பார்ப்பான் கொலை செய்தால் - அவன் முடியை வெட்டினால் போதும்; சூத்திரன் கொலை செய்தால் - அவன் தலையை வெட்ட வேண்டும் என்று கூறுகிறது ‘மனு நீதி’. அந்த மனுநீதி இப்போதும் உயிருடன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு சுப்ரமணிய சாமி சம்பவமே சான்று.

சில அழுகிய முட்டைகள் நீதிமன்றத்தில் அந்தப் பார்ப்பனர் மீது வீசப்பட்டதால் நாடே அலறுகிறது. பூகம்பம் நிகழ்ந்து விட்டதைப் போல் பார்ப்பன ஏடுகள் பதறுகின்றன. ‘இந்து’ பார்ப்பன ஏடு ஆசிரியருக்கு கடிதங்களையும், முன்னாள் நீதிபதி கருத்துகளையும், பார்ப்பன சங்க கருத்தையும் கேட்டுப் பெற்று, 2 பக்கங்களை ஒரு தனி மனிதனுக்காக அவன் பார்ப்பான் என்பதற்காக ஒதுக்கி செய்திகளை வெளியிடுகிறது.

மிரண்டு போன தமிழக அரசு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி பெறாமலே நீதிமன்றத்துக்குள் காவல்துறையை முறைகேடாக நுழைத்து, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மண்டையை உடைக்கிறது. வழக்கறிஞர்கள் கார்களை காவல்துறையே உடைத்து நொறுக்குகிறது. இவ்வளவுக்கும் காரணம் சுப்பிரமணிய சாமி என்ற பார்ப்பான் மீது விழுந்த நான்கு அழுகிய முட்டைகள் தான்.

தில்லை நடராசன் கோயிலை தீட்சதப் பார்ப்பனர்களின் சொத்தாகவே நீடிக்க வேண்டும் என்பதற்காக தீட்சதப் பார்ப்பனர்களுக்காக தமிழக அரசை எதிர்த்து, வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள வந்தவர்தான் சுப்ரமணியசாமி. ஆனாலும் பார்ப்பன அதிகார மய்யத்தைக் கண்டு ஆடுகிறது, தி.மு.க. அரசு.

4 முட்டைகள் பார்ப்பான் மீது விழுந்தால் நூறு ‘சூத்திர’ வழக்கறிஞர்கள் மண்டை உடைக்கப்படும் என்ற ‘மனுநீதி’யை கி.வீரமணி கூறும் “பெரியார் ஆட்சி” நிலைநிறுத்தியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் முல்லைத் தீவில் போர் நிறுத்தப் பகுதியில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் சிங்கள ராணுவத்தின் ரசாயனக் குண்டுவீச்சால் பிணமாகி வரும் செய்திகள் வரும்போது இத்தகைய தீவிரமான நடவடிக்கைகள் எதுவுமில்லை; அரசு பதறவில்லை; பார்ப்பன ஏடுகள் கொதிக்கவில்லை. கேவலம், நான்கு முட்டைகளின் சக்திக்கு முன் ராசயனக் குண்டுகள்கூட வலிமையிழந்து போய்விடுகின்றன.

காரணம், முட்டை விழுந்தது - ஒரு பார்ப்பான் மீது; அந்தப் பார்ப்பானுக்கு தமிழ்நாட்டில் அமைப்பு கிடையாது; ஆதரவு கிடையாது. ஆனால், அதிகாரம் - பார்ப்பன அதிகார மய்யம் சூழ்ந்து நிற்கிறது. இதுதான், இந்தியா! இதுதான் தமிழ்நாடு!

Pin It