ஆகத்து 15 அன்று இந்திய நாடு தனது 69ஆவது சுதந்தர நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. அதே நாளில் மாலை வேளையில் விழுப்புரம் மாவட்டம், சங்கரா புரம் அருகில் உள்ள சேச சமுத்திரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், சாதிவெறி கொண்ட வன்னியர்களால் தாக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்டவர்களின் மாரியம்மன் கோயில் தேரோட்டம் வன்னியர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் பயன்படுத்தும் பொதுப்பாதையில் நடத்தக்கூடாது என்று வன்னியர்கள் எதிர்த் ததே இத்தாக்குதலுக்கு முதன்மையான காரணமாகும்.

sethusamutherum 450இத்தாக்குதலின்போது தேர்மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. அதனால் தேர் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. 500க்கும் மேற்பட்ட வன்னியர்கள் கும்பலாக, பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர்பாட்டில்கள், கடப்பாரை, கோடாரி போன்ற ஆயுதங்களுடன் சென்று தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளைத் தாக்கினர்.

வீடுகளில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடினர். ஏழு வீடுகள் முற்றிலுமாக எரிக்கப்பட்டன. பல வீடுகள் சூறையாடப்பட்டன.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே இத்தேரோட்டம் குறித்த பிரச்சனை இருந்து வந்தது. சேச சமுத்திரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் பகுதியில் ஒரு மாரியம்மன் கோயில் இருக்கிறது.

2012ஆம் ஆண்டு மாரியம்மன் கோயிலுக்காகத் தாழ்த்தப்பட்டவர்கள் ஒரு சிறிய தேர் செய்தனர்.

மாரியம்மன் திருவிழாவின் போது தேரோட்டம் செல்லும் 175 மீட்டர் சுற்றுப்பாதையில் 50 மீட்டர் தூரத் துக்கு வன்னியர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் பயன்படுத்தும் பொதுப் பாதை அமைந்திருக்கிறது.

பொதுப்பாதையில் தாழ்த் தப்பட்டவர்களின் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடை பெறக்கூடாது என்று வன்னியர்கள் எதிர்த்தனர். அதனால் தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு சேசசமுத்திரம் தாழ்த்தப்பட்டவர்கள் மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடத்து வதற்கு அனுமதியும், பாதுகாப்பும் தரவேண் டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் விண் ணப்பம் தந்தனர். அதன்பின் வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் வன்னியர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் கலந்துகொண்ட பேச்சுவார்த்தை 16 தடவைகள் நடை பெற்றன. இறுதியில் பொதுப்பாதையில் தேரோட்டம் நடைபெறு வதற்கு வன்னியர் பிரதிநிதிகள் ஒப்புக் கொண்டனர். அதன்படி தேரோட் டம் ஆகத்து 16 அன்று நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் தேரோட்ட நாள் நெருங்க நெருங்க தாம் குடியிருக்கும் தெருவில் தாழ்த்தப்பட்டவர்களின் தேரோட்டம் நடப்பதைப் பல நூற்றாண்டுகளாகத் தாழ்த்தப்பட்டவர்களை விடத் “தாம் உயர்ந்த சாதி” என்கிற சாதி ஆணவப் பெருமித உணர்ச்சிப் படிந்து விட்டதன் காரணமாக வன்னியர்களால் செரித்துக் கொள்ள முடியாமல் மனம் புழுங்கினர். அதனால் அவர்களில் ஒரு பிரிவினர் கும்பலாகச் சென்று இத்தாக்கு தலில் ஈடுபட்டனர்.

தேரோட்டத்தின்போது 2012இல் இளவரசன்-திவ்யா காதல் தொடர்பாக நடந்தது போன்ற சாதி மோதல் நிகழாமல் தடுப்பதற்காகக் காவல் துறையினர் நாற்பது பேர் சேச சமுத்திரம் பகுதியில் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடந்த தாக்குதலைக் காவல் துறையினர் தடுக்க முயன்றனர். 500க்கு மேற்பட்டோர் இத்தாக்குதலில் ஈடுபட்டதால் தடுக்க முடியவில்லை. மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் உட்பட ஏழு காவல் துறையினர் இத்தாக்குதலில் காயமடைந்தனர்.

அடுத்தநாள், 16-8-2015 அன்று நூற்றுக்கணக்கில் காவல்துறையினர் சேச சமுத்திரத்தில் வன்னியர் குடியிருப்புப் பகுதியில் நுழைந்து அவர்களின் வீடுகளில் பொருள்களை நாசப்படுத்தியும், ஆள்களை அடித்து உதைத்தும் 70 பேரைக் கைது செய்தனர்.

அவர்கள்மீது 1989ஆம் ஆண்டின் தாழ்த்தப்பட்டவர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபடாதவர்களையும், சாவுக்காகத் துக்கம் விசாரிக்க வெளியூர்களிலிருந்து வந்தவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இப்பகுதியில் 144 தடை ஆணைப் பிறப்பிக்கப் பட்டுள்ளது. பெரும்பாலான வன்னியர் வீடுகள் பூட்டப்பட்டுள்ளன.

வன்னியர், தாழ்த்தப்பட்டவர் இரண்டு சாதியினருமே உழைக்கும்  மக்களாவர். சிறு உடைமையாளர்களாகவும், உடைமையற்றவர்களாகவும் இருக்கும் இவ்விரண்டு பிரிவினருக்கும் இடையே பகையும் மோதலும் நடப்பது ஏன்? இந்தியா சுதந்தரம் பெற்று 68 ஆண்டுகளான பின்னும் சாதிய ஏற்றத்தாழ்வு மனப்பான்மை ஒழிந்து, மனிதர்கள் அனைவரும் பிறவில் சமம் என்கிற சமத்துவ உணர்ச்சி ஏன் ஏற்படவில்லை?

