கோவை : பெரியாரின் அறிவிப்பை ஏற்று ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை கொளுத்தி சிறை சென்று துயரங் களை அனுபவித்து சிறையிலும், சிறைக்கு வெளியேயும் உயிர்நீத்த போராளிகளை நினைவு கூர்ந்து கோவை மாநகர திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 26.11.2020 அன்று காலை 10 மணியளவில் வீரவணக்கம் செலுத்தப் பட்டது. நிகழ்வுக்கு தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையேற்று உரையாற்றினார். மாநகர செயலாளர் நிர்மல் வரவேற்பு கூறினார்.
மேட்டுப்பாளையம் இராமச் சந்திரன், நேரு தாசு, உடுமலை இயல் ஆகியோர் சட்ட எரிப்புப் போராளிகளைப் பற்றியும் போராளிகளின் தியாக உணர்வுடன் எதிர்கால வேலைத் திட்டங்கள் பற்றியும் உரையாற்றினர். இறுதியாக வெங்கட் நன்றி கூறினார். நிகழ்வில் தோழர்கள் சுரேஷ், ரஞ்சித், சதீஷ், ராஜா ராமச்சந்திரன், கண்ணன், முருகேஷ் கலந்து கொண்டனர்.
அன்னூர் : கோவை அன்னூர் பகுதியில் தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் விஷ்ணு ஒருங்கிணைப்பில், 26.11.2020 அன்று காலை 10 மணியளவில் அன்னூர், நல்லி செட்டி பாளையத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் நல்லி சிட்டிபாளையம் பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர். சட்ட எரிப்பு குறித்து விஷ்ணு உரையாற்றினார். பின் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாணவர் கழகம் நடத்திய கருத்தரங்கு
தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில், சட்ட எரிப்புப் போராளிகளை நினைவு கூரும் வகையில் சட்ட எரிப்பு சிறப்புக் கருத்தரங்கம் இணைய வழியில் 29.11.2020 அன்று மாலை 6 மணியளவில் நடை பெற்றது.
‘அரசியல் சட்டத்தில் மனுதர்மக் கூறுகள்’ - திருப்பூர் சந்தோஷ், ‘சட்ட எரிப்புப் போராட்டம் - பெரியாரின் பார்வை’ - சென்னை அருண், ‘சட்ட எரிப்புப் போராளிகளின் கொள்கை உறுதி’ - கோவை விஷ்ணு, ‘சட்டத்தைப் பாதுகாக்க புதுச் சட்டமா? மேட்டூர் மதிவதனி ஆகிய தலைப்புகளில் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் கருத்துரை வழங்கினர்.
இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றினார். நிகழ்விற்கு திருப்பூர் தேன்மொழி தலைமை வகித்து நிகழ்வையும் ஒருங்கிணைப்பு செய்தார்.
புலியூரில் மாவீரர்கள் வீரவணக்க நாள்
மாவீரர் நாள் 27.11.2020 அன்று மாலை சேலம், மேட்டூர், கொளத்தூர் புலியூர் பிரிவில் அமைந்துள்ள தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் மாவீரர் நாள் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடை பெற்றது. சரியாக மாலை 6.05 மணிக்கு மாவீரர் பாடல் ஒலிப்புக்கு பின் கூடியிருந்த உணர்வாளர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.
அதனை தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமிழீழ விடுதலை போராட்டம் குறித்தும் போராளிகளின் இலட்சியக் கொள்கை, விடுதலைப் புலிகள் எதிர் கொண்ட துரோகம், துரோகிகளை அடையாளம் கண்டது, அடுத்தகட்ட அரசியல் குறித்து உரையாற்றினார். நிகழ்வை தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்விற்கு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய பகுதி கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை : சென்னை மாவட்டக் கழகம் சார்பில், மாவீரர் நாள் நிகழ்வு, இராயப் பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில், 27.11.2020 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் சுடர்ஒளி ஏற்றி மாவீரர் நாள் பற்றி உரையாற்றினார். நிகழ்விற்கு தென் சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி தலைமை வகித்தார். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், தென் சென்னை மாவட்டத் தலைவர் மா.வேழவேந்தன், தென் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயிலை சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வை, திருவல்லிக்கேணி பகுதி பொறுப்பாளர் அருண் மற்றும் கழகத் தோழர் கன்னியப்பன், இராஜேஷ் ஆகியோர் ஒருங் கிணைத்தனர். இராயப்பேட்டை, மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- விடுதலை இராசேந்திரன்