பொள்ளாச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நவம்பர் 26ஆம் நாள் கீழ்க்கண்ட சட்ட எரிப்புப் போராட்டத்தை விளக்கும் துண்டறிக்கையை மாணவர்கள்-மக்களிடம் வழங்கினர்.

பிறவி வருண சாதி ஒழிப்புக்காக பெரியாரும், அவரின் இயக்கமும் நடத்திய சட்ட எரிப்புப் போராட்டத்தின் 57 ஆம் ஆண்டின் நிறைவு நாள் சிந்தனைகள். பெரியார் என்ற அந்த மாமனிதர் தமிழர்களின், உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, மேற்பாட்டிற்காக, எடுத்த போராட்டங்கள் ஏராளம்!

26.12.1926இல் சுயமரியாதை இயக்கம் நிறுவப்பட்ட நாள் முதற்கொண்டு பெரியார் மறையும் நாள் வரையில் “பிறவி வருண சாதி ஒழிப்பில்” நாட்டம் கொண்டிருந்தார். 1929 செங்கற்பட்டு, 1930 ஈரோடு, 1931 விருதுநகர் மாநாடுகளிலும், 1932 “சுயமரியாதை இயக்க சமதர்மம் கட்சி”யாரின் வேலைத் திட்ட க் கூட்டத்திலும், 1940 திருவாரூர், 1944 சேலம், 1945 திருச்சி, 1948 தூத்துக்குடி நகரங்களில் நடைபெற்ற மாநாடுகளிலும் “பிறவி வருண சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் தீண்டப்படாதாருக்குச் சமூக சமத்துவ உரிமை, எல்லாத் துறைகளிலும் முன்னுரிமை பற்றி தவறாமல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

3.11.1957 இல் தஞ்சாவூரில் நடைபெற்ற சிறப்பு நிதியளிப்பு விழாவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம், “பிறவி வருண சாதி ஒழிப்புக்கான நேரடி போராட்டத்திற்கு ஆணையிட்டது.” எப்படி அது நேரடிப் போராட்டம்?

“சதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷடம் குண-கர்ம விபாகச;

தஸ்ய கர்த்தாரமயி மாம் வித்த்யகர்த்தார-மவ்யயம்”

(அத். 4 - சுலோகம் 13) “பகவத்கீதை

நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டது; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வருண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது.

குறைந்தது 1200 ஆண்டுகளாக எல்லா இந்துக்களின் பேரில் சுமத்தப்பட்ட “நால்வருண பிறவி சாதி இழிவுக்கு” - வழக்கம், பழக்கம், சாதி வழக்கம், பிராந்திய வழக்கம், நம்பிக்கை என்ற பெயர்களால் - “நாலு வருண பிறவி சாதி உண்டு” என்பதை 26.1.1950 இல் நடப்புக்கு வந்த இந்திய அரசு அமைப்புச் சட்டம் காப்பாற்றுகிறது.

அப்படி காப்பாற்றுவதற்கென்றே எழுதப்பட்டுள்ள இந்திய அரசு அமைப்புச் சட்ட விதிகள் 13, 25, 26, 372 ஆகியவற்றை இந்திய அரசு அமைப்புச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று இந்திய அரசைக் கோரி நடத்தப்பட்ட அரசு அமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம் அது! நேரடியாக - அமைதியாக - தத்தம்மை வருத்திக் கொள்ளும் போராட்டமாக நடந்தது.

அந்த சட்ட விதிகளை தமிழாக்கம் செய்து, அச்சுப்போட்டு, அதனை ஊர்தோறும் பரப்பிட பொதுக் கூட்டங்களை நடத்தியது. அதன் பிறகு, 26.11.1957இல் 10,000 பெரியாரின் கருப்புச் சட்டை தொண்டர்கள் இந்திய அரசு அமைப்புச் சட்டத்தை எரித்தனர். அப்படிப்பட்ட ஒரு போராட்டம் அது வரையில உலகில் எந்த நாட்டிலும் நடக்கவே இல்லை!

இந்திய அரசு அமைப்புச் சட்டத்தை எரிப்பது என்ற போராட்டத்தை இந்தியாவில் - தமிழ்நாட்டில் பெரியாரால், பெரியாரின் தொண்டர்களால்தான் முதன்முதலில் நடத்தப்பட்டது. அதுபோலவே சாதியை ஒழிப்பதற்காக இந்தியாவிலேயே பல்லாயிரக் கணக்கான மக்களைத் திரட்டி முதன்முதலாக நடத்தப்பட்ட போராட்டம் - பெரியாரின் இயக்கம் நடத்திய இந்திய அரசு அமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம் மட்டும் தான்.

இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தோழர்கள் கலந்து கொண்ட போதும் - 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இதில் முதியோர், நிறைமாத கர்ப்பிணிகள், கைக் குழந்தைகளுடன் பெண்கள், சிறுவர், சிறுமியர் அடங்குவர். இவர்கள் மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு தமிழ்நாட்டுச் சிறைகளில் அடைக்கப் பட்டனர். சிறைக் கொடுமை காரணமாக சிறைக்குள் அய்ந்து தோழர்களும், விடுதலையான சில நாட்களுக்குள் பதிமூன்று தோழர்களும் மாண்டு போயினர்/

இதோ பெரியார் கூறுகிறார்!!

“நாடார் நாடாரையும்; வன்னியர் வன்னியரையும்; நாயுடு நாயுடுவையும்; அய்யர் அய்யரையும்; முதலியார் முதலியாரையும்; ஆதிதிராவிடர் ஆதி திராவிடரையுமே திருமணம் செய்து கொண்டிருந்தால்! இன்னும் பத்து நூறாண்டுகள் ஆனாலும்!! சாதி ஒழியப் போவதில்லை” (பெரியார், விடுதலை 1.1.1950)

எனவே ஒரு சாதிக்குள் நடக்கும் திருமணங்களை மறுப்போம்! சாதி மறுப்புத் திருமணங்களை வரவேற்போம்!!

- திராவிடர் விடுதலைக் கழகம், பொள்ளாச்சி மாவட்டம்.

Pin It