1996 என்று நினைக்கிறேன். நான் மதுரையில் விருதுநகர் இந்து நாடார் பள்ளியில் படித்து வருகிறேன். அன்று பள்ளி முடிந்து திரும்பும் சமயம் கோரிப்பாளையம் வழியே செல்லும் பேருந்துகள் அனைத்தும் திருப்பி விடப்பட்டன. "என்ன?' என்று கேட்டதற்குக் கோரிப்பாளையம் தேவர்சிலையே யாரோ அவமதித்து விட்டார்களாம். அதனால் மதுரையே கலவரப் பகுதியாக இருக்கிறது என்றார்கள். அன்று தேவந்திரகுல வேளாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஊர்வலம் சென்றது. அந்த ஊர்வலத்தில் சென்றவர்களில் யாரோ ஒருவர்தான் தேவர் சிலையை அவமானப்படுத்தி விட்டார் என்று தகவல் பரவியது. உடனே தேவந்திர குல வேளாளர் மக்கள் அதிமாக இருக்கக்கூடிய (பள்ளர் சமூகத்தினர் தம்மை தேவந்திர குல வேளாளர் என்றுதான் கூறிக் கொள்கிறார்கள். அதுவும் தற்போது தேவந்திர குல வேளாளர் என்கிற பெயரில் மட்டுமே தங்களை அடையாளப்படுத்த வேண்டும் என்றும், அதுதான் தங்களது வரலாற்றை மீட்டெடுக்க முடியும் என்பதும் அவர்களின் முதன்மையான அரசியலாக இருக்கிறது.) அவனியாபுரம், அனுப்பானடி, அருப்புக்கோட்டை சாலையிலுள்ள தேவந்திர குல மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.

jayalalitha thevar 370தென்மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், அதன் எதிர்வினையாகத் தேவந்திரகுல வேளாளர் மக்களும் இமானுவேல் சேகரனுக்கு நினைவேந்தல் நடத்துவது என்கிற முடிவிற்கு வந்தனர். அதன் ஆரம்ப கட்டமே மதுரை கோரிப்பாளையத்தில் அன்று நடந்த தேவந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் பேரணி.

முதலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்பவர் யார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கொண்டையங்கொட்ட மறவர் சமூகத்தை சேர்ந்த தேவர் இயல்பாகவே நாடார் சமூக எதிர்ப்புணர்வுடன் வளர்ந்தவர். இவருடைய அப்பா உக்கிரபாண்டித்தேவர் நாடார் எதிர்ப்பியக்கம் கட்டியவர். நாடார் சமூகம் கிறித்தவ மதத்தை தழுவியதும். திராவிட இயக்கங்களுடன் கொண்டிருந்த தொடர்பின் காரணமாகவும் பொருளாதார ரீதியில் அடைந்த வளர்ச்சி கண்டு முத்துராமலிங்கத் தேவர் ஆத்திரம் கொண்டார். ஆகையால் இயல்பாகவே இந்துத்துவ சிந்தனைகளை உள்வாங்கி கொண்டு பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் கடுமையாக விமர்சித்து வந்தார். வாஞ்சிநாதன், இராசாசி போன்ற பிற்போக்குப் பார்ப்பனத் தலைமையை ஏற்றுக் கொண்டார்.

பார்ப்பானுக்கு மறவன் அடிமை, ஆனால் மறவனுக்கு நாடாரும், பள்ளரும் அடிமை என்கிற இந்துத்துவ மனநிலைதான் அவருடைய செயல்பாடுகள் அனைத்திற்கும் வித்தாக இருந்தன. மறவனுக்கும் சூத்திரப் பட்டம் போக வேண்டும். பள்ளனுக்கும் பஞ்சமப் பட்டம் போக வேண்டும் என்று போராடிய பெரியாரின் கொள்கைகளைத் தென் தமிழகத்தில் உள்ள கள்ளர் மறவர் சமூகங்கள் பின்பற்றாமல் போனதற்கு முத்துராமலிங்கத் தேவர் மிக முக்கிய காரணியாகும். அதனால்தான் காணத்தகாத சமூகமாகக் கொடுமைப்படுத்தப்பட்ட நாடார் சமூகம் குறுகிய காலத்தில் அடைந்த வளர்ச்சியில் பாதியளவு கூட மறவர் மற்றும் கள்ளர் சமூகங்கள் அடைய முடியவில்லை. 

