மே 19, 2007 இல் தஞ்சையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய சாதி ஒழிப்பு மாநாடு உணர்ச்சிப் பிழம்பாக நடைபெற்றது. 1957 இல் சட்ட எரிப்புக் கிளர்ச்சியில் பங்கேற்ற போராளிகளுக்கு கழகம் விருதுகளை வழங்கி, பெருமையுற்றது. விருது வழங்கும் நிகழ்ச்சிப் பற்றிய செய்தித் தொகுப்பு:

சாதி ஒழிப்புப் போரில் பங்கேற்றவர்களும், 50 ஆண்டுகள் கடந்தும் அவர்களை மறக்காமல் நினைவு கூர்ந்து - பெரியார் திராவிடர் கழகம், இங்கே மரியாதை செய்கிறதே, இதற்கு ஈடான மரியாதை எங்களுக்கு வேறு கிடையாது என்று, சட்ட எரிப்புப் போராளி, மூத்த பெரியார் தொண்டர் நாகை எஸ்.எஸ். பாட்சா, தஞ்சை மாநாட்டில் பலத்த கரவொலிக்கிடையே பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மாநாட்டு அரங்கை உணர்ச்சிப் பிழம்பாக்கிய சட்ட எரிப்புப் போராளிகளின் நினைவுப் பகிர்வு நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று, சட்ட எரிப்புப் போராட்டத்தில் 27வது வயதில் 9 மாதக் கடுங்காவல் தண்டனை பெற்ற நாகை பாட்சா ஆற்றிய உரை:

சட்ட எரிப்புப் போராட்டம் என்பது சாதி ஒழிப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். வயது வந்த அனைவருக்கும் ஓட்டுரிமை தரப்பட்டு, அவர்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்றம், நமக்கு அரசியல் சட்டத்தை உருவாக்கவில்லை. படித்தவர்கள் - பணக்காரர்கள் - பதவிக்காரர்கள் மட்டுமே வாக்களிக்கக்கூடிய பிரிட்டிஷாரின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அரசியல் நிர்ணய சபைதான் அரசியல் சட்டத்தை உருவாக்கியது. அதன் தலைவராக டாக்டர் அம்பேத்கர் இருந்தார்.

மற்றொரு உறுப்பினர் ஒரு முஸ்லீம். மற்ற உறுப்பினர்கள் எல்லோரும் பார்ப்பனர்கள். எனவே, இந்த அரசியல் சட்டத்தை அப்போதே பெரியார் மறுத்தார். இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்று பார்க்கும்போது - அரசியல் சட்டத்தின் ஜீவாதார உரிமை என்ற அடிப்படை உரிமைகளுக்குள் மதம், சாதி, கலாச்சாரம், பணம் ஆகியவற்றுக்கான உரிமை கொண்டு வரப்பட்டது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த அடிப்படை உரிமைகளுக்கு எதிராக, எந்த சட்டமன்றமும், சட்டம் இயற்ற முடியாது. அப்படி சட்டம் இயற்றப்படுமானால், அது பற்றி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தன்னிச்சையாக முடிவு செய்யும் உரிமை, இந்த நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால், கலைஞர் அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றியதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அது நிலுவையில் உள்ளது. இதை முடிவுசெய்யும் உரிமை உச்சநீதிமன்றத்துக்கே இருக்கிறது. மதத்தையும், சாதியையும், அது தொடர்பான சட்டங்களையும் அரசியல் சட்டம் உறுதி செய்வதால், அந்தப் பிரிவுகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெரியார் அரசியல் சட்டத்தை எரிக்கச் சொன்னார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றங்களை நீதிமன்றங்கள் கட்டுப்படுத்துவதை எதிர்த்து பெரியார் ‘சுப்ரீம் கோர்ட் கண்டன நாள்’ கூட்டங்கள் நடத்தி நாட்டை ஆள்வது சட்டமன்றங்களா, நீதிமன்றங்களா என்று கேட்டார். அவ்வளவு துணிவோடு பேசக்கூடிய தலைவர் அவர் ஒருவர்தான். நமது பிரதமர் மன்மோகன் சிங், உச்சநீதிமன்றம் எல்லை தாண்டிடக் கூடாது என்றுதான் கூறினார். உடனே அதே மேடையில் இருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருட்டிணன் நீதிமன்றம், சட்டப்படி தான் செயல்படுகிறது என்று பிரதமர் முகத்தில் அடிப்பது போல் பதில் கூறினார்.

ஆக, நீதிமன்றங்கள்தான் எதையும் நிர்ணயிக்கிறது என்றால், பார்ப்பனர்களிடம் தான் அதிகாரம் இருக்கிறது என்பதுதான் அதன் அர்த்தம். பெரியார் இப்படிக் கூறினார் என்று தான் என்னைப் போன்றவர்களால் பேச முடியுமே தவிர, பெரியார் பேசுவது போல் என்னால் பேச முடியாது. அந்தத் துணிவு எனக்குக் கிடையாது. சுப்ரீம் கோர்ட் கண்டன நாள் கூட்டம் நடத்திய பெரியார், “3 கோடி வாக்காளர்கள் ஓட்டளித்து, தங்களுக்கு வேண்டிய அரசாங்கத்தை தேர்வு செய்கிறார்கள். அந்த அரசாங்கம் செய்யும் சட்டத்தைத் தடுக்க உனக்கு ஏது உரிமை?” என்று கேட்டார் பெரியார். இந்த எல்லை வரை நாமும் பேசலாம்.