இந்தியாவில் சாதிகள் ஏணிப்படிக்கட்டு வரிசைபோல் இறுக்கமாக அமைக்கப்பட்டுள்ளன என்று மேதை அம்பேத்கர் சொன்னார். இந்த ஏணிப்படியின் உச்சியில் பார்ப்பனரும், கடைசிக் கீழ்ப்படியில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் உள்ளனர். இடையில் உள்ள நான்காயிரத்துக்கு மேற்பட்ட சாதியினரும் பிறவியிலேயே பார்ப்பான் உயர்ந்தவன் என்றும், பிறவியிலே தாழ்த்தப்பட்டோர் இழிந்தவர் என்றும் கருதுகின்றனர்.

அதனால்தான் பார்ப்பானை அழைத்துத் தங்கள் வீட்டின் இன்ப, துன்ப நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்கின்றனர். தாழ்த்தப்பட்டவர்களை இன்றளவும் தீண்டத்தகாத இழிசாதி யினராகக் கருதுகின்றனர்.

ஒவ்வொரு சாதியும் தன்னளவில் ஒரு முடிய சமூகமாக இருக்கிறது என்று அம்பேத்கர் விளக்கியிருக்கிறார். ஒரு சாதியைச் சேர்ந்த அனைவரிடம் ‘நம் சொந்தச் சாதிக்காரர்’, ‘நம்மவர்’ என்ற உணர்ச்சியும் ஓர்மையும், பற்றும் ஆழமாக வேரூன்றியுள்ளன. மற்ற சாதியினரைத் தனக்கு உறவு அல்லாதவர் - அந்நியர் என்று பாகுபாடு காட்டும் மனப் போக்கு எல்லாச் சாதியினரிடமும் இருக்கிறது. சொந்தச்சாதி உணர்ச்சியை ஊட்டி வளர்த்து, மக்களைப் பிளவுபடுத்தி வைப்பதில் ஒரே சாதிக்குள் திருமணம் என்கிற அகமண முறை அச்சாணியாகச் செயல்படுகிறது. சாதி அமைப்பை இந்துமத சாத்திரங்களும் புராணங்களும் அரசியல் சட்டமும் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன.

“சுதந்தர இந்தியா வில் வயதுவந்த அனை வருக்கும் வாக்குரிமை என்கிற அரசியல் சமத்துவம் மட்டுமே அரசமைப் புச் சட்டத்தில் வழங்கப்பட் டுள்ளது. சமூக நிலையி லும் பொருளாதாரத் தளத்தி லும் பல நூற்றாண்டுகளாக நீடித்து வந்துள்ள ஏற்றத் தாழ்வுகள் அப்படியே விடப்பட்டுள்ளன. இவற்றில் விரைவில் சமத்துவத்தை உண்டாக்காவிட்டால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சனநாயகக் கட்ட மைப்பையே இதனால் பாதிக்கப்படும் வெகுமக் கள் தூக்கி எறிவார்கள்” என்று அம்பேத்கர் 25-11-1949 அன்று அரசமைப்புச் சட்ட அவை யில் எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் பார்ப்பன-பனியா மேல்சாதி ஆளும் வர்க்கம் சமூக சமத்துவத்தை உண்டாக்குவதற்காகச் சாதி ஒழிப்புக் கான எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமையைக் கடைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் அப்படியே நீடிக்கிறது.

1945இல் அம்பேத்கர் “தீண்டப்படாத மக்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்ட வேண்டும் என்ற அளவில் இந்துக்களிடம் ஒரு மனப்போக்காக இருக்கின்ற தீண்டாமையானது கற்பனைக் கெட்டக்கூடிய காலத்திற்குள் நகரங்களிலோ, கிராமங்களிலோ மறைந்து போகாது என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்” என்று எழுதியது இன்றும் அதே நிலையில்தான் இருக்கிறது.

இந்த மனப்போக்குக் காரணமாகத்தான் சேச சமுத்திரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய வன்னியர்களில் தே.மு.தி.க., தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. என எல்லாக் கட்சியினரும் இருந்தனர். தாழ்த்தப்பட்ட சாதியினர் உள்ளிட்ட எல்லாச் சாதிகளிலும் சாதி அடையாளத்தை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தும் கேடான நிலை கடந்த முப்பது ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துவிட்டது. பெரிய திராவடக் கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் சேசசமுத்தி ரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்பட்டது குறித்து எந்த வொரு கருத்தும் கூறவில்லை என்பது வெட்கக்கேடாகும்.

சாதி ஏற்றத்தாழ்வு மனப்போக்கைச் சட்டங்களால் மட்டுமே குறைக்கவோ, ஒழிக்கவோ முடியாது. பெரியாரும் மேதை அம்பேத்கரும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, மக்களிடையே சமத்துவ உணர்ச்சியை ஏற்படுத்துவதற்கான கோட்பாடுகளையும் வழிமுறைகளையும் திட்டவட்டமாக வகுத்தளித்துள்ளனர்.

இதற்கான முதல் வேலை பார்ப்பான் மட்டுமே அர்ச்சகன் என்ற நிலையை ஒழித்து, அனைத்துச் சாதியினரும் அர்ச்சராகும் நிலையை உருவாக்கினாலேயே பார்ப்பனியத்தின் ஆதிக்கமும், தன்சாதி உயர்ந்தது என்கிற வீண் ஆணவ உணர்ச்சியும் பாதி ஒழிந்துவிடும்.