தேவர் பட்டம் போட்டுக் கொள்ளும் கள்ளர் மறவர் அகம்படையார் சமூகங்கள் எந்தக் காலத்திலும் தன்மான உணர்வு பெற்றுவிடக்கூடாது என்கிற நோக்கத்துடன்தான் தேவர் ஜெயந்தி இன்றளவும் அரசியல்வாதிகளால் கொண்டாடப்படுகிறது. சுப்ரமணியசுவாமி போன்ற நம் இன எதிரிகள் தேவர் ஜெயந்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் கவனிக்க வேண்டும்.தேவர் ஜெயந்திக்கு மாலையிடும் தமிழ்த் தேசியவாதிகள், மற்றும் பொதுவுடைமைவாதிகள் (வலது இடது உட்பட) அனைவரும் தங்கள் நிலைப்பாட்டைத் தர்க்க ரீதியாக விளக்க வேண்டும். முதலில் இந்தத் தேவர் ஜெயந்தி சோலை குடும்பர் என்கிற பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவரால்தான் துவக்கி வைக்கப்பட்டது. தேவரைத் தங்களது தெய்வமாக நினைத்த அடிமை மனநிலை கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் சிலர்தான் இதனை செய்து வந்தனர். பிறகுதான் கொண்டைய கொட்ட மறவர் சமூகம் இதைக் கையில் எடுத்தது. பின்னர் அரசியல் இலாபத்திற்காக முக்குலத்தோர் என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. அகம்படையார், கள்ளர், மறவர் என மூன்று சாதிகளையும் ஒன்றாக இணைத்து முக்குலத்தோர் என்று உருவாக்கப்பட்டது. இந்த மூன்று சாதிகளுக்குள் கொள்வினை கொடுப்பினை இல்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் அகமுடையார் சமூகம் சற்று முன்னேறியச் சமூகம். அவர்கள் மருதுபாண்டியர் ஜெயந்தியின் மூலமாக சமீபகாலமாக தனித்து அடையாளம் காணவே விரும்புகின்றனர். மருது பாண்டியர் ஜெயந்தியில் கள்ளர்களோ மறவர்களோ கலந்து கொள்வதில்லை.

குறிப்பாகத் தேவர் ஜெயந்தி சமயத்தில் கள்ளருக்கும் அகம்படையாருக்கும் இடையே சண்டை நடைபெறுவது மதுரை நகரங்களில் வாடிக்கை. இன்று இந்தச் சாதிகளை விட அரசியல் கட்சிகளே தேவர் ஜெயந்தியை நடத்துவதில் ஆர்வமாக இருக்கின்றனர். தென் மாவட்டங்களில் அடர்த்தியாக இருக்கும் மறவர் உட்பட தேவர் சமூகங்களின் ஆதரவைப் பெறுவதற்காக அரசியல்வாதிகள் நடத்தும் கூத்துதான் இது. இதனால், மறவர், கள்ளர், பள்ளர் என அனைத்துச் சமூக இளைஞர்களும் தங்களது அடுத்த கட்ட நகர்வை நோக்கி நகராமல் இன்னும் காலத்தின் ஓட்டத்தில் பின்னோக்கியே நகர்த்தப்படுகிறார்கள்.

தேவர் ஜெயந்தி என்னும் பிற்போக்கு விழாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்பதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். தேவரைத் தெய்வமாக்கி மறவர் சமூக இளைஞர்களின் வாழ்க்கையைப் பழுதாக்கியதில் வைகோவிற்கு முதன்மையான பங்குஉண்டு. சமீபத்தில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் வைகோ அவர்கள், முத்துராமலிங்கத் தேவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் தமீழீழம் கிடைத்திருக்கும்' என்று உணர்ச்சி மேலிடப் பேசியுள்ளார். ஈழம், சுற்றுசுழல், தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து களம் காண்பவர் வைகோ. அவரும் தேவர் ஜெயந்தி கொண்டாட்டத்தைச் சிலாகிப்பவரில் ஒருவராக இருப்பது முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கு நெருடலாகவே இருக்கிறது. தேவர் பட்டம் போட்டுக் கொள்ளும் சமூகங்கள் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டுமானால், தேவர் குரு பூசை நிறுத்தப்படவேண்டும். சரி தேவர் ஜெயந்தி விழாவின் பின்ணனியில் உள்ள அரசியல் குறித்தும், இந்துத்துவ கருத்தியல் குறித்தும் பார்த்தோம். அடுத்தப்படியாக இமானுவேல் சேகரன் ஜெயந்தி பற்றிப் பார்ப்போம்.