ஆனால் பெரியார் அடுத்த எல்லைக்குப் போய் “யார் இந்த நீதிபதிகள்? பிச்சை எடுத்துப் படித்தவன், பந்தக்காலைப் பிடித்து மேலே வந்தவன்; இவர்கள்தான் இந்த நாட்டை ஆள்வதா? இதற்கு ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும் என்று கேட்டார். இப்படிக் கேட்கும் துணிவு கொண்ட தலைவர் வேறு யாராவது உண்டா? அவர்தான் பெரியார்; அவருக்கு தொண்டராக இருந்தோம் என்பதுதான் எங்களுக்கு உள்ள பெருமை. (கைதட்டல்)

சட்டத்தைக் கொளுத்தி, சிறைக்கு - இளையோர், முதியோர் வரை சென்றார்கள். மன்னிப்புக் கேட்கிறாயா, உடனே விடுதலை என்று சொல்லப்பட்டது. மன்னிப்புக் கேட்டால் சிறைத் தண்டனையை முழுமையாக அனுபவிக்கத் தேவையில்லை. விடுதலை கிடைக்கும் என்றார்கள். ஆனால், ஒருவர்கூட, மன்னிப்புக் கேட்டு வெளியே வரவில்லை. அதுதான் இந்தப் போராட்டத்தின் வெற்றி. (கைதட்டல்)

சாதியை ஒழிக்க போராடினோம்; ஆனால் சாதி ஒழியவில்லை. ஆனால் அதற்கான போராட்டத்தில் பங்கு பெற்றோம் என்பதுதான் எங்களுக்குள்ள மகிழ்ச்சி. 3000 ஆண்டுகளாக நிலை பெற்றுள்ள சாதியை 50 ஆண்டில் ஒழித்துவிட முடியாது. அண்ணா, திராவிடர் கழகப் பொதுச்செயலாளராக இருந்தபோது, உழைக்க வாருங்கள்! பிழைக்க என்ன வழி என்று கேட்காதீர்கள்! போராட வாருங்கள்!

அது எப்போது முடியும் என்று கேட்காதீர்கள்!” என்றார். இதே கருத்தை பெரியார், “உன் வீட்டுச் சோற்றைத் தின்றுவிட்டு என் வீட்டு வேலைக்கு வா” என்று அவரது மொழியில் சொன்னார். “உன்னுடைய குடும்ப சூழ்நிலை சரியாக இருந்தால் வா! இல்லாவிட்டால் வரவேண்டாம். போராட்டத்துக்கு வராதவர்களை கட்சியில் இரண்டாம் பிரஜையாக நான் நினைப்பது கிடையாது” என்றார்.

இன்னொரு கேள்வி கேட்கப்படுகிறது. நான் பிறப்பால் ஒரு முஸ்லீம். “உனக்கு எதற்கு சாதி எதிர்ப்புப் போராட்டம்?” என்று கேட்கப்படுகிறது. பெரியார் ராமன் பட எரிப்பு, விநாயகன் சிலை உடைப்புப் போராட்டங்களை நடத்தியபோது, முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் வர வேண்டாம் என்றார். ஆனால் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் அப்படிக் கூறவில்லை. திருச்சியிலேயே இருந்த பிரான்சிஸ் ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

எந்த மதத்தவராக இருந்தாலும், அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் அனைவரையும் கட்டுப்படுத்துகிறது. எனவே இந்த நாட்டின் குடிமகன் என்ற உரிமையில் சாதியைப் பாதுகாப்பதை அடிப்படை உரிமையாக்கும் அரசியல் சட்டப் பிரிவை எரிக்கும் போராட்டத்தில் பங்கேற்றேன்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தி.மு.க. அரசு உதவித் தொகை வழங்கக் கூடாதா என்று கேட்கப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பும் இருக்கிறது. அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பேன் என்று உறுதி ஏற்று, ஆட்சிக்கு வருகிறவர்களால், அரசியல் சட்டத்தை எரித்தவர்களுக்கு எப்படி, அரசு உதவித் தொகை வழங்க முடியும்? நாம் எப்படி அதை எதிர்பார்க்க முடியும்? ஈ.வெ.கி. சம்பத் அழகாகச் சொன்னார்.

பெரியாருடைய பேச்சு மூன்று மணி நேரம் நிகழுகிறது என்றால், “தாய்மார்களே, பெரியோர்களே, தோழர்களே” என்ற முதல் வாக்கியமும், “நான் சொல்வது உங்களுக்கு சரியானது என்று தோன்றினால், ஏற்றுக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நிராகரித்து விடுங்கள்” என்ற இறுதி வாக்கியமும் தான், சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்கும். மற்ற மூன்று மணி நேர உரை முழுதும், அரசியல் சட்டத்துக்கு எதிராகவே இருக்கும் (பலத்த கைதட்டல்) என்று சம்பத் குறிப்பிட்டார்.

நாம், விலைவாசி உயர்வை எதிர்த்து புளி, மிளகாய் விலை ஏற்றத்தை எதிர்த்து சிறைக்குப் போகவில்லை. நாட்டின் அமைப்பையே தலைகீழாக மாற்றுவதற்காக போராட்டம் நடத்தி சிறை சென்றவர்கள். எனவே நாம் அரசு மான்யத்தை, உதவியை, போனசை எதிர்பார்க்கக் கூடாது. அந்த மரியாதையை எதிர்பார்த்து நாம் போராடவில்லை.

நானும், என்னுடைய தோழர்களும், உடல் தளர்ந்து, பிணி, மூப்பு என்று வந்து விட்டோம். நமக்குப் பிறகு, இந்தக் கொள்கைகளைத் திருப்பிச் சொல்ல யார் இருக்கப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். உங்களைப் பார்க்கும்போது நம்பிக்கை ஏற்படுகிறது. நான் உங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், பெரியார் கருத்தை, குழப்பாமல் நேரடியாகச் சொல்லுங்கள்.

நாம் போராட்டம் நடத்தி 50 ஆண்டுகளுக்குப் பிறகும், பெரியார் திராவிடர் கழகம், நம்மை நினைவு கூர்ந்து, நமக்கு மரியாதைசெய்ய இந்த மாநாட்டை நடத்துகிறதே; இந்த மரியாதையைவிட வேறு மரியாதை நமக்குத் தேவை இல்லை (கைதட்டல்) என்றார் எஸ்.எஸ். பாட்சா.

அந்தூர் பொன்னுச்சாமி

பெரம்பலூர் மாவட்டம் அந்தூர் பொன்னுச்சாமி - சட்டத்தை எரித்து 18 மாத சிறைத் தண்டனை பெற்றவர். அவர் தனது உரையில்:

அன்பார்ந்த தமிழ்க்குல சான்றோர்களே! சாதி ஒழிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு பாராட்டு நடத்துவது போன்ற ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறீர்கள். பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த லெட்சுமணன் என்ற தோழர், என்னிடம் வந்து அழைத்தார். ஏற்கனவே எனக்கு அறிமுகமான தோழர்.

