பெண் என்றால் அவள் ஆடவர்களின் உடமைகளில் ஒன்று! பிற சொத்துக்களைவிட சற்று மதிப்புயர்ந்த சொத்தாக வேண்டுமானால் பெண் மதிக்கப்படலாமே ஒழிய பெண்ணும் ஆணும் சமம் என எந்த மதமும் ஒப்புக் கொள்வதில்லை.

மெக்சிகோ, யுகாதன் போன்ற சில சமூகங்களில் ஒரு பெண்ணிடம் முறை தவறி நடக்கும் ஆணை அப்பெண்ணின் உறவினர்கள் கொலை செய்யலாம் என்று சட்டமே இடம் அளித்தது.

பாபிலோனிலும், ரோமிலும் முறை தவறி நடக்கும் பெண்ணையும், ஆணையும் ஒன்றாகப் பிணைத்து கோட்டையின் கொத்தளத்திலிருந்து கீழே ஆற்றில் உருட்டித் தள்ளிவிட வேண்டும் என்றது சட்டம். எகிப்தியச் சட்டப்படி கற்பிழந்தவளும், கற்பழித்தவனும் நகரத்தின் முச்சந்தியிலே நிறுத்தப்பட்டு 1000 கசையடி கொடுக்கப்படவேண்டும். பழைய ரோமில், இருவருக்குமே பெருமளவு அபராதம் விதிக்க சட்டம் இடம் தந்தது. மதவாதிகள் தாங்களும் பெரிய சீர்திருத்தவாதிகள்தாம் என்று காட்டிக் கொள்ளும் போலி முயற்சிகளில் ஈடுபட்டார்கள். இந்த போலி முயற்சிகள் எல்லா மதத்திலும் இருந்தன.

கிறிஸ்துவ மதத்திலும் இத்தகைய முயற்சி நடைபெற்றது. இதன் விளைவாகத்தான் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி நடந்ததாகப் பைபிளில் கூறப்பட்டிருக்கிறது. சோரம் போன பெண் ஒருத்தியை கல்லால் அடித்த யூதர்கள் (தங்கள் சட்டப்படியே) முயன்றபோது இயேசு அவர்களைத் தடுத்து நிறுத்தினார் என்றும், “உங்களில் யார் அதே குற்றத்தைச் செய்யாதவனோ அவன் மட்டுமே அவளைக் கல்லால் அடிக்கலாம்” என்று இயேசு வாதாடியதாகவும் அதன் விளைவாக அப்பெண் காப்பாற்றப்பட்டாள் என்றும் அக்கதை கூறுகிறது.

இயேசுவை பெரிய சீர்திருத்தக்காரராகக் காட்ட வேண்டும் என்ற ஆசையில் பைபிள் எழுதியவர்கள் சுருட்டிவிட்ட புளுகுக் கதையே இது. ஏனென்றால் யூத வரலாற்றில் சோரம் போன பெண்ணைக் கல்லால் அடிக்க வேண்டும் என்று சட்டத்தில் என்றுமே விதியிருந்ததில்லை. அப்படிப்பட்டவளை அரசே தூக்கிலிட்டு கொல்ல வேண்டும் என்பது தான் விதி. இயேசுவைப் பெரிய புரட்சிக்காரராகக் காட்ட வேண்டி எழுதிய பொய்யே மேற்படி நிகழ்ச்சி.

தீபாவளி கொண்டாடாத எம்.ஜி.ஆர்.

‘தீபாவளி’க்கு பார்ப்பன அம்மையார் ஜெயலலிதா வாழ்த்துக் கூறுவது வாடிக்கை. ஆனால் எம்.ஜி.ஆர். தீபாவளி பண்டிகையையே கொண்டாடுவதில்லை திரைப்படத் துறையில் சேர்ந்து பத்து ஆண்டுகள் வரை எம்.ஜி.ஆருக்கு வறுமையான வாழ்க்கையே இருந்ததால் அவருக்கு தீபாவளி கொண்டாட வாய்ப்பே இல்லை. ஆனால், அவர் புகழ் பெற்ற நடிகராகி ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை வீட்டிற்கு குடி வந்தபோதும், அதாவது பெரும் பணக்காரரான பிறகும், தீபாவளி கொண்டாடுவது எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காது. பட்டாசு வெடிப்பதை, இதென்ன ஒருநாள் கூத்துக்கு இப்படியொரு ஆர்ப்பாட்டமா? என்பார்.

ராமாவரம் தோட்டத்திற்கு எம்.ஜி.ஆர். குடியேறிய பின்னரும் அங்கு தீபாவளியின் சாயல் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். யாரும் தனக்கு தீபாவளி வாழ்த்து சொல்வதை எம்.ஜி.ஆர். விரும்ப மாட்டார். யாராவது தெரியாமல் சொல்லிவிட்டால், அவர்களிடம் ‘வாழ்த்து சொல்வதற்காக என்னை சந்திக்க வேண்டாம்’ என்று கூறி அனுப்பி விடுவார். தீபாவளியன்று படப்பிடிப்பு நடக்காது என்பதால், வீட்டில் நண்பர்கள், தயாரிப்பாளர்களுடன் பேசிக் கொண்டிருப்பார். நூலகத்தில் புத்தகங்கள் படிப்பார். தீபாவளி கொண்டாட்டத்தில் ஆர்வம் காட்டாத இயக்குனர்கள், கதாசிரியர்களை தோட்டத்திற்கு வரவழைத்து தான் நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் கதை, காட்சிகள் பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவார்.

எம்.ஜி.ஆர். விரும்பிக் கொண்டாடியது தைப் பொங்கல். எம்.ஜி.ஆர். நாடக மன்றம் தொடங்கியபின் ஒவ்வொரு தை பொங்கல் நாளன்றும் நாடக மன்றத்தினரை அழைத்து அவர்களுக்கு புத்தாடை, பணம் கொடுத்து பொங்கல் சாப்பிடச் செய்து ஒருநாள் முழுதும் அவர்களுடன் செலவிடுவார். மாலையில் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவார். எம்.ஜி.ஆர். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது நடிகர் சங்க வளாகத்திலும் பொங்கல் நாளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தச் செய்தார். எம்.ஜி.ஆரின் விசுவாசிகளுக்கு இந்தச் செய்திகள் தெரிந்தால் ‘பொங்கல்’ இன்னும் சிறப்புப் பெறும்.

‘மாலைமுரசு’ (சேலம்) ‘தொழில் மலரி’லிருந்து

Pin It