிள்ளி அவர்களே! மறுமலர்ச்சி தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் அவர்களே! முனைவர் தங்கப்பிரகாசம் அவர்களே! மற்றும் இங்கே கூடியுள்ள எண்ணற்ற தோழர்களே! உங்கள் அனை வருக்கும் என் அன்பார்ந்த வணக்கம்.

இந்நூலின் தொகுப்பாசிரியரைப் பற்றி நான் முதலிலே சொல்ல வேண்டும். அவருடைய தந்தையார் குருசாமி இலப்பைக் குடிக்காடு நடுநிலைப்பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்தார்.

நான் அந்தப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 1939ஆம் ஆண்டி லிருந்து படித்தேன். நடந்து போய்ப் படித்தேன். அப்போது நான் வடக்கலூர் அகரம் என்ற ஊரிலிருந்து பென்னக்கோணம் வழியாக நடந்து இலப்பைக் குடிக்காடு செல்லவேண்டும். வடக்கலூர் அகரத்துக்கும் இலப்பைக் குடிக்காடுக்கும் தொலைவு 5 கி.மீ. அன்றாடம் போக வர 10 கி.மீ. நடந்து சென்று படித்தேன்.

போகும் வழியில் அன்றாடம் பென்னக்கோணத்தில் குருசாமி ஆசிரியர் வீட்டில்தான் தண்ணீர் வாங்கிக் குடிப்போம். அதனால் எனக்கு குழந்தையிலிருந்தே வரதராசனைத் தெரியும். வரதராசனுக்கு நான் 1963ஆம் ஆண்டில் இன்றைக்கு 55 ஆண்டுகளுக்கு முன்பு மணம் செய்து வைத்தேன்.

அவரும் அவருடைய துணைவியார் சின்னப்பெண்ணும் மகன், மகள், மருமக்கள், பேரக் குழந்தைகள் எல்லோருடனும் தங்களுடைய திருமண நாளில் 2018ஆம் ஆண்டில் என் வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்தார்கள்; எனக்கு மரியாதை செலுத்தி னார்கள். வரதராசன் எனக்கு மிகவும் நெருக்கமாக வேண்டியவர். இது முதல் செய்தி.

தந்தை பெரியார் அவர்கள் எத்தனை முறை அழைத்தாலும் பெரம்பலூர் பகுதியிலே, அரும்பாவூர் பகுதியிலே, பூலாம்பாடி பகுதியிலே, கூட்டம், குடும்ப நிகழ்ச்சி என எது வாக இருந்தாலும் வந்துவிடுவார். அக் கூட்டங்களில் நானும் அந்தூர் கி.இராமசாமி, இலந்தங்குழி ஆ.செ.தங்க வேலு, கூடலூர் தி.க.சுப்பையா, வரகூர் மா.நாராயணசாமி ஆகிய எல்லோரும் கலந்துகொள்வோம். தி.க.சுப்பையா அருமையான தோழர். சைவராக இருந்தவர்; உண்டி கட்டிக் கொண்டிருந்தார். இவர்களோடு இணைந்து பணி யாற்றியவர் ஆசிரியர் கு.வரதராசன்.

வரகூர் மா.நாராயணசாமிக்கு வயது 89. எனக்கு வயது 94. இதோ முன்வரிசையில் அமர்ந்துள்ள அந்தூர் கி.இராம சாமிக்கு 99 வயது முடிந்து 100 வயதை எட்ட உள்ளார். நூறு வயது ஆகியும் என்னோடு பணியாற்றிய தோழர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றால் அவர்களைப் பார்க்கும் போது நான் நிரம்பவும் மகிழ்ச்சி அடைகிறேன்; அந்த அளவுக்கு அவர்கள் எனக்கு வழிகாட்டிகள்.

அடுத்து நூலாக்கம் பற்றிச் சொல்கிறேன். நூலாக்கம் என்பது ஒன்று. நூலைத் தொகுப்பது என்பது வேறு ஒன்று. படிப்பது, அதில் குறிப்பெடுப்பது, அதைப் படியெடுப்பது, பின்னர் அவற்றைத் தொகுத்து நூலாக்குவது என்பது வேறு.

பல இடங்களுக்கும் சென்று புத்தகங்களைப் படித்து, குறிப்பெடுத்து, படியெடுத்து அதை உரிய இடங்களில் சேர்த்துத் தொகுப்பாக்கி நூலாக்குவது என்பது கடினமான பணி. இதில் வந்தியத்தேவன் அவர்களுக்குப் பயிற்சி; எனக்கும் நிரம்பப் பயிற்சி.

