கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மண்ணின் உணர்வுகளைப் புரிந்திடாத பார்ப்பனர்களும், வடநாட்டவர்களும் - தமிழகத்தில் உயர் பதவிகளில் இருப்பதை, பெரியார் திராவிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுட்டிக் காட்டி கண்டித்தார்.

கோவையில் டிசம்பர் 24 அன்று குத்தூசி குருசாமி படிப்பகத்தைத் திறந்து வைத்து கொளத்தூர் மணி ஆற்றிய உரை:

சட்டத்தைப் பாய்ச்சுகிறபோது அதை பாய்ச்சிய காவல்துறை ஆட்சித் துறையினரைப் பற்றி சிந்திக்க வேண்டியதும் இருக்கிறது. தமிழ்நாட்டின் மாவட்ட வடஆட்சித் தலைவர்களாக, காவல்துறை கண்காணிப்பாளராக வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். காவல்துறைத் தலைவராக முகர்ஜி என்ற பார்ப்பனர் இருக்கிறார். அவர் அறிக்கை விடுகிறார், கடவுள் சிலையை சேதப்படுத்தினால் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று! இரண்டு, மூன்று நாட்கள் கழித்து காவல் துறை துணை அதிகாரி சொல்லுகிறார், இந்த சட்டம் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்களுக்கும் பொருந்தும் என்று! ஆனால் காவல்துறைத் தலைவர் தமிழ்நாட்டுக்காரராக இருந்தால் தலைவர் சிலையை சேதப்படுத்தியவருக்கென முதலில் சொல்லியிருப்பார்.

பின்னர்தான் கடவுள் சிலையை சேதப்படுத்தியவர்களுக்கு பொருந்தும் என்று சொல்லியிருப்பார். ஆனால் காவல்துறைத் தலைவர் வடநாட்டுப் பார்ப்பனராக இருக்கிறார். தலைமைச் செயலாளர் வடநாட்டுப் பார்ப்பனராக இருக்கிறார். உள்துறைச் செயலாளர் பார்ப்பனராக இருக்கிறார்.

நம்முடைய தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் போட்ட ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் வடநாட்டுப் பார்ப்பனராக இருக்கிறார். பெரம்பலூரில் வழக்குப் போட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் வடநாட்டுக்காரராக இருக்கிறார். ஆகவே இந்த மண்ணின் மனப்பான்மை புரியாதவர்கள் அதிகாரிகளாக இருக்கிற காரணத்தால் இந்த எழுச்சியைக்கூட கலவரமாகப் பார்க்கிறார்கள். அதைத் தான் நாம் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டியது இருக்கிறது.

லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்று மயிலாப்பூரில் ஒரு சங்கம். அங்கே பெரியாரை பேச அழைத்தார்கள். யுவர் சங்கம் என்றால் இளைஞர் சங்கம் என்று கருதித்தான் பெரியாரும் போயிருக்கிறார். பின்னால் தான் பார்ப்பன கிழவர்கள் எல்லாம் கைத்தடியோடு உட்கார்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறார். ஒரு காலத்தில் இளைஞராக இருந்தவர்கள் வைத்த சங்கம். 1953 இல் பெரியார் பேசினார். பேசுகிறபோது பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். பகிர்ந்து கொண்டபோது ஒன்றைச் சொன்னார்.

இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த சீனிவாசராகவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இப்பொழுது உங்களுக்கும் எங்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. என்னை அழைத்தவர்கள் பார்ப்பனர்கள்தான். பார்ப்பனர்கள் இந்த நாயக்கரை ஏன் அழைத்தீர்கள் என்று கேட்டார்களாம். கேள்விப்பட்டேன் என்று எல்லாம் சொல்லிவிட்டு சொல்கிறார்.

உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வேறுபாடு. நாங்கள் பிடிக்கிற குழாயில் நீங்களும் தண்ணீர் பிடிக்கிறீர்கள். எங்களோடு பேருந்தில் அமர்ந்து பயணம் செய்கிறீர்கள். எல்லாம் எங்களோடு வந்து விட்டீர்கள். ஒன்றே ஒன்று அந்த கருவறையில் தான் கொஞ்சம் வைத்திருக்கிறீர்கள். அதையும் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் சரியாகப் போய்விடும். இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் என்னுடைய வருங்கால சந்ததிகள், என்னைப் போல் பொறுமையாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது என்று பெரியார் சொன்னார், 53 இல் சொன்னார். நாம் விரைவில் தீர்த்துக் கொள்ளணும் என்று.

