மூன்றாவது அணி என்பது தமிழகத்தை தற்போது ஆளும், இதற்கு முன் ஆண்ட தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு அப்பால் உருவாகும், உருவாக்க கோரும் அணி பற்றியதாகும். இதுவே மாற்று அணி என்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஏன், தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகளுக்கு என்ன? இந்தக் கட்சிகளுக்கு அப்பால் மாற்று அணிக்கான தேவை என்ன என்று கேள்வி எழுமானால், இதற்கான காரணங்கள் பல. இவற்றைப் பலரும் பலமுறை மேடையில் பேசியிருக்கிறார்கள், இதழ்களில் எழுதியிருக்கிறார்கள். எனினும் இது பற்றிச் சுருக்கமாகச் சில:
1. 1967இல் தி.மு.க ஆட்சி பீடம் எறியது தொடங்கி இன்று இந்த 2010 வரையான இடைப்பட்ட 43 ஆண்டுகளில் சில அவசர நிலைக்காலம், சில ஆளுநர் ஆட்சிக்காலம் போக சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க அ.தி.மு.க கட்சிகளே தமிழகத்தை ஆண்டு வந்திருக்கின்றன. எனினும் இவர்கள் ஆட்சிக் காலத்தில் இவர்கள் எவருமே தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை. தமிழர்களின் நலன்களைப் பேணவில்லை.
2. 1926 இல் பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் 1944இல் திராவிடர் கழகமாக பரிணமித்து செயல்பட, அதிலிருந்து பிரிந்து வந்து 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி பார்ப்பன எதிர்ப்பு பகுத்தறிவுக் கொள்கைகளுடன் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்கிற முழக்கத்தை முன்வைத்து தமிழர்களிடையே மொழிப்பற்று இனப் பற்றை ஊட்டி வளர்ந்து அதையே மூலதனமாக்கி மக்கள் ஆதரவுடன் ஆட்சி பீடம் ஏறியவர்கள் 1968இல் அண்ணா மறைவுக்குப்பிறகு அடுத்த மூன்றாண்டுகளுக்குள்ளேயே 1971இல் இந்திரா காங்கிரசுடன் கூட்டு வைத்தனர். ஆதாவது எந்த காங்கிரசை எதிப்பதே என் இலட்சியம் என்று 1925 இல் பெரியார் சொன்னாரோ, எந்த காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்து தி.மு.க ஆட்சிக்கு வந்ததோ, எந்த காங்கிரஸ் 1965 இல் இந்த திணிப்பைக் கொண்டு வந்ததோ அதே காங்கிரசோடு இவர்கள் கூட்டு வைத்தார்கள்.
3. தி.மு.க. தலைவர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட இப்போக்கு 1971 இல் அ.தி.மு.க. உருவெடுத்து அதன்பின் எம். ஜி. ஆர். ஜெயலலிதா என இவர்கள் தமிழக முதல்வர்களாக வந்த போதும் அப்படியே தொடர்ந்தது. அதாவது எந்த காங்கிரஸ் அரசால் தமிழகம் தேய்வதாகக் குற்றச் சாட்டப்பட்டதோ அதே காங்கிரசோடு இவர்கள் கூட்டு சேர்ந்து தமிழகம் தேய்வதற்கும் தமிழர் கள் தேய்வதற்கும் துணை போனார்கள்.
முதலில் காங்கிரஸ் ஆட்சியோடு கூட்டு எனத் தொடங்கி வைக்கப்பட்ட இப்போக்கு பிறகு ஜனதா ஆட்சி, பின் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி என தில்லியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அககட்சியோடு கூட்டு சேர்ந்து கொள்வது, சில அமைச்சர்கள் பதவிகளைப் பெறுவது, தில்லியோடு சேர்ந்து கூட்டுக் கொள்ளை நடத்துவது, சுயலாபம் பெறுவது என்கிற நிலைக்குத் தாழ்ந்தது. இதன் வழி இவர்கள் தங்கள் வேட்டை பரப்பை விரிவாக்கிக் கொண்டு அதற்கு பதிலுதவியாக தில்லிக்குக் காவடி து£க்கி அதற்குச் சேவை செய்வது தமிழகத்தை தமிழக உரிமைகளை. தமிழர் நலன்களை அதற்குத் காவு கொடுப்பது என்கிற நிலைக்குச் சீரழிந்தார்கள்.
