ஈழச் சிக்கலைப் பற்றி பார்ப்பன ஊடகங்கள் தொடர்ந்து திசை திருப்பி வருகின்றன. என்ன நடந்தாலும் தமிழினம் அமைதி காக்கவேண்டுமென விரும்புகின்றன. 2001 டிசம்பர் 24 ஆம் தேதி புலிகள் சிங்கள அரசுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டபோது, மாபெரும் வெற்றியின் வாசலில் நின்று கொண்டுதான் அதைச் செய்தார்கள்.

அமெரிக்க ஆயுதங்கள் ஒருபுறம், இந்திய நெருக்குதல்கள் மறுபுறம் - இவற்றுக்கிடையே தான் மாபெரும் ஆனையிரவு இராணுவ முகாமைத் தகர்த்து, 14 பயணிகள் விமானங்களையும் அழித்து, 50,000க்கும் மேற்பட்ட போர்த் தளவாடங்களைக் கைப்பற்றி - சமநிலை இராணுவ பலத்துடன் கிறிஸ்துமஸ் நாளில் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.

ஆனால், புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிங்கள ராணுவம் செல்லக் கூடாது, துரோகக் குழுக்களின் ஆயுதங்கள் பறிக்கப்படல் வேண்டும், தமிழர் வழிபாட்டுத் தளங்களிலும், கல்வி நிலையங்களிலும் உள்ள சிங்கள இராணுவம் விலக்கப்படல் வேண்டும்.... போன்ற ஒப்பந்த விதிகள் எவற்றையும் சிங்கள அரசு கடைபிடிக்கவில்லை.

1987 அக்டோபர் 10 இல் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த போது - சிங்கள இராணுவமேகூடச் செய்யாத மாபாதகச் செயல்களைச் செய்தது. தமிழ்ப் பத்திரிகைகளின் அலுவலகங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. தமிழ் ஒளி, ஒலி பரப்புக் கோபுரங்கள் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டன.

தமிழ் மக்களுக்கு உண்மைச் செய்திகள் சென்று சேரக் கூடாது என்று திட்டமிட்டு இந்திய ராணுவம் செயல்பட்டது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றித் திரியும் இந்தியாவின் மக்கள் விரோத நட வடிக்கையை உணர்வாளர்கள் அறிந்து வேதனைப்பட்டார்கள்.

அப்படிப்பட்ட இந்திய ராணுவம் முகமூடி கிழிந்து, அவமானப்பட்டு, இந்தியா திரும்பும்போது டி.என்.ஏ. ‘தமிழ் தேசிய ராணுவம்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்து, ஆயிரக் கணக்கான இளைஞர்களை அதில் சேர்த்துவிட்டுத்தான் சென்றது. அவர்களுக்கு ஆர்.பி.ஜி. போன்ற நவீனரக ஆயுதங்களையும் ஆயிரக்கணக்கில் வழங்கியது!

ஆனால், அதில் ஒன்றில் கூட, அவை எங்கு தயாரிக்கப்பட்டன என்ற முத்திரை இல்லை! புலிகளுக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட அந்தப் படையும், இந்தியா கொடுத்துச் சென்ற ஆயிரக்கணக்கான படைக்கலன்களும் அமைதிப்படை வெளியேறிய அடுத்த கணம் புலிகளிடமே சிந்தாமல், சிதறாமல் வந்து சேர்ந்தன!

அதனால், புலிகளைப் பொறுத்தவரை போர் நடந்தால் தான் அள்ள அள்ளக் குறையாத கருவிகள் அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும்! அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளிடமிருந்து சிங்கள ராணுவம் பெற்றுள்ள ஆயுதங்கள் ஆனையிரவு, முல்லைத் தீவு போன்ற தாக்குதல்களில் புலிகளிடம் தஞ்சம் புகுந்துள்ளன. புலிகளின் ராணுவ பலத்தை அறிந்துதான் சிங்கள அரசுக்கு சமரசப் பேச்சுக்கு வந்து கொண்டிருக்கிறது.

5 லட்சம் பேருக்கும் மேல் அகதிகளாக உலகம் முழுவதும் வாழும் அவல வாழ்க்கை, சொந்த நாட்டிலேயே துணை இராணுவம் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் அட்டூழியங்கள், துரோகக் குழுக்களால் மாபெரும் தமிழ்க் கல்வியாளர்களும், தளபதிகளும், அறிவு ஜீவிகளும் அழிக்கப்படும் கோரங்கள், பிறந்த மண்ணில் கடந்த 25 ஆண்டுகளாக வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே அல்லல்பட்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாத அவலம்... 

இவைகளுக்கிடையேதான் வீரஞ் செறிந்த ஈழத் தமிழரின் போராட்டம் தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து, உலகில் முப்படைகளையும் வைத்துள்ள முதல் விடுதலை இயக்கம் என்ற பெருமையுடன் - புலிகள் தலைமையில் போராடுகின்றனர்!

உலகெங்கும் வாழும் ஆறு கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு, முகவரி வழங்கிய அந்த 35 லட்சம் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை உலகம் அங்கீகரிக்கும் நாள் நெருங்கி வருகிறது.

பேச்சில் சொல்ல இயலாத கண்ணீர் வரலாற்றைக் கொண்ட ஈழத் தமிழரின் உண்மை நிலையை வெளிப்படுத்தாமல், சிங்கள ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகை போன்று ‘இந்து’ போன்ற இந்தியப் பார்ப்பனப் பத்திரிகைகள் செயல்படுவதால்தான், சிங்கள அரசு ‘இந்து ராமுக்கு’ - சிறீலங்கா ரத்னா என்ற உயரிய விருதை அந்த நாட்டுக்கே அழைத்துச் சென்று தந்து மகிழ்ந்திருக்கிறது.

இந்தியப் பார்ப்பன அரசும் - பார்ப்பனப் பத்திரிகைகளும் - ஈழத் தமிழர் பிரச்சினையிலும், தமிழர் உரிமைப் பிரச்சினையிலும் எப்படி நாடகமாடுகிறார்கள் என்பதை இனியாவது தமிழ் இளைஞர்களும், படித்தவர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

Pin It