அழகிரிதான் பேசுவாராம் - பார்ப்பனர்களே பெரியாரை உங்கள் எதிரி என்று கருதாதீர். பெரியாரின் வாழ்நாள் காலம்தான் உங்களுக்கு வாய்தா காலம் என்று அவர் சொல்லுவாராம். எனவே திருத்திக் கொள்ளுங்கள்; வருகிறவர்கள் எங்கள் இளைஞர்கள். கட்டுப்படுத்த பெரியார் இல்லாத காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது என்று அன்று பெரியார் சொன்னார். ஆனால், அதற்குப் பின்னால் 33வது நினைவு நாள் கொண்டாட இருக்கிற இந்த நேரத்தில் தான் இந்த செயல்கள் நடக்கத் தொடங்கியிருக்கிறது என்பதை அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

இந்துத்துவ சக்திகள் தாங்கள் நினைத்தது நடக்கும் என்று வடநாட்டில் கருதலாம். ஆனால் தமிழ்நாட்டில் பெரியார் பண்படுத்திய மண்ணில் துணிச்சலாக இப்படி எல்லாம் நடப்பதற்கு பெரியார் தொண்டர்களாகிய நாம் உரிய முறையில் எதிர்வினையாற்ற கடந்த காலங்களில் தவறிவிட்டது தான் காரணம் என்பதை இப்போதுதான் நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். எங்கள் தோழர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று பெரியார் நினைவு நாளில் படிப்பகத் திறப்போடு சில செய்திகளை பகிர்ந்து கொள்ளுகிற வாய்ப்பாகக் கருதி சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இன்று அய்யா நினைவு நாள், பெரியர் நினைவு நாள் என்று நினைக்கின்ற பொழுது அவர் ஆற்றிய தொண்டு, அதனால் இந்த சமுதாயம் பெற்ற மேம்பாடுகள், வளர்ச்சி, முன்னேற்றம் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாகத்தான் அவருடைய நினைவு நாள் நிகழ்ச்சி நடத்துவதும், அவர்களுக்கு சிலைகள் சமைத்திருப்பதும். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளெல்லாம் எழுச்சியின் குறியீடாய் தமிழினத்தின் எழுச்சியின் குறியீடாய் நாம் பார்த்துக் கொண்டிருக்கிற சூழலில் அண்மைக்கால சில நிகழ்வுகளைப் பற்றி தோழர்கள் பேசியிருக்கிறார்கள்.

பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதும், அதனால் நிகழ்த்தப்பட்ட எதிர்வினைகளும் நீங்கள் அனைவரும் அறிந்தது தான். ஆனால் எதிர்வினையைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர முதல் வினையைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. இதற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளில் கூட பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் நடந்த எதிர்வினைக்காக முஸ்லீம்களை பயங்கரவாதிகள் என்று சொன்னார்கள்.

குஜராத்தில் எதிர்வினையாற்றிய 287 பேர் மீது பொடா சட்டம் போடப்பட்டது. அதில் 286 பேர் இஸ்லாமியர்கள், ஒருவர் சீக்கியர். இப்படி எதிர்த்து எழும்புகின்றவர்களையெல்லாம் பயங்கரவாதிகள் என்று காட்டுகின்றனர். பார்ப்பன உணர்வுகளால் நிரப்பப்பட்ட ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற, நிர்வாகப் பொறுப்பில் இருக்கிற காவல்துறைப் பொறுப்பில் இருப்பவர்கள்தான் நம்முடைய தோழர்களையும் பயங்கரவாதிகளைப் போல இந்த தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை எல்லாம் பாய்ச்சியிருக்கிறார்கள்.

சீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது மட்டும் ஒரு நிகழ்ச்சி. இதைத் தனியாகப் பார்க்கக் கூடாது; இது வன்முறைகளின் தொடர்ச்சி. அதற்கு முன் நடந்த சிலவற்றை உங்கள் முன் வைப்பது எங்கள் கடமையாக இருக்கிறது. பெரியார் இயக்கத்தின் பிரச்சாரம் என்பது தமிழர்கள் நல்வாழ்வுக்கானது.

