28.11.2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த விவாதம் குறித்த சுருக்கமான குறிப்புகள்:

சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து அறநிலையத் துறை 2009 ஆம் ஆண்டில் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தோற்ற தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, சுப்பிரமணிய சாமி இந்த வழக்கில் இணைத்துள்ளார். கோயிலை அறநிலையத் துறை மேற்கொண்டதற்கு ஆதரவாக ஆறுமுகசாமி (சிவனடியார்), வி.எம். சவுந்தரபாண்டியன் (சிதம்பரம்) ஆகியோர் வழியாக மனித உரிமை பாதுகாப்பு மையமும் சத்தியவேல் முருகனாரும் இவ்வழக்கில் தலையிட்டுள்ளனர். இவ்வழக்கு சௌகான், பாப்டே ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு நவம்பர் 28 அன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்களான தீட்சிதர்கள் சார்பில் யாரும் வாதிடவில்லை. மாறாக, சுப்பிரமணிய சாமி வாதத்தை துவக்கி வைத்தார். சுப்பிரமணிய சாமியுடைய வாதங்களின் சுருக்கம்:

“பிராமணர்கள்” எனப்படுவோர் பிறப்பினால் தோன்றுபவர்களல்ல. குணம் தான் ஒருவர் “பிராமணரா” என்பதைத் தீர்மானிக்கிறது என்று கீதை கூறுகிறது. அதனால்தான் பிறப்பால் “பிராமணர்” அல்லாத விசுவாமித்திரர் உள்ளிட்டோர் “பிராமணர்”களாக அங்கீகரிக்கப்பட்டனர். தில்லை தீட்சிதர்கள் சிவன் வழி வந்த “பிராமணர்கள்”. அவர்கள் கன்னட-துளு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இந்து அறநிலையத் துறை சட்டத்தின் பிரிவு 45 குறிப்பிட்ட “தனிப் பிரிவு”களைச் சேராதவர்களின் கோயில்களுக்கு (nடிn னநnடிஅiயேவiடியேட வநஅயீடநள) மட்டுமே பெருந்தும் பிரிவு 107  (னநnடிஅiயேவiடியேட) குறிப்பிட்ட தனிப் பிரிவினருக்கான கோயில்கள் அறநிலையத் துறை தலையிடுவதைத் தடை செய்கிறது.

அத்தகைய ‘தனிப் பிரிவு’ (னநnடிஅiயேவiடிn) குறித்து அரசியல் சட்டம் விளக்கவில்லை. அதற்கான விளக்கம் உச்சநீதிமன்ற தீர்ப்புகளில்தான் உள்ளது. தீட்சிதர்களைப் பொறுத்தவரை அவர்கள் 3000 பேர். அந்த 3000 பேரில் ஒருவர்தான் தில்லை நடராசன். இவர்கள் அனைவரும் “கைலாசத்”திலிருந்து வந்தவர்கள் என்பது நம்பிக்கை. இது தீட்சிதர்களின் நம்பிக்கை மட்டுமல்ல, பக்தர்களின் மத நம்பிக்கையும் அதுவே.

தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிடக் கட்சிகள், குறிப்பாக நாத்திகவாதிகளான கருணாநிதி போன்றோரும் பிற திராவிட இயக்கத்தினரும் கோயிலை பீரங்கி வைத்து பிளக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தவர்கள். 1989, 2006, 2008 ஆகிய ஆண்டுகளில் இத்தகைய “பிராமண” எதிர்ப்பு நாத்திக பிரச்சாரத்தை கருணாநிதி செய்திருக்கிறார். இதன் காரணமாகத்தான் இந்த வழக்கில் தலையிடுவது என்ற முடிவு செய்து உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். அப்போதுதான் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்னை அங்கே தாக்கினார்கள். ஆனால், தற்போதைய மாநில அரசு அப்படியல்ல. இதனை நட்புரீதியான அரசாகவே நான் பார்க்கிறேன்.

“தி.மு.க. அரசு தீட்சிதர்களுடன் அறநிலையத் துறையும் இணைந்த கூட்டு நிர்வாகம் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், நிர்வாக அதிகாரி நேரடியாக கோயிலை கையகப்படுத்தியுள்ளார். ஆகையினால், தீட்சிதர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. எனவே, இந்த அரசாணையே ரத்து செய்யப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, “தமிழக அரசின் வழக்கறிஞர் பேசிய பின்னர், நான் மீண்டும் பேசுகிறேன்” என்று கூறி சுப்பிரமணிய சுவாமி அமர்ந்தார்.

தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர்களோ தலைமை வழக்குரைஞரோ இந்து அறநிலையத் துறையின் உயர் அதிகாரிகளோ சட்ட அதிகாரிகளோ யாரும் நீதிமன்றத்திற்கு வரவில்லை. தமிழக அரசின் சார்பில் யோகேஷ் கன்னா என்ற ஒரு இளம் (கீழ்நிலை) வழக்குரைஞர் மட்டுமே வந்திருந்தார். அவர் எதுவும் பேசவில்லை.

இந்நிலையில், ஆறுமுக சாமியின் (சிவனடியார்) வழக்குரைஞரான கோவிலன் பூங்குன்றன் தனது தரப்பை முன் வைக்கத் தொடங்கினார். “இந்தக் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல, இது இந்துக்கள் அனைவருக்கும் சொந்தமான பொதுக் கோயில்” என்று 1890-லேயே நீதிபதிகள் முத்துசாமி அய்யர், ஷெஃப்பர்ட் ஆகிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பை அவர் சுட்டிக் காட்டினார். “இத்தகைய ஒரு பொதுக் கோயிலின் நிதி நிர்வாகத்தில் பல முறைகேடுகளும் நிதிக் கையாடல்களும் நடைபெற்ற காரணத்தினால்தான் இதில் அரசு தலையிட வேண்டி வந்தது என்று அதற்கான விவரங்களை அவர் கூற முற்படும்போதே இடைமறித்த நீதிபதிகள், இதற்கு முன்பு வந்த தீர்ப்பு பற்றி பதில் சொல்லுங்கள்” என்று கேட்டனர். “அதனைப் பின்னர்விளக்குகிறேன். தற்போது, இதை எடுப்பதற்கான காரணங்களை விளக்குகிறேன்” என்று தீட்சிதர்களின் நிதிக் கையாடல்கள், நகைக் களவுகள் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

உடனே நீதிபதி பாப்டே, “நீங்கள் யாருடைய வழக்குரைஞர்” என்று கேட்டார். “நான் ஆறுமுகசாமி என்ற சிவனடியாரின் வழக்குரைஞர், தமிழில் தேவாரம் பாட தீட்சிதர்கள் மறுத்தபோது அந்த உரிமைக்குப் போராடி வெற்றி பெற்றவர் என்னுடைய கட்சிக்காரர்” என்று கூறி, தன்னுடைய வாதத்தைத் தொடர்ந்தார். மீண்டும், குறுக்கிட்ட நீதிபதி பாப்டே, “நிதிக் கையாடல் பற்றி பேசுகிறீர்களே, பூரி ஜெகன்னாதர் கோயிலுக்கு போயிருக்கிறீர்களா, அங்கே மடியிலிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டுதான் சாமியை பார்க்க விடுவான்” என்று சொல்லி கிண்டலாக சிரித்தார். அடுத்து, நீதிபதி சௌகான் (இரண்டு நீதிபதிகளில் இவர்தான் சீனியர்), “மீண்டும் மீண்டும் நிதிக் கையாடல் பற்றி பேசுகிறீர்கள், உங்களுக்குத் தனிப்பட்ட சொத்துத் தகராறு ஏதும் இருக்கிறதா? அந்தக் கோயில் சொத்தை அபகரிக்க நினைக்கிறீர்களா?” என்று குதர்க்கமாகவும் ஆத்திரமூட்டும் வகையிலும் கேள்வி கேட்டு அவரை பேச விடாமல் தடுத்து விட்டார். இதற்குப் பிறகு தமிழக அ ரசின் வழக்குரைஞரான யோகேஷ் கன்னா பேசத் தொடங்கினார்., உயர்நீதிமன்ற தீர்ப்பிலிருந்து சில பகுதிகளைப் படித்துக் காட்டி நிர்வாக முறைகேடுதான் கோயிலை எடுப்பதற்குக் காரணம் என்றும் தீட்சிதர்கள் ஒரு தனியான பிரிவினரா என்பது பற்றி தனக்குத் தெரிவில்லை என்றும் அவர் கூறினார். உடனே, அரசு வழக்குரைஞரிடம் வழக்கை ஒழுங்காகப் படித்துவிட்டு வருமாறு நீதிபதிகள் கூறிவிட்டு உணவுக்காக ஒத்தி வைத்தனர். உணவு இடைவேளைக்குப் பின் வழக்கில் இணைத்துக் கொண்ட மூத்த வழக்குரைஞர் துருவ் மேத்தா கோயிலை அறநிலையத் துறை கையகப்படுத்தியதை ஆதரித்து வாதிடத் தொடங்கினார். அவர் முன் வைத்த வாதம்:

“தாங்கள் ‘தனிப் பிரிவினர்’ என்பதை தீட்சிதர்கள்தான் நிலைநாட்ட வேண்டும். அவ்வாறு அதுவரை அவர்கள் எங்கேயும் நிறுவியதில்லை. கோயிலை தாங்கள் கட்டவில்லை என்றும், மன்னர்கள்தான் கட்டினார்கள் என்றும் தமது மனுவிலேயே தீட்சிதர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இந்தக் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமான கோயில் அல்ல. இவர்கள் தனிப் பிரிவாகக் கருத முடியாது. எனவே, கோயிலை நிர்வாகம் செய்ய இவர்களை அனுமதிக்க முடியாது.