இந்த நூலாக்கத்துக்காகத் தோழர் கு.வரதராசன் அவர்கள் சென்னைக்குப் போய், அங்கேயே தங்கி, பெரியார் திடலில் உள்ள ‘விடுதலை’ அலுவலக நூலகத்தில் உட்கார்ந்து, பழைய ‘குடிஅரசு’, ‘விடுதலை’ ஏடுகளைத் தேடி எடுத்து, புரட்டிப் பார்த்து நிறைய குறிப்புகள் எடுத்து இருக்கிறார்.

கு.வரதராசன் ஒரு சாதாரண ஆசிரியர்; உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் அவ்வளவுதான். அவர் மிகப்பெரிய படிப்பாளி இல்லை. தமிழ் படித்தவர். அவருடைய உழைப் போடு அவர் தன்னுடைய துணைவியாருடைய ஒத் துழைப்பு, மகனுடைய ஒத்துழைப்பு, மருமகளுடைய ஒத்துழைப்பு, பேரக் குழந்தைகளுடைய ஒத்துழைப்பு ஆகிய இவற்றையெல்லாம் பயன்படுத்தி ஓர் அருமை யான நூலை உருவாக்கியிருக்கிறார்.

நான் பிறந்த மாவட்டம், அந்தூர் கி.இராமசாமி, வரகூர் மா.நாராயணசாமி ஆகிய எண்ணற்ற தோழர்கள் பிறந்த மாவட்டமாகிய இந்தப் பெரம்பலூர் மாவட்டத்துக்கு ஒரு வரலாற்றை கு.வரதராசன் உருவாக்கியிருக்கிறார். தான் பிறந்த மாவட்டத்துக்குப் பெருமை செய்துள்ளார். இது பெருமை இல்லையா? அவருடைய அரிய பணியை நெஞ் சாரப் பாராட்டுகிறேன். அவருடைய குடும்பத்தாரையும் பாராட்டுகிறேன்.

தந்தை ரோவர் அவர்களை நிறைய தடவை நேராகவே பார்த்திருக்கிறேன். இப்போது எனக்கு வயது 94. அவர் ஜெர்மன்காரர். அவருடைய வழியிலே கல்வி வள்ளலாக ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மேன்மைமிகு கே.வரதராசன் இருப்பதைப் பார்த்துப் பெருமைப் படு கிறேன். ‘பெரம்பலூர் மாவட்டத்தில் பெரியார் முழக்கம்’ என்கிற இந்த நூலை நான் வெளியிட, அதை அவர் பெற்றுக்கொண்டது என்பது எனக்கு நிரம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. அதோடு சடங்கு என்று அந்தச் செய்தியை விடவேண்டும்.

இன்னொரு செய்தியைச் சொல்கிறேன். நான் அதிக நேரம் பேச விரும்பவில்லை. இந்த நாட்டில் மக்கள் தொகையில் பார்ப்பனர்கள் நூற்றுக்கு 3 பேராகவும் - நல்லா கவனிக்க வேண்டும்; பார்ப்பனர்கள் நூற்றுக்கு 3 பேராகவும், ஆதிதிராவிடர்கள் நூற்றுக்கு 14 பேராகவும், பார்ப்பனரல்லாதவர்கள் - அதாவது பார்ப்பனரல்லாத இந்துக்கள் நூற்றுக்கு 72 பேராகவும், முகமதியர்கள் நூற்றுக்கு 7 பேராகவும், ஆங்கிலோ இந்தியர்களும் கிறித்தவர்களும் நூற்றுக்கு 4 பேராகவும் இருக்கிறார்கள்.

மொத்த மக்கள் தொகையில் இந்தப் பிரிவு மக்கள் எத்தனை எத்தனை விழுக்காடு இருக்கிறார்களோ அத்தனை விழுக்காடு அளவுக்குத்தானே அந்த அந்தப் பிரிவு மக்களுக்குக் கல்வியில் அரசு வேலையில் இடங்களைப் பங்குப் போட்டுக் கொடுக்கவேண்டும். இதைத் தான் பெரியார் சொன்னார்.

நூற்றுக்கு 3 பேராக இருந்த பார்ப்பனர்களே கல்வியிலும், வேலையிலும் எல்லா இடங்களையும் எடுத்துக் கொண்டார்கள். 1920-இல் சென்னை மாகாணத்தில் ஆட்சிக்கு வந்த நீதிக் கட்சி அரசுதான், நூற்றுக்கு 3 பேராக இருந்துகொண்டு எல்லா இடங்களையும் அபகரித்துக் கொண்ட பார்ப்பனர்களுக்கு 16.7 விழுக்காடு இடங்கள் தான் என்று கட்டுப்படுத்திக் குறைத்து உத்தரவு போட்டது.