குன்றக்குடி அடிகளார் ஒருமுறை எழுதினார், நாத்திகம் ஆத்திகம் என்று பேச்சு வந்தபோது 71 ஆம் ஆண்டு தேர்தலின்போது அவர் அறிக்கை விட்டார். இன்று ஆத்திகம் என்பது சிறுபான்மையான உயர்சாதியினரின் நலத்தைப் பேணுவது, நாத்திகம் என்பது பெரும்பான்மையான தமிழர் நலத்தைப் பேணுவது. உங்களுக்கு ஆத்திகம் வேண்டுமா? நாத்திகம் வேண்டுமா? என்று குன்றக்குடி அடிகளார் அறிக்கை விட்டார்.

அப்படிப்பட்ட நிலையில் பெரும்பான்மை மக்கள் எழுச்சிக்காக போராடிய பெரியாரை அவரது இயக்கத்தை தொடர்ந்து தங்கள் சுயநலத்தைப் பேண விரும்புகிறவர்கள் அவர்களாகக்கூட பணியாற்றாமல் நம்முடையவர்களை கைக்கூலியாக ஆக்கிக் கொண்டு நிகழ்த்திய பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்ட வேண்டும்.

பெரியார் சிலைகள் என்று பார்த்தால், நாகையில் நிறுவப்பட்ட பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தார்கள். காஞ்சியில் நிறுவியிருந்த பெரியார் சிலைக்கு காவி வேட்டி கட்டிவிட்டு அதற்கு பூசை செய்வதுபோல அதற்கு பட்டை எல்லாம் அடித்து விட்டார்கள். திண்டுக்கல்லில் சந்தனம் பூசினார்கள். பெரியாருக்கு சிகப்புப் போட்டு வைத்தார்கள்.

பெரியார் இயக்கப் பிரச்சாரமாக, திராவிடர் கழகப் பிரச்சாரம், கிராமப் பிரச்சாரம் சென்ற போது, தாராபுரம் பக்கத்திலே இருக்கிற மணக்கடவில், குண்டடத்தில் அவர்களுடைய வாகனங்கள் தாக்கப்பட்டன. சத்தியமங்கலம் பக்கத்தில் கெம்பநாயக்கன்பாளையத்தில் திராவிடர் கழகப் பிரச்சார வண்டி கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டது. போரூர் திராவிடர் கழகக் கூட்டத்தில் மேடை ஏறி திராவிடர்கழகத் தோழரை தாக்கினார்கள். ஒருவரை வெட்டினார்கள். தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கூட்டத்தில் பெரியார் புத்தகங்களை கிழித்தெறிந்தார்கள்.

இப்படி தொடர்ச்சியான நிகழ்ச்சியின் தொடர்ச்சியாகத்தான் சிறீரங்கம் சிலை தேசப்படுத்தப்பட்டதையும் நாம் பார்க்க வேண்டும். ஒரு தனி நிகழ்ச்சியாக பார்த்துவிடக் கூடாது. கடந்த கால நிகழ்ச்சியின்போதெல்லாம் பெரியார் தொண்டர்கள், இன உணர்வாளர்கள் சட்டம் பார்த்துக் கொள்ளும், காவல்துறைப் பார்த்துக் கொள்ளும், நாம் ஜனநாயகப் பூர்வமாக எதிர்ப்பைத் தெரிவிப்போம் என்ற நிலையோடுதான் இருந்தோம்.

ஆனால், இந்த வன்முறை தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. சிலை வைப்பது, அது வழிபாட்டுக்கு அல்ல, வழி காட்டுவதற்கு, எதிர்கால சமுதாயத்திற்கு இந்தத் தலைவன் காட்டிய வழியை நினைவுபடுத்துவதற்காக நிறுவப்பட்டது.

அது கோவிலுக்கு முன்னால் வைக்கலாமா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். கும்பகோணத்து கோயிலுக்கு முன்னால் இருக்கிறது. காஞ்சி மடத்தின் எதிரே பெரியார் சிலை வைத்தபோதும் இதே சிக்கலைத்தான் செய்தார்கள். வைக்கக்கூடாது என்று வழக்குப் போட்டார்கள். தடை ஆணை பெற முயற்சித்தார்கள். உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் எல்லாம் போய்ப் பார்த்த பின்னால்தான் பெரியார் சிலை நிறுவப்பட்டது.