இமானுவேல்சேகரன் ஜெயந்தி என்பது கடந்த ஐந்து வருடங்களாகத் தேவர் ஜெயந்திக்குப் போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.தேவர் ஜெயந்தி என்றால் எப்படிப் பதற்றம் ஏற்படுமோ அதை போல் இமானுவேல்சேகரன் ஜெயந்திக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்ற நிலை உருவாகிறது. இளைஞர்கள் மொட்டையடிக்கிறார்கள். பெண்கள் முளைப்பாரி எடுக்கிறார்கள். தேவர் ஜெயந்திக்குச் செய்யும் அனைத்தையும் இங்குச் செய்ய முற்படுகிறார்கள். தேவர் ஜெயந்தி பிற்போக்காக இருக்கும் பட்சத்தில் இமானுவேல் ஜெயந்தியும் பிற்போக்காகத்தான் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இங்குதான் தோழர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்.

வரலாறு நெடுகிலும் ஆதிக்க சக்திகள் பிற்போக்காக இருப்பார்கள். ஒடுக்கப்பட்டவர்கள் முற்போக்காளர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஏனென்றால் தாங்கள் கொண்ட முற்போக்குச் கொள்கை மட்டுமே அவர்களுக்கு விடுதலை பெற்று தரும். முதலில் குரு பூசை என்கிற வார்த்தை ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான கருத்தியலைத் தாங்கியது என்பதை உணர வேண்டும். குரு என்கிற பதவியும் குருகுலம் என்கிற அமைப்பும் சாதி தூய்மையைப் பேணுவதற்கு உருவாக்கப்பட்ட அமைப்புகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களைக் கடவுளாக்குவதன் பின்ணனி அடிமைகளை உருவாக்குவதுதான் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

உண்மை இப்படியிருக்க பாட்டாளிகளின் பங்காளனாகிய இமானுவேல் சேகரனைப் பகவானாக்கிப் பார்க்கும் உங்கள் செயல் வரலாற்றுப் பிழையை உருவாக்கும். இமானுவேல் சேகரன் யார்? தேவந்திர குல வேளாள மக்களுக்காக மட்டும் தான் குரல் கொடுத்தாரா? முகவைச் சீமையிலுள்ள அனைத்துத் தீண்டப்படாத மக்களுக்காகவும் குரல் கொடுத்தார். காணத்தகாத சமூகமாகச் சித்தரிக்கப்பட்ட நாடார் சமூகத்திற்காகவும் குரல் கொடுத்தார். காமராஜரைத் தனது தலைவராக ஏற்றுக் கொண்டார். முத்துராமலிங்கத் தேவரைத் தலைமையாக ஏற்றுச் செயல்பட்ட பார்வார்டு பிளாக் கட்சிக்குக் கடும் போட்டி கொடுக்கும் காங்கிரசுக்காரராகத் திகழ்நதார். இந்துத்துவ சிந்தனைகளை உள்வாங்கிய முத்துராமலிங்கத் தேவருக்கு நேர் எதிராகக் கிறித்தவத்திற்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் மாறுவதை ஆதரித்தார். கிறித்தவத்திற்கு மாறிய நாடார்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் பணியாற்றினார். கட்சி ரீதியாகவும், மதரீதியாகவும் இமானுவேல் சேகரன் தனக்கு எதிர்நிலை எடுத்தது, தேவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இவைதான் பிரச்சனைக்கான காரணங்கள். குறிப்பாகத் தன்னுடைய அரசியல் எதிரி காமராசருக்கு ஆதரவாக இமானுவேல்சேகரன் எடுத்த முடிவு தேவருக்கு ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. ஆக இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஓர் உண்மை நமக்குப் புலப்படும். இமானுவேலின் செயல்பாடுகள் அனைத்தும் இந்துத்துவத்திற்கு எதிர்ப்பாகவும், தேவரின் செயல்பாடுகள் அனைத்தும் இந்துத்துவத்திற்கு ஆதரவாகவும் இருப்பதை நாம் உணரலாம். ஆனால் தற்போதுள்ள தேவந்திரகுல அமைப்பினர், தேவர் ஜெயந்தியில் நடக்கும் அனைத்துத் பிற்போக்குத் தனங்களையும் நாங்களும் செய்வோம் என்கிறார்கள். 

