கேள்வி : அரசமைப்புச் சட்ட எரிப்பின் போது பெரியார் எரிக்கவில்லை என்று படித்துள்ளேன். அவர் உண்மையில் அந்தப் போராட்டத்தில் பங்கெடு த்தாரா? அவர் எந்தெந்தப் பிரிவுகளை எரித்தார்?
பதில் : அரசியலமைப்புச் சட்டத்தில் மத உரிமைகள் பற்றியுள்ள 25.26ஆவது பிரிவை பெரியார் எரித்தார். பிரிவு 372. இது அரசியல் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த சட்டங்கள் எல்லாம் செல்லும் என்று கூறுகிறது. நாடாளுமன்றத்தால், சட்டமன்றத்தால், இயற்றப்படுவது சட்டம். அதுமட்டுமில்லாமல் பழக்க வழக்கங்களுக்கும் சட்ட வலிமை உண்டு என்று கூறும் 13ஆவது பிரிவு.
சேதுபதி மன்னரின் மனைவி, முத்துராமலிங்கம் என்பவரைத் தத்தெடுக்கிறார். ஒரு பெண் கணவனை இழந்த பின் தத்தெடுக்க முடியாது என்பதால் ஆங்கிலேய அரசாங்கம் அதற்கு ஒத்துக்கொள்ள மறுத்தது. ஆங்கிலேயர்கள் ‘லேப்ஸ்’ கொள்கையை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். அது மன்னர்களுக்கு வாரிசு இல்லையென்றால் அதன் சொத்துக்கள் ஆங்கிலேயருக்கு சேர்ந்துவிடும் என்று அந்த சட்டம் வலியுறுத்துகிறது. இதுவும் சிப்பாய் கலகம் உருவாகக் காரணமாக அமைந்தது. அதே போல சேதுபதி மன்னரின் மனைவி தத்தெடுத்தது செல்லாது என்று அவர்களது பங்காளிகளும் வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கு லண்டனில் பிரிவி கவுன்சில் வரைக்கும் சென்றது.
நம் தரப்பில் இருந்து வாதிடும் போது, நாங்கள் ”திரவிடியன் ஸ்கூல் ஆஃப் இந்து லா” வைத்தான் பின்பற்றுகிறோம். இங்கு திராவிடர்களான பெண்களுக்கும், விதவைகளுக்கும் தத்தெடுக்கும் உரிமை உண்டு என்று வாதிட்டனர். ஆனால் இந்து சட்டத்தில் பெண்களை தத்தெடுக்க முடியாது. பெண்களுக்கும் தத்தெடுக்கும் உரிமைக் கிடையாது. அப்போது திரவிடியன் ஸ்கூல் ஆஃப் இந்து லா பெண்களுக்கு தத்தெடுக்கும் உரிமை உண்டு என்று கூறுகிறது. ஆனால் பழக்கவழக்கங்கள் என்பது எழுதப்பட்ட சட்டங்களை விட வலுவானது என்று பிரிவி கவுன்சில் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.
1929இல் ஆதி திராவிடர் மாநாடு நேப்பியர் பூங்காவில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் பெரியார் பேசினார். அந்த உரையில், இதுவரைக்கும் உங்களை கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றினார்கள், வேதம், புராணம், இதிகாசம் என்றெல்லாம் உங்களை ஏமாற்றினார்கள். புதிதாக இப்போது பழக்க வழக்கம் என்ற ஒன்றையும் சொல்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பெரியார் பேசினார்.
1931இல் காங்கிரஸ் கட்சி ”மாதிரி சட்டத்தை” உருவாக்கியது. அதில் பழக்க வழக்கங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. உடனே விருதுநகர் மாநாட்டில் பெரியார், கராச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பழக்கவழக்கம் – மத நடுநிலைமை மற்றும் சிறுபான்மை யினரின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது உள்ளிட்ட மூன்று தீர்மானங்க ளையும் கடுமையாக எதிர்த்துப் பேசினார்.
அப்போது பெரியார் மத நடுநிலைமை கூடாது; மதச் சார்பின்மை தான் வேண்டும் என்றார். பழக்க வழக்கங்களை நீக்குங்கள் என்றார். பார்ப்பனர்கள் தங்கள் கலாச்சாரத்தை, மொழியைப் பாதுகாப்பதற்காக எழுதப்பட்ட சட்டம் என்று காங்கிரஸ் மாதிரி சட்டத்தை எதிர்த்து 1931 ஆகஸ்டில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார். மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு விடுமுறை அளிக்கக் கூடாது என்றும் அப்போது தான் தீர்மானம் போட்டார் பெரியார்.
பி.வி.கானே என்பவர் இந்து சட்டங்களை முழுமையாக தொகுத்து 5 தொகுதிகளாக வெளியிட்டார். அதில் உள்ளவற்றை ஆதாரமாகக் காட்டித்தான் இப்போதும் அர்ச்சகர் நியமனங்களில் நமக்கான உரிமைகளை மறுக்கப்பட்டுவருகிறது. பிரிவு 25,26. மத உரிமை என்ற பெயரால் நமக்கு அர்ச்சகராகும் உரிமையை மறுக்கிறார்கள். பிரிவு 368, சட்டத் திருத்தங்களை செய்ய வழிவகை செய்கிறது. இது தென்னிந்தியர்களுக்கு ஆபத்தானது என்று கூறி அந்தச் சட்ட்ப்பிரிவுகளையும் பெரியார் எரித்தார்.
1957, நவம்பர் 3ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்ற ஸ்பெஷல் (சிறப்பு) மாநாட்டில் இந்த சட்டப்பிரிவுகளை திருத்த வேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டது. திருத்தவில்லை என்றால் அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நவம்பர் 26 அன்று அந்தப் பிரிவுகளை எரிப்பேன் என்று அறிவித்தார். அதுதான் சட்ட எரிப்புப் போராட்டம்.
குத்து வெட்டுக் கொலை வழக்கு என்ற ஒரு வழக்கை பெரியார் மீது போடுகிறார்கள். பெரியார் கூட்டங்களில் பங்கெடுத்துப் பேசும் போது நிலைமை இப்படியே இருக்கும் என்றால் ஒருநாள் தேதி குறித்து சொல்கிறேன். தீப்பந்தத்தையும், பெட்ரோல் கேனை கையில் வைத்துக் கொள்ளுங்கள். நான் சொல்லும் போது அக்கிரகாரத்தின் மீது நெருப்பு வையுங்கள். தப்பித்து வருகிறவர்களை கத்தியில் குத்துங்கள் என்றார்.
அந்த வழக்கின் போது நீதிமன்றத்தில் ஆஜரான பெரியார் ஆம் நான் சொன்னேன், இப்படிப் பட்டப் போராட்டங்களால் பலனில்லை என்றால் இதைத்தான் செய்யப் போகிறோம். ஆனால் தற்போது இல்லை என்று கூறினார். அந்த வழக்கில் தான் டிசம்பர் 25ஆம் தேதி அதாவது சட்ட எரிப்புப் போராட்டத்துக்கு முதல்நாள் பெரியார் கைது செய்யப்பட்டார். அதுவும் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரயில் மூலம் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் போது பெரியார் கைது செய்யப்பட்டார். அதனால் பெரியார் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
(டிசம்பர் 01,2024 அன்று நங்கவள்ளி பெரியாரியல் பயிலரங்கத்தில் தோழர் எழுப்பியக் கேள்விக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பதில்)