நூற்றுக்கு 72 பேராக இருந்த பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு 41.6 விழுக்காடு இடங்கள்; நூற்றுக்கு 7 பேராக இருந்த முகமதியர்களுக்கு 16.7 விழுக்காடு இடங்கள்; நூற்றுக்கு 4 பேராக இருந்த ஆங்கிலோ இந்தியர்களுக்கும் இந்தியக் கிறித்தவர்களுக்கும் 16.7 விழுக்காடு இடங்கள்; நூற்றுக்கு 14 பேராக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு (அப்போது ஆதிதிராவிடர் என்ற சொல் அரசில் கையாளப் படவில்லை) 8.3 விழுக்காடு இடங்கள் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டன.

மொத்த மக்களை 5 வகுப்பாகப் பிரித்தார்கள். 5 வகுப்பு களுக்கும் பங்குப் போட்டுக் கொடுத்தார்கள். எல்லா வகுப்புகளுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது. ஆனால், அது விகிதாசாரப் பங்காக இல்லை, அவ்வளவுதான். சில வகுப்புகளுக்குக் கூடுதலாகக் கொடுக்கப்பட்டது. சில வகுப்புகளுக்குக் குறைவாகக் கொடுக்கப்பட்டது. ஆனால், எந்த வகுப்புக்கும் பங்கு கிடையாது என்று சொல்லப்பட வில்லை.

நூற்றுக்கு மூன்று பேராக இருந்த பார்ப்பனர்கள் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றிக் கொள்ள முடிந்தது எப்படி? எதனால்? யோசித்துப் பார்க்க வேண்டாமா? அதுதான் இந்து தர்மம் - இந்துச் சட்டம்.

இன்றைக்குத்தான் சுதந்தரம் வந்துவிட்டதே! நமக்குத் தான் டாக்டர் அம்பேத்கர் புதுசா அரசமைப்புச் சட்டம் எழுதிக் கொடுத்துவிட்டாரே! இப்போது எங்கே இந்துச் சட்டம் இருக்கிறது? என்று கேட்பீர்கள். என் கையில் இருக்கிறதே - இது டாக்டர் அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டம். இதிலே உள்ள 372ஆவது விதியில் பிரிவு 1-இல் உள்ளதைப் படிக்கிறேன் கேளுங்கள் :

Article 372 : Constinuance in force of existing laws and their adaption :

(1) Notwithstanding the repeal by this constitution of the enactment referred to in article 395 but subject to the other provisions of this constitution, all the law in force in the territory of india immediately before the commencement of this Constitution shall continue in force therein until altered of repealed or amended by a competent legislature or other competent authority.      

இதற்குத் தமிழில் என்ன பொருள்?

இந்த 372ஆவது பிரிவுக்குத் தலைப்பு என்ன தெரியுமா? “நடப்பில் உள்ள சட்டங்கள் தொடர்வதும் அவற்றை ஏற்றுக் கொள்ளுவதும்” என்பதுதான் தலைப்பு. இனி இந்தப் பிரிவில் சொல்லப்பட்டுள்ளதன் பொருள் என்ன என்பதைச் சொல்கிறேன்.

“அரசமைப்புச் சட்டத்தின் 395 ஆம் பிரிவில் செல்லாது என்று சொல்லப்பட்டுள்ள சட்டங்கள் நீங்கலாக இந்த அரசமைப்புச் சட்டத்தின் மற்ற பிரிவுகளுக்கு உட்பட்டு இந்த நாட்டில் இந்த அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன் நடப்பில் இருந்த எல்லாச் சட்டங்களும் அவை மாற்றப்படாமல் அல்லது இரத்துச் செய்யப்படாமல் அல்லது நீக்கப்படாமல் இருக்கு மானால் அந்தச் சட்டங்கள் எல்லாம் செல்லுபடியாகும்.”

இந்தப் பிரிவிலே ‘existing laws’ என்று தலைப்பிலும் ‘laws in force’ என்று உள்ளேயும் என்று ஆங்கிலத்திலே சொல்லப்பட்டுள்ளதே அதன் பொருள் என்ன? அப்படி ஏன் எழுதினார்கள்? இங்கேதான் பார்ப்பான் வருகிறான்; இந்து மதத்தை நுழைக்கிறான்.

எழுதப்பட்ட சட்டத்தைவிட எழுதப்படாத சட்டம் வலிமையானது. அது என்ன எழுதப் படாத சட்டம் என்று கேட்பீர்கள். “எங்கள் சாதிப் பழக்க வழக்கம்” என்கிறார்களே, அதுதான் எழுதப்படாத சட்டம். ‘பழக்க வழக்கச் சட்டம்’ - ‘custom and usuage ’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அத்தகைய பழக்க வழக்கம், ஒரு சட்டத்தால் இரத்துச் செய்யப்படாத வரையிலும் அந்தப் பழக்க வழக்கம் இந்தப் பிரிவு 372 (1)-இன்படி சட்டத் தகுதியைப் பெற்றிருக்கிறது.