அப்போது சொல்லப்பட்ட காரணம் காஞ்சிமடத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் மடத்திற்கு எதிரே இந்த சிலையைப் பார்த்தால் அது அவர்கள் கோபத்தைத் தூண்டும், தேவையற்ற சிக்கல் வரும் என்று சொன்னார்கள். அங்கு சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆயிற்று. ஒரு சிக்கலும் இல்லை. அதற்காக எதிர்வினை ஒன்றும் ஆகவில்லை.

கலவரம் வரவில்லை. அதே காரணத்தை சிறீரங்கத்தில் சொன்னார்கள். நாங்கள் சொல்லுகிறோம், வேறொரு தோழரும்கூட சொன்னதைச் சொல்ல விரும்புகிறேன். இப்பெல்லாம் பார்க்கிறோம், மதுக்கடைக்கு முன்னால் மது உடலுக்கு நாட்டிற்கு வீட்டிற்கு கேடு என்று எழுதி வைத்திருக்கிறார்கள். சிகரெட் பெட்டிகளில் புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று எழுதி வைத்துள்ளார்கள்.

கேடு நடக்கிற இடத்தில் அந்த கேட்டை சுட்டிக் காட்டுவது கடமை என்று அரசு நினைக்கிறது. அதனால் அதற்கு விதி வைத்திருக்கிறது. அதைப் போலவே - கோயில் இருக்கும் இடத்தில் அது சுமத்தும் இழிவை மடமையை கட்டாயம் அங்கு அது பதிவு செய்ய வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அல்லது பெரியார் தொண்டர்கள் நினைக்கிறார்கள். இந்த சமுதாயத்தில் தீண்டாமையை சாதி இழிவை செய்து கொண்டிருக்கிற, அதை நிலை நாட்டிக் கொண்டிருக்கிற கோயிலுக்கு முன்னால்தான், கோயில் வழிபாடு தீண்டாமை தீமையானது, தீமை பயப்பது என்று எழுதியதைப் போல் பெரியார் சிலையை வைத்துக் காட்டுகிறார்கள். அங்குதான் வைக்கணும்.

எங்கு தீமை நடக்கிறதோ அங்குதான் தீமையின் கேட்டை நினைவுபடுத்த வேண்டும். கோயிலுக்குள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டி போராட்டம் நடந்தது; அந்த போராட்டங்களுக்கு இப்போது அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இது 1926 இல் பெரியார் எழுப்பிய குரல். அதை ஏற்றுக் கொண்டு 27இல், 30இல் அம்பேத்கர் அதை வழிமொழிந்தார். ஆனால் இப்பொழுதுதான் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை பெரியார் இயக்கம் எடுத்திருக்கின்றது.

பெரியார் தனது இறுதிப் போராட்டமாக அறிவித்ததும்கூட 1974 சனவரி 26 ஆம் நாள் மன்னார்குடி இராஜகோபால்சாமி கோவில் கருவறைக்குள் நுழைவதாக அறிவித்து, அதற்கு முன்னால் மறைந்து விட்டார். அது போன்ற போராட்டத்தை மக்கள் கலை இலக்கியக் கழகம் எடுத்தது. பெரியார் படத்தை, அம்பேத்கர் படத்தை ஏந்திக் கொண்டு திருவரங்கம் கோயில் கருவறைக்குள் நுழைந்தார்கள்.

அப்படி நுழைந்தவர்களைத் தாக்கினார்கள், அடித்தார்கள். மண்டை உடைந்து போய் தோழர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அடிபட்ட மண்டை உடைந்த தோழர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால் அடித்தவர்கள் மீது வழக்கு ஏதுவும் பதிவு இல்லை. சட்டப்படி வழக்கு பதிவு செய்து புகார் கொடுத்து, அந்த தோழர்கள் மீது நடவடிக்கை எடு என்று கேட்பதற்கு மதவாதிகளுக்கு எண்ணமில்லை.

