சாதி - தீண்டாமைக் கொடுமைகளை சட்டத்தின் பிடியிலிருந்து மறைக்க முயலும் மனித உரிமைப் பிரிவு மற்றும் காவல்துறையினருக்கு கழக சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தீண்டாமைக் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறையினரும் தண்டிக்கப்படுவதற்கு சட்டத்தில் இடமிருப்பதை மறந்துவிட வேண்டாம் என்று ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்ட ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எச்சரித்தார்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதி முழுதும் பல்வேறு வடிவங்களில் சாதி வெறியின் கோர முகமான தீண்டாமை தலைவிரித்தாடுவதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து போராடி வருகிறது. குறுக்கிளையாம்பாளையம் எனும் கிராமத்தில் வசந்தகுமார் என்ற அருந்ததியர் சமூகத்தின் பள்ளிச் சிறுவன், பொதுக் குழாயில் தண்ணீர் எடுத்தபோது ஆதிக்கசாதியைச் சார்ந்த பெண்களும், ஆண்களும் சிறுவனைத் தாக்கியதைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகம் களத்தில் இறங்கியது. சாலை மறியல், போராட்டம் நடத்தி, அடுத்த நாள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனுவும் தரப்பட்டது.
தீண்டாமைக்கு எதிராக 1000 குடங்களுடன் ‘சாதித் தடை செய்யப்பட்ட’ பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போராட்டத்தை ஜூன் 27 ஆம் தேதி கழகம் அறிவித்தது. புதுடில்லியிலுள்ள தேசிய மனித உரிமை ஆணையமும், ஆங்கில நாளேட்டில் வெளிவந்த இந்த ‘தீண்டாமை’ச் செய்தியைப் படித்து தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முன் வந்தது. அதற்குப் பிறகு பதறிப் போன காவல்துறையும் மாவட்ட ஆட்சி நிர்வாகமும் அவசர நடவடிக்கை களை மேற்கொண்டன. கழகப் போராட்டம் நடப்பதற்கு முன், ஏதேனும் ஒரு முடிவை எட்ட வேண்டும் என்று திட்டமிட்டு, சமரசக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். கோட்டாட்சியர் தலைமையில் காவல்துறையினர் பெரியார்திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆதிக்கசாதியினர் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். ஆதிக்க சாதியினர், தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவே தண்ணீரை எடுக்க தடுத்ததாக பொய்யான சமா தானங்களைக் கூறி தலித் மக்கள் தண்ணீர் பிடிப்பதை எதிர்க்க மாட்டோம் என்று உறுதி கூறினர். இரு தரப்பினருக்கும் சமாதானம் ஏற்பட்டு விட்டதாக மாவட்ட நிர்வாகம் பத்திரிகைகளுக்கு செய்தி வெளியிட்டது.
தண்ணீர் பிரச்சினையில் பின்பற்றப்படும் ‘தீண்டாமை’ மட்டுமல்லாது, முடிவெட்டுவதில், மோட்டார் சைக்கிளில் பயணிப்பதில், செல்போன் பேசுவதில் அருந்ததி சமூக மக்கள் மீது சாதி வெறியர்கள் திணிக்கும் தீண்டாமையை முடிவுக்குக் கொண்டு வரும்வரை கழகம் போராடும் என்று கழக சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தண்ணீர் பிடிக்கும் பிரச்சினையில் சாதி ஆதிக்க வாதிகள் தீண்டாமையைப் பின்பற்ற மாட்டோம் என்று அறிவித்ததைத் தொடர்ந்து குறுக்கிளையாம் பாளையத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம் நிறுத்தப்பட்டு, அன்னூரில் ஓதிமலைப்பாதையில் மற்ற தீண்டாமை வடிவங்களை நிறுத்தி விடுமாறு வலியுறுத்தும் எச்சரிக்கை ஆர்ப்பாட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் ஜூன் 27 அன்று நடத்தியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் போராட்டத்துக்கு திரண்டிருந்தனர். தீண்டாமைக் கொடுமைக்குள்ளான அன்னூர் பகுதி தலித் மக்களும் ஆண்களும் பெண்களும் காலி குடங்களுடன் திரண்டு வந்திருந்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உணர்ச்சி எரிமலையாய் திரண்டிருந்த கூட்டம், சாதி வெறியர்களுக்கும் காவல்துறைக்கும் கடும் எச்சரிக்கை செய்தது. கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, செங் கோட்டையன் (தலித் விடுதலைக் கட்சி), சி. கலை யரசன் (விடுதலை சிறுத்தைகள்), வழக்கறிஞர் அலெக்சு, வெண்மணி (தமிழர் விடுதலை இயக்கம்), கார்க்கி (சமத்துவ முன்னணி), மகேந்திரன் (அண்ணல் அம்பேத்கர் துப்புரவு பணியாளர் சங்கம்), மாணிக்கம் (ஆதித் தமிழர் பேரவை), பன்னீர் செல்வம் (தமிழ் நாடு மாணவர் கழகம்), ஈசுவரன் (கழக அன்னூர் ஒன்றிய செயலாளர்) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். தண்ணீர் பிடித்ததற்காக தாக்கப்பட்ட பள்ளி மாணவன் வசந்தகுமார், நடந்த சம்பவத்தை விளக்கினார். மாவட்ட செயலாளர் ஆ. நாகராசன் தொகுத்து வழங்கினார்.