இனி செய்திக்கு வருகிறேன். இதை ஏன் இவ்வளவு விளக்கமாகச் சொல்கிறேன் தெரியுமா? நூற்றுக்கு 3 பேராக உள்ள பார்ப்பனர்கள், பெரும்பான்மை மக்களை அடிமை களாக்கி, பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு, மூவாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வர முடிகிறது என்றால் எப்படி? அதுதான் பார்ப்பானுக்குள்ள சமுதாய மரியாதை.

உலகத்தைப் படைத்தவர் பிரம்மா. அந்தப் பிரம்மாவின் நெற்றியிலே பிறந்தவர்கள் பிராமணர்கள்; தோளிலே பிறந்தவர்கள் சத்திரியர்கள்; தொடையிலே பிறந்தவர்கள் வைசியர்கள்; பாதத்தில் பிறந்தவர்கள் சூத்திரர்கள். நாமெல்லாம் சூத்திரர்கள் - பிரம்மாவின் பாதத்திலே பிறந்தவர்கள். இந்த நான்கு பிரிவுகள்தான் சாதி. தீண்டப் படாதவர்கள் இருந்தார்கள்; அவர்களுக்குச் சாதி இல்லை.

இதெல்லாம் எதிலே எழுதப்பட்டிருக்கிறது? மனுதர்ம நூல் - மனு சாஸ்திரம் என்றெல்லாம் சொல்கிறார்களே அந்த மனுஸ்மிருதி நூலில் எழுதப்பட்டுள்ளன. மனு ஏன் அப்படி எழுதினான்.

பார்ப்பானை உசத்தி வைக்கவும் நம்மைத் தாழ்த்தி வைக்கவும் அப்படி எழுதினான். எப்போது எழுதினான்? மூவாயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன் எழுதினான். பார்ப்பானுக்கு நாமெல்லாம் அடிமை களாக இருந்து உழைக்க வேண்டும் சேவகம் செய்ய வேண்டும் என்பதற்காகவே எழுதினான்.

இந்தச் சங்கதிகளை எல்லாம் நம் மக்களிடம் பெரியார் சொன்னார்; நாங்கள் சொல்கிறோம். வேறு யாராவது சொல்கிறார்களா? இன்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சொல்கிறாரா? நேற்றிருந்த பிரதமர் இந்திரா காந்தி சொன் னாரா? அதற்கு முன் பிரதமராக இருந்த பண்டித சவகர்லால் நேரு சொன்னாரா? யாரும் சொல்லவில்லையே!

பெரியார்தான் கேட்டார், “மூவாயிரம் ஆண்டுக் காலத் துக்கு முந்தி எழுதினது, இப்போது ஏண்டா சட்டமாக இருக்க வேண்டும்?” என்று கேட்டார். ஏன் அப்படிக் கேட் டார். மனு ஸ்மிருதியிலே பார்ப்பான் உயர்ந்தவன் என்று எழுதப்பட்டுள்ளதையும், சூத்திரன் தாழ்ந்தவன் என்று எழுதப்பட்டுள்ளதையும் இன்றைக்கும் இரத்து செய்யாமல் அப்படியேதான் இருக்கிறது. சூத்திரன் என்றால் என்ன - பொருள் தெரியுமா? பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்று பொருள். அதற்குத்தான் இந்த 372(1) பிரிவு பாதுகாப்பு அளித்து வருகிறது.

வடநாட்டில்தான் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், தீண்டப்படாதவர் என்ற நான்கு பிரிவுகள் உண்டு. தென்னாட்டில் சத்திரியரும் வைசியரும் கிடையாது. தென்னாட்டில் பரசுராமர் சத்திரியர்களையும் வைசியர்களையும் கொன்றுவிட்டார். பிராமணர், சூத்திரர், தீண்டப் படாதவர் ஆகிய பிரிவுகள் மட்டுமே உண்டு. இந்தச் சட்டத்தின் ஒரு பிரிவுக்குப் பெயர் ‘தாயபாகப் பிரிவுச் சட்டம்’ என்று பெயர் - இது வடநாட்டு இந்துக்களுக்கு. இன்னொரு பிரிவுக்குப் பெயர் ‘மிதாட்சரப் பிரிவுச் சட்டம்’ - இது தென்னாட்டு இந்துக்களுக்கு.

மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டுள்ள செய்திகள், பழக்க வழக்கச் சட்டங்கள், தாயபாகப் பிரிவுச் சட்டம், மிதாட்சரப் பிரிவுச் சட்டம், இந்துச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 17, 25 மற்றும் இங்கே நான் குறிப்பிட்டுப் பேசிய அந்த 372ஆம் பிரிவு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் நான், தந்தை பெரியார் அவர்களுடன் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் விவாதிப்பேன். அதை அவரும் வரவேற்று என்னுடன் விவாதிப்பார்.

தந்தை பெரியார் அவர்கள் இறப்பதற்கு 40 நாள் களுக்கு முன்னால், அவருடன் மகிழுந்தில் சுற்றுப் பயணம் செய்தேன். 11 நாள் சுற்றுப் பயணம். 1973 நவம்பர் 17 முதல் 1973 நவம்பர் 28 முடிய! கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரைக்கும்; இடையில் பல ஊர்களில் கூட்டம்.

மனு ஸ்மிருதி, இந்துச் சட்டம், அது பற்றிய அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் ஆகியவற்றை விளக்கி நீயே கூட்டங்களில் பேசு என்று பெரியார் என்னைப் பணித்தார். இந்த 11 நாள்களில் நானும் பெரியாரும் மட்டும் 10 ஊர்களில் பேசினோம். பெரியாரும் வீரமணியும் ஒரு ஊரில் மட்டும் பேசினார்கள். அந்த ஒரு ஊர் திருநெல்வேலி.

பெரியார் என்னைப் புரிந்துகொண்டு நீயே பேசு என்று என்னிடம் சொல்கிறார் என்றால் அது எப்படி? நான் அந்த அளவுக்கு அந்தச் சட்டங்களைப் படித்திருக்கிறேன். 1800-ஆம் ஆண்டிலிருந்து வெள்ளைக்காரன் நமக்குச் சட்டங்களை எழுதி வைத்திருக்கிறான். அவற்றையெல்லாம் நான் படித்துவிட்டுத்தான் பேசுகிறேன்.

பண்டித நேரு வெளிநாட்டில் படித்தவர். டாக்டர் அம்பேத்கர் வெளிநாட்டில் படித்தவர். மதச்சார்பற்ற சிந்தனை - மதச்சார்பற்ற சட்டம் என்பதெல்லாம் மேலை நாட்டுப் படிப்பினால் நேருவும் அம்பேத்கரும் புரிந்து கொண்ட செய்திகள். மதச்சார்பற்ற தன்மையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை அவர்கள் எழுதிவிடக் கூடாது என்று நூறாண்டு வாழ்ந்து மறைந்த காஞ்சி சங்கராச்சாரி கவலைப்பட்டார். அவர் கும்பகோணத்தில் இருந்த அக்னி கோத்திரம் தாத்தாச்சாரியார் என்னும் வைணவப் பார்ப் பனரைக் கூப்பிட்டார்.

அவரிடம், “இந்து மதத்துக்கு ஆபத்து வந்துடுச்சு, அதைத் தடுக்க வேண்டும்; நீ கும்ப கோணத்திலிருந்து காஷ்மீரம் வரைக்கும் எல்லா ஊருக்கும் போ! அரசமைப்புச் சட்டத்தை எழுதுகிற பொறுப்பிலே இருக்கிறவர்களை எல்லாரையும் பார்த்துப் பேசு. தில்லிக்கும் போ! அங்கே பண்டித நேருவும் இருப்பார்; அம்பேத்கரும் இருப்பார், கே.எம்.முன்ஷி இருப்பார்.

அவர்களையும் பார்த்து, இந்தியாவுக்கு ஏற்ற மாதிரி, மக்களிடையே உள்ள பழக்க வழக்கம் செல்லும்; எவ்வளவு காலத்துக்கு அந்த பழக்க வழக்கம் இருக்கிறதோ அவ்வளவு காலத்துக்கும் அது செல்லும் என்கிற தன்மையில் அரசமைப்புச் சட்டத்தில் எழுதுவதற்கு ஆவன செய்துவிட்டு வா!” என்று கட்டளையிட்டார்.

372ஆவது பிரிவில் இப்போதுள்ள வாசகம் என்பது, காஞ்சி சங்கராச்சாரியின் கட்டளைப்படி, அக்னி கோத்திரம் தாத்தாச்சாரியின் முயற்சியினால் எழுதப்பட்ட வாசகம். அதற்கு முன்பு எழுதப்பட்டிருந்த வாசகம் வேறு.