“தங்களை பரம்பரை அறங்காவலர்கள் என்றும் தீட்சிதர்கள் கூறிக் கொள்கிறார்கள். அவ்வாறு பரம்பரை அறங்காவலர்களாக இருப்பவர்கள் நிர்வாக முறைகேட்டில் ஈடுபட்டால் அதில் தலையிடுவதற்கு அரசுக்கு உரிமை உண்டு என்பது ஏற்கனவே சட்ட ரீதியாக நிறுவப்பட்டதாகும் என்று கூறினார்.

இப்போது நீதிபதி சௌகான் குறிக்கிட்டார். “சுப்பிரமணிய சாமியின் வாதங்களில் நாங்கள் முற்று முழுதாக திருப்தி அடைந்திருக்கிறோம். மற்றவை பற்றி பேச வேண்டாம். முந்தைய தீர்ப்புக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்” என்று துருவ மேத்தாவிடம் நீதிபதி சௌகான் கூறினார்.

துருவ் மேத்தா பேசத் தொடங்குவதற்கு முன்னரே வேகமாக குறுக்கிட்ட சுப்பிரமணியசாமி, “இந்தக் கேள்விக்கு துருவ் மேத்தா பதில் சொல்லக் கூடாது, அரசாங்கத்தின் வழக்குரைஞர்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

உடனே, நீதிபதி அரசு வழக்கறிஞரை பதில் சொல்லப் பணித்தார்.

எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் நிர்வாக அதிகாரியின் அதிகாரங்கள், அவர் கோயிலில் என்ன செய்கிறார் என்பது பற்றி அவர் ஏதேதோ படித்துக் காட்டத் தொடங்கினார். அவர் படித்த வரிகளில், வங்கிக் கணக்கை கையாள்வது, கால்நடைகளை கையாள்வது போன்றவை தொடர்பானவை இடம் பெற்றன.

உடனே, நீதிபதி சௌகான், “நீங்கள் என்ன எல்லா வல்லமையும் கொண்ட அரசா, எல்லாவற்றையும் நீங்கள் எடுத்துக் கொண்டால், தீட்சிதர்கள் எப்படி வாழ்க்கை நடத்துவார்கள், நீங்கள் சம்பளம் கொடுக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். “கோயில் நிர்வாகத்தையே தீட்சிதர்களிடமிருந்து இன்னமும் நாங்கள் எடுக்க முடியவில்லை. அப்புறம் எப்படி ஊதியம் தருவது?” என்று பதிலளித்தார் அரசின் வழக்குரைஞர்.

மறுபடியும், நீதிபதி குறுக்கிட்டார். “கோயிலுக்கு உள்ளே நிர்வாக அதிகாரியின் அலுவலகம் வைத்திருக்கிறீர்களாமே. கோயிலுக்குள் உங்களுக்கு என்ன வேலை. முதலில் கோயிலைவிட்டு வெளியில் வாருங்கள்” என்று கூறிவிட்டு, “நான் சீக்கிரமே ஓய்வு பெறப் போகிறேன். ஏதாவதுசெய்துவிட்டு ஓய்வு பெற விரும்புகிறேன்” என்று கூறினார் நீதிபதி சௌகான்.

இத்துடன், வாதங்கள் முடிவுற்றன. வழக்கின் அடுத்த விசாரணை முடிந்தபின் எதிர்தரப்பான தமிழக அரசின் வழக்குரைஞருடைய தோளில் கைபோட்டபடியே, சுப்பிரமணிய சாமி வெளியில் வந்தார். “உங்கள் தமிழக அரசு எனக்கு நட்பான அரசுதான். கருணாநிதி ஆட்சி என்பதால்தான் நான் இந்த வழக்கில் தலையிட்டேன். நீங்கள் கருணாநிதி போட்ட அரசாணையை வாபஸ் வாங்குவதுதான் நல்லது என்று ஆலோசனை கூறுங்கள்” என்று யோகேஷ்கன்னாவிடம் பேசியபடியே நடந்து சென்றார் சுப்பிரமணியசாமி.

நன்றி : ‘வினவு’ இணையதளம்

Pin It