சேலம், திருச்சி, பழனி, ஈரோடு, கடத்தூர், மேட்டூர், காவாக்குடி, திருப்பூர், பல்லடம், பொள்ளாச்சி, சூலூர், பழனி பகுதியிலிருந்து கழகத் தோழர்கள் தனி வேன்களிலும், பேருந்துகளிலும் திரண்டு வந்திருந்தனர். கழகத் தோழர்கள் கோவை பன்னீர்செல்வம், புளியம்பாடி இராசேந்திரன், அரியலூர் சதீஷ், திண்டுக்கல் இராவணன், திருமலையம் பாளையம் சிலம்பரசன், அன்னூர் ஜோதிராம், பல்லடம் விஜயன், வேடசந்தூர் காளிமுத்து ஆகியோர் 3 நாட்கள் அன்னூர் பகுதி முழுதும் கிராமம் கிராமமாகச் சென்று போராட்டத்தை விளக்கி மக்களை அணி திரட்டினர். அன்னூரில் அனல் கக்கிய வெயிலில் பகல் 11.30 மணிக்கு தொடங்கி 2 மணி நேரம் ஆர்ப்பாட்டம் உணர்ச்சிப் பெருக்கோடு நடைபெற்றது. ஆர்ப்பாட்ட இறுதியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:
அன்னூர் பகுதியில் நடந்து வரும் தீண்டாமை கொடுமை அவ்வப்போது அதற்கு வருகிற எதிர்ப்பு களையெல்லாம் மீறி, மீண்டும் தொடர்ந்து கொண் டிருப்பதை நாம் காண்கிறோம். சில மாதங்களுக்கு முன்னால் அங்கிருக்கிற ஒரு கல்வெட்டு சுவரின் மீது சட்டையோடு அமர்ந்திருந்தார்கள் என்பதற்காக சிலர் தாக்கப்பட்டுள்ளனர். முடிதிருத்த மறுக் கிறார்கள். தேனீர் கடைகளில் இரட்டை குவளை. இந்த கொடுமைகள் எல்லாம் நீடிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதற்கு, வழக்குகள் தொடுக்கப் பட்டன. போராட்டங்கள் நடத்தப்பட்டன.
