இந்திய விடுதலையின் 64வது ஆண்டை சுவைக்கப்போகிறோம். தொலைக்காட்சியின் முன் நம்மை அமரவைத்து விஜய், சிம்பு, தனுஷ், நயன்தாரா, திரிஷா, நமீதா போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களெல்லாம் (?) இந்திய விடுதலைக்காக அவர்கள் பட்ட பாட்டையெல்லாம் கொஞ்சல் மொழியில் நமக்கு பேட்டியாக கொடுக்கப் போகிறார்கள். நாமும் கண் கொட்டாமல் பார்க்கத்தான் போகிறோம். நாட்டுப்பற்று எங்களுக்கு இல்லையா? இதோ இந்தப்படத்தைப் பார் என முஸ்லீம்களை மட்டுமே தீவிரவாதியாக காட்டும் ‘ரோஜா’ திரைப்படத்தையும் திரையிடுவார்கள்.

 இந்திய விடுதலையின் வீரம் செறிந்த வரலாறுகளை, மறக்க முடியாத, மறக்கக்கூடாத அந்த நாட்களை, இன்னுயிரை ஈந்து விடுதலைக்கு வித்திட்ட தியாகிகளை, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று விடுதலையின் வெற்றிக்களிப்பை நமக்களித்து இன்றும் நம்முடன் உயிருடன் இருக்கக்கூடிய வீரர்களை நினைவுகூர வேண்டிய அந்தத் திருநாளில் நடிகர் நடிகைகளின் பேட்டிக் கொடுமைகளை இன்னும் எவ்வளவு காலம்தான் சகித்துகொள்ளப் போகிறோம்?

இந்திய வறுமைக்குக் காரணம்!

 வறுமையே வெளியேறு, வேலையின்மையே வெளியேறு என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சிக்குவந்து, அதிகமுறை ஆட்சிப் பொறுப்பேற்ற கட்சி என்ற பெருமையையும் பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. ஆனால், இன்று வரை அந்தக் கட்சியினால் வறுமையையும் வெளியேற்றமுடியவில்லை. வேலையின்மையையும் வெளியேற்ற முடியவில்லை. அப்படி வெளியேற்றுவதற்கு தெளிவானதொரு பார்வையும் காங்கிரஸ் கூட்டணியில் இல்லை என்பதுதான் உண்மை.

 நாட்டில் நிலவுகின்ற வறுமையும், வேலையின்மையும், வீடின்மையும், நிலமின்மையும் இந்திய ஆட்சியாளர்களின் பொருளாதார கொள்கைகளின் தோல்விகளுக்குப் பிறந்த குழந்தைகள்தான். பொதுவில் வைத்து அனைவருக்கும் சரிசமமாக பிரித்தளிக்கவேண்டிய இந்திய செல்வங்களை இருப்பவன் இளைத்தவன் என பார்த்து பகிர்ந்தளித்த மோசமான கொள்கைகள்தான் வறுமைக்குக் காரணம்.

என்ன நியாயம்?

 இந்திய மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கிய வங்கி, இன்சூரன்ஸ் பொதுத்துறை பங்குகளை விற்பதற்கும், சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு இந்திய நிலங்களை வாரி வழங்குவதற்கும், அடிமைத்தனமான அணுசக்தி உடன்பாட்டை அமல்படுத்துவதற்கும், நாட்டில் 70 சதமானோர் நம்பியுள்ள விவசாயத்தில் அந்நியரை நுழைப்பதற்கும், பலகோடி குடும்பங்கள் நம்பியிருக்ககூடிய சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு முதலாளிகளை நுழைப்பதற்கும், வேலைவாய்ப்புத் தருகிறோம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்து இந்திய தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்கும், ரிலையன்ஸ் அம்பானிகளுக்கும் ஏனைய முதலாளிகளுக்கும் எல்லையில்லாமல் பட்ஜெட்டில் வரிச்சலுகைகளை வாரி வழங்குவதற்கும் இவையெல்லாவற்றையும் விட ஏற்கனவே அனைவருக்குமான கல்வி கிடைப்பதில் பிரச்சனை இருக்கும்போது இந்தியக்கல்வியில் அந்நியப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதற்கும் குறைந்த காலத்தில் திட்டமிட்டு வெற்றிகரமாக அமல்படுத்தும் போது, வறுமை ஒழிப்பிற்கும், அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்கும், அனைவருக்குமான வேலை கிடைப்பதற்கும் மட்டும் நீண்டகால திட்டம் எனப் பெயரிட்டு காலம் கடத்தி இந்திய மக்களை ஏமாற்றுவது என்ன நியாயம்?

போதுமானதா?

 நாடு சுதந்திரமடைந்து 64வது ஆண்டு முடிவடையும் தருவாயில், நாம் அடைந்துள்ள முன்னேற்றம் போதுமானதா? வளர்ந்துள்ள மக்கள் தொகைக்கேற்ப ஏழை எளிய மக்களின் வாழ்வுரிமையில் தேவையான அளவு முன்னேற்றம் கண்டுள்ளதா? அனைவருக்குமான கல்வியும் வேலையும் போதுமான அளவில் கிடைத்துள்ளதா? ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களிலும் அரசு வகுத்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேறியுள்ளதா? ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டங்களில் வகுத்த திட்டங்களின் தோல்விகளுக்கு உரிய காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு இல்லை என்ற பதில்தான் எழும். அப்படி எழும்போது நம்மீது ஆட்சி செலுத்துபவர்களின் நடவடிக்கை குறித்து நாம் ஐயப்பட்டுதான் ஆகவேண்டும்.