“இந்தச் சட்டம் நடப்புக்கு வந்த பிறகு ஏற்கெனவே பழக்கத்திலும் வழக்கத்திலும் உள்ள சட்டங்கள் செல்லுபடி ஆகாது” என்று அம்பேத்கர் எழுதி இருந்தார். அதை பாபு இராசேந்திரப் பிரசாத் பார்த்தார். உடனே அவர் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

“அதை நிறைவேற்றினால் அரசமைப்புச்சட்ட அவையின் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன்” என்று பாபு இராசேந்திர பிரசாத் எச்சரித்தார். தாம் எழுதிய வாசகங்களை மாற்றிவிட்டார்கள் என்பதை அம்பேத்கர் கண்டு பிடித்துவிட்டார். ஆனாலும், அவரால் ஒன்றும் செய்ய முடியாது விட்டுவிட்டார். இவையெல்லாம் அரசமைப்புச் சட்ட விவாதங்கள் என்கிற நூலில் சொல்லப்பட்டுள்ளன.

அதன்பிறகு அம்பேத்கர் ‘இந்துச் சட்டத்திருத்த மசோதா’ தயாரிப்பதில் ஈடுபட்டார். அந்த மசோதாவை நாடாளு மன்றத்தில் விவாதத்துக்கு வைத்தார். உறுப்பினர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் அந்தத் திருத்தங்களுக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஏன் அந்த எதிர்ப்பு?

அப்போது குழந்தைத் திருமண முறை நடப்பில் இருந்தது. ஒரு ஆண் எத்தனைப் பெண்ணை வேண்டு மானாலும் மனைவியாக்கிக் கொள்ளலாம். பெண்களுக்குச் சொத்தில் வாரிசு உரிமை இல்லை.விதவைகள் மறுமணம் செய்துகொள்ளக் கூடாது. பெண்கள் அடிமைப்பட்டுக் கிடந் தார்கள்.

இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் இந்துச் சட்டத் திருத்த மசோதா முடிவு கட்டியது. திருமணத்துக்குக் குறைந்த பட்ச வயது நிர்ணயிக்கப்பட்டது. ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்று அந்த மசோதா கூறியது. மேலும், பெண்களுக்குச் சொத்துரிமை, விதவைகள் மறுமணம் செய்துகொள்ளும் உரிமை ஆகியவையும் இந்துச் சட்டத் திருத்த மசோதாவில் இடம்பெற்று இருந்தன.

தொடக்கத்தில் இந்த மசோதாவுக்கு ஆதரவு காட்டிய பிரதமர் நேரு, எதிர்ப்பு பலமாகக் கிளம்பியபோது பின் வாங்கி விட்டார். அதனால் இந்த மசோதா நிறைவேற்றப் பட முடியாத நிலை ஏற்பட்டபோது, அம்பேத்கர் அமைச்சர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.

சட்டப்படி நாமெல்லாம் இந்து. இந்துக்களில் நாம் சூத்திரர்கள். சூத்திரர் என்றால் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன்னு பேரு. முறையா ஒரு அப்பன் ஒரு ஆத்தாளுக்குப் பிறந்தவன் என்றாலும் அவனும் சூத்திரன்தான்; தீண்டப் படாதவன்தான்.

பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன்தான். நம்ம கூடப்பிறந்த சகோதரன், பண்ணையடிக்கிறவன், மாடு மேய்க் கிறவன், தண்ணீர் இறைப்பவன் எல்லாம் சூத்திரன்தான்.

2019-ஆம் ஆண்டிலும் இதுதான் நிலைமை. இந்தச் சூத்திரப்பட்டத்தை ஒழிக்கத்தான பெரியார் சாகும்வரை பாடுபட்டார்; முடியவில்லை. தீண்டாமை ஒழிந்ததா? இல்லையே! ...

இது எல்லா உயிர்களுக்கும், எல்லாப் பிறப்பிற்கும், எல்லா மனிதர்க்கும் பொருந்தும். எல்லா உயிரினங்களி லும் ஆண், பெண் உண்டு. புல்லுக்கும் பூவுக்கும் ஆணுண்டு, பெண்ணுண்டு; ஆண் - பெண் சேர்க்கை உண்டு; அது பிறப்பை உருவாக்கும்.

ஆனால், ஒரு கொள்கையை உரு வாக்க முடியுமா? சிங்கத்தால், ஒட்டகத்தால், யானையால் ஒரு கொள்கையை உருவாக்க முடியுமா? எந்த ஜீவனாலும் மனிதனைத் தவிர கொள்கையை உருவாக்க முடியாது. காரணம் அந்த ஜீவன்களுக்குச் சிந்திக்கத் தெரியாது; கொள்கையை உருவாக்க முடியாது. மனிதன் மட்டுமே சிந்திக்கிறவன்; கொள்கையை உருவாக்க முடியும்.

யாரோ நாகசாமியாம்; தொல்லியல் ஆராய்ச்சியாளராம். அவர் சொல்கிறார், “வேதங்களின் சாராம்சம்தான் தொல் காப்பியம்; வேதங்களின் சாராம்சம்தான் திருக்குறள்” என்று சொல்கிறார்.