கடந்த மே மாதம் 21 ஆம் நாள் பொதுச் செய லாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் இங்கு நடந்தது. எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வடிவங்களில் தீண்டாமை இருக்கிறது என்பதை, அந்த போராட்ட துண்டறிக்கையில் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்கள். குறிப்பாக குறுக்கிளையம்பாளையம் கோவிந்தன் தேனீர் கடையில் இரட்டைக் குவளை இருக்கிறது. பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கத் தடை இருக்கிறது. நல்லிசெட்டிப்பாளையத்தில் ஊர் கவுண்டர் தேனீர் கடையில், பழனிச்சாமி தேனீர் கடையில் இரட்டைக் குவளை இருக்கிறது. அக்கரை செங்கப் பள்ளி சேகர் கடையில் தாழ்த்தப்பட்டோருக்கு முடிதிருத்த மறுக்கப்படுகிறது. அழகர்பாளையம் ராமசாமி கடையில் தனிக்குவளை இருக்கிறது. இவை களுக்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்பதற்காக கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காவல்துறையோ, அரசு அதிகாரிகளோ உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவாகத்தான், இந்தப் போராட்டத்தின் தேவை ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் பிடிக்கத் தடை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி ஆயிரக்கணக்கான துண்டறிக்கை வினியோகித்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் உரை யாற்றிருக்கிறார்கள். பூசி மெழுகும் அதிகாரிகளின் அலட்சியப் போக்குதான், இப்படிப்பட்ட தீண்டாமை நிலவுவதற்கு காரணமாயிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு கழகம் இரட்டைக் குவளைகளுக்கு எதிராக போராட்டம் எடுத்தபோது, சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐ.ஜி. சொன்னார்... “தமிழ்நாட்டில் தீண்டாமையே இல்லை, அரசியலில் ஆதாயம் தேடும் சிலர் இப்படி சொல்கிறார்கள்”... என்று, இவர்தான் சமத்துவ தேனீர் விருந்து வைப்பதற்காக என்று, எழுபத்து இரண்டு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிக் கொண்டார். அதே நிலையைதான் இப்போது பார்க்கிறோம்.
இரண்டு நாட்களுக்கு முன்னால், கோட்டாட் சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அங்கு தீண்டாமை கொடுமைகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. இந்தப் பகுதியின் மனித உரிமைப் பிரிவு உதவி ஆய்வாளர் தீண்டாமை இல்லை என்ற சொல்லியதாக கோட்டாட்சியரே பதிவு செய்திருக்கிறார். இதைப் படித்துக் காட்டினால் தான் இந்த அதிகாரிகளின் யோக்கியதை தெரியும் (படிக்கிறார்)...
“அன்னூர் காவல் ஆய்வாளர் மற்றும் சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி ஆய்வாளர், அன்னூர் உள் வட்டத்தில் இரட்டை குவளை மற்றும் முடிதிருத்த நிலையங்களில் தீண்டாமை போன்ற நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறுவதில்லை என்றும், இது தொடர்பாக தனிபட்ட நபர்கள் மீது எந்தவித புகார்களும் வரவில்லை என்றும், அன்னூர் ஒன்றியத் திற்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி தாழ்த்தப் பட்ட நபர்கள் உரிமை பிரச்சினை தொடர்பாக, தணிக்கை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டது”. இது கோட்டாட்சியர் எழுதிக் கொடுத்த அறிக்கை. இவர்கள் பணியாற்றும் லட்சணம் எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அந்த காவல்துறை நண்பரை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். உண்மையிலேயே தணிக்கை செய்தீர்களா? அல்லது அறையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை எழுதினீர்களா? என்பதுதான் எங்களுக்கு தெரிய வில்லை. நீங்கள் நடவடிக்கை எடுத்துத் தொலையா விட்டாலும் பரவாயில்லை. இல்லை என்று ஏன் மறுக்கிறீர்கள்? பொய்யை கூறுகிறீர்கள்?
கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி, உச்சநீதிமன்றம் தெளிவாக ஒரு தீர்ப்பை சொல்லியிருக்கிறது. ஆறுமுக சேர்வை என்பவர் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட ஒருவரைப் பார்த்து சாதிப் பெயரை சொல்லியதாக வழக்கு. தண்டனைப் பெற்ற ஆதிக்கச்சாதிகாரன் உச்சநீதிமன்றம் வரை சென்றான். அங்கு தண்டனையை உறுதி செய்ததோடு நீதிபதி நிற்கவில்லை. தமிழ்நாட்டில் பல கிராமங் களில் இரட்டை குவளை இருப்பதை அறிந்து நாங்கள் வருந்துகிறோம். இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மாவட்ட ஆட்சியரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் முதலில் பணியிடை நீக்கம் செய்யுங்கள், நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுங்கள், துறைசார் நடவடிக்கை எடுங்கள் என்று தமிழக அரசுக்கும், மற்ற மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளே, அந்தத் தீர்ப்பை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
நாம் அனைத்து கழக மாவட்ட பொறுப்பாளர் களிடமும், தீர்ப்பு நகலை கொடுத்திருக்கிறோம். புகார் கொடுக்கும்போது இதையும் இணைத்துக் கொடுங்கள். இப்படிப்பட்ட தீண்டாமை குற்றங் களே நடக்கவில்லை என்று பொய் அறிக்கை தரும் உதவி ஆய்வாளர் போன்ற தறுதலை அதிகாரிகளால், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப் பாளரும்தான் பாதிக்கப்படுவார்கள். காவல்துறை அதிகாரிகளே! உங்களுடைய போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட் டாலும் இருப்பதை சொல்லித் தொலைத்தால் மற்ற அதிகாரிகளாவது நடவடிக்கை எடுப்பார்கள் அல்லவா? ஏன் மறைக்கிறீர்கள்? தீண்டாமை கொடுமைகளை தடுக்காமல் இருப்பதைவிட இல்லை என்று சொல்வது மிகக் கேவலமான போக்கு என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
1926 ஆம் ஆண்டு பின்னாளில் பொதுவுடைமை கட்சியை நடத்திய ஜீவா அவர்கள் நடத்திய சிராவயல் ஆசிரமத்தில் காந்தி வாசக சாலையை திறந்து வைப்பதற்காக பெரியாரை அழைக்கிறார்கள். அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்காக காந்தி கிணறு என்று வெட்டப் பட்டிருக்கிறது. “நீங்க பொது கிணற்றில் நீர் எடுக்கப் போராடுங்கள் அல்லது தாகத்தோடு செத்துப் போங்கள், ஆனால் தனிக் கிணற்றில் நீர் எடுக்காதீர்கள்” என்று தாழ்த்தப்பட்டவர்களைப் பார்த்து பெரியார் சொன்னார். இப்பொழுது நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில், உங்களுக்கு தனிக் குழாய் அமைத்து தருகிறோம் என்று கோட்டாட்சியர் சொல்லியிருக்கிறார். அட, பைத்தியக்காரா! இது குடிநீர் சிக்கல் அல்ல; தீண்டாமை சிக்கல் என்று நமது தோழர்கள் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். தோழர்கள் சுட்டிக் காட்டியதைப்போல் அம்பேத்கர் தொண் ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் போராடினார். குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னாலும் போராடினார். அதைத் தான் நாம் இப்போதும் செய்து கொண்டிருக்கிறோம்.
ஆயிரம் சட்டங்கள் வந்துவிட்டன. தீண்டாமை கொடுமைகளை செய்கிறவர்கள் மீது மட்டுமல்லாது, கடமையை சரிவர செய்யாத அரசு அதிகாரிகளின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 4 ஆவது பிரிவின்படி தண்டனை உண்டு என்பது பற்றியாவது காவல்துறையினரே நீங்கள் அறிவீர்களா? வழக்கு தொடுத்து முப்பது நாட்களுக்குள் புலன் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இப்பொழுது பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் பதினைந்து நாட்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பார்ப்போம். எங்கோ இருக்கிற மனித உரிமை ஆணையத்திற்கு செய்தித் தாளைப் பார்த்து அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இங்கு இருக்கிற சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கு அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்களை பார்த்தப் பின்னாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை கைது செய்வதாக இருந்தால் நள்ளிரவு பன்னிரண்டு மணி. ஒரு மணிக்குக் கூட வருகிறீர்கள். ஆனால் இவை எவ்வளவு பெரிய குற்றங்கள்.