4. இந்த நாற்பது ஆண்டுகால ஆட்சியில் இவர்கள் சாதித்தது என்ன தமிழகத்தின் காவிரியுரிமை பறி போனது. காவிரி கன்னடர்களால் சிறைபிடிக்கப்பட்டு , அதில் உபரி நீர் வந்து கன்னடர்களுக்கு ஏதும் ஆபத்து என்றால் மட்டுமே அதைத் திறந்து விடுகிற நிலைக்குத் தமிழகத்தைக் காவிரியின் வடிகாலாக மாற்றி விட்ட அவலமே தொடர்ந்து வருகிறது. முல்லைப் பெரியாறு மலையாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு அந்த ஆற்று நீர் உரிமையும் மறுக்கப்பட்டு தென் மாவட்ட விவசாயிகளின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. வட மாவட் டங்களில் பெருக்கெடுத்து ஓடவில்லையானாலும் நிலத்தடி நீர் வளத்தையாவது பாதுகாத்து வந்த பாலாற்று வளம் முற்றாகப் பறிக்கப்படுகிறது. பண்டைத் தமிழகத்தின் அறவுரிமைப் போராட்ட காவிய நாயகி கண்ணகி கோயில் கேரள அரசால் கைப்பற்றப்பட்டு அவர்களால் சொந்தம் கொண்டாடப்படுகிறது தமிழக மீனவர்கள் வாரக்கட்டளை மாதக் கட்டளைபோல் அவ்வப்போது சிங்களக் கப்பற்படையால் தாக்கப்பட்டு, மீன்கள் வலைகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் சுட்டு வீழ்த்தப்பட்டு உயிர் பறிக்கும் கொடுமையும் தொடர்ந்து வருகிறது.
இவையனைத்தும் தி.மு.க அ.தி.மு.க ஆகிய கழக ஆட்சிக்காலங்களில் நடை பெற்று வந்தவை, இப்போதும் நடை பெற்று வருபவையே என்பதுடன், எல்லாவற்றினதும் உச்சமாக தமிழீழத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த தமிழீழ விடுதலைப் போராட்டம் கடந்த ஆண்டு குருரமாக ஒடுக்கப்பட்டு இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலரும் கொடூரமாகக் கொல்லப்பட்ட கொடுமையும் நடந்தேறியது
5. இப்படிப்பட்ட கொடுமைகள், தமிழக, தமிழின உரிமைப் பறிப்புகள், பல இவர்கள் ஆட்சியில் நடைபெற்றதுடன். இவற்றை மக்கள் அறியா வண்ணம், உணரா வண்ணம் தடுக்கவும் அவர்கள் என்றென்றைக்கும் அறியாமையிலேயே முழ்கி தங்களுக்கு வாழ்க சொல்லவும் வாக்க ளிக்வும் மட்டும் பயிற்சி பெற்றி ருந்தால் போதும் என முடிவு செய்து சீரிய சிக்கல்கள் எதன் மீதும் மக்களது கவனம் திரும்பாதிருக்கவும், அவர் களைப் போதையில் ஆழ்த்தி மயக் கத்தில் கிடத்தவும் மதுபானக் கடைகள், காட்சி மற்றும் செய்தி ஊடகங்கள் தொலைக் காட்சிகள், நாளேடுகள், வார, மாத இதழ்கள் என எல்லா வகையான சாதனங்களின் மூலமும் தமிழர்களின் மீது கருத்தியல் தாக்குதல் தொடுத்து வருகின்றன.
இந்நிலையில்தான் இதற்கு மாற்றாகத்தான் மூன்றாவது அணி என் பதற்கான கருத்தாக்கம் தோன்றுகிறது. அதற்கான தேவையும் வலுப் பெறுகிறது.
