அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது என்ற பிரச்சனையைப் புதுப்பித்திருப்பதுடன், ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் தங்களுடைய மதவெறி நோக்கத்திற்காகப் புதிதாக, மற்றுமொரு முன்னணியில் செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள். அதுதான், நாட்டில் முஸ்லிம் கலாச்சாரத்துடனும், வரலாற்றுடனும் சம்பந்தப்பட்ட பெயர்களைத் தாங்கி இருக்கக்கூடிய நகரங்கள் மற்றும் இடங்களின் பெயர்களை மாற்றுவதாகும். உத்தரப் பிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசாங்கம், மிகவும் குதியாட்டம் போட்டுக்கொண்டு பெயர் மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னணிக் கல்வி மற்றும் கலாச்சார மையங்களில் ஒன்றாகத் திகழும் அலகாபாத்தை, பிரயாக்ராஜ் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றி இருக்கிறார்கள். தீபாவளிக்கு முன்னால், ஆதித்யநாத் அயோத்தியிலிருந்து ஓர் அறிவிப்பினைச் செய்தார். அதாவது, அயோத்தி இருந்துவரும் பைசாபாத் மாவட்டம் இனி அயோத்தி மாவட்டம் என்று அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதற்குச் சற்று முன்புதான், வட இந்தியாவில் மிகப்பெரிய ரயில்வே சந்திப்பாகத் திகழும் மொகல்சராய் என்னும் ரயில்வே சந்திப்பை, தீன் தயாள் உபாத்யாயா சந்திப்பு என்று பெயர் மாற்றம் செய்தார்கள். தாஜ்மகால் இருந்து வரும் ஆக்ரா நகரையும் ஆக்ராவான் என்று பெயர்மாற்றம் செய்திட வேண்டும் என்றும் அதேபோன்று முசாபர்நகர் என்னுமிடத்தை லட்சுமிநகர் என்று மாற்ற வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.நகரங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று உத்தரப்பிரதேச பாஜக அரசாங்கம் மட்டும் ஈடுபட்டுக் கொண்டில்லை.
குஜராத் மாநிலத்தில் துணை முதல்வராக இருப்பவரும் தலைநகர் அகமதாபாத்தை “கர்ணாவதி” என்று மாற்றிடலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். இவ்வாறு நகரங்களின் பெயர்களை மாற்றுவதற்கு அவர்களின் ஒரே குறிக்கோள், நாட்டில் முஸ்லிம்களின் கலாச்சாரம் மற்றும் பங்களிப்புகளின் விளைவாகஏற்பட்டிருக்கும் தாக்கங்களை முற்றிலுமாக அழித்து ஒழித்துவிட வேண்டும் என்பதேயாகும். ஆர்எஸ்எஸ் இயக்கம் முன்வைக்கிற வரலாற்றின்படி, முஸ்லிம்கள் ஆட்சி செய்த ஆயிரம் ஆண்டு காலம்அடிமைத்தனம் நிலவிய காலம், அதற்கு முன்னர் இருந்த காலம், இந்துக்களின் பொற்காலம்.
ஆகவே, கடந்த பத்து நூற்றாண்டு காலத்தில் ஆர்எஸ்எஸ் கூறிவரும் இந்துத்வா மதவெறி சிந்தனைக்கு எதிரான வரலாறு மற்றும் கலாச்சாரத் தன்மைகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்பதே அவர்களின்நோக்கமாகும். இவ்வாறுதான் அலகாபாத் நகரம் அக்பர் ஆட்சிக்காலத்தில் உருவானது. பிரயாக்ராஜ் என்று எந்த நகரமும்கிடையாது. கங்கை நதியும் யமுனை நதியும் சங்கமிக்கும் இடத்தின் பெயர்தான் பிரயாக்ராஜ் என்று அழைக்கப்பட்டு வந்தது. அது நகரத்திற்கு வெளியே இருக்கிறது. எனினும், அலகாபாத் என்றபெயருடன் சம்பந்தப்பட்ட வரலாற்றையும், கலாச்சாரத்தையும் முழுமையாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காக, புராண நகரமாக விளங்கும் பிரயாக்ராஜ் என்னும் பெயரை வைக்கிறார்கள். எப்படிப் பசுப் பாதுகாப்புக்குழு என்றபெயரிலும், மாட்டுக்கறிக்கு எதிரான பிரச்சாரம் என்ற பெயரிலும் முஸ்லிம்களைக் குறி வைத்துத் தாக்கினார்களோ, அதேபோன்று நகரங்களின் பெயர்களை மாற்றி பன்முகத் தன்மையை அழிக்கிறார்கள்.
இத்தகைய வரலாற்றுக் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கட்டளைப்படி செயல்பட்டுவரும் அரசாங்கங்களே செய்யத் தொடங்கி இருக்கின்றன.