இவை மனித சமுதாயத்தின் சமத்துவத்திற்கு எதிரான குற்றங்கள். இவைகள் மீது நடவடிக்கை எடுக்காத போக்குதான் இருந்து கொண்டிருக்கிறது. இப்படி தனித்தனி நிகழ்ச்சிகளாக போராட வேண்டி யிருக்கிறது. இன்னொரு பக்கம் தத்துவ ரீதியாக இப்படிப்பட்ட தீண்டாமை அதைத் தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிற சாதிகள், அதை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிற இந்து மதம், வேதங்கள், சாஸ்திரங்கள் இவைகள் எல்லாம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் பெரியாரும் அம்பேத்கரும் இந்த சமுதாயத்திற்கு விட்டுச் சென்ற கருத்துகள். அதை நோக்கி ஒரு பக்கம் தத்துவ தளத்தில் நகருகிறபோது, சமுதாயத்தில் நடக்கிற இப்படிப் பட்ட தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக நாம் அவ்வப்போது, உடனே எதிர் வினை ஆற்றியாக வேண்டும். நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மனித உரிமை பிரிவு செய்கிற தவறுகளால், மாவட்ட ஆட்சி யரும், மாவட்ட காவல் கண்காணிப் பாளரும், பதவி இழக்கப் போகிறார் கள் என்பதுதான் எங்களுக்கு வருத்த மாக இருக்கிறது. குட்டி நாய் குலைத்து பெரிய நாய்க்கு ஆபத்து என்று சொல் வார்கள். அதுபோல இவர்கள் செய்கிற தவறுகளால் மேலதிகாரிகளுக்கு ஆபத்து என்பதை அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் வேலைக்காரர்கள்
அதிகாரிகள் என்பவர்கள், எங்களுடைய வரிப் பணத்தில் சம்பளம் பெறுகிற வேலைக்காரர்கள், பணக்காரர்களைப் போல் எங்களால் தனித்தனியாக கூர்க்கா - செக்யூரிட்டி வைத்துக் கொள்ள முடியாது என்பதால் அரசாங்கத்தின் மூலம் உங்களை ஏற்பாடு செய்திருக்கிறோம். எங்களுடைய வேலைக்காரர்களாகிய நீங்கள் வேலையை சரியாக செய்ய வில்லை என்றால், உங்கள் மீது நட வடிக்கை எடுக்கும் அதிகாரம் எஜமானர்களாகிய எங்களுக்கு உண்டு. எந்த வன்கொடுமை நிகழ்ந்தாலும் 3(1)(10) பிரிவைத்தான் போடுவீர்கள்? அந்தப் பிரிவு வழக்கில் உச்சநீதிமன்றம் ஆறுமுகம் சேர்வைக்கு, தண் டனையை உறுதிச் செய்திருக்கிறது. ஏன் நீர் உரிமையை மறுத்ததற்காக 3(1)(5) பிரிவையும் சேர்த்துப் போட மாட்டீர்களா? எங்களுக்கு எந்த தனிப்பட்ட அதிகாரி மீதோ, குறிப் பிட்ட நபர் மீதோ கோபம் இல்லை. இதை செய்கிற யாராக இருந்தாலும் கோபம் வராமல் இருக்கப் போவதும் இல்லை, இது, பொதுக் குழாயில் நீர் எடுப்பதற்கு மட்டுமான போராட்டம் அல்ல. செல்போனில் பேச கூடாது. பைக்கில் போகக் கூடாது என்கிற கொடுமை பற்றி, “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகையில் செய்தி வருகிறது. எங்கோ இருக்கிற மனித உரிமை ஆணையத்திற்கு செய்தித் தாளைப் பார்த்து அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இங்கு இருக்கும் காவல்துறை புகார் ஏதும் வரவில்லை என்கிறார்கள்.
புகார் கொடுக்க வருபவர்களை அங்கும் இங்கும் அலைக்கழித்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள்? எப்படி புகார் கொடுப்பார்கள்? தீண்டாமை இருப்பது பற்றி தெரிந்த பின்னாலாவது இது குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும், காவல் துறையை வருவாய் துறையை அழைத் துச் சென்று, தீண்டாமை நிலவும் பகுதிகளை காட்ட வேண்டும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எல்லாம் சட்டத்தில் இருக்கிறது. இந்த சமுதாயத்தின் கால் பகுதியாக இருக்கிற மக்களை, பிடித்திருக்கிற கொடுமைகளுக்கு நாம் தீர்வு காண் போம். தீர்வு காண்பதற்கான முயற்சி யில் ஒன்றுதான் இந்தப் போராட்டம். அந்தச் சிறுவனை அடிக்கிறபோது ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள். அதை எங்களுடைய பொதுச் செய லாளர் கோவை இராம கிருட்டிணன் பத்திரிகையாளர்களிடம் வெளியிட் டுள்ளார். ‘நக்கீரன்’ இதழ் பேட்டியில், பாதிப்புக்குள்ளான சிறுவன் வசந்த குமார், தன்னைத் தாக்கியதில் கலா மணி என்ற பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். மற்ற இரண்டு பெண்கள் யார் என்பதை விசாரித்தறிய வேண்டும். இவைகளை வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு இப்படிப்பட்ட கொடுமை கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இனி இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழக் கூடாது என்பதை எதிர்பார்த்து தான் இந்தப் போராட்டம். இதை கேட்டுக் கொண்டிருக்கிற உளவுத் துறை உரிய அதிகாரிகளுக்கு சரியான செய்தியை சொல்லுங்கள். அதி காரிகள் தீண்டாமைகளை நிகழாமல் தடுக்க வேண்டும் என்று எச்சரித்தார். தோழர்கள் அனைவருக்கும் ஆர்ப் பாட்ட இறுதியில் மாட்டிறைச்சி பிரி யாணி கழக சார்பில் வழங்கப்பட்டது.