அணியின் கட்டமைப்பு: மூன்றாவது அணி மாற்று அணி என்ப தற்கான நியாயங்களெல்லாம் சரிதான் ஆனால் இந்த அணியில் யாரெல்லாம் இடம் பெற வாய்ப்புண்டு என்று யோசித்தால். தமிழகத்தில் தி.மு.க. அ.தி.மு.க. வுக்கு மாற்றாக தமிழக நலன்களில் தமிழர் நலன்களில் அக்கறையுள்ள கட்சிகளாகக் கருதப்படுபவை ம. தி.மு.க. , பா. ம. க, வி. சி. க, இத்துடன் புதியதாக தோற்றம் பெற்றுள்ள சில கட்சிகள். மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகள், தமிழ்த் தேசியம் பேசும் பெரியாரிய மற்றும் மார்க்சியக் கட்சிகள், ஆகியனவே. எனவே இக் கட்சிகள் இதில் இடம் பெற வாய்ப் புண்டு.
அகில இந்தியக் கட்சிகள் இதில் இடம் பெற வாய்ப்புண்டா என்றால் காங்கிரஸ் பா. ஜ. கட்சிகளுக்கு நிச்ச யமாக இதில் இடம் இல்லை. அகில இந்திய இடது சாரிக் கட்சிகளான இ. க. க மற்றும் இ. க. க. மா ஆகியன இதில் இடம் பெறலாம். எனினும் இக்கட்சிகளின் அகில இந்தியத் தலைமை இதன் நடவடிக்கைகளின் பால் எப்படிப்பட்ட அணுகு முறை யைக் கைக்கொள்கிறது என்பதைப் பொறுத்தது இது. அப்படி முடிவு செய்தால் இவையும் இதில் இடம் பெறலாம். ஆகஇப்படிப்பட்ட கட்சிகளே இம் மூன்றாவது அணியில் இடம் பெறும் வாய்ப்போடு உள்ளன.
புற நிலையும் வாய்ப்பும்: மேலே குறிப்பிட்டுள்ள கட்சிகள் மூன்றாவது அணியில் இடம் பெறும் வாய்ப்போடு இருக்கின்றன என்னும் போது அவை இந்த அணியில் இடம் பெறும் விருப்பத்தோடு இருக்கின்றன என்பதாகப் பொருள் கொண்டு விடக் கூடாது. புற நிலையும் அப்படி இல்லை.
ஏனெனில், தமிழகத்தில் தமிழ்த் தேசிய சமத்துவ உணர்வாளர்களால் மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட வி. சி. க, தமிழீழப் போர் உச்சக் கட்டத்தை அடைந்த நிலையில் எதிரிகளுடனும் துரோகிகளுடனும் கூட்டணி வைத்து தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளையெல்லாம் நொறுக்கி தமிழர்களுக்கு மாபெரும் வஞ்சகம் இழைத்ததோடு இன்னமும் அந்தக் கூட்டணி விசுவாசத்திலேயே வச முண்டு கிடக்கிறது.
தமிழீழ விடுதலையே இலக்காய், போராளிகள் ஆதரவு நிலையே குறிக் கோளாய், இடுக்கண் எது வரினும் எதிர் கொண்டு உறுதியோடு போராடி வந்த, வருகிற ம. தி.மு.க தேர்தல் காலத்தில் மட்டுமே போராளி ஆதரவு நிலை எடுத்து, மற்ற நாளெல்லாம் போராளி அமைப்பின் மீது வசை பாடியோ, அல்லது அவர்கள் மீது அவது£று பரப்பியோ தமிழீழ மக்களுக்கு எதிராக இயங்கி வரும் சர்வாதிகார, அகங்கார, ஆணவ அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறது.
அதேபோல பிற்படுத்தப்பட்ட மக்கள் உரிமைக்கும், தமிழின அடை யாள மீட்பிற்கும், தமிழீழ விடுதலைப் போருக்கும் குரல் கொடுத்து தமிழ் உணர்வாளர்கள், சமூகநீதி ஆர்வலர் களின் மத்தியில் மிகுந்த நம்பிக்கைக் குரிய எதிர்பார்ப்பாய் உருப்பெற்று வந்த பா. ம. க. வோ இப்போதைக்கு எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தனித்திருப்பதானாலும், அது தி.மு.க. வுடனான கூட்டணிக்கு அனைத்து ஏற்பாடுகளும் பேசி முடிக்கப்பட்டன என்று ஒரு செய்தியும், இருந்தும் மீண்டும் அ.தி.மு.க கூட்டணிக்கே அன்பு அழைப்பு விடுக்கப்பட்டுள் ளதாக மற்றொரு செய்தியும் உலா வருகின்றன. இச்செய்திகள் எப்படியானாலும் இது தி.மு.க அல்லது அ.தி.மு.க என ஏதாவது ஒரு கூட்ட ணியில் அங்கம் பெறும் நிலையே ஏற்படப்போகிறது.
