சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக  என். செந்தில்குமார், ஜி.அருள் முருகன் என்ற இரண்டு வழக்கறிஞர்களை உச்ச நீதிமன்ற கொலிஜியம் நியமித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை உள்ளடக்கிய கொலிஜியம் எந்த அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதை ஒளிவு மறைவின்றி வெளிப்படைத்தன்மையோடு அறிவித்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கதாகும். வழக்கறிஞர் என்.செந்தில்குமார் பட்டியலினப் பிரிவை சார்ந்தவர், விளிம்பு நிலை சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடும், கடந்த காலங்களில் அரசியல் சட்டம் மற்றும் கிரிமினல் சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் திறமையாக வாதாடியதற்கான சான்றுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

அதேபோல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ஜி.அருள் முருகன் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர், இந்த சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்துடனும், சிவில், கிரிமினல் மற்றும் ரிட் மனுக்கள் மீதான வழக்குகளில் அனுபவம் மிக்கவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற கொலிஜியம் செய்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. நீதித்துறையில் சமூகநீதி அடிப்படையில் பல்வேறு சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மைக்காலமாக நீதிபதிகள் பங்கேற்ற விழாக்களில் இதை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஒய்.சந்திரசூட் பதவியேற்ற பிறகு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். நீதிபதிகள் நியமனங்களில் இட ஒதுக்கீடுகள் சட்டப்படி இல்லை என்றாலும் அதற்கான நியாயத்தை மறுத்து விட முடியாது.

கடந்த 2018 ஆண்டு முதல் இன்று வரை மொத்தம் உள்ள 604 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 458 பேர் [79 சதவீதம்] பார்ப்பனர்கள் மற்றும் உயர் ஜாதியினராக இருக்கிறார்கள், இவர்களின் சிலர் மனுதர்மத்தை நியாயப்படுத்தியும், குழந்தை திருமணங்களை நடத்துவதில் தவறில்லை என்றும், கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்றும் சோதிடம் அறிவியல் என்றும் தங்கள் சொந்த கருத்துக்களை தீர்ப்புகளாக எழுதி வருகிறார்கள். உயர்நீதிமன்ற நீதிபதிகளில் பட்டியல் பிரிவைச் சார்ந்த நீதிபதிகள் 18 பேர் மட்டுமே, பழங்குடிப் பிரிவை சேர்ந்தவர்கள் 9 பேர், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் 34 பேர், பிற்படுத்தப்பட்டவர் 73 பேர், 13 நீதிபதிகள் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இது சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மக்களவையில் எழுத்து பூர்வமாக அளித்த பதில்.

 குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நீதித்துறையில் குறுக்கீடுகள் அதிகரித்து வருகின்றன, நேர்மையான நீதிபதிகள் பழி வாங்கப்படுவதும் தங்களுக்கு சாதகமாக செயல்படும் நீதிபதிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர்,  ஆளுநர் பதவிகளை பரிசாக வழங்குவதும் வழக்கமாகி விட்டது. பல முற்போக்கான தீர்ப்புகளை வழங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒரு கட்டத்தில் ஒரு நீதிமன்ற பெண் ஊழியரோடு அவரை தொடர்பு படுத்தி மிரட்டி பணிய வைக்கப்பட்டார். பதவி ஓய்வுக்கு முன் அயோத்தியில் ராமன் கோயில் இருந்ததற்கான சட்டபூர்வ வரலாற்றுச் சான்றுகளை கூறாமல் கோயிலை கட்டுவதற்கு அனுமதி வழங்கினார். அவருக்கு பதவி ஓய்வு கிடைத்தவுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒன்றிய பாஜக ஆட்சியால் பரிசாக வழங்கப்பட்டது. குடியுரிமை திருத்த மசோதா கொண்டுவரப்பட்ட போது அதை எதிர்த்த இஸ்லாமியர்கள் டெல்லியில் இந்துத்துவ சக்திகளால் கடும் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த முரளிதரன்  கொலிஜியம் பரிந்துரைத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் அவர் செயல்படுவதை விரும்பாத ஒன்றிய ஆட்சி பிடிவாதமாக ஒரிசா மாநிலத்திற்கு அனுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றது இப்படி நீண்ட பட்டியல் இட முடியும்.

 குடியரசு தலைவராக கே.ஆர்.நாராயணன் இருந்த காலத்தில் உச்சநீதிமன்றம் அவரது ஒப்புதலுக்காக அனுப்பிய நீதிபதிகள் பட்டியலில் பார்ப்பன உயர் ஜாதியினராகவே இருந்ததைப் பார்த்து அதிர்ச்சிஅடைந்தார், அதற்கு ஒப்புதல் தராமல் அதை திருப்பி அனுப்பி விட்டார். நீதிபதிகள் பதவிகளில் இட ஒதுக்கீடு இல்லை என்பது தமக்கு தெரியும் என்றாலும் பெண்கள் தலித் மற்றும் பழங்குடி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உச்சநீதிமன்றம் என்ற ஒன்றே தேவையில்லை என்று பெரியார்  1971 சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் தீர்மானமே நிறைவேற்றினார். அதே உச்சநீதிமன்றம் - சமூகநீதி அடிப்படையில் விளிம்புநிலை பிரிவுக்கு உரிய பிரதிநிதித்துவம் தேவை என்பதை கொள்கையாக ஏற்றிருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டியதாகும்.

ஆனாலும் தற்போதைய கொலிஜியத்தின் நிலை தொடருமா என்பதற்கு எந்த உறுதியும் இல்லை, நாளை மீண்டும் உச்ச நீதிமன்றம் சனாதனிகள் தலைமைக்கு வந்தால் நிலைமை தலைகீழாக மாறக்கூடும். எனவே தான் நீதிபதிகள் நியமனங்களில் சமூக நீதி சட்டமாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டில் இருந்து தமிழக முதல்வர் மட்டுமே இப்போது இதை வலியுறுத்தி வருகிறார், பெரியார் வலியுறுத்தி போராடிய கோரிக்கை இது, இந்த முழக்கத்துக்கு வலிமை சேர்க்கும் கடமை சமூக நீதி சக்திகளுக்கு உண்டு.

- விடுதலை இராசேந்திரன்

Pin It