மண்ணே தாயாய் உழைப்பே தந்தையாய்
திண்ணிய நிபந்தனை நிரந்தரம் ஆயினும்
உற்பத்தி முறையின் உயர்கெழு மாற்றம்
பற்பல செல்வம் பெருகி அளித்தது
பொருளீர்ப்பு உயரினும் வளநிலை இருப்பு
அருகுதல் இன்றிப் பெருகியே நிலைத்தது
ஆண்டைச் சமூகம் தொடங்கிய கொடுமையும்
மாண்பிலாப் பண்ணை தொடர்ந்த சுரண்டலும்
உழைப்பவர் தம்மை வதைத்திடச் செய்யினும்
மழைதரு பூமியின் வளம்வற்ற வில்லை
அறிவியல் வளர்ச்சியில் கருக்கொண்ட சமூகம்
பிறிதாய் இன்றிச் சுரண்டலை விடாது
சந்தையின் அடிமையாய் உதித்து எழுந்தது
இன்னுயிர் பூமியின் அளவிலா வளத்தையும்
உவமை யிலியாய் உறிஞ்சிக் குடித்து
குவலயம் அழியும் பாதை வகுத்தது
குருட்டுச் சந்தையின் முரட்டதி காரச்
செருக்கைத் தொலைத்துப் பலியிடா விடிலோ
உழைப்பவர் இன்னல் தொடர்வது மன்றி
வளமை குன்றா வளநாடும் வற்றும்
 
(பூமியைத் தாயாகவும் உழைப்பைத் தந்தையாகவும் கொண்டு, மனிதர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்பது இயற்கை விதித்துள்ள உறுதியான நிரந்தர நிபந்தனையாகும். ஆனாலும் உற்பத்தி முறையில் உயர் தன்மையான மாற்றங்கள் ஏற்படும் பொழுது சம அளவு உழைப்பில் அதிக அளவு செல்வங்களைப் படைக்க முடிகிறது. அவ்வாறு அதிகமான பொருட்களை உற்பத்தி செய்ய அதிகமான வளங்களை ஈர்த்துக் கொண்ட போதிலும் (பழைய சமூகங்களில்) பூமயின் வளநிலை இருப்பு, சற்றும் குன்றாமலேயே இருந்தது. அடிமைச் சமூகத்தில்  உழைக்கும் மக்களைக் கொடுமைப்படுத்தி வேலை வாங்கும் (பண்டைப் பொதுவுடைமைச் சமூகத்தில் இல்லாத) வழக்கம் தொடங்கியது. (அடிமைச் சமூகத்திற்குப் பின் வந்த) பண்ணைச் சமூகத்திலும் இச்சுரண்டல் தொடர்ந்தது.  இச்சமூகங்களின் உற்பத்தி முறை உழைக்கும் மக்களைக் கொடூரமாக வதைத்தது; ஆனால் மழை பொழிகின்ற இப்பூமியின் வளத்தை வற்றச் செய்யவில்லை.
 
அறிவியல் வளர்ச்சியில் கருக்கொண்ட (முதலாளித்துவ) சமூகம், முந்தைய சமூகங்களைப் போலவே, சுரண்டலைக் கைவிடாததாகவும், சந்தைப் பொருளாதார முறையின் அடிமையாகவும் உதித்தது; (முந்தைய சமூக உற்பத்தி முறையைப் போலல்லாமல்) உவமை கூறுவதற்கும் முடியாதபடி, இன்னுயிரான பூமியின் அளவிலா வளம் முழுவதையும் உறிஞ்சிக் குடித்து இப்பூமியை அழிவுப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. (மக்களின் தேவைகளை அறிந்து கொள்ள முடியாமல்) குருட்டுத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சந்தையின் முரட்டு அதிகாரத் திமிரை விரட்டியும், பலியிடாமலும் (அதாவது ஒரேயடியாக ஒழித்துக் கட்டாமலும்) இருந்தால் உழைப்பவர்களின் இன்னல்கள் தொடர்வது மட்டுமல்லாமல், இதுவரைக்கும் வளமை குன்றாது இருந்த நாடுகள் (வளங்குன்றி) வற்றிவிடும்)

Pin It