பொருளாதாரக் கட்டமைப்புகள் ஏதுமின்றி கொள்கை உறுதியோடு களத்தில் நிற்கும் ‘பெரியார் திராவிடர் கழகம்’ மக்கள் கருத்தை உருவாக்குவதில் பீடு நடை போடுகிறது என்று பொதுச்செயலாளர் கோவை இராம கிருட்டிணன் குறிப்பிட்டார். அக்7-ல் கழக மாநாட்டில் அவர் ஆற்றிய உரை:

‘பெரியார் திராவிடர் கழகம்’ தொடங்கியது சென்னையில் தான். மாபெரும் எழுச்சியோடு தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையிலே நாம் தொடங்கிய பெரியார் திராவிடர் கழகம் தமிழகம் முழுவதும் இன்றைக்கு எழுச்சியோடு பெரியாருடைய இலட்சியங்களை கொண்டு செல்கிற பணியிலே ஈடுபட்டு வருகிறது. நாம் எந்தவிதமான சபலங்களுக்கும் ஆளாகாமல் பெரியார் இலட்சியங்களுக்கு ஊறுவிளைவிக்காத தன்மையிலே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு வருகிறோம். தொடங்கிய இந்த இடத்திலேயே மீண்டும் நாம் சந்திக்கின்றோம்.

விளம்பரம் இல்லாத பண வசதி இல்லாத இயக்கமாக இருந்தாலும் தமிழ்நாட்டிலே நாம் துவக்கி வைத்த பிரச்சினைகள் தான் - தமிழகத்தின் பிரச்சனைகளாக வடிவெடுத்து நிற்கின்றன. பெரியார் திராவிடர் கழகமும், பெரியார் முழக்கமும் எடுத்துச் சொன்ன செய்திகள் வலிமையான குரலாக மாறி ஒலித்து வருகின்றன.

சங்கராச்சாரியை மக்கள் எல்லாம் புனிதராக கருதினார்கள். அவர் காலடியிலே கிடப்பதை புனிதப்படுத்தின பார்ப்பன பத்திரிகைகள், அந்த ‘ஜெகத் குரு’வின் உண்மையான முகத்தை நாம் கிழித்துக் காட்டினோம். சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரனுக்கு தொடர்பு உண்டு என்பதை ‘நக்கீரன்’ முதலில் வெளியிட்டது. அதை மக்களிடம் கொண்டு சென்று இயக்கம் நடத்தியது பெரியார் திராவிடர் கழகமும், பெரியார் முழக்கமும் தான்! கற்பனை செய்து பாருங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அந்த சங்கராச்சாரியார் இருந்த நிலை என்ன, இன்று எங்கே இருக்கிறார் என்று! சங்கராச்சாரியின் புனிதம் தகர்க்கப்பட்டு கிரிமினல் குற்றச்சாட்டில் கைது செய்து வழக்கு தொடரப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதத்துக்கு முன் தமிழீழ மக்களுக்காக நாம் மாநாடுகளை மீண்டும் நடத்தினோம். மக்களிடம் மீண்டும் எழுச்சியை உண்டாக்க திட்டமிட்டோம். இன்று தமிழ்நாட்டிலே ஒட்டு மொத்தமாக எல்லா அரசியல் கட்சிகளும் சரி, அரசும் சரி, ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கின்றன. தேக்கம் உடைந்தது; மீண்டும் ஈழத் தமிழர் ஆதரவு அலை வீசுகிறது. சட்டமன்றத்திலேயே தீர்மானம் வரக் கூடிய நிலை வந்து விட்டது. மீண்டும் ஈழத் தமிழருக்கு ஆதரவான சூழலை உருவாக்கியதில் நாம் மகத்தான பங்காற்றியிருக்கிறோம். இதைத் துணிந்து சொல்லலாம். செய்ய வேண்டிய நேரத்திலேயே துணிவோடு ஒவ்வொரு செயல்பாட்டையும், நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அதிலே நாம் தலைநிமிர்ந்து நிற்க முடியும். இந்தப் பெருமைகளைக் கூறி, நாம் அதில் சுகம் காண்பவர்கள் அல்ல. அடுத்தடுத்து நாம் செய்யக்கூடிய பணிக்கு, நம்மை உற்சாகத்துடன் களமிறங்கச் செய்கிறது. இந்த நம்முடைய ஒவ்வொரு உழைப்பும் மக்களிடத்திலே போய்ச் சேருகின்றது. நாம் மீண்டும் மீண்டும் பணியாற்றவும், பெரியார் கொள்கைகளை தோளிலே சுமந்து செல்வதற்கும், நாம் கடந்த காலங்களை திரும்பிப் பார்க்கிறோம். நாம் பெற்ற வெற்றிகளை எண்ணிப் பார்த்து பூரிப்படைந்து சோர்வடையாமல் நாம் மீண்டும் மீண்டும் இயக்கத்தை கொண்டு செல்வதற்கும் உழைப்பதற்கும் இந்த செய்திகளை நாம் திரும்ப திரும்ப எண்ணிப் பார்க்கின்றோம். சிந்தித்துப் பார்க்கின்றோம்.

இபபோது தேர்தல் காலம். இந்தத் தேர்தலில் மக்களுக்கு சேவை செய்வதற்கு ‘துடிப்பவர்கள்’ 5 லட்சம் பேர். இவர்கள் எல்லாம் உண்மையாக மக்களுக்குத் தொண்டாற்ற முன்வந்தால் இந்த நாடு எவ்வளவோ முன்னேறியிருக்கும். ஆனால், தேர்தல் மூலம் தான் “தொண்டு” செய்வோம் என்கிறார்கள். ஆனால் தேர்தல் பக்கமே போக மாட்டோம் என்று சொல்லும் கறுப்புச் சட்டைகளாகிய நாம் தேர்தலில் பங்கெடுக்காதவர்கள். அந்தத் தேர்தலில் வெற்றி பெறுகின்ற கட்சிக்குக் கூட கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று சொல்லுகின்றவர்கள்.

ஆனால், நம்மால் மக்கள் கருத்தை உருவாக்க முடியும்; முடிகிறது; என்ன காரணம்? பெரியாருடைய தத்துவம் சரியான தத்துவம். அதைத்தான் இந்த நாடு ஏற்கும். மக்கள் ஏற்பார்கள். அந்தப் பணியை நாம் செய்ய வந்திருக்கின்றோம். இவ்வாறு கோவை இராம கிருட்டிணன் தனது உரையில் குறிப்பிட்டார்.

Pin It