ஆக தமிழகத்தின் முக்கிய மூன்று பெரும் கட்சிகளும் இப்படி ஆளுக்கு ஒரு கூட்டணியில் அங்கம் வகிக்க அப்புறம் மூன்றாவது அணி என்பது எப்படி, எந்தெந்த கட்சிகளைக் கொண்டு அமையும். அமைய சாத்தியமா என்பதுதான் அடுத்த கேள்வி. எனவே, இந்த மூன்று கட்சிகளுக்கு அப்பால் மற்ற கட்சிகளைப் பற்றி யோசிப்போம்,
இதர கட்சிகள் : இக்கட்சிகளுக்கு அப்பால் தேர்தல் களம் நோக்கிய குறியோடு இருப்பவை இ. க. க, இ. க. க. மா, தே. மு. தி. க, சமத்துவ மக்கள் கட்சி இன்னும் பல உதிரிக் கட்சிகள் அமைப்புகள். தற்போது புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘நாம் தமிழர் இயக்கம்’ முதலானவை.
தேர்தல் கட்சிகள் என்றாலே யாரோடு கூட்டு சேரலாம், எத்தனை இடங்கள் கோரிப் பெறலாம், வெற்றி பெறுவதற்கு என்னென்ன தந்திரங்கள் வகுத்து செயல்படலாம் என்கிற நோக் கில் இயங்குபவை என்பதால் இப்ப டிப்பட்ட கட்சிகள் எதுவும் தேர்தல் நேரத்தில் மேற்குறிப்பிட்ட இரண்டு அணியில் எதாவது ஒரு அணியில்தான் போய்ச் சேரும், அதன் மூலம் எதாவது பலன் பெறத்தான் முயலுமேயல்லாது மூன்றாவது அணியைப்பற்றி எல்லாம் சிந்திக்காது அந்தப்பக்கமெல்லாம் தலை வைத்தும் படுக்காது என்பது தெளிவு.
இவையும் போக எஞ்சியிருப்பது என்ன? இவற்றை அடுத்து தமிழ்த் தேசிய மார்க்சிய பெரியாரியக் கட்சிகள், அமைப்புகள். இவற்றிலும் சில தேர்தலில் நிற்கவில்லையென்றாலும் தேர்தலில் யாரையாவது ஆதரிக்க வேண்டும் என்கிற நிலையெடுத்து, அந்த அடிப்படையில் செயல்படுகிற கட்சிகள். இவற்றுக்கு அப்பால் தேர்தல் மற்றும் வாக்கெடுப்புகளிலேயே பங்கு பெறவேண்டாம் என்று தேர்தல் புறக்கணிப்பை முன்வைத்து செயல் படுகிற கட்சிகள்.
இப்படிப்பட்ட புறச்சூழலில் தான் மூன்றாவது அணி பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அல்லது மூன்றா வது அணி பற்றிய சிந்தனைகளில் இப்படிப்பட்ட புறச்சூழலையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.
மக்கள் திரள் பிரிவினர் : தமிழக உரிமைகளில், தமிழக நலன் களில் அக்கறையுள்ள எவருக்கும் மூன் றாவது அணியின் தேவை குறித்தோ, அது காலத்தின் கட்டாயம் என்பது குறித்தோ மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இவர்கள் அனைவருமே தி.மு.க அ.தி.மு.க. இரண்டுமே தமிழகத்தின் சாபக்கேடு. எனவே இவ் விரு கட்சிகளுக்கும் மாற்றாக, மூன்றா வதாக ஓர் அணி உருவாக வேண்டும் என்று விரும்புபவர்களே.
இவர்கள் மக்களில் ஒரு சிறு பகுதியினரே என்றாலும் இவர்கள் மக்களில் முன்னோடிப் பிரிவினர். மக்கள் நல நோக்கில் சிந்திக்கிற, மக்களுக்கு வழிகாட்ட முனைகிற பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக மக்கள் திரளினரை மூன்று வகையாகக் கொள்ளலாம். ஒன்று திட்டமிட்டே ஆதிக்கத்திற்குச் சேவை செய்து அதன் மூலம் பலன் பெற்று மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படுபவர்கள். தன்னலமே குறியாய் மக்களை அடக்கியாண்டு, அதி காரம் செலுத்தி வாழ முயல்பவர்கள்.