அவர் சொன்னார் என்பதற்காக வந்தேன். நான் செய்தது, போராட்டத்தில் கலந்து கொண்டது, ஒரு மனிதன் செய்ய வேண்டிய கடமையே தவிர, அதற்காக பாராட்டு, அது இது என்று வேண்டியதில்லை! (கைதட்டல்) ஒவ்வொரு மனிதனுக்குரிய கடமை. உலகத்திலே எந்த நாட்டிலும், இப்படி ஒரு சாதி இழிவு கிடையாது. மனிதனுக்குள் நிற பேதம் இருக்கலாம். ஆனால் சாதி என்பது இந்தியாவில் மட்டும் தான் இருக்கு. அப்படி பாராட்டுகளை எதிர்பார்த்து, நாங்க, அந்த நிகழ்ச்சியில, போராட்டத்துல கலந்து கொள்ளவில்லை. தஞ்சை அரண்மனைத் திடலில் தான் ஸ்பெஷல் மாநாடு நடந்தது. போராட்டத்துல கலந்துகிறவங்கள பெரியார் கைதூக்கச் சொன்னார்.

நிறைய பேர் கைதூக்கினாங்க. ஜெயிலுக்குப் போறவங்க மட்டும் கைதூக்குங்கன்னு பெரியார் அப்புறம் சொன்னார். ஏற்கனவே கைதூக்கி யவர்களிலே பாதியளவு குறைஞ்சிடுச்சு. அது ஒரு கடமை. ஆனால், அந்த சாதி இன்னும் ஒழியல; நீண்டுக்கிட்டே போகுது. இதுக்காக நாட்டில் பலாத்காரம் நடந்து, அழிவு ஏற்பட்டால் கூட, நான் ஆதரிக்கிறேன்! (கைதட்டல்) எவ்வளவோ அழிவு, பூகம்பத்தால, பலாத்காரத்தினால ஏற்படுதுல்ல!

இந்த நாட்டில், எல்லாக் கொடுமையையும்விட, இந்த சாதிக் கொடுமைதான் மிகக் கேடானது என்று நான் உணர்வு பூர்வமாகக் கருதுகிறேன். எனக்கு 18 மாதம் தண்டனை வழங்கினார்கள். எவ்வளவோ கஷ்டப்பட்டோம். ஆனாலும், அதை கஷ்டங்களாக நாங்க நினைக்கவில்லை. மேற் கொண்டு இன்னொரு வாய்ப்பு அதே போல் கிடைக்குமென்றால், இறுதிக் காலத்தை, சிறையிலே கழிக்கலாம் என்றே ஆசைப்படுகிறேன் (கைதட்டல்) என்று கூறி எனது உரையை முடித்துக் கொள்கிறேன்.

சோழபுரம் முருகேசன்

சட்டத்தை எரித்து, 9 மாத சிறைத் தண்டனை பெற்ற தஞ்சை மாவட்டம் சோழபுரம் முருகேசன், தனது உரையில்:

“நாங்கள் சட்டத்தை எரித்த போது, சட்டத்தைக் கொளுத்தினால் விட்டுவிடுவார்கள் என்று கருதி, இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வில்லை. பல மாதங்களுக்கு முன்பாகவே பெரியாரை சிறைக்குள்ளே பிடித்துப் போட்டுவிட அப்போதிருந்த சர்க்கார் திட்டம் போட்டாங்க. பெரியார் ஒரே ஒரு கேள்வி கேட்டார். சட்டத்தைக் கொளுத்தினா, என்னைக் கைது செய்வதற்கு உனது சட்டத்தில் இடமிருக்குதா? முதலில் உனது சட்டத்தைப் பார் என்று கேட்டார். அதற்குப் பிறகுதான், சர்க்கார் சட்டத்தைப் பார்த்து, தண்டிக்க சட்டத்தைப் போட்டான்! உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி, சட்டத்தை எரித்தால் தண்டனை என்று சட்டம் செய்தார்கள்.

அதற்குப் பிறகுதான் சர்க்காருக்கு சொரணை வந்துச்சு. சட்டத்தைக் கொளுத்தினால் மூன்று ஆண்டு தண்டனை என்று சட்டம் போட்டார்கள். நாங்கள் எல்லாம், இதைத் தெரிந்து கொண்டு, அதற்காக சிறைச் செல்ல வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டுதான், போராட்டத்துக்கு போனோம். இந்த சாதியினால, அன்றாடம் கேவலப்பட்டுக் கிடப்பதைவிட, செத்தாலும் சரி என்று துணிந்து தான் சென்றோம். (கைதட்டல்)

சோழபுரத்தில் - துரைசாமி தலைமையிலும், குமாரசாமி முன்னிலையிலும் போராட்டம் நடக்க இருந்தது. இவர்கள் இருவரும் சென்னைக்குப் போயிருந்தபோது, ‘முரளி கபே’ ஓட்டல் மறியலில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டுவிட்டார்கள். சோழபுரத்தில், தலைமை வகிக்க ஆள் இல்லை. முன்னிலை வகிக்க ஆள் இல்லை.

அப்போது எனக்கு 20 வயது. இப்போது 71 வயது. அப்போது நானே, எனது சுற்று வட்டாரத்திலுள்ள 21 பேருடன் தொடர்பு கொண்டு, முதல் நாள் இரவே, அவசர அவசரமாக எல்லாரிடமும் போய் சொல்லிட்டு வந்து, சட்டத்தை எரித்தோம். அந்தச் சட்டத்தை எரிக்கின்றபோது, கொஞ்சம் கூட எங்களுக்கு சங்கடம் கிடையாது. அவ்வளவு சித்திரவதை தினம் தினம் படுவதைவிட, இப்படி சட்டத்தை எரித்து சிறைக்குப் போய்விடுவது நல்லது என்ற முடிவுக்கு வந்தோம்.

