மாணவர் கழகக் கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை

பாசிசம் - நாசிசம் - ஜியோனிசம் - பார்ப்பனியம் இடையே உள்ள நெருக்கமான உறவுகள்

முசோலினியை நேரில் சந்தித்துப் பாராட்டினார் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் மூஞ்சே!

பொதுவுடைமைக் கொள்கைக்கு எதிராகவும் இனவெறிக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கவும் உருவான கருத்தாக்கங்களே பாசிசம்  - நாசிசம் - ஜியோனிசம் - பார்ப்பனியம் என்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விளக்கினார்.

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் 27.09.2020 அன்று மாலை 6 மணியளவில், பெரியார் 142ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம், “திராவிடம் தந்த கல்விக் கொடை, அதை சிதைக்க விடாது நம் பெரியார் படை” என்ற தலைப்பில் இணையவழியில் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  ஆற்றிய உரை.

‘பாசிசத்தை வீழ்த்த திராவிடத்தைப் பேணுவோம்’ என்ற முழக்கம் நிகழ்ச்சியின் அழைப்பிதழிலே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை (திராவிட) அழிப்பதற்கு வந்த கொள்கைகள் தான் தேசியக் கல்விக் கொள்கைகள். எனவே, “பாசிசத்தை வீழ்த்த திராவிடத்தைப் பேணுவோம்” என்ற தலைப்பின் கீழ் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதுகிறேன்.

பொதுவாக  ‘பாசிசம்’ (Fascism) என்கிற சொல்லாடல் பலராலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் நடை பெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சி பாசிச ஆட்சி என்று அனைவரும் பேசி வருகிறார்கள். பாசிசம் (Fascism), நாசிசம் (Nazism), ஜியோனிசம் (Zionism), பிராமினிசம் (Brahmanism) இந்த நான்கு இசங்கள் பற்றிய சுருக்கமான பார்வையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பாசிசம் என்ற கருத்தாக்கம் இத்தாலியில் ‘முசோலினி’ என்ற சர்வாதிகாரியால் உருவாக்கப்பட்டது. முதல் உலகப் போரின்போது  உருவான ஒரு சித்தாந்தம். சர்வாதிகார ஆட்சி, கம்யூனிச எதிர்ப்பு, அதிகார அடக்குமுறை ஆட்சி, மக்களுடைய கருத்து உரிமைகளை பறிக்கக் கூடிய ஒரு ஆட்சி. முதலாளிகளை வளர்த்துவிட்டு உழைக்கின்ற மக்களை அடிமைப்படுத்துவதற்காக அதிகாரத்தைத் திணித்து சர்வாதிகாரத்தை உருவாக்கி நாடாளு மன்றத்திற்கு பதிலாக பாசிஸ்டுகளைக் கொண்ட  நிர்வாக அமைப்புகளை உருவாக்கி ஜனநாயகத்தை முழுமையாகக் குலைப்பது என்பதுதான் முசோலினி உருவாக்கிய பாசிசம்.

முதல் உலகப்போரில் இது தொடங்கியது. குயளஉளை என்ற சொற்களிலிருந்து குயளஉளைஅ என்ற சொல் வருகிறது. ரோம் நாட்டை பேரரசர்கள் ஆண்டு கொண்டிருந்த போது அந்த நாட்டின் நீதிபதிகளின் கைகளிலே ஒரு உருட்டுக் கட்டையும் அந்த உருட்டுக் கட்டையின் நடுவிலே ஒரு கோடாரியும் இருக்கும். அதற்கு ‘Fascis’ என்று பெயர். அதிலிருந்து தான் Fascism (பாசிசம்) என்ற சொற்றொடர் உருவானது.

போரின் வழியாக, அண்டை நாடுகளின் மீது படையெடுப்பதின் வழியாக நாடுகளை அடக்கி ஆள்வதன் வழியாக  விரும்புகிற ஒரு ஆதிக்க சமூகம், முதலாளித்துவ சமூகத்தை உருவாக்க முடியும் என்பது முசோலினுடைய கொள்கையாக இருந்தது. 1922ஆம் ஆண்டிலிருந்து 1943ஆம் ஆண்டுவரை இந்த பாசிசக் கொள்கை கோலோச்சிக் கொண்டிருந்தது.