மற்றொன்று மக்கள் நலனே குறியாய், அதுவே இலக்காய் மக்களுக்குத் தொண்டாற்ற முனைபவர்கள். நியாயம், நீதி, நேர்மைக்காகப் போரிட்டு. அதற்காக எப்படிப்பட்ட சோதனை வந்தாலும் எதிர் கொண்டு ஏற்று அர்ப்பணிப்போடு வாழ முனைப வர்கள், வாழந்து வருபவர்கள்.
இவ்விரண்டு பிரிவினர்க்கும் இடைப்பட்டவரே பெரும்பான்மை மக்கள் திரளினர். ஒன்று உண்மை எது என்று உணராமலும் அப்படியே உணர்ந்தாலும், உண்மையின் பக்கம் நிற்கத் திராணியற்றும் அதிகாரத்திற்கு அடிபணிந்தும் அஞ்சி அஞ்சி வாழ்ப வர்கள். அந்தந்த பகுதியில் உள்ள செல்வாக்கு மண்டலத்தைப் பகைத்துக் கொள்ள விரும்பாமலோ, அல்லது அதைச் சார்ந்தோ, அல்லது எதையும் கண்டு கொள்ள விரும்பாமலோ, எதிலும் ஈடுபாடு காட்டாமலோ வாழ்பவர்கள், வாழ விரும்புபவர்கள். என்றாலும் சில கொந்தளிப்பான தருணங்கள் நேரும்போது, அதற்காகக் குரல் கொடுக்கவேண்டும் என்று முன் வருபவர்கள்.
இவர்களது அச்சமெல்லாம் ஆதிக்கங்களால் தங்களுக்கு ஏதும் ஆபத்து வந்து விடக் கூடாது என்பது தானே, அதற்கான எச்சரிக்கைதானே தவிர, மற்றபடி ஆதிக்கத்திற்கு அடி பணிவதோ துணைபோவதோ இவர் களது விருப்பம் அல்ல. போக்கும் அல்ல. நல்ல நம்பிக்கையும் பாதுகாப் பும் இருந்தால், அதாவது ஆதிக்க எதிர்ப்பு சக்திகள் வலுவோடு இருந்தால் அதனோடு சேர்ந்து ஆதிக்கத்தை எதிர்க்கிற அளவிற்கு நியாய உணர்ச் சியும் நேர்மையும் கொண்டவர்கள் இவர்கள். எனவே வரலாற்று எழுச்சியின் போக்கிற்கு வளைந்து கொடுத்தோ, தங்களை உட்படுத்திக் கொண்டோ நெளிவு சுளிவோடு வாழ்பவர்கள் வாழ்ந்து வருபவர்கள் இவர்கள்.
காட்டாக தமிழீழ விடுதலைப் போராட்டம் கடந்த ஆண்டுகளில் கடும் நெருக்கடிக்கு உட்பட்டிருந்த போது, அதற்காக தமிழகத்தின் பல் வேறு பிரிவு மக்களும் அவரவர் களுக்கு இயன்ற வாய்ப்புகளில், வடிவங்களில் அம்மக்களுக்காகப் போராடியதை நினைவு கூர இம்மக்கள் பிரிவினரின் போக்கைப் புரிந்து கொள்ளலாம்
கட்சித் தொண்டர்கள்: இம் மக்கள் திரளினரை அடுத்து நாம் கவனம் கொள்ள வேண்டியது கட்சித் தொண்டர்களே. மக்கள் திரளினரை மேற்குறித்தவாறு வகைப்படுத்தியது போலவே ஒவ்வொரு கட்சியிலும் உள்ள தொண்டர்களையும் மூன்று பிரிவினராக வகைப்படுத்தலாம். முதல் பிரிவு, அவரவர் தகுதிக்கேற்ப கட்சியின் செல்வாக்கு மண்டலத்தில் அங்கம் வகித்து, எந்தெந்த வழிகளிலெல்லாம் சுருட்டமுடியுமோ, கொள்ளையடிக்க முடியுமோ, மக்கள் மேல் அதிகாரம் ஆதிக்கம் செலுத்த முடியுமோ அந்தந்த வழிகளையெல்லாம் கையாண்டு, தன்னலமே, தன் வாழ்க்கை வளமே குறியாய் வாழ்பவர்கள்.