ஆனால், பெரியார் சிலை உடைந்தால் எங்களுக்கு ஒன்றும் நடந்து விடாது. ஏதோ கெட்டது நடந்து விட்டது என்று கருதி நாங்கள் எதிர்க்கவிலலை. ஒரு எழுச்சியின் சின்னத்தை, நம்முடைய மானத்தின் குறியீட்டை சேதப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அப்பாவை கொலை பண்ணிட்டா, நேரில் பார்த்துக் கொண்டிருந்த மகன் புகார் கொடுக்க வேண்டும்.

சட்டப்படி பதிய வேண்டும் என்றா நினைப்பான்? உடனே திருப்பி அடிப்பான். அவனைத் தாக்குவான், அவனை துரத்திக் கொண்டு போய் அடிப்பான். மாடு கட்டி இருக்கும், மாட்டை அடிப்பான். மாடு என்னப்பா செய்தது? அவனுக்கு அந்த உணர்ச்சியில் அந்த வேகத்தில் அது தெரியாது. அவனுடைய தர்ம ஆவேசம் என்று சொல்வார்கள். அறச்சீற்றம் அது. அப்படி எதிர் வினையாற்றுகிறபோது சட்டம் நியாயம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

இவர்கள் பக்தர்கள் என்ற போர்வையில் இந்து மதவாதிகள் என்ற பெயரில் சூழ்ச்சியோடும், வஞ்சகத்தோடும் அவர்கள் அதைச் செய்தார்கள். இரவில் போய் கருப்புச் சட்டையணிந்து கொண்டு பெரியார் சிலையை சேதப்படுத்தினார்கள். எங்கள் தோழர்கள் பகலில் போய் எதிர்வினையாற்றினார்கள். வெளிப்படையாகப் போய் பெரியார் வாழ்க என்ற முழக்கத்தோடு மார்பில் பெரியார் படத்தைத் தாங்கிய சட்டையணிந்து கொண்டு கருப்புச் சட்டையணிந்து கொண்டு பகல் நேரத்திலே எதிர்வினையாற்றினார்கள்.

எங்கெல்லாம் பெரியார் சிலை உடைப்பை மகிழ்ச்சியோடு தெரிவிப்பதற்காக பார்ப்பனர்கள் இனிப்பை கொடுத்தார்களோ அந்த இடங்களில்தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காந்தியார் இறந்த போதும் இதைத்தான் செய்தார்கள். இனிப்பு கொடுத்தார்கள், சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் இறந்தபோதும் இனிப்புக் கொடுத்தார்கள். அவர்கள் தான் பெரியார் சிலை சேதப்பட்ட போதும் இனிப்பு கொடுத்தார்கள். ஆனால் நமக்கு ஒரு வருத்தம். பெரியார் சிலையைத் தாக்கியவர்கள் எவரும் சிதைத்தவர்கள் யாரும் பார்ப்பனர்கள் இல்லை.

பெரியார் செய்த சாதனைகளை எல்லாம் சொன்னார்கள். ஒவ்வொரு சாதனைக்கும் ஒருநாள் விளக்கம் கொடுக்க வேண்டும். நம்முடைய இடுப்பில் இருந்த துண்டு, கக்கத்தில் வந்து தோளில் வருவதற்கு ஒரு நூற்றாண்டுப் போராட்டம் நடந்திருக்கிறது.

இசைக் கலைஞர்கள் தோளில் துண்டு போட வேண்டும் என்பதற்காக மதுரை சிவக்கொழுந்து என்கிற நாதசுர வித்துவான் தோளில் துண்டு போட்டதைத் தடுத்ததை எதிர்த்து ஒரு போராட்டம். இப்படிப்பட்ட உரிமைகளை பெற்ற சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தங்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுத்த மனிதருக்கு எதிராக பார்ப்பனர்களின் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்களே என்ற வருத்தம் நமக்கு இருக்கிறது.

எங்கள் தோழர்கள் மீது - தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை இந்த ஆட்சிப் பாய்ச்சி இருக்கிறது. நாங்கள் அடக்குமுறைச் சட்டத்துக்கு எதிரானவர்கள். எந்த ஆள்தூக்கிச் சட்டமும் கூடாது என்று கூறுகிறவர்கள். தடாவானாலும் பொடாவானாலும் எந்த அடக்குமுறைச் சட்டமும் நாட்டில் இருக்கக்கூடாது என்று கூறுகிறவர்கள். இந்தச் சட்டங்களுக்கு பயந்து அல்ல, மனித உரிமைக்கு எதிரானது என்பதற்காக!

