அண்மையில் சேலம் மாவட்டம் காவலாண்டியூர் கிராமத்தைச் சார்ந்த தலித் இளைஞரும், அதே சமூகத்தைச் சார்ந்த நாடார் வகுப்பு பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டதை எதிர்த்து, ஆதிக்க சாதியினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து, கடந்த ஜூன் 30 ஆம் தேதி ஈரோட்டில் சாதி ஒழிப்பு கூட்டியக்கம் எழுச்சியான ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

அதைத் தொடர்ந்து, கோவை அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்த ஒரு தலித் தோழர் ஆதிக்க சாதிப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை மூடி மறைக்க காவல் துறையும் துணை போகிறது. இதை எதிர்த்து, கழகத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்ட சாதி ஒழிப்பு கூட்டியக்கம் போராட்டத்தில் இறங்கியுள்ளது. செய்தி விவரம்:

கோவை சோமனூர் அருகிலுள்ள ஊஞ்சப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிற்றரசு. அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர். இவர் அதே ஊரைச் சேர்ந்த கோமதி என்ற உயர்சாதிப் (கவுண்டர்) பெண்ணை காதலித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்தை கோமதி வீட்டினரும், உறவினர்களும் கடுமையாக எதிர்த்து, சிற்றரசை கொலை செய்துவிடுவதாக மிரட்டி வந்தனர்.

கொலை மிரட்டலுக்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 6.7.08 அன்று மங்கலத்திலிருந்து பல்லடம் போகும் சாலையில் வேலாயுதம் பாளையம் அருகில் சிற்றரசு அரை நிர்வாண நிலையில் தலை நசுங்கி பிணமாகக் கிடந்தார். சிற்றரசுவின் சடலம் சட்டை இல்லாமல் காலில் செருப்பும் இல்லாமல் இருந்தது. உடல் முழுவதும் முற்களால் குத்தப்பட்டு கடுமையான காயங்களுடன் தலையில் வாகனத்தை ஏற்றி தலைநசுங்கி இறந்து கிடந்தார்.

சிற்றரசின் வழக்கை காவல்துறை விபத்து வழக்காக பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை வன்கொடுமை மற்றும் கொலை வழக்காக பதிவு செய்யக் கோரியும், சிற்றரசின் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் 23.7.08 புதன் மாலை 3 மணியளவில் சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தின் சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான் தலைமை தாங்கினார். தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் நிலவன் முன்னிலை வகித்தார். கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் கு.இராம கிருட்டிணன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சுசி. கலையரசன், விழுதுகள் அமைப்பைச் சார்ந்த தங்கவேலு, புரட்சிகர இளைஞர் முன்னணி முருகேசன் உள்ளிட்ட பல்வேறு இயக்கத்தவர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் கழகத்தின் சார்பில் செயற்குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி, வடக்கு மாவட்ட தலைவர் சு.துரைசாமி, பொள்ளாச்சி வட்டத் தலைவர் கா.சு.நாகராசன், கோவை மாநகர தலைவர் ம.ரே. இராசக்குமார், செயலாளர் வே.கோபால், இருகூர் செந்தில், திருநாவுக்கரசு பகுதி கழக செயலாளர்கள் சண்முகசுந்தரம், அண்ணாமலை, சத்யா, மாணிக்கம், நாகராசு, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் மணிகண்டன், பால்முரளி, மாசிலாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சிற்றரசின் வழக்கை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யவும், மறு விசாரணை கோரியும், மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் இரா.அதியமான், சுசி. கலையரசன், நிலவன் உள்ளிட்டோர் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Pin It