loversday1 400காதலர் நாளை முன்னிட்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்த இணையர்களுக்கும், ஜாதி மறுப்புத் திருமணப் போராட்டக்களத்தில் பங்கு பெற்ற தோழர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா மேட்டூரில் எழுச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது. மேட்டூர் அணை பாப்பம்மாள் திருமண மண்டபத் தில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி 12.2.2017 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை கலை நிகழ்வுகளுடன் நடந்தது.

கலை கருத்தரங்கில் ஜாதி மறுப்பு - மத மறுப்பு இணையர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். நண்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை ஜாதி மறுப்பு மணம் புரிந்தோர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், சவால்கள் பற்றி விவாதித்தனர். மதிய  உணவைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் நடந்தன.

பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு திரையிசைப் பாடல்களை டி.கே.ஆர். இசைக் குழுவினர் நிகழ்த்தினர். ஜாதி மறுப்பு திருமணம் செய்த பெண்களே பாடல்களைப் பாடியதும், நடனமாடி யதும் நிகழ்வுக்கு பெருமை சேர்த்தது. இளைஞர் களின் பறை இசையும் நடனமும் அரங்கை குலுக்கின. மாலை 4 மணியளவில் விருதுகள், பாராட்டு வழங்கும் விழா தொடங்கியது. மேட்டூர் ஆர்.எஸ். கழகத் தோழர் அ.அனிதா வரவேற்புரையாற்ற, காவலாண்டியூர் கழகத் தோழர் கி.மணிமேகலை தலைமை தாங்கினார். ஜாதி ஆணவப் படுகொலைக்கு தனது கண் முன்னால் கணவர் சங்கரைப் பறிகொடுத்த உடுமலை கவுசல்யா, விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஜாதி ஆணவப் படுகொலையையும், ஜாதி அமைப்பையும் எதிர்த்து தொடர்ந்து அழுத்தமாக குரல் கொடுத்து வரும் வீரப்பெண்ணாக கவுசல்யா உயர்ந்து நிற்கிறார்.

நிகழ்வில் பங்கேற்று அவர் பேசுகையில், “ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதுவே இப்போது முக்கியத் தேவை. திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதி மறுப்பு இணையர்களுக்காக குரல் கொடுத்து வருவது, நம்பிக்கை, மகிழ்ச்சியைத் தருகிறது” என்று குறிப்பிட்டார். தோழர்களுடன் சேர்ந்து கவுசல்யா நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தார்.

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று விருதுகளை வழங்கி உரையாற்றினார். ஜாதி மறுப்பு இணையர் களாக வாழ்க்கைத் தொடங்குவோர் அதை வெற்றிகரமான வாழ்க்கையாக வாழ்ந்து காட்டும் போதுதான் ஜாதி மறுப்புக் கொள்கைகள் வெற்றி பெறும். ஜாதி மறுப்பு இணையர் வாழ்வில் பெண்ணுரிமை பிரிக்க முடியாமல் இணைந்து நிற்பதை சுட்டிக்காட்டியதோடு வாழ்வியல் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு பெரியாரியம் ஒளி விளக்காகத் திகழ்வதை குறிப்பிட்டு உரை யாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, இதேபோல் ஜாதி மறுப்பு இணையர்களுக்கான பாராட்டு விழா, ஈரோட்டில் நடந்த திட்டமிட்டு வருவதைக் குறிப்பிட்டார்.

ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் கிராமம் மேட்டூர் அருகே உள்ள காவலாண்டியூர். ஜாதி மறுப்பு இணையர்களை பல மாதங்கள், பல வாரங்கள் தங்க வைத்து உணவு வழங்கி, பாதுகாப்பு வழங்கி வரும் காவலாண்டியூரில் கழகத் தோழர்கள் இதுவரை 200க்கும் மேற்பட்ட ஜாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்துள்ளனர். ஜாதி மறுப்பு இணையர்களுக்காக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்ததோடு ஜாதி வெறியர்களின் வன்முறைத் தாக்குல்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய அரும்பணியாற்றும் காவலாண்டியூர் கழக சார்பில் காவலாண்டியூர் கழகப் பொறுப்பாளர் ஈசுவரன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். மேட்டூரில் ஜாதி மறுப்பு திருமணங்களை முன்னின்று நடத்துவதிலும், திருமணப் பதிவுக்கான ஆவணங்களைத் திரட்டி உதவுவதிலும் தொடர்ந்து களப்பணியாற்றி வரும் மேட்டூர் கழகத் தோழர் அண்ணாத்துரைக்கு பாராட்டும் விருதும் வழங்கப்பட்டது. கரூர் பகுதியில் ஜாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வரும் த.பெ.தி.க. தோழர் தனபால் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

திராவிடர் விடுதலைக் கழக சார்பில் இந்த நிகழ்வை தோழர்கள் குமரேசன், இரண்யா, பரத் ஆகியோர் முன்னின்று ஒருங்கிணைத்தனர். தோழர் ப. இனியா நன்றி கூறினார்.

lovers day celebration 400துணைவர்களை பறிகொடுத்த நிலையிலும் கொள்கைக்காகப் போராடும் தோழியர்கள்

மேட்டூர் விழாவில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக துணையை இழந்த நிலையிலும் தனித்து நின்று ஜாதி ஒழிப்புக்காக தீரத்துடன் குரல் கொடுக்கும் நான்கு பெண்களுக்கு பாராட்டு விருது வழங்கப்பட்டது. உடுமலை கவுசல்யா, ஈரோடு சுகுணா, பவானி சாகர் கோமதி, இராசிபுரம் மலர் ஆகிய நான்கு தோழியர்களும் நிகழ்வில் பங்கேற்று விருதுகளைப் பெற்றனர்.