கோவை இராமகிருட்டிணன் 1976 ஆம் ஆண்டிலேயே மிசாவில் ஓராண்டு சிறையில் இருந்தவர். ‘தடா’வின் கீழ் மூன்று வருடம் சிறையில் இருந்தவர். 1991 இல் என்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தார்கள்.

விடுதலைப்புலிகளுக்கு நான் உதவி செய்தேன் என்று. தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சி அறிவிக்கப்பட்டபோது, என் மீது வழக்கு போட்டார்கள். நான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதே 7 ஆம் தேதி. ஆனால் 4 ஆம் தேதி நான் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக வழக்கு. ஆள் தூக்கிச் சட்டங்கள் இப்படித்தான் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அதிகமாக உள்ளாக்கப்படுவோர் கருப்பர்கள்தான் என்று ஒரு அமெரிக்க நீதிபதி கூறினார். அதேபோல், இங்கு ஏழைகளும், தாழ்த்தப்பட்டவர்களும்தான், அடக்குமுறை சட்டங்களுக்கு உள்ளாகிறார்கள் என்று இந்திய நீதிபதி ஒருவர் கூறினார். எங்கள் மீது வழக்கு போடுங்கள் சந்திக்கிறோம்.

ஆனால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம். எங்கள் மீது மட்டுமல்ல, பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீதும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்துவதை நாங்கள் ஏற்கவில்லை. இதை 10 ஆம் தேதி திருச்சியிலே பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போதே நாங்கள் தெளிவாகக் கூறினோம்.

காவல்துறையில் ஊடுருவி உள்ள மதவெறிப் பற்றியும் குறிப்பிட வேண்டும். காவல்துறையில் இருப்பவர்கள் சீருடை என்று ஒன்றை வைத்திருக்கிறார்கள். எல்லோரும் ஒன்று போல் தோன்ற வேண்டும் என்பதற்குத்தான் சீருடை. இல்லா விட்டால் ஒருத்தர் சட்டை போடுவார், ஒருத்தர் ஜிப்பா போடுவார், வேண்டாம் என்று அதற்கு மாறாக முழுக்க சவரம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்றால் தாடி வைத்துக் கொண்டிருப்பார்.

அவர் பூட்ஸ் அணிய வேண்டும் என்றால் அவர் போடாமல் இருப்பார். கேட்டால் அய்யப்பன் கோயிலுக்கு போறதா சொல்லுவார். நாமம் போட்ட நீதிபதியைப் பார்த்து நாம் கேட்டிருக்கிறோம், உனக்கு முன்னால் நாமம் போட்டவனுக்கும் நாத்திகனுக்கும் வழக்கு வந்தால் நீ யாருக்கு சாதகமாய்ச் சொல்லுவாய் என்பதைப்போல் தான்.

இந்த அதிகாரிகள் காவல்துறையில் பூஜை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இப்ப இருக்கிற காவல்துறை ஆணையாளராக இருக்கின்ற லத்திகாசரண் ஓராண்டுக்கு முன்னால் ஒரு சுற்றறிக்கை ஒன்று அனுப்பினார். அவர் அப்பொழுது ஆணையர் அல்ல. காவல்துறை துணைத் தலைவராக இருந்தார். எந்த காவல் நிலையத்திலும் எவ்விதமான பூஜையும் செய்யக் கூடாது. எவ்விதமான கடவுள்கள் படமும் இருக்கக் கூடாது. அகற்ற வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.

அதற்கு முன்னாள் அண்ணா ஆட்சிக்கு வந்தபொழுது, 1969 இல் சொன்னார், அதற்குப் பிறகு 94 இல் பி.ஜே.பி. ஆட்சி காலத்தில்கூட அப்படிப்பட்ட அறிவுரை வழங்கப்பட்டது. மத்திய உள் துறையில் ஒரு குழு இருக்கிறது. சமுதாய நல்லிணக்கக்குழு அவர்கள் உட்கார்ந்து பேசி இப்படிப்பட்ட காவல்நிலையங்களில் அரசு அலுவலகங்களில்தான் தேவையற்ற சச்சரவை உண்டாக்குகிறது. எனவே எப்படிப்பட்ட வழிபாடும் அரசு அலுவலகங்களில் இருக்கக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால் இப்பொழுதும் காவல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