வெற்றி!‘தலித்’ வசந்தகுமார் தண்ணீர் பிடித்தார்!
அன்னூரில் ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் தண்ணீர் பிடிக்க மறுக்கப்பட்ட அதே குறுக்கிளையாம்பாளையம் பொதுக் குழாயில் அன்று மாலை (அப்போதுதான் தண்ணீர் வரும்) தாக்கப்பட்ட மாணவன் வசந்தகுமார், தனது தாயாருடன் சேர்ந்து தண்ணீர் பிடித்தார். தலித் மக்களும் கியூ வரிசையில் நின்று தண்ணீர் பிடித்தனர். வசந்தகுமார் தண்ணீர் பிடிக்கும் படம்.
‘இரட்டைக் குவளை’ப் போல ‘இரட்டைப் பேருந்து!’
இரட்டைக் குவளை, இரட்டை சுடுகாடு என்பதுபோல் அரசுப் பேருந்திலும் இரட்டைப் பேருந்து வந்துவிட்டது. இந்த அவலத்தை அன்னூர் ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் கோவைஇராமகிருட்டிணன் தனது உரையில் குறிப்பிட்டார். “தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் கேம்பனூர் எனும் கிராமத்தில், ஆதிக்க சாதியினர் வாழ்கிறார்கள். அதே ஒன்றியத்தில் அண்ணா நகர் பகுதியில் தலித் மக்கள் வாழ்கிறார்கள். அண்ணா நகர் பகுதியிலிருந்து பேருந்து வசதிகள் ஏதும் இல்லை. சட்டசபை தேர்தலின்போது தங்கள் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி. வேலுமணியிடம் தங்கள் பகுதியிலிருந்து பேருந்து வசதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எஸ்.பி. வேலுமணி, வெற்றிப் பெற்று அமைச்சராகிவிட்டார். அமைச்சரானவுடன், அண்ணா நகர் பகுதி மக்களுக்கு தாம் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றினார். அண்ணா நகர் பகுதியிலிருந்து அரசு பேருந்துகள் விட ஏற்பாடு செய்யப்பட்டது. பேருந்து கேம்பனூர் வரும்போது இருக்கைகள் நிரம்பிவிடும். அருந்ததி மக்கள், புறப்படும் இடமான அண்ணா நகரில் ஏறி இருக்கைகளைப் பிடித்து விடுவார்கள். அருந்ததியினர் பேருந்தில் உட்கார்ந்து கொண்டு, நாங்கள் ‘மேல்சாதி’க்காரர்கள் நின்று கொண்டு வருவதா என்று, கேம்பனூர் ஆதிக்கசாதியினர் போராட்டம் நடத்தினர். உடனே கேம்பனூரிலிருந்து புறப்படுவதற்கு தனிப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் வேலுமணி அறிவித்து, இப்போது, அண்ணா நகரிலிருந்து புறப்படும் பேருந்து; கேம்பனூரிலிருந்து புறப்படும் பேருந்து என்று இரட்டைப் பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன. ‘தீண்டாமை’ பேருந்துக்குள்ளும் வந்துவிட்டது” என்று கோவை இராமகிருட்டிணன் குறிப்பிட்டார்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அன்னூரில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் பிடிக்கும் உரிமைப் போராட்டம் வெற்றி
- விவரங்கள்
- பெ.மு. செய்தியாளர்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2011