அதை ஆங்கிலத்தில் எழுதுகிறார் - அகில உலகத்துக்கும் தெரியப்படுத்த! நாம் அதை எதிர்த்துத் தமிழில் பேசுகிறோம்; எழுதுகிறோம். இந்த நம் எதிர்ப்பு போதாது! போதாது..! மக்கள் எல்லாம் சேர்ந்து எதிர்க்க வேண்டும். எதிரி எந்த மொழியில் எழுதுகிறானோ அந்த மொழியில் நாமும் எழுதவேண்டும்.

நான் இவ்வளவு வலுக்கட்டாயமாகப் பேசுவது ஏன்? பெரியார் பெயராலே பல இயக்கங்கள். நாம், நம்ம வீட்டுல உட்கார்ந்து கொண்டு பேசினால் போதுமா? எத்தனை ஆயிரம் பேர் வீட்டுக்குப் போய்ப் பேசினோம்? என்ன பேசினோம்? நான் எல்லா ஊரிலும் போய்ப் பேசினேன்.

வடகிழக்கே அசாம் வரைக்கும் போய்ப் பேசினேன். வடமேற்கே பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, காஷ்மீரம் எல்லாம் போய்ப் பேசினேன். நாங்கள் ஒன்றும் பெரிய கட்சி இல்லை. ஒரு ஆயிரம் பேர் இருப்போம். எங்களிடம் எந்த வசதியும் கிடையாது; சொத்தும் கிடையாது. தமிழில் ‘சிந்தனையாளன்’ என்கிற மாத ஏட்டை 44 ஆண்டுகளாக நடத்திக்கொண்டு வருகிறோம். ‘Periyar Era’ என்கிற பேரில் ஆங்கிலத்தில் மாத ஏடு நடத்தினோம்; தொடர்ந்து நடத்த முடியவில்லை. நிறுத்திவிட்டோம்.

உத்தரப்பிரதேசம் முசாபர் நகரில் 07.05.1978-இல் பிற்படுத்தப்பட்டோர் மாநில மாநாட்டில் ஒன்றரை மணி நேரம் பேசினேன். வடஇந்தியாவில் அதுதான் என் முதல் பேச்சு. பின்னர் 1978 சூன் மாதம் தென்இந்தியாவிலிருந்தும் வடஇந்தியாவிலிருந்தும் தலைவர்களை அழைத்து மாநாடு நடத்தினேன்.

1978 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பீகாரில் தமிழ்நாட்டிலிருந்து நான்கு பேர் கொண்ட குழுவாகச் சென்று 32 நாள் பரப்புரை செய்தோம். 1979 மார்ச்சு மாதம் 23ஆம் நாள் தில்லியில் 35 ஆயிரம் பேர் கலந்துகொண்ட ஒடுக்கப்பட்டோர் பேரணி, போட் கிளப் திடலில் பொதுக்கூட்டம், பெரியாரின் பேச்சுகளும் எழுத்துக்களும் அடங்கிய இந்தி மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினோம்.

அந்த ஆண்டு மார்ச்சு 25ஆம் நாள் தில்லியில் பிரதமர் மொரார்ஜி தேசாயை 25 பேர் கொண்ட குழுவினராகச் சந்தித்து, “பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மய்ய அரசின் கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்” என்று கோரினோம். அதற்கு அடுத்த நாள் இராசஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் ஒடுக்கப்பட்டோர் பேரணி நடத்தினோம். பேரணியைத் தொடர்ந்து சட்டமன்றத்தின் முன் மறியல் செய்தோம்.

இப்படியாக நாங்கள் இந்தியாவின் பல மாநிலங்களுக் கும் சென்று விகிதாசார வகுப்புவாரிப் பங்கிட்டுக்காக ஆதரவு திரட்டினோம். ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசி னோம். அதை இந்தியில் மொழி பெயர்த்தார்கள்.

இங்கு, தமிழ்நாட்டில் இருந்துகொண்டு பேசினால் எழுதினால் எல்லாம் நடந்துவிடுமா? அதனால்தான் நாங்கள் தில்லிக்குப் போனோம்; வடமாநிலங்களில் சுற்றிப் பரப்புரை செய்தோம். தில்லியில் அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பார்த்தோம். அவர் களுக்குச் சட்டமும் தெரியாது, விட்டமும் தெரியாது. பிற்படுத்தப்பட்டோருக்கு அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதை எடுத்துச் சொல்லி, புரிய வைத்துக் காரியங்களைச் செய்தோம்.