இவர்களின் செயல்பாடு இமானுவேல் சேகரன் என்கிற அப்பழுக்கற்ற களப்பணியாளரை அவமானப்படுத்தும் செயலாகும். அவர்களுக்குப் போட்டியாக நாங்களும் ஜெயந்தி நடத்துகிறோம் என்றால் இழப்பை ஒடுக்குப்பட்ட மக்களே சந்திப்பார்கள். வாக்கு அரசியலுக்காகத் தேவர் ஜெயந்தி பட்டை தீட்டப்படுகிறது. சாதி உணர்வு கூர்மைப்படுத்தப்படுகிறது. இதை அனைத்துக் கட்சிகளும் தெரிந்தே செய்கின்றனர். கடந்த முறை இமானுவேல் சேகரன் ஜெயந்திக்குச் சென்ற தோழர்களைக் காவல்துறையினர் குருவி சுடுவது போல் சுட்டார்களே. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்ன நியாயம் கிடைத்தது. சுட்டுக் கொலை செய்த காவல்துறையினருக்குச் சட்டசபையில் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டது. அப்போது, தேவந்திர குல வேளாளர் உட்பட அனைத்துத் தலித் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைதி காத்தார்களே. அது மட்டுமா? 7 தேவந்திர குலவேளாளர்களைச் சுட்டுக் கொன்ற மறுகணமே சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் அதிமுக அரசுக்கு ஆதரவாகத் புதிய தமிழகம் உட்பட அனைத்து தேவந்திரகுல வேளாளர் கட்சிகளும் பிரச்சாரம் செய்த கொடுமையை என்ன வென்று சொல்வது. உங்களை இமானுவேல் சேகரன் ஜெயந்தி நடத்த சொல்லும் இந்தத் தலைவர்களின் இலட்சணம் தெரிகிறதா? உங்களிடம் சாதி உணர்வை விதைப்பதன் மூலம் தனக்கான பதவியைத் தேடிக்கொள்வதுதான் அவர்களின் நோக்கம். அவர்களிடம் இருப்பது சாதிப்பாசம் கிடையாது. சட்டமன்றப் பாசம்தான்.

இமானுவேல் தலித் என்பதால் ஆதிக்க சாதிக்குக் கோபம் வரவில்லை. அவருடைய முற்போக்குச் சிந்தனைகளும், சீர்திருத்தச் செயல்பாடுகளுமே அவரது படுகொலைக்குக் காரணமாக அமைந்தது. இந்த உண்மைகளை மறந்துவிட்டு, தேவந்திர குல வேளாளர் கூட்டமைப்பினர் அவருடைய போர்க்குணத்தை வலியுறுத்தாமல், அவரைப் பூசை செய்வது என்கிற நடைமுறை தேவந்திரகுல மக்களின் அரசியல் பரிணாமத்தைத் தடுக்கும் முயற்சியாகும். தேவந்திர குலமக்களின் வரலாறு என்பது பார்ப்பன எதிர்ப்புப் பாரம்பரியம் கொண்டது. 

மன்னர் காலத்தில் அரசுக்கு எதிராகப் போராடிய இடங்கை பிரிவு மரபினர். தமிழுக்கும் உழுவுக்கும் நிந்தனை வந்தபோதெல்லாம் கடுங்கோபம் கொண்ட இனப்பற்றாளர்கள். இந்தியத் தேசியத்தையும், இந்துத் தேசியத்தையும் எதிர்த்துப் பெரியார் சமர் செய்த போது அவருடன் இணைந்து களம் கண்டவர்கள். இத்தைகய பாரம்பாரியம் கொண்ட இம்மண்ணின் பூர்விகக் குடிகளைத் தனிமனிதத் துதியிலும், பூசை வழிபாட்டிலும் முடக்கி விடக் கூடாது. தேவந்திர குல மக்களுக்கு இந்தச் சாதித் தலைவர்கள் கொடுக்கும் பொங்கச் சோறும் வேண்டாம்; பூசாரித் தனமும் வேண்டாம். போராளிகளாய் அணி திரளுங்கள். போராளித் தலைவன் இமானுவேல் சேகரனைத் தென்தமிழகத்தோடு முடக்கிவிடாமல், வடதமிழகத்தில் ஆதி திராவிடர்களிடம் கொண்டு செல்லுங்கள். அருந்ததிய மக்களிடமும் கொண்டு செல்லுங்கள். மறவர் சமூகத்திடமும் இமானுவேல் சேகரனைக் கொண்டு செல்லுங்கள். மறவர் சமூக மக்களையும் முற்போக்காளர்களாக மாற்றுகிற பணி உங்கள் முன்னால் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் பெரியாரையோ அம்பேத்காரையோ தலைவர்களாக ஏற்கவில்லை. அவர்களையும் இந்துத்துவ மாயையிலிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு முற்போக்காளர்களுக்கு உண்டு.

இந்துத்துவத்திற்கு எதிரான வீரிய போருக்கு ஆயத்தமாகுங்கள். இதுவே நமது முதற்பணி. தமிழ்ச் சமூகத்திற்குக் குரு பூசைகள் தேவையில்லை. பெரியார் அம்பேத்கர் இமானுவேல்சேகரன் இவர்களின் வரலாற்றை முழுமையாக உள்வாங்கிய தலைமைப் பண்புதான் தேவை.

- ஜீவசகாப்தன்

Pin It