இப்போ ஜெயிலுக்கு போவது எளிது. காலையிலே, மதியத்திலே டிபன், சாப்பாடு என்றெல்லாம் தருகிறார்கள். அப்போ இருந்த நிலை வேறு; அதை எல்லாம் சொல்ல வேண்டியதில்லை; மண் சட்டியிலேதான் சோறு வாங்க வேண்டும். சோறு வாங்கும்போதே பல நேரங்களில் சட்டி உடைந்துவிடும்.

மிகப் பெரிய சங்கடங்கள் இருந்தாலும், அவற்றை நாங்கள் பொருட்படுத்தவில்லை. எனக்கு முன்னாலே பேசியவர்கள் எல்லாம் சொன்னதைப் போல், இதே போன்ற போராட்டங்கள் நடக்குமானால், உயிர் போனாலும் பரவாயில்லை; சிறை செல்லத் தயாராக இருக்கிறோம் (கைதட்டல்) என்று கூறிக் கொண்டு முடித்துக் கொள்கிறேன்.

திருமங்கலக்குடி கோவிந்தராசன்

திருமங்கலக்குடி கோவிந்தராசன் சட்ட எரிப்பில் 6 மாதம் சிறைபட்டவர்; அவர் மாநாட்டில் பங்கேற்றுப் பேசியதாவது:

நாங்கள் திருவிடை மருதூர் - திருப்பனந்தாள் பகுதியில், 5000 பேர் திரண்டு சட்டத்தைக் கொளுத்தினோம். அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இராமாமிர்தத் தொண்டைமானும் எங்களோடு சட்டத்தைக் கொளுத்தினார். போலீசார் எங்கள் எல்லோரையும் கைது செய்யாமல், கிராமத்துக்கு 10 பேர் வீதம், 20 கிராமத்தில் கைது செய்தார்கள். நாங்கள் 200க்கும் அதிகமானோர் ஒரே பகுதியில் சிறைக்குச் சென்றோம். 6 மாதம், 9 மாதம், 1 வருடம் என்று தண்டனை தரப்பட்டது. இம்மாதிரி பாராட்டு நடக்கும் என்றெல்லாம் நினைத்து நாங்கள் போராட்டத்துக்குப் போகவில்லை.

நானும் 13 முறை கழகத்துக்காகப் போராட்டம் நடத்தி சிறைக்குப் போயிருக்கிறேன். பாராட்டுகளை எதிர்பார்க்காமல், எங்களுக்குள்ள சாதி இழிவை போக்கிக் கொள்வதற்காக தந்தை பெரியாருடைய கட்டளைக்காக நாங்கள் சிறைக்குச் சென்றோம். சாக்கோட்டை கணபதியும் நானும் சிறை சென்றோம். மாஜிஸ்திரேட் கேட்டபோது, எதிர்த்து வழக்காட மாட்டோம்; எந்தத் தண்டனை வேண்டுமானாலும் தாருங்கள் என்று தான் வாக்குமூலம் கொடுத்தோம்.

என் குடும்பத்தின் அந்தஸ்து கண்டு எனக்கு ‘பி கிளாஸ்’ கொடுத்தார்கள். நாங்கள் ஏற்க மறுத்து விட்டோம். சிறையிலிருந்து வெளியேறி தொடர்ந்து கழகப்பணிகளைச் செய்தோம். தஞ்சை மாவட்டத்தில் திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் இப்போது உயிரில்லாமல் இருக்கிறது. அந்த சங்கத்தை உருவாக்கியவர்கள் பாபா நவநீத கிருட்டிணன், எஸ்.எஸ். பாட்சா, குடந்தை ஜோசப், திருமங்கலக்குடி கோவிந்தராசு ஆகியோர் சேர்ந்து கட்டிக் காத்தோம். திராவிடர் கழகம் அதை வளர்க்க உதவி செய்யாமல் உதறிவிட்டது.

திராவிட விவசாய சங்கம் கழகத்துக்கு உயிர்நாடியான அமைப்பு. அதை ஏற்படுத்தியது தந்தை பெரியார். அந்த விவசாய சங்கத்தை பெரியார் திராவிடர் கழகம் கையில் எடுத்து அதற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். விவசாயத் தொழிலாளர் நலனுக்கு சட்டம் இயற்ற வேண்டும் என்பதே நமது கோரிக்கை. பொதுத் தொழிலாளருக்கு, அவர்களின் நலனுக்கு வாரியம் அனுப்ப வேண்டும்.

எனக்கு 88 வயதாகிறது. அப்படி விவசாய சங்கத்தை பெரியார் திராவிடர் கழகம் அமைக்குமானால், என்னால் முடிந்த உதவிகளை நான் செய்வேன். பெரியார் திராவிடர் கழகம் - என்னை முன்பே அணுகி இருந்தால், இன்னும் 50 சாதி ஒழிப்பு வீரர்கள் இங்கே வந்திருப்பார்கள் என்றார்.

சீர்காழி லாலா

தஞ்சை மாவட்டம் சீர்காழி லாலா சட்ட எரிப்பில் 9 மாதம் சிறைபட்டவர். அவர் தனது உரையில்:

“நான் நீண்டகாலமாக பெரியார் இயக்கத்தில் தொண்டு செய்து வருகிறேன். எனது திருமணம் கூட குத்தூசி குருசாமி தலைமையில் கொழுத்த ராகு காலத்தில் தான் நடந்தது. அதற்கு சம்மதித்தால் தான் திருமணம் என்றேன். பல போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். நான் சட்டத்தை எரித்து 9 மாத சிறைத்தண்டனை பெற்றேன்.

சிறையில் அரிசி சாப்பாடு கிடையாது. காக்கா சோளம், கேழ்வரகும் தான் சாப்பாடு. தஞ்சையிலிருந்து வந்த தோழர்களுக்கு, சிறை சாப்பாடு உடலை பாதித்து, ரத்தப் போக்கு ஏற்பட்டு விட்டது. நீடாமங்கலம் ஆறுமுகம் தலைமையில் தான் நாங்கள் போராட்டத்துக்குப் போனோம். என்னுடைய மகனுக்கும், மகளுக்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்தேன். இனியும் என் வீட்டில் சாதி மறுப்புத் திருமணங்கள் தான் நடக்கும்” என்றார்.