அரசு அதிகாரிகள் காவல்துறையில் இருப்பவர்கள், சீருடையில் இருக்க வேண்டியவர்கள் சீருடையில்லாமல் இருக்கிறார்கள். தாடி வைத்துக் கொண்டு, துண்டு போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

பெரம்பலூரில் இரண்டு கழகத் தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது. அவர்கள் செய்த குற்றமாக அரசு சொல்லியிருக்கிறது, காவல்துறை சுட்டுவது, மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்றுக் கொண்டு அறிவித்திருப்பது என்னவென்றால், இரமேசு அய்யர் என்பவரை சாதியைச் சொல்லி திட்டினாங்களாம்.

இரமேசு அய்யரை சாதியைச் சொல்லித் திட்டியும், பூணூலை அறுத்தும், உருத்திராட்சக் கொட்டையை அறுத்தும் இருக்கிறார்கள். எனவேதான் இவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குனு போடறாங்க. வேறு எந்தக் குற்றமும் அவர்கள் மீது சாட்டப்படவில்லை. இது ஒன்றுதான். இவர்கள் பூணூலை அறுத்தார்கள்.

பூணூல் என்பது என்ன? பூணூலைப் பற்றி நாம் சொல்ல வேண்டும். குத்தூசி குருசாமி எழுதுகிறார் - “ஒரு பூனைக் குட்டிக்கு பூணூலை மாட்டிப் பாருங்கள் அது உடனே புலி போல பாயுமே! அது வேண்டாம் ஒரு பூணூலை வாங்கி சுற்றி மேசை மேல் வைத்துப் பாருங்கள், அது ஒரு முழத்திற்கு எம்பிக் குதிக்குமே! ஒரு அங்குல தர்ப்பைப் புல்லை கிள்ளி கீழே போட்டுப் பாருங்கள் டேய் என்று கூப்பிடுமே!

மனிதன் பூணூல் போட்டுக் கொள்வதாம். அதற்கு ஒரு நாளாம், இனிமேல் இடுப்பில் அறைஞாண் கட்டிக் கொள்வதற்குக்கூட ஒரு தனிப் பண்டிகை நடந்தாலும் நடக்கலாம். அதற்கும் விடுமுறை விட்டாலும் விடலாம். ஆவணி அவிட்டம்; நான் கூறக்கூடிய பதில் இதுதான் ‘அக்கிரகாரத் திமிர்’.

பணக்காரன் தன் பணத்தின் திமிரை ஏழைகளிடம் காட்டுவதற்காக தன் தேவைக்கு மேற்பட்ட ஆடம்பர வசதிகளை வைத்துக் கொண்டிருக்கிறான் அல்லவா? அதற்குப் பெயர்தான் பணத் திமிர். இதைப் போன்றதுதான் பூணூல் அணிவதும், தேவை இல்லாத ஒன்று. அதாவது ஜாதித் திமிர். படமெடுக்கின்ற பாம்பிற்கு நல்ல பாம்பு என்று பெயர் வைத்திருப்பதைப்போல பூணூல் போட்டிருக்கிற பேர்வழி மேல் சாதிக்காரன்” என்று குத்தூசி எழுதுகிறார்.

இப்படி பூணூலோடு திரிந்து நமக்கு காட்டுகிறான், நீங்கள் இழிந்தவர்கள் என்று! பிராமணாள்னு போட்டு கிட்டா உங்களுக்கு என்ன கோபம் என்கிறார்கள். பெரியார் சொன்னார் ஒரு தெருவில் ஒரு வீட்டில் மட்டும் இது பத்தினியின் வீடு என்று பலகை வைத்திருந்தால், என்ன பொருள். தெருவிலிருப்பது பத்து வீடு.

ஒரு வீட்டில் மட்டும் இது பத்தினியின் வீடு என்று பலகை வைத்திருந்தால் ஒன்பது வீட்டுக்காரப் பெண்கள் மீது என்ன கருத்து ஏற்படும். நீ ஒருவன் மட்டும் பிராமணன் என்றால் நாங்கள் எல்லாம் சூத்திரன் என்று சொல்லாமல் பொருள்படும். அதன் அடையாளமாக இருக்கிறது பூணூல் என்ற ஆணவச் சின்னம்; அதை அணிந்து கொண்டு நீ திரிவது சரிதானா?