முசோலினி இத்தாலியில் பாசிச ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார் என்றால் அதற்குப் பிறகு ஜெர்மனியில் ஹிட்லர் ஒரு ‘நாசிச' (Nazism) ஆட்சியை நடத்தினார். இரண்டாவது உலகப் போருக்கு ஹிட்லர் காரணமாக இருந்தார். ஒவ்வொரு நாட்டையும் ஆக்கிரமித்து உலகத்தையே தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பல படையெடுப்புகளை அவர் கொடூரமாக நடத்திக்கொண்டு இருந்தார்.

முசோலினியின் பாசிசம், ஹிட்லரின் நாசிசம் இரண்டுமே இரண்டாவது உலகப் போரில் கைகோர்த்துக் கொண்டு செயல்பட்டது. ஆனால் இரண்டுமே தோல்வியடைந்துவிட்டது என்பது தான் வரலாறு. முசோலினி இரண்டாவது உலகப் போரில் கடுமையான தோல்வியை சந்தித்தப் பிறகு தனது மனைவியுடன் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு தப்பி ஓட முயன்றார். மக்கள் இராணுவத்தால் தடுக்கப்பட்டு அவர் தனது மனைவி கிளாரா பெட்டக்கி (Clara pettacci)  உடன் சேர்த்து இருவரும் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

சுட்டுக் கொல்லப்பட்டு மீண்டும் இத்தாலிக்கு கொண்டு வரப்பட்டு ‘மிலான்’ (Milan) என்ற நகரத்தில் உள்ள எண்ணெய் விற்பனை நிலையத்தில், இருவரின் சடலத்தையும் இறைச்சிக் கடைகளில் இறைச்சியை தொங்கவிடுவதைப் போல தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டார்கள். பொது மக்கள் அனைவரும் அந்த சடலங்களில் கற்களை எறிந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள்.

அதே போல ஹிட்லர் கொடூரமான ஒரு ஆட்சியை நடத்தினார். தனது கொள்கைக்காக யூதர்களைக் கொன்று அழிக்கின்ற இனப்படு கொலையை நடத்தியவர் ஹிட்லர். அவர் ஒவ்வொரு நாடாகக் கைப்பற்றிக் கொண்டே வந்தார். போலந்து, பிரான்ஸ் என்று ஒவ்வொன்றாக கைப்பற்றினார். இரஷ்யாவிற்கும் படையெடுத்தார் ஆனால் அங்கு கடுமையான நெருக்கடியைச் சந்தித்து தோல்வி யடைந்தார். இறுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆரியர்கள் தான் இந்த உலகை ஆள வேண்டும் அதனால் யூதர்களை கொன்றழிப்பேன் என்று இனப்படுகொலையை நடத்தினார் ஹிட்லர். சித்திரவதைகளுக்காகவே முகாம்களை உருவாக்கினார். இந்த பாசிசத்தையும், நாசிசத்தையும் தற்போது நடந்து கொண்டிருக்கிற பாஜக ஆட்சியுடன் நாம் ஏன் தொடர்புபடுத்திப் பார்க்கிறோம்.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்பது  பாசிசம், நாசிசம் கொள்கைகளை உறுதியாக ஆதரித்திருக்கிறது. பாசிசம் தான் இந்தியாவில் 'இந்து இராஷ்டிரம்' அமைக்க சரியான கொள்கை என்று இத்தாலியில் முசோலினி உருவாக்கியதைப் போல, இந்தியாவில் ஒரு சர்வாதிகாரத்தை உருவாக்கி மக்களின் கருத்துரிமைகளைப் பறித்து இராணுவப் பயிற்சிக்கு இந்துக்களை தயார் செய்து இங்கே வாழ்கின்ற இஸ்லாமியர்களை எதிரிகளாக்கி இந்த நாட்டை விட்டு விரட்டியடிக்க வேண்டும் என்ற  நோக்கத்தோடு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பாசிசத்தை வெளிப்படையாகவே ஆதரித்தார்கள். அதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. வரலாறுகளிலும் அவை பதிவாகி உள்ளன.