திருச்சி தியாகராசன்

தந்தை பெரியாருக்கு - 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததால் ஆத்திரமடைந்த பெரியார் தொண்டர் ஒருவர், அரசு வழக்கறிஞரான பார்ப்பனர் முகத்தில் ‘ஆசிட்’ வீசினார். விளம்பர வெளிச்சம் ஏதுமின்றி, பெரியாரை அவமதித்தவர்களுக்கு எல்லாம் பதிலடி தந்து, ‘பகத்சிங்காக’ வாழ்ந்து கொண்டிருக்கும் 78 வயது தோழரின் பெயர் திருச்சி தியாகராசன். மேடையில் ஏறி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், கொள்கைக் குன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவரை, பெரியார் திராவிடர் கழகம் அடையாளம் கண்டு, சாதி ஒழிப்பு மாநாட்டுக்கு அழைத்து வந்தது. சாதி ஒழிப்பு மாநாட்டில் அவரது உரை, மின்சாரத்தைப் பாய்ச்சியது. ஆழமான உணர்வுகளைத் தூண்டி, என்றும் நினைவில் நிற்கும் முத்திரை பதித்த திருச்சி தியாகராசன் உரையிலிருந்து:

என்னருமை உணர்வாளர்களே! நான் அதிகம் பேச முன்வரவில்லை. உண்மையைச் சொன்னால் - எனது 78 வயதில் நான் ஏறியுள்ள முதல் மேடை இது தான். புரட்சிகர இயக்கங்களுக்கு தனித் தனிப்படைகள் தேவை. நீங்கள் பிரச்சாரப் பீரங்கிகள்; பிரச்சாரப் படை. நான் தீவிரவாதத்தில் தான் இருப்பேன் (கைதட்டல்). பெரியார் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போராட்டங்களில் நான் கலந்து கொள்வது இல்லை. நான் கருப்புச் சட்டையும் போடமாட்டேன்.

என்னுடைய நடவடிக்கைகளால் கழகம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று கருதுபவன். என்னுடைய போராட்டங்களை நான் தனிப்பட்ட முறையில் எனக்கு நானே பொறுப் பாக்கிக் கொண்டுதான் நடத்துவேன். சுருக்கமாகச் சொல்கிறேன். பெரியாரின் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்துக்கு என்ன காரணம் என்பது எனக்குத் தெரியும்.

ஆனால் விபூதி வீர முத்து என்பவன், பெரியார் படத்தை செருப்பால் அடித்து ஊர்வலம் போவதாகச் சொன்னான். திருச்சி திராவிடர் கழகத் தலைவர் டி.டி.வீரப்பா, எந்தத் தோழரும், விபூதி வீரமுத்து பக்கம் போக வேண்டாம் என்று கண்டிப்பாக உத்தரவிட்டார், அறிக்கையும் விட்டார். நான் வீட்டில் இருந்து கொண்டு, எனது சகாக்களை அழைத்துப் பேசினேன்.

டி.டி.வீரப்பா, கட்சியின் கட்டுப்பாடு படி நடக்கட்டும். ஆனால், நாம் நமது ‘சட்டத்திட்டப்படி’ அதை சந்திப்போம் என்று கலந்து பேசினேன். அன்று எனக்கு டைபாயிடு காய்ச்சலே வந்துட்டுதுங்க. கடும் காய்ச்சலில் கிடந்த நான் கண்விழித்துப் பார்த்தபோது - என் கையில் கத்தி இருந்தது.

அப்போது மணி மாலை 7. அய்யோ, இந்நேரம் பெரியார் படத்தை செருப்பால் அடித்திருப்பானே யென்று, தலைதெறிக்க ஓடினேன். திருச்சிடவுன் ஆலை நோக்கி, கூட்டத்தைக் கலைக்க, போலீசார் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ஆனால், விபூதி வீரமுத்து விடம் எத்தனை பேர் இருந்தார்கள் தெரியுமா? 25 பேர் மட்டும்தான். ஆனால் போலீஸ் பட்டாளம் அதிகமாக இருந்தது. நம்முடைய தோழர்கள் சாலையின் மறு பக்கத்தில் நின்று கொண்டு, பயங்கரமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

என்னுடைய சகாக்களுக்கு நான் செய்ய வேண்டியதை எல்லாம் முன் கூட்டியே சொல்லி விட்டேன்; நான் சோடா விற்பவனாக மாறு வேடத்தில் போலீஸ் தடையை மீறி உள்ளே நுழைந்துவிடுவேன்; நான் சைகை காட்டியதும், நீங்கள் கற்களை வீச வேண்டும்; கல் விழுந்தவுடன் நான் செய்ய வேண்டியதை செய்வேன் என்று கூறி விட்டேன்; அப்போதெல்லாம் என்னிடம் காசு கிடையாது; ஒருவரிடம் கடன் வாங்கி, அதில் ‘சோடா கிரேடு’களை வாங்கி, அதைத் தூக்கிக் கொண்டு, தலையில் துண்டு கட்டிக் கொண்டு, சோடா விற்பவனைப் போல் உள்ளே நுழைந்தேன். விபூதி வீரமுத்துவின் ஆள் கண்ணன் என்பவர், யார் நீ என்று கேட்டார்.

தலைவருக்கு சோடா தர வந்திருக்கிறேன் என்றேன்; உள்ளே போனதும், விபூதி வீரமுத்துவை நோக்கி எனது தோழர்கள் மலத்தை வீசினார்கள்; நான் டவுன் ஆல் கதவை உடைத்து, டவுன் ஆல் கோபுரத்தின் மீது ஏறி விட்டேன்; விபூதி வீரமுத்து என்பவன் பெரியார் ரஷ்யாவுக்குப் போன போது எடுத்த படத்தை ஒரு மூட்டையில் ஒட்டி, அந்தப் படத்தை செருப்பால் அடிக்கத் திட்டமிட்டிருந்தான்.

