கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்கள் இங்கு பதிவிடப்படுகின்றன.
முதலில் - திடீர் தமிழ் கம்பெனிகளின் எதிர்ப்பை நாம் கண்டு கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் இவர்கள் எப்போதும் நம்மை எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் நாம் எது செய்தாலும் எதிர்ப்பவர்கள், அதனால் அவர்களின் எதிர்ப்பு குறித்து நமக்கு ஒரு போதும் கவலை இல்லை.
இரண்டாவதாக - நம் தோழமை சக்திகளின் விமர்சனங்கள்.அவற்றிற்கு நாம் கட்டாயம் பதில் சொல்லவேண்டிய கடமை இருக்கிறது. ஏனென்றால் தேர்தல் ஆதாயம் கருதியோ, பலாபலன் கருதியோ நாம் இந்த பெரியாரிய பணியில் இல்லை என்பது போலவே இயங்கும் தோழமை அமைப்பு தோழர்களிடம் நாம் நம் நிலையை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. நாளை தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் நாம் இணைத்து பணியாற்றத்தான் போகிறோம் என்பதை இவ்விடம் சொல்லத் தேவையில்லை.
பெரியார் இயக்கங்கள் தேர்தல் ஆதரவு நிலைப்பாடு என்பது “யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் வந்துவிடக் கூடாது” என்பதை மய்யமாகக் கொண்டேதான், பெரியார் காலத்தில் இருந்தே மேற்கொண்டு வருகின்றன. இந்த அடிப்படையை உணர்ந்தால் பல கேள்விகளுக்கு இங்கு தேவையே வந்திருக்காது.
இப்போது இரண்டு நிலைகளில் நின்று நாம் இந்த தேர்தல் ஆதரவு முடிவுகளை செய்திருக்கிறோம்
1) கொள்கை நிலை. ((Ideology), 2) சூழலுக்கேற்ற திட்டமிடல். (Strategy)
1) கொள்கை நிலை : பெரியார் இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளோடு மிகவும் நெருக்கமாக இருக்கும், களத்தில் பணியாற்றும் கட்சிகளுக்கு ஆதரவு.
அந்த வகையில் தேர்தல் கட்சிகளாக இருந்தாலும் மதவாத எதிர்ப்பு, ஜாதிய, தீண்டாமை வன்கொடுமைகள், ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்டங் களில் எப்போதும் சமரசம் செய்து கொள்ளாமலும், தேர்தலில் மதவாத சக்திகளுடன் எப்போதும் கூட்டணி அமைத்துக் கொள்ளாமலும் இன்றுவரை களத்தில் நிற்கும் தேர்தல் கட்சிகளாக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்), விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு முதன்மையான ஆதரவை அளித்துள்ளோம்.
இந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்களேயானால் மதவெறி, ஜாதி வெறி சக்திகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் தங்கள் குரலை ஒலிக்கச்செய்வார்கள் என நம்புகிறோம். அதனால் வெற்றி, தோல்வி என்பதை கணக்கில் கொள்ளாமல் அவர்களுக்கு ஆதரவளித்துள்ளோம். இவர்களை ஆதரிக்கவும், அங்கீகரிக்கவுமான அவசியம் ஒரு பெரியார் இயக்கத்திற்கு இருக்கிறது என உறுதியாக நம்புகிறோம்.
2) சூழலுக்கேற்ற திட்டமிடல் : யார் இப்போது ஆட்சிக்கு வரவே கூடாது என்பதற்காக விமர்சன கண்ணோட்டத்தோடு யாருக்கு ஆதரவளிப்பது?
தற்போது ஆட்சியில் இருக்கும் பார்ப்பன ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசு, திராவிடர் இயக்க கொள்கைகளுக்கு நேர் எதிராகவும், மதவாத சக்திகளுக்கு ஆதரவு, ஜாதி வெறி சக்திகள் சர்வ சுதந்திரமாக செயல்பட அனுமதித்தல், ஆணவ படுகொலைகளை தடுக்கத் தவறுதல், இந்த சமூக அவலங்களுக்கு எதிராக போராடும் பெரியாரிய, முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான கடும் ஒடுக்குமுறையை ஏவிவிடும் இந்த அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் திராவிடர் விடுதலைக் கழகம் உறுதியாக இருக்கிறது.