1931ஆம் ஆண்டு இலண்டனிலே வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான ‘மூஞ்சே’ என்பவர் இலண்டன் சென்றார். கலந்து கொண்டு இந்தியாவிற்கு திரும்புகிற வழியில் இத்தாலியில் பல இடங்களுக்குச் சென்று அங்கே முசோலினி நடத்திய பாசிச பள்ளிகள், இராணுவப் பள்ளிகள் ஆகிய அனைத்தையும் பார்வையிட்டு விட்டு, ‘இது ஒரு சிறப்பான கட்டமைப்பு; இதுதான் மக்களை தயார்படுத்தும் சிறப்பான முறை; இதே போலத்தான் இந்தியாவிலும் அமைக்க வேண்டும்’ என்று அந்த பள்ளிகளிலேயே வருகைப் பதிவேடுகளில் அவர் குறிப்புகளை எழுதி வைத்துள்ளார்.

1931ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி அவர் முசோலினியை சந்தித்தார். “நீங்கள் இத்தாலியில் எப்படி மக்களை ஒடுக்குகிற சர்வாதிகாரத்தை, அடக்குமுறையை, பாசிசத்தை நடத்துகிறீர்களோ அதேபோல ஒரு கொள்கையை இந்தியாவில் துவங்கி ‘இந்து இராஷ்டிரத்தை’ உருவாக்கப் போகிறோம்” என்று அவர் முசோலினியை சந்தித்து கூறியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பார்வையிட்ட முசோலினியின் இராணுவப் பள்ளிகளைப் பாராட்டி குறிப்புகளை எழுதினார் மூஞ்சே. ஆவணக் காப்பகங்களில் அவற்றைத் தேடி பதிவு செய்துள்ளார் இத்தாலி ஆய்வாளர். “I have already started an organisation of my own concerned independently with similar objectives. I shall have no hesitation to raise my voice from the public platform both in india and england. When ever occasion may arise in praise of your Balilla and Facist organisations.”

“இதேபோன்ற இராணுவ அமைப்புகளை ஏற்கனவே நான் சுயமாக சிந்தித்து தொடங்கியிருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உங்களுடைய இராணுவப் பள்ளிகளைப் புகழ்ந்து பொது வெளிகளில் பேசத் தயங்க மாட்டேன்” என்று மூஞ்சே பதிவு செய்திருக்கிறார்.

இந்தத் தரவுகள் அனைத்தும் 2000 ஆம் ஆண்டில் ஆதாரப்பூர்வமாக வெளிப்பட்டது. ‘மார்சியோ காசலோரி’ என்ற ஒரு இத்தாலி ஆய்வாளர். அவர் இந்தியாவில் இந்துத்துவா பற்றி பேசுகிற நிறுவனங்களின்  வெளிநாட்டு தொடர்புகளைப்  பற்றி ஆராய்ந்து ஒரு ஆய்வு நூலை வெளியிட்டார். (நூலின் பெயர்:  Ambiguous Relationship between Indian Nationalism and Nazi-Facism) அந்த ஆய்வில் இத்தாலி நாட்டில் உள்ள பல ஆவணக் காப்பகங்களுக்கு சென்று அந்த ஆவணக் காப்பகங்களில் உள்ள ஆதாரங்களை தேடிப் பிடித்தார். முசோலினியை மூஞ்சே சந்தித்துப் பேசியதும், மூஞ்சே அந்த பாசிச நிறுவனங்களில் எழுதிய குறிப்புகளையும், சந்தித்த தேதிகளையும் ஆதாரங்களோடு முதன் முதலாக 2000ஆம் ஆண்டு அவர் வெளியிட்டார். அது

‘Economic and political weekly’ ஆங்கிலப் பத்திரிக்கையில் 2000ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி இதழில் பதிவாகியுள்ளது. அங்கிருந்து திரும்பிய மூஞ்சே, இங்கே கோல்வாக்கர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைச் சந்தித்து விவாதிக் கிறார். பாசிசத்தை ஆதரித்து இந்தியாவில் மாநாடு களை நடத்துகிறார்கள்.