‘வெள்ளைக்காரனுக்கு காட்டிக் கொடுத்த நாயை செருப்பால் அடிக்கிறேன்’ என்று கூறி - பெரிய செருப்பை, விபூதி வீரமுத்து தூக்கினான். அவ்வளவுதான், டவுன் ஆல் கோபுரத்திலிருந்து சோடா பாட்டிலையும், கற்களையும் விபூதி வீரமுத்து தலையை இலக்கு வைத்து அடித்தேன்; முதல் அடியில் அவன் தலை கிழிந்தது. பெரியார் படம் கீழே விழுந்தது. என்னைக் கெட்ட வார்த்தை பேசி திட்டினான். மீண்டும் விட்டேன் எனது ‘அஸ்திரத்தை’; பிறகு 7 பேர் மொட்டை அடித்துக் கொண்டு பெரியார் படத்தை வைத்துப் பாடை கட்டி தூக்கி வந்தனர்.

அத்தனை பேரையும் இலக்கு வைத்து அஸ்திரத்தை வீசினேன்; அப்படியே ஓட்டம் பிடிச்சானுங்க; மேலே இருந்த என்னைப் பார்த்து, போலீசார் வெறிக் கூச்சல் போட்டு, என்னை சுற்றி வளைக்க வந்தாங்க; நான் மேலே இருந்து அப்படியே கீழே குதித்தேன்; எனக்கும் சில ‘ஸ்டண்ட்’ வேலைகள் தெரியும். ஆனால் உங்களை எல்லாம் ஒன்று கேட்டுக் கொள்கிறேன்; யாரும், டி.வி., சினிமாக்களைப் பார்க்காதீங்க. அதெல்லாம் ‘விசிலடிச்சான் குஞ்சு’ சமாச்சாரம்; நடைமுறைக்கு வாங்க. நான் ஃபால் ஆப் பெர்லின், பகத்சிங், உலக யுத்தத்தில் - உடம்பில் குண்டைக் கட்டிக் கொண்டு கப்பலைத் தகர்ப்பானே, அது போன்ற படங்களைத்தான் பார்த்திருக்கிறேன். கூட்டத்தையே கலைத்தேன். என்னுடைய திட்டம் முழு வெற்றிப் பெற்றது. என்னுடைய வாழ்நாளில் எவ்வளவோ போராட்டம் செய்திருக்கிறேன். சொல்ல நேரமில்லை.

பெரியாருக்கு 3 ஆண்டு தண்டனை தரப்பட்டபோது, முதல் நாளே என்னைக் கைது செய்து விட்டார்கள். கைது செய்த என்னை அடுத்த நாள் நீதிமன்றம் கொண்டு வந்தார்கள். இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன் என்னை நிறுத்தி வைத்திருந்தார்கள். மாவட்ட நீதிமன்றத்தில் அய்யாவுக்கு 3 வருட தண்டனை கொடுத்து, மற்றொரு பக்கம் அய்யாவைக் கொண்டு போகிறார்கள். தண்டனை அறிவித்தவுடன் எனது சகாக்கள் கடும் அமளியில் இறங்கி விட்டார்கள்.

அய்யாவுக்குத் தண்டனை தந்த பிறகு என்னால் சும்மா இருக்க முடியுங்களா? சீனிவாசாச்சாரி என்ற வெறி பிடித்த அய்யங்கார் பார்ப்பனன்தான் அரசு வழக்கறிஞர். நமது இனத்துக்கு மிகப் பெரும் கேடு செய்தவன். அவனது கடந்த கால சரித்திரம் முழுமையும் நான் தெரிந்து கொண்டேன். அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். என்னி டம் கழக முக்கியஸ்தர்கள் எல்லாம் வந்து, நீங்கள் தயவுசெய்து பொறுமையாக இருங்கள் என்று மன்றாடி கேட்டுக் கொண்டார்கள். ஜனவரி 26 ஆம் தேதி அய்யாவை விட்டு விடுவார்கள் என்றார்கள். அது வரை பொறுமையாகக் காத்திருந்தேன். ஜன.26 மாலை ஓரு முடிவுக்கு வந்தேன்.

என்னுடைய அருமையான தோழர் சின்னச்சாமி. ஒரு பெரிய திட்டத்துக்கு தயாராகி நின்ற எங்களிடம் இருந்த பணம் எவ்வளவு தெரியுமா? நான்கு அணா. வெறும் நான்கு அணாதான்! ரேடியோ செய்தி கேட்டேன். பெரியார் விடுதலைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. குடியரசு நாள் நிகழ்ச்சியில், அரசு வழக்கறிஞர் கலந்து கெள்கிறார் என்ற சேதி கிடைத்தது. என்னுடைய நண்பன் சின்னச்சாமியிடம் கூறினேன். நான் முடிவு செய்து விட்டேன்; நீ போய்விடு என்று கூறினேன். பெரியார் வாழ்க என்று கூறி இருவரும் கை குலுக்கினோம். என்னுடைய நண்பன் சின்னச்சாமி பற்றி சொல்ல வேண்டும். அற்புதமான நண்பன். பீடி சுற்றித்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். ஒரு நாள் பீடி சுற்றினால் 75 காசு கிடைக்கும்.

அதை வைத்துத்தான் குடும்பம் நடத்த வேண்டிய நிலை. நான் அழைக்கும்போது, பீடி சுற்றுவதை அப்படியே நிறுத்திவிட்டு என்னோடு வந்துவிடுவான். என்னால் மறக்கவே முடியாத காட்சிகள் அவை. அந்த நண்பன் சின்னச்சாமி, இப்போது காச நோய்க்கு உள்ளாகி மருந்து வாங்குவதற்குக்கூட காசு இல்லாமல் இருக்கிறான். அப்போது, சின்னச்சாமி, என்னைத் தனியே விட்டுப் போக மறுத்துவிட்டான். நானும் சேர்ந்து கொள்கிறேன் என்றான். “வேண்டாம் சின்னச்சாமி, தயவு செய்து நீ போய்விடு. என்னுடைய தாயை மறந்துவிட்டு நான் இந்த இடத்தில் நிற்கிறேன்; எனக்கு அய்யா தான் முக்கியம்” என்று சொன்னேன்.

