அய்.அய்.டி., அய்.அய்.எம்., ஏ.அய். அய்.எம்.எஸ். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடங்களை ஒதுக்கினால், அதனால் பார்ப்பன முன்னேறிய சாதியினருக்கு குறையக்கூடிய இடங்களை கூடுதலாக ஒதுக்குகிறோம் என்று பார்ப்பன சக்திகளிடம் மத்திய அரசு சமரசம் செய்தது. இப்படி இடங்களை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அதிகரிக்க 17000 கோடி கூடுதல் செலவாகும். இந்தப் பணத்துக்கு எங்கே போவது? எனவே பார்ப்பன உயர்சாதிக்காரர்களின் ஆதிக்கத்தைத் தக்க வைப்பதற்கு, இவ்வளவு பெரிய தொகையை அரசினால் ஒரேயடியாக செலவிட முடியாது என்பதால், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளில் கை வைக்க முடிவு செய்தார்கள். அதுதான் வீரப்பமொய்லி அறிக்கை வடிவில் வந்து நிற்கிறது.

வீரப்பமொய்லிக் குழு தந்துள்ள பரிந்துரை என்ன?

அய்.அய்.டி. போன்ற 7 தொழில்நுட்பக் கல்விக்கழகங்கள், இந்திய அறிவியல் கல்விக் கழகம் இவைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு முதலில் 9 சதவீத ஒதுக்கீடு ஒதுக்கப்படுமாம்! மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் 27 சதவீத ஒதுக்கீடும் முழுமை பெறுமாம்.

55 ஆண்டுகாலம் பிற்படுத்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு - இப்போதுதான் முதன்முதலாக அமுலாகப் போகிறது. அதிலும் - இவ்வளவு குழிபறிப்புகள். முதல் ஆண்டு 9 சதவீதம் உயர்த்துவார்கள்; அடுத்த ஆண்டு 9 சதவீதம் உயரும் என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது. இதற்கேற்ற அளவுக்கு மொத்த இடங்களை உயர்த்தி - பார்ப்பன உயர்சாதியினரைப் பாதிக்க விட்டுவிடாமல் காப்பாற்றுவதற்கு, அரசு கூடுதல் நிதி செலவிட வேண்டியிருப்பதால், நிதியைக் காரணங்காட்டி, ஒதுக்கீட்டைத் தள்ளிப் போட்டுவிடலாம். அல்லது ஏதேனும் ஒரு காரணம் காட்டி, உச்சநீதி மன்றத்தின் வழியாகவும் முடக்கி விடலாம். ‘பாதிக் கிணறு தாண்டும்’ இந்த ஆபத்தான போக்குகள் - பாழும் கிணற்றுக்குள் தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை மூழ்க வைக்கும்.

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே - பார்ப்பனர்கள் தான், பேராசிரியர்கள். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் நுழைய முடியவில்லை. இந்த நிலையில் - இந்தக் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோரின் ஓய்வு வயதை 60-லிருந்து 65 ஆக உயர்த்த பரிந்துரைக்கிறது இந்த குழுவின் அறிக்கை. உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்டோரின் வேலை வாய்ப்புகள், இதனால் மேலும் 5 ஆண்டுகள் தள்ளிப் போடப்படுகின்றன.

தாழ்த்தப்பட்டோருக்கு - பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் செல்லும் என்று அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அளித்த அதே தீர்ப்பில் - இந்த இடஒதுக்கீட்டில் பொருளாதார வரம்பை புகுத்திவிட்டது. ஆண்டுக்கு 2.5 லட்சம் குடும்பத்துக்கு வருமானம் வந்தால் இனி தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டைக் கோர முடியாது என்று தாழ்த்தப்பட்டோர் உரிமையிலும் கைவைத்து விட்டது உச்சநீதிமன்றம்.

இப்படித் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் பறிக்கப்படுவதை நாம் பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? பார்ப்பன ஆதிக்க சக்திகளுக்காக பத்திரிகைகள், தொலைக் காட்சிகள், உச்சநீதி மன்றங்கள் தீவிரம் காட்டி செயல்படுகின்றன. ஆனால் - பெரும்பான்மையான மக்களாகிய நமக்கு...? மக்கள் கருத்தை உருவாக்கி - மக்கள் சத்தியைத் திரட்டிப் போராடுவதுதான், நமக்குள்ள ஒரே வலிமை; பலம்; ஆயுதம்!

தாழ்த்தப்பட்டோரும் - பிற்படுத்தப்பட்டோரும் இணைந்து நிற்கும் காலம் கனிந்து நிற்கிறது! மத்திய மாநில அரசுகளை நோக்கி, நமது உரிமைக் கொடியை உயர்த்துவோம்.

Pin It