amit shah 620அமீத்ஷா, மத்திய அமைச்சரவையில் ஒரு அமைச்சர் தான். ஆனால் அவர் ஏதோ ஒரு பெரும் நாட்டிற்குரிய அதிபரைப் போல் கருதி மகத்தான வரவேற்பை வழங்கியது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி! குடியரசுத் தலைவர், பிரதமர்  போன்றவர்கள் வருகையின்போதுதான் முதல்வர் விமான நிலையம் போய் வரவேற்பது மரபு. அமீத்ஷா வருகைக்காக 30 நிமிடம் விமான நிலையத்திலேயே காத்திருந்திருக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. 

எல்லாவற்றுக்கும் மேலாக அரசு விழாவில் அ.இ.அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்ற அறிவிப்பை அமீத்ஷா முன்னிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவிக்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அதை உறுதி செய்திருக்கிறார். எந்தக் கட்சி, எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்வது என்பது அவர்களின் விருப்பம்; கட்சிகளின் உரிமை.

ஆனால், பாரதிய ஜனதா கட்சி ஏதோ ஒரு அரசியல் கட்சி என்ற பார்வையில் குறுக்கிப் பார்க்க முடியாது. தமிழர்களின் உரிமைகளை, சமூக நீதிப் பண்பாடுகளை, முற்றாக அழித்து மதவெறி மண்ணாக மாற்றி பார்ப்பனியத்தை செழிக்க வைக்கும் நோக்கத்துடன் செயல்படும் ஒரு அமைப்பு. அதற்கு தனது முழு அதிகாரத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி வருகிறது.

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடு களாக பார்ப்பனிய எதிர்ப்பு - ஜாதி எதிர்ப்பு - மாநில தன்னாட்சி, இந்தி-சமஸ்கிருத எதிர்ப்பு, பகுத்தறிவு, பெண்கள் சமத்துவம் போன்ற கொள்கைகளை இந்த இயக்கத்தின் முன்னோடித் தலைவர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அந்தக் கொள்கைகள் பலவற்றையும் காற்றில் பறக்கவிட்ட அ.இ.அ.தி.மு.க., இடஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு என்ற அடையாளங்களை மட்டும் தன்னிடம் தக்க வைத்திருக்கிறது. இந்த இரண்டு இலட்சியங்களையும் பா.ஜ.க. மதவாத ஆட்சி ஒழிக்க முற்படும் நிலையில் அதை உறுதியுடன் தட்டிக் கேட்க முடியாமல் அஞ்சி நடுங்கி நிற்கிறது தமிழக அரசு. இது தமிழ்நாட்டுக்கு இழைக்கும் மகத்தான துரோகம்!

தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய திட்ட ஒதுக்கீட்டுக்கான நிதியையும், ஜி.எஸ்.டி. வரி வருவாய்ப் பங்கினையும் நடுவண் அரசு தர மறுத்ததை நிதிநிலை அறிக்கையிலேயே சுட்டிக் காட்டிய அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நடுவண் அரசு உதவிகளை செய்வதாக பாராட்டுவதற்கு என்ன காரணம்? ஏன் இந்த தடுமாற்றம்?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியை தன் வசமாக்கிட அத்தனை முயற்சிகளையும் செய்தது பா.ஜ.க. தலைமை. அக்கட்சியை ஓ.பி.எஸ். அணி, ஈ.பி.எஸ். அணி, தினகரன் அணி என்று மூன்றாக உடைத்தார்கள். பிறகு தமிழக அரசின் அதிகாரத்தைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர இரண்டு அணிகளை மட்டும் இணைத்தார்கள். இப்போது பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான கட்சியை கூட்டணி சேர்த்து விழுங்கி ஏப்பம் விட்டது போன்ற சூதுத் திட்டத்தோடு அ.இ.அ.தி.மு.க. வழியாகவே கூட்டணியை அறிவிக்கச் செய்திருக்கிறார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைத் தங்கள் ‘இதய தெய்வம்’ என்றும் இந்த ஆட்சியே ‘அம்மா’வின் ஆட்சிதான் என்றும் ஒவ்வொரு நாளும் பேசிப் பெருமைப்படும் அ.இ.அ.தி.மு.க.வின் ‘இரட்டைத் தலைமை’, ஜெயலலிதா - பா.ஜ.க.வை எப்படிக் கையாண்டார் என்ற வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.

1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முதலாக தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணி  வைத்தவரே ஜெயலலிதாதான். அந்தத் தேர்தலில் ஜெயலலிதா உருவாக்கிய கூட்டணி  வெற்றி பெற்றது. வாஜ்பாய் பிரதமரானார். ஆனால் ஜெயலலிதா  தான் மத்தியில் கூட்டணி அமைச்சரவை எப்படி அமைய வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்தார்.

நிபந்தனையை ஏற்கும் வரை தன்னுடைய கட்சிப் பிரதிநிதிகள் அமைச்சரவையில் பங்கேற்க ஒப்புதல் கடிதம் தர மறுத்தார். அமைச்சரவை அமைக்க முடியாமல் வாஜ்பாய் திணறிப் போனார். ஜெயலலிதாவை சமாதானப்படுத்துவதற்கு வாஜ்பாய் தூதுவர்களாக ஜார்ஜ் பெர்னாண்டசும், ஜஸ்வந்த் சிங்கும் மீண்டும் மீண்டும் ஜெயலலிதா இல்லமான போயஸ் கார்டனுக்கு வந்தார்கள். அடுத்த சில மாதங்களிலே தனது கோரிக்கைகளை நிறைவேற்றாத வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்க்கப் போகிறேன் என்று அறிவித்து டெல்லிக்குப் பயணமானார்.

சோனியா - ஜெயலலிதா சந்திப்பும் தேநீர் விருந்தும் நடந்தது. சென்னை திரும்பி, வாஜ்பாய் ஆட்சிக்கு தரும் ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். வாஜ்பாயை நம்பிக்கை வாக்கெடுப்புப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளினார். ஒரே ஒரு வாக்கு வேறுபாட்டில் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது. 13 மாதம் மட்டுமே வாஜ்பாயின் ஆட்சி நீடித்தது. ‘அம்மா’ ஆட்சி என்று கூறும் இன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, அவர்களது தலைவர் தந்த அடையாளங்களையே தொலைத்து விட்டு ‘சரணாகதிப் படலம்’ நோக்கி நகருவது மகத்தான துரோகம்!

“தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க. எனும் இரட்டை அரசியல் அடையாளங்களோடு தமிழ்நாட்டு அரசியல் களம் பயணிக்கக் கூடாது; அதை ஒழிப்பதிலிருந்தே ‘பார்ப்பன இராஜ்யத்தின்’ முதல் அத்தியாயத்தை தொடங்க வேண்டும்” என்ற திட்டமிட்ட காய் நகர்த்தலுக்கு தயாராகி வருகிறது ஆரிய பார்ப்பனியம்! இதற்கு துணை போகிறது அ.இ.அ.தி.மு.க. இந்த சூழ்ச்சி வலையை மக்களிடம் அம்பலப்படுத்துவதே திராவிடர் இயக்கச் சிந்தனை வழியில்  செயல்படும் ஒவ்வொரு தமிழரின் கடமை!

- விடுதலை இராசேந்திரன்

Pin It