சீனிவாசாச்சாரி குடியரசு நாள் விழாவில் பங்கேற்றுவிட்டு வந்தான். போலீசுக்கு எதிரேயே போய் கழுத்தைப் பிடித்து சுழற்றி முகத்தில் ‘ராஸ்கல்’ என்று கூறி ‘ஆசிட்’ வீசினேன். அவன் கீழே விழும்போது 8 மணி சங்கு ஊதியது. தோளிலும், முகத்திலும் குத்தினேன். 300 பேர் விரட்டி வந்தனர். முடியுமா? என்னிடம் யாரும் நெருங்க முடியவில்லை. அதற்குப் பிறகு காவல்நிலையத்தில் - என்னை அழைத்துப் போய் விசாரித்தார்கள்.

இன்ஸ்பெக்டர் என்னை மிகவும் மதித்து சமமாக உட்கார வைத்து தோளில் கைபோட்டுப் பேசினார். அப்போது என்னிடம் கேட்டார். “எவ்வளவோ பெரியார் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இல்லாத கவலை உனக்கு மட்டும் ஏன்? நீ மட்டும் ஏன் இத்தகைய தீவிரவாத செயல் களில் ஈடுபடுகிறாய்?” என்று கேட்டார், நான் சொன்னேன்.

“நீங்கள் சேர்வை சமூகத்தைச் சார்ந்தவர்; நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன்; என்னை சமமாக உட்கார வைத்து, நீங்கள் எனது தோளில் கை போட்டுப் பேசுகிறீர்கள். 25 ஆண்டுகளுக்கு முன், எனது சமூகம் தீண்டப்படாத சமூகம்; இன்று எனக்கு இந்த சம உரிமையைப் பெற்றுத் தந்தது பெரியார். அந்த உணர்வுதான் என்னை இயக்குகிறது. ஏதோ ஒரு நாள் - இதே திருச்சியில் பெரியாரின் இறுதி ஊர்வலம் போகும்.

அப்போது எல்லோரும் கண்ணீர் விட்டு அழுவார்கள்; அப்போது நான் மட்டும் அழமாட்டேன். காரணம், பெரியாரை தண்டித்தவர்களுக்கு எல்லாம், சரியான பாடம் புகட்டி விட்டேன் என்ற மனநிறைவில் நான் மகிழ்ந்து நிற்பேன்” என்று கூறி விட்டு, நான் குலுங்கி குலுங்கி அழுதேன். எனக்கு முன்னாள் புகைப்பிடித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், சிகரெட்டை தூக்கி வீசி விட்டு அவரும் கண்ணீர் விட்டார்.

சுருக்கமாகச் சொல்கிறேன். உங்களிடம் கழகத்தின் பணம் இருக்கிறதா? அய்யா தேடித் தந்த பணம் உங்களிடம் இருக்கிறதா? சொல்லுங்க. உங்களிடம் எதுவும் இல்லை; நீங்கள் உணர்வுகளை வைச்சிருக்கீங்க; பணம் இருந்து என்ன பயன்? செயல் தான் முக்கியம். அப்படி செயல்படுகிற கூட்டம் தான் நீங்கள். இங்கே திரண்டிருக்கிறீர்கள். பணம் யாரிடமோ இருக்கிறது; ஆனால் கொள்கை உங்களிடம் தான் இருக்கிறது. (கைதட்டல்) நிறைய பேச வேண்டியிருக்கு; என்னால் இதற்கு மேல் பேச முடியவில்லை; மன்னிக்கவும்.

திருவாரூர் தங்கராசு

சட்ட எரிப்புப் போராளிகளுக்கு விருது வழங்கி மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசு பேசினார். அவர் தனது உரையில்:

சட்டத்தை எரித்த தோழர்களை எல்லாம் தேடிப் பிடித்து, அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து, இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

1946 இல் இந்தியாவில் டொமினியன் அந்தஸ்துள்ள இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்பட்டது. அப்போது பிரதமர் நேரு, பாகிஸ்தானைச் சார்ந்த லியாகத் அலிகான், நிதியமைச்சர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் 1947 இல் கூடிய அரசியல் நிர்ணயசபை சட்டத்தை வகுத்தது. டி.டி. கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி, கோபால்சாமி அய்யங்கார், கே.எம். முன்ஷி ஆகிய பார்ப்பனர்களும், அசாம் மாநிலத்தைச் சார்ந்த முகம்மது சாதுல்லா என்ற முஸ்லீமும், அரசியல் சட்டத்தை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கர். பிறகு அம்பேத்கர் அமைச்சரவையிலிருந்து வெளியே வந்து - பார்ப்பனர்கள் தன்னை ஏமாற்றி விட்டனர் என்று கூறினார். நானே அரசியல் சட்டத்தை எரிப்பேன் என்றார். அதைத்தான் நமது தோழர்களும் செய்தார்கள். நமது தோழர்கள் எந்த சலுகையையும் எதிர்பார்த்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. சிறையேகவில்லை.

ஆனாலும் வயதே ஏறாதவர்கள் எல்லாம் காங்கிரஸ் தியாகிகள் என்ற பெயரிலே மான்யம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி கடைசியாக நடத்திய போராட்டமே 1942 இல் நடத்திய ஆகஸ்டு கிளர்ச்சிதான். ஆனால் வயதுக்கும் வரலாறுக்கும் சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் மான்யம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் - எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்தபோது பெரியார் பொன்மொழிகளைத் தொகுத்து புரட்சி மொழிகள் என்ற நூலை வெளியிட்டார். பெரியாரின் - 144 வண்ணப் படங்கள் தொகுக்கப்பட்டு அச்சிடப்பட்டது. அப்போதுதான் சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறைச் சென்ற தோழர்களுக்கும் எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

அவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டத்தை எரித்தவர்களுக்கு அரசு மான்யம் தர முடியாது என்று அதிகாரிகள் கூறினார்கள். அரசு மான்யத்தை இப்போது வாங்கிக் கொண்டு, பிறகு திருப்பித் தரவேண்டும் என்ற நிலை வந்து விட்டால் என்னவாகும் என்று, பலர் அரசு மான்யம் வழங்க தயங்கினர். ஒரு பிரிவினர் பெரியார் உருவம் பொறித்த கேடயம் வழங்கினால் போதும் என்றனர். அவர்களுக்கு கடற்கரையில் நடந்த விழாவில் கேடயம் வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினர் நிதி உதவி பெற்றனர். இந்த நிதி வி திரும்பப் பெற முடியாத - முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து முதல்வர் எம்.ஜி.ஆர். வழங்கினார்.