இந்து இளைஞர்களுக்கு இராணுவப் பள்ளிகளை துவங்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் இன் கொடியாக ஹிட்லர் பயன் படுத்திய சுவஸ்திக் கொடியை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொண்டது. சுதந்திர இந்தியாவில் சுதந்திரம் பெற்ற போது நாடு முழுவதும் தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாடிய போது, 1947 ஆகஸ்டு 15ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் தனது தலைமையிடமான நாக்பூரில் சுவஸ்திக் கொடியைத் தான் ஏற்றியது.

அப்போது காவிக் கொடியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்தவில்லை.  பிற்காலத்தில் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு இளைஞர் என்ற உண்மையை ‘நள்ளிரவில் வந்த சுதந்திரம்’ என்ற ஆய்வு நூல் அம்பலப்படுத்தியது.

நாசிசம், பாசிசம் மட்டுமில்லாமல் ஜியோனிசம் (Zionism) என்ற சித்தாந்தமும் உள்ளது. ஜியோனிசம் - யூதர்கள் சட்ட விரோதமாக பாலஸ்தீனர்களிட மிருந்து அபகரித்து உருவாக்கிக் கொண்ட இஸ்ரேல் என்ற யூத நாட்டுக்கான மதம். ‘ஜியோனிசம்’ என்ற சொற்றொடரை 1855ஆம் ஆண்டு வியட்னாம் நாட்டைச் சார்ந்த நதன் பிர்ன்பவும் (Nathan Birnbaum) என்ற யூதர் உருவாக்கினார்.

‘ஜியோன்’ என்ற சொல் கிறிஸ்தவர்களின் மறை நூலான பைபிளில் ஜெருசுலம் நகரைக் குறிக்கப் பயன்படுத்தப்படு கிறது. பாலஸ்தீனத்திலிருந்த ஜெருசுலம் நகரம், யூதர்களுக்கானது என்பதை பைபிளை ஆதாரமாகக் காட்டி வாதிட்டார்கள் யூதர்கள். 1897ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் பேசில் (Basle) நகரில் யூதர்கள் கூடி, ‘ஜியோனிஸ்ட் காங்கிரஸ்’ என்ற அமைப்புக்கு வடிவம் தந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் யூதர்களை ஒன்று திரட்டினார்கள். யூதர்கள் ஆரியர்களைப்போல தங்களுடைய “இனம் தனித்துவமானது, உயர்வானது’ என்றார்கள். யூதர்களுக்கான நாடு அமைப்பதற்கு முயன்றார்கள். அந்த நாடு இனத்தையும் மதத்தையும் ஒன்றாக்கும் பேரின வாதக் கோட்பாட்டை உள்ளடக்கியிருந்தது.

உலகிலேயே மிகச்சிறந்த அறிஞர்கள், மேதைகள், விஞ்ஞானிகள் என்று சொல்லப்படுகிற பட்டியலில் யூதர்கள் இடம்பெற்றிருந்தார்கள். ஆனாலும் கூட இரண்டாம் உலகப்போரில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாடு இல்லை என்ற கவலையோடு  பாலஸ்தீனத்தில் ஒரு நாட்டை உருவாக்கிக் கொள்ள பல முயற்சிகளை எடுத்துக் கொண்டார்கள். அவர்களிடம் நிறைய பொருள்வசதி இருந்தது ஆனால் நாடு இல்லை.

உலகத்திலேயே நாடு இல்லாத இனம் என்று இரண்டு இனங்களை ஆய்வாளர்கள் கூறினார்கள். ஒன்று யூத இனம் மற்றொன்று பார்ப்பன இனம். இந்த இரண்டு இனத்தவருக்கும் சொந்த நாடு என்று ஒன்று கிடையாது.

(தொடரும்)

-விடுதலை இராசேந்திரன்

Pin It