இந்த ஆட்சி மீண்டும் வருவதை தடுக்கும் வகையில் இந்த ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த வெற்றி வாய்ப்புள்ள கட்சியின் வேட்பாளர்களை ஆதரிப்பது என்று போர்த் தந்திர அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது. பெரிய எதிரியை வீழ்த்த சிறிய எதிரியை ஆதரிக்கும் தந்திரோபாய அடிப்படையிலேயே (வி.சி., கம்யூனிஸ்ட், ம.ம.க. ஆகிய கட்சிகள் நிற்காத இடங்களில்) திமுக வேட்பாளர்களை ஆதரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஒட்டு மொத்த திமுக ஆதரவு நிலை அல்ல இது. சொல்லப்போனால் முதனமையான தோழமை கட்சிகளுக்கு ஆதரவு எனும் நிலை யில் திமுக தலைவர் கலைஞர் அவர்களுக்கு எதிராக களத்தில் நிற்கும் கம்னியூஸ்ட் கட்சி வேட்பாளைரையே கழகம் ஆதரிக்கிறது. திமுக கூட்டணி கட்சி யான காங்கிரஸையும் நாம் இப்பவும் எதிர்க்கிறோம். அவர்களுக்கு நம் ஆதரவு இல்லை.
கேள்வி : ஈழம் உள்ளிட்ட அனைத்து தமிழர் போராட்டங்களிலும் தோளோடு தோள் நிற்கும் மதிமுகவிற்கு நீங்கள் ஏன் ஆதரவளிக்கவில்லை?
மதிமுகவிற்கு இந்த தேர்தலில் மட்டுமல்ல இதற்கு முன்னும் தேர்தல்களில் கழகம் மதிமுகவிற்கு ஆதரவு அளிக்காமல் இருந்துள்ளது. அதற்கு மேலே சொல்லப்பட்ட காரணங்களே பதில். ஆனாலும் மதிமுகவின் தோழமையில் நமக்கு ஏதும் இன்னமும் எந்த பங்கமும் இல்லை. பாஜகவோடு கூட்டணி வைத்த போது நாம் மதிமுகவை ஆதரிக்கவில்லை.தேர்தலில் மதிமுகவை நாம் ஆதரிக்காத நிலையிலும் ஈழம் உள்ளிட்ட தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் நாங்கள் ஒன்றாகத்தான் களத்தில் நின்றோம். இனியும் அப்படித்தான் நிற்போம் அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நிலைகளுக்காக திரு.வைகோ அவர்கள் நம்மிடம் பகைமை பாராட்டியதும் இல்லை. அவர்கள் மீதிருந்த மதிப்போ மரியாதையோ சிறிதளவிலும் மாறிடவும் இல்லை.
ம.தி.மு.கவைப் போலவே – ஈழம், ஆந்திராவில் நடந்த செம்மரக் கொலை, தமிழ் நாட்டுரிமைகள், மரண தண்டனை எதிர்ப்பு போன்ற தமிழர் பிரச்சனைகளுக்கு பெரும் தொண்டர்கள் திரளோடு இயக்கமெடுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1980களில் இருந்து புலிகளுக்கு ஆதரவை அளித்தும், அடைக்கலம் கொடுத்தும், வழக்குகளைப் பற்றிய கவலையேதும் இன்றி பல உதவிகளையும், பெருந்தொகை செலவையும் செய்து வந்ததோடு, சகோதரர்களையும் அப்பணிகளில் ஈடுபடுத்தி வந்த தி.வேல்முருகன் தலைமையிலான கட்சிக்கும் கூட நாம் ஆதரவளிக்கவில்லை என்பதற்கும் மதிமுகவிற்கு அளித்த விளக்கமே பொருந்தும்.
தேர்தல் களம் அல்ல, பெரியார் தொண்டர்களின் களம். பெரியார் தொண்டர்களின் களம் சமுதாயம். சமுதாயப்பணி செய்வதே எம் முதன்மை பணி அதுவே முழுதான பணியும் கூட இன்னும் 2 வாரங்களில் நடந்து முடிந்துவிடக்கூடிய இந்த தேர்தல் திருவிழா நம் பணியின் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
நம் இலக்கு பெரியது, பயணமும் கடினமானது, பாதையும் கரடுமுரடானது என்பதை எமக்கு உணர்த்திச் சென்றுள்ள அறிவாசான் தந்தை பெரியாரின் அடியொற்றி கழகம் என்றென்றும் சமுதாய இழிவொழிப்புப் பணியில் தோழமை சக்திகளுடன் இணைந்து தொய்வின்றி பயணிக்கும் என்று உறுதி கூறுகிறோம்.
இறுதியாக : “ஒருவர் செயல் திட்டத்தையே அனைவரும் ஏற்கவேண்டும் என்பது சுதந்திரத்தையும், கருத்துரிமையையும், பன்மைத்துவத்தையும் மறுப்பதாகிவிடும். தங்கள் நிலைபாடுகளை மற்றவர்களுக்காக மாற்றிக் கொள்ளாமலேயே, உடன்பாடுள்ள பணிகளில் இணைந்து பணியாற்றுவோம். வேறுபாடுள்ள தளங்களில் தனித்து பணியாற்றுவோம்.”
கழகத்தின் முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன் முகநூல் பதிவிலிருந்து.