 மக்கள் சார்ந்தத் திட்டங்கள் அனைத்தும் இந்திய மக்களை மனதில் வைத்து துவங்கப்பட்டி ருந்தால் இவையனைத்தும் நிச்சயமாக வெற்றியைத் தந்திருக்கும். ஆனால், மக்களுக்கு செய்வதாகக் கூறி பெருமுதலாளிகளை மனதில் வைத்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. லாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட முதலாளிகளால் சேவை செய்யமுடியாது.

திருந்துவதாய்த் தெரியவில்லை!

 உள்நாட்டு தொழில்களை நவீனப்படுத்தி ஊக்கப்படுத்தவும், வேளாண்துறையை விரிவாக்கவும், அரசு முதலீடுகளை அதிகப்படுத்தி திட்டமிட்டு செயல்படுத்தியிருக்க வேண்டிய மத்திய அரசு இந்திய, அந்நிய பெருமுதலாளிகளின் நலனை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதால் இந்திய சிறுதொழில்கள் நலியத்துவங்கிவிட்டன.

 இதற்கான சிறந்த உதாரணம்தான் போபால் விஷவாயுக்கசிவினால் ஏற்பட்ட பேரழிவும், வீட்டுக்கு வந்த விருந்தாளியை அனுப்பியதுபோல் கொலைகாரனை அனுப்பியதும், அதனையொட்டி 25 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த அநீதியான தீர்ப்பும். இதன்பிறகும் காங்கிரஸ் கூட்டணி திருந்துவதாய்த் தெரியவில்லை. ஏற்றுக்கொள்ள முடியாத அணுசக்தி இழப்பீட்டு மசோதா, அந்நிய பல்கலைக்கழகத்தை அனுமதிப்பது போன்றவற்றைத் தொடர்கிறது.

 காங்கிரசுக்கு மாற்றாக ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்த பாஜக கூட்டணி ஆட்சியும் காங்கிரஸ் போட்டுவைத்த அதே பாதையில் விலகாமல் முதலாளித்துவ பாசத்துடனே பயணித்தது.

பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவையாக தமிழக அரசு!

 தமிழகத் தொழிலாளி வர்க்கம் இதுவரை கண்டிராத அடக்குமுறைகளைக் கண்டுகொண்டிருக் கின்றது. ஹுண்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர்கள் படுகின்ற பாடு சொல்லொன்னா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தொழிற்சங்கம் வைப்பது இந்திய சட்டத்தில் உரிமை என சொல்லப்பட்டிருந்தாலும் அது ஏட்டுச்சுரக்காயாகவே வலம் வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் கைத்தடிகளாக தமிழக அரசும் தமிழக தொழிலாளர் துறையும் செயல்பட்டு வருகிறது.

 திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் தொழில் நிலைமை தமிழக அரசின் குருட்டுப்பார்வையால் மிகவும் மோசமான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. வேலையிழப்பும் கூலியிழப்பும் உயர்ந்துவருகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்குகின்ற தமிழக அரசு, சிறுதொழில் நிறுவனங்களுக்கும் சிறுதொழில் முனைவோருக் கும் அளிக்கும் பரிசு இடைவிடாத பல மணிநேர மின்வெட்டுதான். மத்திய அரசிடமிருந்து தமிழகத் துக்கு அளிக்க வேண்டிய மின்சாரத்தைக்கூட கேட்டுப் பெறமுடியாத அளவிற்கு மத்திய நாற்காலி பாசம் ஒட்டிக்கொண்டுள்ளது. துணைமுதல்வரோ சென்னையில் கூவத்தை சுத்தம் செய்யக்கூட சிங்கப்பூர் முதலாளிகளை வைத்துதான் திட்டமிடுகிறார்.

 மத்திய மாநில அரசுகளின் புதிய பொருளாதார கொள்கைகளையும் இன்னபிற கொள்கைகளையும் உலகவங்கியின் கட்டளைக் கேற்ப செயல்பாடுகளை தீவிரப்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதன் விளைவு ஏழை மேலும் ஏழையாகவும், பணம் படைத்தோர் மேலும் பணக்காரராகவுமே உதவுகிறது.

 பெற்ற சுதந்திரத்தை இந்திய ஏழை எளிய மக்களுக்குப் பயன்படுத்தாமல் இந்திய பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கும் பயன்படுத்தும் போது தொழிலாளி வர்க்கம் இன்னுமொரு சுதந்திர போராட்டத்தைத் துவக்கும். அதற்கு செங்கொடி இயக்கம் தலைமைதாங்கும். சுதந்திர போராட்டங்களைத் தடியடிகளாலும் துப்பாக்கிச்சூடுகளாலும் அச்சுறுத்திவிட முடியாது என்பதை, மத்திய மாநில அரசுகளுக்கு 1947 ஆகஸ்ட் 15 நினைவூட்டிக் கொண்டே இருக்கட்டும்! 

 - இரா.சரவணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It