நம்மாள்களும் பூணூல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எந்த சக்தியும் இல்லை. வேண்டுமானால் முதுகைத் தேய்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் சாவியைக் கட்டி தொடங்கவிட்டுக் கொள்ளலாம். நம்ம பூணூலுக்கு அவ்வளவு தான் சக்தி.

ஆனால் அவர்கள் பூணூலுக்குத்தான் அவ்வளவு சக்தி இருப்பதாகச் சொல்லி திமிரோடு அவன் இருக்கிறான். நமக்கு ஆணவம் பிடிக்காது. நம்மை இழிவுபடுத்துவது பிடிக்காது நம்ம தோழர்கள் பூணூலை வெட்டுகிறார்கள். அதற்கு என்ன சட்டப்பிரிவில் போடணுமோ அதைப் போடு. அதற்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என்றால் என்ன பொருள்? பெரியார் தொண்டர்களின் செயல்பாடுகள் சில வேளை சட்ட விரோதமாகக் கூட இருக்கலாம். ஆனால் நியாய விரோதமாக இருக்காது.

நீ போட்டிருக்கிற பூணூல் என்பது ஆணவத்தின் சின்னம் என்பதால் அறுத்ததால், அது சட்ட விரோதமா? மறியலும், ஊர்வலமும், போராட்டமும், தர்ணாவும் எல்லாமே சட்ட விரோதம்தான். ஆனால், அதைவிட நல்ல ஒழுங்கை ஏற்படுத்துவதற்கு சட்டத்தை மீறுகிறார்கள், இருக்கிற சட்டத்தைவிட நல்ல சட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் சட்டத்தை மீறுகிறார்கள். நாங்களும் அதைத்தான் செய்தோம்.

இதைவிட நல்ல சமுதாயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீறினார்கள் சரி, பூணூல் அறுப்பது தேசிய பாதுகாப்பிற்கு எதிரானதா என்ன? அப்பொழுது தேசியத்தின் பாதுகாப்பே பூணூலில் இருப்பதாக ஏற்றுக் கொள்வதாகத்தானே பொருள். அதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

தூத்துக்குடி வேலாயுதம்பாளையத்தில் தேர்தலுக்காக வாக்கு கேட்க வந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவருக்கு மாலைபோட்டு வரவேற்றார்களாம். டேய் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவனுக்கு முதலில் நீ எப்படி மாலை போடலாம் என்று எதிர்க்கிறார்கள். கோயில் திருவிழாவில் மேளம் வாசிக்கக்கூடிய தாழ்த்தப்பட்டவர் - கோயில் திருவிழா அன்று வெளியூர் போய்விடுகிறார். அவருக்கு திருவிழா நடக்கும் செய்தியும் சொல்லப்படவில்லை. அன்றைய தினம் வெளியூருக்கு மேளம் வாசிக்கப் போய்விட்டார் என்று அவரது வீட்டை சாதி வெறியர்கள் தாக்கி தகர்க்கிறார்கள்.

அருந்ததியர் வகுப்பைச் சார்ந்த ஜக்கையன் என்பவர் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றவுடன், சாதி வெறியர்கள் அவரை வெட்டிக் கொலை செய்துவிடுகிறார்கள். இவர்கள் மீதெல்லாம் தேசியப் பாதுகாப்புச் சட்டம் போட வேண்டும் என்று அரசுக்குத் தோன்றவில்லையே! ஆனால் - பார்ப்பானின் பூணூலை வெட்டியதற்கு தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடுகிறது, இந்த ஆட்சி! எனவே, தேசியப் பாதுகாப்புச் சட்டத்துக்கு பரிந்துரைத்த காவல்துறையையும், அதற்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சித் தலைவரையும் அந்த உத்தரவுக்கு ஏற்பு வழங்கிய தமிழக அரசையும் என்னவென்று சொல்வது?

‘பூணூல்’ என்பது தான், இந்த தேசமா? அந்தப் பூணூலுக்குள்தான் தேசப் பாதுகாப்பே அடங்கியிருக்கிறதா? என்று கேட்கிறோம்.