உடுமலை கவுசல்யா: ஜாதி எதிர்ப்புக் குறியீடாக தமிழகத்தில் பேசப்படும் பெயர் உடுமலை கவுசல்யா. தலித் இளைஞரை திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காக பட்டப்பகலில் கண்ணெதிரே ஜாதி வெறியர்கள் படுகொலைக்கு துணைவரை பறி கொடுத்தவர். பெற்றோர்களின் ஜாதி வெறிக்கு எதிராக துணைவரை இழந்த நிலையிலும் துணைவர் இல்லத்திலேயே வாழ்வேன் என்று வாழ்ந்து காட்டி வருபவர்.

ஈரோடு சுகுணா : ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சார்ந்த தோழர் இராஜாகண்ணு என்பவரை காதல் மணம் புரிந்த சுகுணா, மேட்டூர் கழகத் தோழர்களால் 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் கழகத்தில் இணைந்து செயல்பட முடிவு செய்தனர். மேட்டூரில் வசித்து வந்த இந்த இணையர்களுக்கு மேட்டூர் கழகத் தோழர்கள் உதவி செய்து வந்தனர். அதில் ஒன்று, இராஜாகண்ணுக்கு காவல்துறையில் பணியமர்த்தியது. இதைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு ஒரு விபத்தில் எதிர்பாராத விதமாக இராஜாகண்ணு உயிர் இழக்க நேரிட்டது. அதோடு, தன் குடும்பத்தோடு முடங்கிவிடாமல் தொடர்ந்து கழகம் நடத்திய பல்வேறு போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம் என பல்வேறு நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருபவர் சுகுணா.  

இராசிபுரம் மலர்: மதுரையைச் சேர்ந்த மலர், 5 ஆண்டுகளுக்கு முன்பு தன் காதல் திருமணத்திற்கு வீட்டில் எதிர்ப்பு ஏற்பட்டதன்காரணமாக தற்கொலை முயற்சியில் (தீக்குளிப்பு) ஈடுபட்டு தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். அதன் பிறகு தான் காதலித்த நபரையே மணந்து ஓராண்டு காலம் குடும்பம் நடத்தினார். ஒரு ஆண் குழந்தையும் பெற்றெடுத்தார். அதன் பிறகு,  தீக்காயங்களுடன் இருந்த அவருடைய தோற்றத்தைக் கண்ட காதலன் இவரை வெறுக்கத் தொடங்கினார். மலரை விட்டு பிரிந்து சென்று விட்டார். மனமுடைந்த மலர், வேறு எங்கு செல்வது என்று தெரியாமல், தன் சகோதரியின் இல்லத்தில் மூன்றரை ஆண்டுகளாக இருந்து வருகிறார். வீட்டை விட்டு வெளியே வராமல், சமூக வலைதளங்களில் பெண் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். இதனை அறிந்த கழகத் தோழர்கள் குமரேசன், இரண்யா ஆகியோர், மலரை இராசிபுரத்தில் அவரது சகோதரியின் இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசி மேட்டூர் விழா நிகழ்வில் முதல் முறையாக பங்கேற்க அழைத்தனர். கழகத் தோழர்களின் அணுகுமுறை, கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தோழர் மலர், கழகத்தில் இணைந்து  செயல்பட முன் வந்துள்ளார்.

பவானிசாகர் கோமதி : சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு தன் குடும்பத்தை எதிர்த்து காதல் மணம் செய்து கொண்ட கோமதி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன் இணையரை இழந்தார். பள்ளி பருவத்தில் பெரியாரிய சிந்தனையை வளர்த்துக் கொண்ட கோமதி, மனதளவில் மட்டுமே பெரியாரியல் சிந்தனையுடன் இருந்தார். வெளிப்படையாக செயல்படாத நிலையில் தன் வாழ்வை நகர்த்தினார். குடிகார கணவரின் கொடுமைகளுக்கு ஆட்பட்ட இவர், தன் கணவரின் மறைவிற்குப் பிறகு கடந்த ஆண்டு கழகத்தின் சார்பாக நடைபெற்ற அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைக் குழு, பள்ளிப்பாளையம் வந்தபோது நிகழ்வில் தாமாகவே ஆர்வத்துடன் பங்கேற்றார். தொடர்ந்து மகளிர் சந்திப்பு, பல்வேறு பொது நிகழ்வுகள், கழக நிகழ்வுகள் என பங்கேற்று வருகிறார். தனது மகன் பிரபாகரனையும் அமைப்பில் இணைத்து களப்பணியாற்ற வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் விழாவில் இந்த வீரப் பெண்களுக்கு பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விருதுகளை வழங்கினர்.

Pin It