சட்ட எரிப்புப் போராட்டம் நடந்தபோது காமராசர் முதல்வராக இருந்தாலும், காவல்துறை அமைச்சராக இருந்தவர் பக்தவத்சலம். சட்ட எரிப்புப் போராளிகளால் திருச்சி சிறை நிரம்பி வழிந்தது. சிறைக்குள்ளே மோசமான கழிப்பிடம்; மோசமான உணவு; குடிக்கத் தண்ணீர்கூட மோசம். அதனால், பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்த பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி இருவரும் சிறைக்குள்ளே மாண்டார்கள். இறந்தவர்களின் பிணத்தை சட்டப்படி உறவினர்களுக்குத் தரவேண்டும். அதைக் கூடச் செய்யாமல், சிறைக்குள்ளே குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள். அப்போதுதான் மரியாதைக்குரிய மணியம்மையார் வீராங்கனையாக எழுந்தார்.

திருச்சி நகரமே கொந்தளித்தது. சட்ட எரிப்புக் கிளர்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை. அதற்கு முன்பு தான் - பார்ப்பன உணவு விடுதி மறியல், வடநாட்டு சுரண்டல் மறியலில் ஈடுபட்டு, இரண்டு மாதம் சிறையிலிருந்து, வெளியே வந்திருந்தேன். பெரியாரும், சட்ட எரிப்புக் கிளர்ச்சியில் சிறைச் செல்லவில்லை. தமிழ்நாடு முழுதும் சிறையில் தோழர்கள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மணியம்மையாரின் தம்பி தியாகராசனிடம் வேனைக் கொடுத்து, என் வீட்டுக்கு அனுப்பி, பெரியார் அழைத்து வரச் சொன்னார்.

“வெளியே வேலை நிறைய இருக்கு; போராட்டத்துக்குப் போவது மட்டும் தான் வேலை என்று இல்லை; சிறைக்குச் சென்று, தோழர்களைப் பார்த்து வருவோம் என்று பெரியார் அழைத்தார். முதலில் வேலூர் சிறைக்குச் சென்றபோது, அங்கே பாட்சா, மரியாதைக்குரிய பெரியவர் ஆனைமுத்து, பராசக்தி படத்துக்கு திரைக்கதை எழுதிய பாவலர் பாலசுந்தரத்தின் மனைவி பட்டுப்பாவலர் ஆகியோர் கடுமையான சிறைத் தண்டனைக்கு உள்ளாகி இருந்தனர்.

பிறகு திருப்பத்தூர், சேலம் என்று ஒவ்வொரு சிறையாகப் பார்த்து வந்த போது, பெரியாருக்கு கரூர் பசுபதிபாளையம் கூட்டத்தில் பேசிய பேச்சுக்காக மூன்று மாத கடுங்காவல் தண்டனையை சிவசுப்பிரமணிய நாடார் என்ற செஷன்ஸ் நீதிபதி வழங்கியிருந்தார். அதுபற்றித் தான் திருச்சி தியாகு இங்கே பேசினார். அதிலே கடுமையாக நடந்து கொண்டதை விளக்கினார். தியாகுவின் வீரம் பகத்சிங் வீரத்துக்கு சமமானது. பகத்சிங் வரலாற்றில் இடம் பிடித்து விட்டான். ஆனால், தியாகுவை எப்படியோ தேடிப் பிடித்து, இங்கே கொண்டு வந்து விட்டார்கள், நமது பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள். பெரியார், கைது செய்யப்பட்ட நிலையில், நான் சென்னைக்குத் திரும்பி விட்டேன்.

மணல்மேடு வெள்ளைச்சாமியும், பட்டுக்கோட்டை இராமசாமியும், சிறைக்குள்ளே புதைக்கப்பட்டதை மணியம்மையார் எதிர்த்தார். நாகம்மையாரை நாம் பார்த்தது இல்லை. ஆனால் மணியம்மையார் அவ்வளவு ஆவேசமாக எழுந்து, அரசே ஆட்டிப் படைக்கிற அளவுக்கு, திருச்சியிலிருந்து தொலைபேசி வழியாக செய்திகளை அனுப்பினார். அதற்குப் பிறகு தான் சிறையிலே புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டி எடுத்து, கழுவி குளிப்பாட்டி ஒப்படைத்தனர்.

திருச்சியிலே அன்று நடந்த புரட்சிகர ஊர்வலத்தைப் போல், அப்படி ஒரு ஊர்வலம் நடைபெற்றதே இல்லை. மணியம்மையார் தான் ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கினார். அந்த ஊர்வலத்திலே வந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன். கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டன. வீதிகளில் மக்கள் கையெடுத்து வணங்கினார்கள்.

அவையெல்லாம் வரலாறு. வேலூரிலே பெரியார் மறைந்தபோது, அவரது உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டபோது, வழி நெடுக மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அப்போதுகூட - இன்று தமிழர் தலைவர் என்று கூறிக் கொண்டு, கட்சி நடத்திக் கொண்டிருப்பவர், என்னை வேனில் ஏற்ற மறுத்துவிட்டார். அதன் பிறகு, முதல்வர் கலைஞர், அமைச்சர் மன்னைக்கு தகவல் அனுப்பி அன்று அமைச்சராக இருந்த மன்னை நாராயணசாமி அவரது காரை எங்களுக்குத் தந்தார்.

நானும், டி.எம்.சண்முகமும், அந்தக் காரில் சென்னைக்கு வந்தோம். இல்லாவிட்டால் நாங்கள் சென்னை வந்து சேர்ந்திருக்க முடியாது. அய்யாவோடு நெருங்கிப் பழகிய நெ.து. சுந்தரவடிவேலு, டார்பிடோ ஏ.பி. ஜனார்த்தனம் ஆகியோர் சேர்ந்து தொகுத்த, பெரியார் வண்ணப்படத் தொகுப்பு நூல் வெளியிடப்படாமலே போய்விட்டது. அதை வெளியிடுவது பற்றி பெரியார் திராவிடர் கழகம் பரிசீலிக்க வேண்டும் என்றார்.

Pin It