“தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. திமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி நாங்கள்தான் என்று மார்தட்டுகிறார்” அண்ணாமலை. இப்படி தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க நாங்கள் எவ்வளவு மகத்தான தியாகங்களை செய்ய வேண்டி இருக்கிறது என்பதே எதிர்க்கட்சிகளுக்கு புரியவில்லை என்றும் அண்ணாமலை வேதனைப்படுகிறார். அண்ணாமலையின் இந்த கட்சி வளர்ப்புப் பணிகளுக்காக அவருக்கு பாரத ரத்னா விருது கூட வழங்கலாம்.

ஆருத்ரா நிதி நிறுவனத்தை நடத்தி ரூ.2000 கோடி மக்களின் பணத்தை அண்ணாமலையின் சீடர்கள் ஹரிஷ், ஆர்.கே.சுரேஷ், அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் வாரி சுருட்டிக்கொண்டார்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இவையெல்லாம் மகத்தான தியாகங்கள் என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெரியாது. கைது செய்யப்பட்ட ஹரிஷ் பாஜகவின் மாநிலப் பொறுப்பாளர். இந்த மாநிலப் பதவிகூட ஏதோ லாட்டரி சீட்டு போல அவருக்கு கிடைத்து விடவில்லை. அதற்காக முதலீட்டாளர்கள் பணத்தை எடுத்து பாஜக தலைமைக்கு உண்டியல் காணிக்கை செலுத்திவிட்டுத்தான் இந்த பதவியை அவர் பெற்றார். அப்படித்தான் கைது செய்யப்பட்ட பாஜகவைச் சேர்ந்த ஹரிஷ் வாக்குமூலம் தந்திருக்கிறார். அதாவது தேர்தல் பத்திரத்துக்கு மோடி ஆட்சி கார்ப்ரேட்களிடம் வசூலிப்பது போல.

தமிழ்நாட்டின் கோயில் நிலங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே கொள்கைக்காக அறநிலையத் துறையிடம் இருந்த நிலங்களை பாஜகவினர் பொறுப்போடு கைப்பற்றி தங்கள் வசம் வைத்திருந்தார்கள். அந்த நிலங்களை கைப்பற்றியதற்கு தேசபக்திதான் காரணம். ஆனால் அறநிலையத் துறை அந்த நிலங்களை மீட்டு அரசிடம் ஒப்படைத்திருக்கிறது என்று சொன்னால் அது இந்து விரோத நடவடிக்கை அல்லவா? பல்லாயிரம் கோடி நிலங்களை பாஜகவினரிடமிருந்து மீட்டுவிட்டோம் என்று சேகர்பாபு கூறுவது இந்துக்களையே அவமதிப்பதாகும். அறநிலையத்துறை சொத்துக்கள் அரசிடம் இருப்பதை விட, பாஜகவனிரிடம் இருப்பதுதான் பாதுகாப்பு என்று சேகர்பாபுவுக்கு தெரியாதா? தில்லை தீட்சிதர்களுக்கு நடராசர் கோயில் சொந்தமென்றால் ஏன் கோயில் சொத்துக்கள் பாஜகவுக்கு சொந்தமாகக்கூடாது? இப்படியொரு வழக்கை பாஜக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்தால் அறநிலையத்துறை நிலங்களை மீட்பது தவறு என்று நிச்சயமாக நீதிபதிகளும் தீர்ப்பு வழங்குவார்கள்.

மோடி தமிழ்நாடு வந்தால் கூட்டம் அலை மோதுகிறது என்று சொன்னால், அந்த கூட்டத்தைக் கூட்டுவதற்கு நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பது யாருக்காவது புரியுமா? பாஜக இதற்காக எவ்வளவு செலவிட வேண்டி இருக்கிறது? எவ்வளவு தியாகங்களை நாம் செய்கிறோம் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது. ஒரு தியாக சம்பவத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அண்ணாமலையின் நெருங்கிய நண்பர் அமர்பிரசாத் ரெட்டி இப்போது தலைமறைவாக வாழ வேண்டி இருக்கிறது. என்ன காரணம்? சொந்த கட்சியை சார்ந்த பாஜக பெண் நிர்வாகி கோட்டூர் ஆண்டாள் என்பவரை அடித்து உதைத்து இருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். எதற்காக அப்படிச் செய்தார்? மோடியின் கூட்டத்துக்கு ஆள் சேர்க்க கொடுத்த பணத்தை ஏன் சுருட்டிக் கொண்டாய் என்ற நியாயமான கேள்வியைக் கேட்டிருக்கிறார். இது ஒரு குற்றமா? இது எங்களுக்குள் பணத்தை பங்கு போட்டு பிரிப்பதில் உள்ள குடும்பச் சண்டை. ஆண்டாள் புகார் கொடுத்தார் என்பதற்காக அமர் பிரசாத் ரெட்டியை தேட வேண்டுமா? இதுவே பாஜக ஆளும் மாநிலமாக இருந்தால் ரெட்டிக்கு பாராட்டு விழா நடத்தி இருக்க மாட்டார்களா? திமுக ஆட்சியின் இந்து விரோத கொள்கையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது குடும்பத்தை மறந்து கட்சியை வளர்க்காமல் தலைமறைவு எனும் தியாக வாழ்க்கையை வாழ வேண்டிய நிலைக்கு இந்த ஆட்சி தள்ளிவிட்டது. இதற்கெல்லாம் திமுக ஆட்சி பதில் சொல்லும் காலம் கட்டாயம் வந்தே தீரும். நாங்கள் இரண்டாவது இடத்தில் வந்தே தீருவோம் இது உறுதி.

சரி எடப்பாடியும் இப்போது போராட்டக்களத்தில் இறங்கியிருக்கிறார். திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் – மருமகள் தனது வீட்டில் வேலை செய்யும் தலித் சிறுமியை சித்ரவதை செய்ததை கண்டித்து அவரது கட்சி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறது. தலித் மக்கள் உரிமைக்காக அதிமுகவையே முதன்முதலாக போராட வைத்தது திமுக ஆட்சியின் மிகப்பெரிய துரோகம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாகி, அவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்திருக்கிறது. ஏன் அவர்களை கைது செய்ய வேண்டும். சரி, முன் ஜாமீன் கேட்டு தலைமறைவானவர்கள் வழக்கு போட்ட போது நீதிபதி அவர்கள் சரணடையும் போது பிணை வழங்கலாம் என்று கூறினார். ஆனால் திமுக ஆட்சி நீதிபதியின் கருத்தை மதிக்காமல் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. திமுக ஆட்சி இப்படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருந்தால் நாங்கள் எப்படி போராட்டம் நடத்துவது? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் தானே நாங்கள் போராட முடியும். எனவே எங்களின் போராட்டத்தை ஒடுக்கவே ஸ்டாலின் சதி செய்கிறார். ஆனாலும் கூட என்னதான் அரசு நடவடிக்கை எடுத்தாலும் எங்களது போராட்டத்தை ஒடுக்க முடியாது, எந்தக் கொம்பனாலும் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. நாங்கள் போராடியே தீருவோம் என்று கூறி காவல்துறையின் அனுமதியுடன் போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்.

தலைமறைவு வாழ்க்கை – உறுதியான போராட்டம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டனர் அண்ணாமலையும், எடப்பாடி பழனிசாமியும். ஜெய்ஸ்ரீராம்! புரட்சித் தலைவி நாமம் வாழ்க!

- கோடங்குடி மாரிமுத்து