2014 முதல் 2019 வரை பண்டைய இந்தியாவின் மகிமை எனும் பெயரில் நம் பிரதமர் மோடியும், அவர் சகாக்களும் சொன்னவை சாதாரணமானவை அல்ல. மோடி சொன்ன, 2000 வருடத்திற்கு முன்பே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததால் தான் பிள்ளையாருக்கு யானை தலை வைக்கப்பட்டது என்பதில் தொடங்கி அவர் சகாவான பிரக்யா தாகூர், மாட்டு சிறுநீர் புற்றுநோயை குணப்படுத்தும் என்பது வரை அறிவியலை துவம்சம் செய்த பட்டியல் வரிசைகள்:

hraja on global warmingமாட்டு சிறுநீர் புற்றுநோயை குணப்படுத்தும்

தற்போது எம்.பி ஆக இருக்கும் பிரக்யா தாகூர் இந்தியா டுடே பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில், மாட்டு சிறுநீர் தனது மார்பக புற்றுநோயை குணமாக்கிவிட்டதாக கூறினார். மாட்டு சிறுநீர், மாட்டுச்சாணி, பால் மூன்றையும் கலந்து குடித்து வந்தால் மார்பக புற்றுநோய் வராது என்றார். இதனை புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் கடுமையாக மறுத்து அறிக்கையும் வெளியிட்டார்கள். அதனை விட வெயிட்டாக மற்றொன்றையும் கூறினார், மாட்டை உரசிக்கொண்டே இருந்தால் ரத்த அழுத்தம் குறையும் என்றார்

இந்துக்கள் தான் மரபணு ஆராய்ச்சிக்கு முன்னோடி

ஜனவரி 2019ல் நடைபெற்ற 106வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ஆந்திர பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஷ்வர ராவ், மகாபாராதத்தை மேற்கோள் காட்டி 100 கௌரவர்கள் ஒரே தாயிலிருந்து உருவானவர்கள். இவர்கள் டெஸ்ட் டியூப் மூலமாக உருவாக்கப்பட்டார்கள். அதனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்துக்கள் தான் மரபணு ஆராய்ச்சிக்கு முன்னோடியாக இருந்தார்கள் என்று பேசினார்.

ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் பண்டைய இந்தியாவிலேயே இருந்தன

நாகேஷ்வர ராவ் இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டத்தில் பேசும் போது, பண்டைய காலத்திலேயே தற்போது இருப்பதை விட அதிக தொழிற்நுட்பத்துடன் ஏவுகனைகள் இருந்திருக்கிறது. கடவுள் விஷ்னு பயன்படுத்திய விஷ்னு சக்ரா என்ற ஏவுகணை எதிரிகளை தாக்குவதோடு மட்டுமில்லாமல் மீண்டும் அவர் கைக்கே வந்து விடும். அதுமட்டுமல்ல கடவுள் ராமர் காலத்தில் 24 வகையான ஏவுகனைகளும், பல விமான தளங்களும் இருந்திருக்கிறது என்றார்.

டைனோசோர்களை கடவுள் பிரம்மா தான் கண்டுபிடித்தார்

ஜனவரி 2019ல் இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் மற்றும் இணை பேராசிரியரான அஷூ கோஷ்லா பேசும் போது, முதன் முதலில் கடவுள் பிரம்மா தான் டைனோசோர்களை கண்டுபிடித்தார். டைனோசோர்களுக்கு அப்போது ராஜசௌராஸ் என்ற பெயர் இருந்தது. இதெல்லாம் இந்து புனித நூல்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.

இண்டர்நெட்டை கண்டுபிடித்தவர்கள் இந்துக்கள்

ஏப்ரல் 2018ல் திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் தெப் மஹாபாரதத்திலிருந்து, சஞ்சயா என்ற கதாபாத்திரம் குர்சேத்திர போரில் அரசர் திர்ரஷ்திரா அவர்களுக்கு பல மைல்களுக்கு தொலைவில் இருந்த போதும் கூட உடனடியாக தகவல் கொடுக்க முடிந்தது எண்ற உதாரணத்தை கூறி இந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இண்டெர்நெட்டை பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது என்றார்.

ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவத்தை விட மேலானது வேத தத்துவம்

மார்ச் 2018ல் 105வது இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டத்தில், தற்போதைய அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப துறையின் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியது, ஸ்டீபன் ஹாக்கிங் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தை விட இந்து வேதங்கள் தான் பலமான தத்துவத்தை கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் என்றார். ஆனால், ஸ்டீபன் ஹாக்கிங் அமைச்சரிடம் எப்போது சொன்னார் என அறிவியல் ஆய்வாளர்கள் தற்போது வரை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

கண்ணீரை விழுங்குவதன் மூலம் தான் மயில் உற்பத்தி ஆகிறது

2017 மே மாதம் ராஜஸ்தான் நீதிபதி மஹேஷ் சந்திர சர்மா மாடு தான் இந்த நாட்டின் தேசிய விலங்காக இருக்க வேண்டும் என பரிந்துரை செய்கிறேன் என்று தீர்ப்பளித்து விட்டு சொன்னார், மயில்கள் ஒன்றுக்கொன்று இணைவதில்லை. பெண் மயில் கண்ணீரை விழுங்குவதன் மூலம் கருத்தரிக்கிறது. ஆண் மயில் எப்போதுமே பிரம்மச்சாரியாகவே இருக்கிறது. அதனால் தான் கிருஷ்ணர் மயில் இறக்கையை தலையில் வைத்திருக்கிறார் என்றார்.

யோகத்தின் மூலமாக சுற்றுச்சூழலை சுத்திகரித்தல்

2018ல் உத்திரபிரதேச மீரட் நகரில் 350 இந்து பண்டிதர்கள் ஒன்றிணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க யோகம் நடத்தினார்கள். அதில் 50 மெட்ரிக் டன் மாமரக் கட்டைகளை எரித்து யோகம் வளர்த்து சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க யோகம் நடத்தினார்கள்.

மாட்டு சிறுநீரில் தங்கம் இருக்கிறது.

ஜூன் 2016ல் ஜுனகத் வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மாட்டு சிறுநீரில் தங்கம் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாக கூறினார்கள். 400 பசுக்களின் சிறுநீரை சேமித்து ஆய்வு செய்ததில் ஒவ்வொரு லிட்டர் சிறுநீரிலும் 3லிருந்து 5 மில்லிகிராம் வரை தங்கம் கிடைக்கிறது என்றார்கள். ஆராய்ச்சியாளர் டாக்டர் BA கோலாக்கியா நியூஸ்18 பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில், ஒவ்வொரு பசு வகைக்கும் ஏற்ற்வாறு தங்கம் சிறுநீரில் கிடைக்கிறது. அதிலும் காலையில் பசு கொடுக்கும் சிறுநீரில் தான் அதிகம் தங்கம் கிடைக்கிறது என்றார்.

7000 வருடத்திற்கு முன்னதாகவே விமானம் கண்டுபிடிக்கப்பட்டது

ஜனவரி 2015ல் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் ஓய்வு பெற்ற விமான பைலட் ஆனந்த் போடாஸ் பேசுகையில், 7000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்துமுனிவர் பரத்வாஜா விமானம் செய்வதற்கான வழிமுறைகளை கொடுத்திருக்கிறார். விமானத்தை ஓட்டுபவர்கள் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார். பண்டைய இந்தியாவில் இப்போதுள்ள நடைமுறையை விட ரேடார் தொழிற்நுட்பத்துடன் அதி நவீன விமானங்கள் இருந்திருக்கிறது என்றும் கூறினார்.

ஒரு லட்சம் வருடத்திற்கு முன்பே நியூக்ளியர் சோதனை

டிசம்பர் 2014ல் ரமேஷ் போக்ரியால் நிஷாங் மனித வள மேம்பாட்டு அமைச்சராக இருந்த போது பாராளுமன்றத்தில் பேசுகையில், ஜோதிடம் மிகப்பெரிய அறிவியல். உண்மையை சொன்ன போனால் அறிவியலை விட மேலானது. அதை நாம் உலகம் முழுக்க எடுத்து செல்ல வேண்டும். இந்து முனிவர்கள் ஒரு லட்சம் வருடத்திற்கு முன்னதாகவே நியூக்ளியர் சோதனைகள் நடத்தியிருக்கிறார்கள் என்றார்.

பண்டைய இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி

அக்டோபர் 2014ல் மருத்துவர்கள் குழுமியிருக்கும் ஒரு அரங்கில் பேசிய மோடி, நாம் நமது நாட்டின் மருத்துவத் தன்மையை நினைத்து பெருமைப்பட வேண்டும். நாம் கடவுள் கணேசாவை வணங்குகிறோம். எப்படி ஒரு மனிதனுக்கு யானை தலை வந்திருக்க முடியும். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அப்போதே இருந்திருக்கிறது என்றார்.

- அபூ சித்திக்

(data from caravan daily: 26.08.2019)