அந்தச் சந்திப்புகளின்போது வினய் கட்யால் என்கிற அயோத்தி நாடாளுமன்ற உறுப்பினரைச் சந்தித்துப் பேசினோம். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆங்கிலப் பதிப்பைப் புரட்டிக்காட்டி, அவரிடம் நம் கோரிக்கையை விளக்கினேன். அவர் பாரதிய ஜனதாக் கட்சிக்காரர்.

பஜ்ரங்தள் என்கிற அனுமான் அணியின் தலைவர். அவர் என் கையில் இருந்த அரசமைப்புச் சட்டப் புத்தகத்தைப் பார்த்துவிட்டு, “இதைக் கொடுங்க பார்க்கலாம்!” என்று சொன்னார். “இது எங்கே கிடைக்கும்?” என்று கேட்டார். “உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் இலவசமாகக் கொடுப்பார்கள்!” என்று சொன்னேன். அந்தச் சந்திப்பின் போது என்னுடன் சங்கமித்ராவும், பெரியாரின் அண்ணன் மருமகன் தாதம்பட்டி ம.இராசுவும் உடனிருந்தார்கள்.

தமிழ்நாட்டு அமைச்சர்களானாலும், இந்திய அரசின் அமைச்சர்களானாலும் சரி! நடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாம் எல்லோரும் இந்த அரசமைப்புச் சட்ட புத்தகத்தையும் மற்ற சட்டங்களையும் நல்லா படிக்க வேண்டும்; விலா வாரியாகப் படிக்க வேண்டும்.

அரசாங்கம் திட்டங்கள் போட்டு அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று சொல்கிறார்கள். விவசாயிகளுக்கு என்ன செய்கிறார்கள். கடந்த 2016ஆம் ஆண்டில் நான் இங்கே பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விவசாயிகளின் பிரச்சனைக்காக பரப்புரை ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டேன். இந்த அரசாங்கம் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி கொடுக்கிறது. விவசாயிக்கு வெறும் 50 ஆயிரம் தரேன்னு சொல்கிறது. அது எப்படிப் போதும்?

இதெல்லாம் நமக்கு எதைச் சொல்கிறது? நம் நாட்டில் தந்தை பெரியார் வெற்றி பெறவில்லை; அம்பேத்கர் வெற்றி பெறவில்லை என்பதைத்தான் நமக்குக் காட்டு கிறது. இப்படிச் சொல்வதற்கு வெட்கமாகத்தான் இருக் கிறது. இருந்தாலும் நாம் பெரியாரை வெற்றி பெற வைப்போம்! அம்பேத்கரை வெற்றி பெற வைப்போம்! என்னோடு சேர்ந்து சொல்லுங்கள், “பெரியாரை வெற்றி பெற வைப்போம்! அம்பேத்கரை வெற்றி பெற வைப்போம்!”

(அவையினரும், பெரியாரை வெற்றி பெற வைப்போம்! அம்பேத்கரை வெற்றி பெற வைப்போம்! என்று சேர்ந்து குரல் கொடுத்தார்கள்)

இங்கே இந்தக் கூட்டத்திற்கு திராவிடர் கழகத்துக்காரர்கள், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியினர், பெரியார் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அ.தி.மு.க., ம.தி.மு.க. என எல்லோரும் ஒன்றுபட்டு வந்திருக்கிறீர்கள். இது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

இதைப்போலத்தான் திருச்சியில் பெரியார் பற் றாளர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடினார்கள். கி.வீரமணி, கலி.பூங்குன்றன், கொளத்தூர் மணி, கோவை கு. இராம கிருட்டிணன் ஆகியோருடன் நானும் திருச்சியில் கருஞ் சட்டைப் பேரணியில் 50 ஆயிரம் பேர் பங்குகொண்டோம். எதிரியை நடுங்கச் செய்தோம்; ஒன்றுபட்டு நின்றோம்.

இங்கே நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். சிந்தனை செய்யுங்கள், சரி என்றால் அதன்படிச் செய்யுங்கள். ஒன்றுபடுவோம்! போராடுவோம்! பெரியாரை வெற்றி பெறச் செய்வோம்! அம்பேத்கரை வெற்றி பெறச்செய்வோம்! வள்ளுவத்தை நிலைக்க வைப்போம்! வாழ்க பெரியார்! வளர்க கு.வரதராசன் தொண்டு!

(10.03.2019 அன்று, பெரம்பலூர், சின்னமணி - இராசேசுவரி திருமணமண்டபத்தில் ‘பெரம்பலூர் மாவட்டத்தில் பெரியார் முழக்கம்’ நூலை வெளியிட்டு வே. ஆனைமுத்து ஆற்றிய சிறப்புரை)

தொகுப்பு: இரா.ச. கவிமாறன்

- வே.ஆனைமுத்து

Pin It