தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளுக்காக பெரியார் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் வெற்றிகளை இப்போது கண்கூடாக காண முடிகிறது. அய்.ஏ.எஸ். தேர்வுகளில் நாடு முழுதிலிருந்தும் தேர்வு செய்யப்படும் பிற்படுத்தப்பட்ட வேட்பாளர்களில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் பிற்படுத்தப்பட்டவர்களே அதிகம் என்ற விவரங்கள் வெளிவந்துள்ளன.

‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (மே 5) இது பற்றிய விரிவான செய்தி ஒன்றை முதல் பக்கத்தின் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது. ரிசர்வ் தொகுதிக்கான மொத்த இடங்களில் தமிழ்நாடு 85 சதவீதத்தைக் கைப்பற்றியுள்ளது’ என்ற தலைப்பில், அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் போல் இரு மடங்கு மக்கள் தொகைக் கொண்ட உ.பி.யை பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழ்நாடு முதலிடத்தில் நிற்கிறது.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோரில் 2004 ஆம் ஆண்டில் 29 பேரும் (118 பேர் தேர்வு பெற்ற பிற்படுத்தப்பட்டோர்), 2005 ஆம் ஆண்டில் 25 பிற்படுத்தப்பட்டோரும் (தேர்வு பெற்ற 104 பிற்படுத்தப்பட்டோரில்), 2006 ஆம் ஆண்டில் 22 பேரும் (தேர்வு பெற்ற 144 பிற்படுத்தப்பட்டோரில்) தேர்வு பெற்றுள்ளனர். இத்தனைக்கும் மத்திய தேர்வாணையம் இந்த ஆண்டுகளில் திறந்த போட்டியில் தேர்வு பெற தகுதியுள்ள பிற்படுத்தப்பட்டோரையே அதில் சேர்க்காமல், பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டின் கீழ் முறைகேடாக சேர்த்தது.

உண்மையில் தகுதியுள்ள பிற்படுத்தப்பட்டோரை, திறந்த போட்டியில் சேர்த்திருந்தால் - மேலும் பிற்படுத்தப்பட்ட அய்.ஏ.எஸ்.களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும். அதேபோல் ஷெட்யூல்டு மாணவர்களில் 2004 இல் 8 பேரும் (மொத்தம் தேர்வு பெற்ற 64 பேரில்), 2005 இல் 5 பேரும் (மொத்தம் தேர்வு பெற்ற 46 பேரில்), 2006 இல் 10 பேரும் (மொத்தம் தேர்வு பெற்ற 80 பேரில்) தமிழ் நாட்டிலிருந்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதல் 200 இடங்களைப் பெற்றுள்ள வேட்பாளர்களில் கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்தான், கூடுதலான இடங்களைப் பிடித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சார்ந்த 11 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், 2006 இல் 9 பேர் என்று முதல் 200 பேரில் இடம் பிடித்து, தமிழகத்தின் தனிச் சிறப்பை நிலைநாட்டியுள்ளனர். உ.பி. மகாராஷ்டிரா, டெல்லியிலிருந்து கூட இந்த எண்ணிக்கையில் பிற்படுத்தப்பட்டோர் இடம் பிடிக்க முடியவில்லை என்று, அந்த ஆங்கில நாளேடு சுட்டிக் காட்டியுள்ளது.

தமிழக ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் பி.சங்கர், இந்த சாதனை பற்றி கூறுகையில் தமிழ்நாட்டின் இந்த வெற்றிக்காக பெரியாருக்கு நன்றி கூற வேண்டும் என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்.

வாய்ப்புகள் வழங்கப்பட்டால் சாதனை படைக்க முடியும் என்றும், கல்விக்கான ‘தகுதி’யும், திறமையும் பார்ப்பன உயர்சாதியினருக்கே உண்டு என்பது மோசடி வாதம் என்றும், பெரியார் கூறியதோடு, பார்ப்பனர் பேசிய ‘தகுதி திறமை’ கூப்பாட்டையும் தொடர்ந்து அம்பலப்படுத்தினார். பெரியாரியம் சமூகநீதித் தளத்தில் மகத்தான வெற்றிகளைக் குவித்திருப்பதை மறுக்க முடியாது.

ஆனாலும் சாதி எதிர்ப்பு தீண்டாமை ஒழிப்பு தளத்திலும், பெண்ணுரிமை தளத்திலும் பெரியாரியலை சரியாகக் கொண்டு சென்றால், சமூக மாற்றத்தில் தமிழகம் முன்னணியில் நிற்கும் காலம் வந்தே தீரும். ஆனால் - பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் பெரியாரியலுக்கு ஆதரவு தரும் சக்திகள் தலித் உரிமையிலும், பெண்ணுரிமையிலும் பெரியாரியலைப் புறந்தள்ளி விடுகின்றனர். இந்தத் தடைகளைத் தகர்த்து உண்மை பெரியாரிய சக்திகள், மக்கள் ஜனநாயக சக்திகள், அம்பேத்கரிய சக்திகள், முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்கான உறுதியான களம் அமைக்க வேண்டும். இதுவே இந்த சாதனைகளிலிருந்து, பெரியாரியல்வாதிகள் உணர வேண்டிய பாடமாக இருக்க முடியும்.