அடுத்த பிரிவினர் கட்சியில் எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காகவே உழைத்து, தலைவர்கள் மேல் விசுவாசமாய் அவர்கள் நலனே குறியாய் அதுவே உயிர் மூச்சாய் அதற்காகவே வாழந்து அதிலேயே தங்களைக் கரைத்துக் கொள்பவர்கள். கட்சித்தலைவர்களுக்காக தீக்குளிப்பவர்கள். தேர்தல் தோல்விக்காக மொட்டைப் போட்டுக் கொள்பவர்கள் போன்ற கண்மூடிப் பக்தர்கள் பிரிவினரும் இதில் அடக்கம்.
இவ்விரு பிரிவினருக்கும் அப்பால் கட்சி எப்படி இருக்கிறது, என்ன செய்கிறது எதை நோக்கிப் போகிறது என்பதை நன்கு புரிந்து அதன் குறை நிறைகளை மதிப்பீடு செய்து வைத்திருந்தாலும், குறைகளைத் தட்டிக் கேட்கவோ, தவறுகளைத் திருத்தி, போகும் பாதையை மாற்றியமைக்கவோ இயலாதவர்களாய், அப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்கினால் சந்திக்க நேரும் இடுக்கண்கள் தங்கள் வாழ்வுக்கு நேரும் சோகங்கள் எல்லா வற்றையும் கருத்தில் கொண்டு எந்த வம்பும் வேண்டாம் என்று வாழ்பவர்கள்.
ஆனால், இவர்களும் மக்கள் திரளின் மூன்றாம் பிரிவினரைப் போலவே, இயலாமையினாலும், தேவையற்ற தொல்லைகள் எதுவும் வேண்டாம் என்கிற அச்சத்தினாலும் தான் கட்சியின் போக்குகளைச் சகித்துக் கொண்டு, அதிலே இருந்து கொண்டிருக்கிறார்களே தவிர, மற்ற படி நியாயம் எது நேர்மை எது என்பது இவர்களுக்குத் தெரியாமல் இல்லை. அதற்காக வாழவேண்டும் அதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இவர்களுக்கு இல்லாமல் இல்லை. ஆனால் எல்லாம் இருந்தும் இவ்வளவு காலம் பழகிய கட்சியில் அறிமுகப்பட்ட மனிதர்களை விட்டு இனி புதிதாக வேறு எங்கே போகப் போகிறோம். அப்படிப் போவதற்குத் தகுதியான இடம் என்பதுதான் வேறு என்ன இருக்கிறது, அப்படியே இருந்தாலும் அங்கு தான் போய் நாம் என்ன செய்யப் போகி றோம், என்ன செய்ய முடியும் என்கிற ஆற்றாமையில் இருக்கிற இடத்திலேயே முடங்கிக் கிடக்க முனைபவர்கள் இவர்கள்.
உணர்வாளர்கள், அமைப்புகள், தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்துக் காக நடத்திய நடத்துகிற போராட்டங்களில், இவர்கள் தாங்கள் அங்கம் வகிக் கும் கட்சி எதுவாக இருந்தாலும். அந் நிகழ்வுகளுக்கு நிதியுதவி செய்து, ஆதரவு அளித்து, வாழ்த்தும் தெரிவிப்பவர்கள். பலர் தங்கள் பெயரைக் கூடத் தெரிவிக்க வேண்டாம் என்று, தங்களால்தான் நடத்த முடியவில்லை. நீங்களாவது நடத்துங்கள் என்று, பாராட்டு தெரிவிப்பவர்கள். இவர்களுக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் மிக்க ஓர் இயக்கம் உருவானால் அதோடு தம்மைச் சேர்த்துக்கொள்ள எப்போதும் தயாராய் இருப்பவர்கள் இவர்கள். இவர்களைப் பொறுத்த வரைக்கும் பலரும் தி.மு.க. அ.தி.மு.க. வுக்கு எதிராக ஒரு மாற்று அணி உருவாக வேண்டும் என்கிற விருப்புக்கொண்டவர்கள். அப்படிப்பட்ட ஓர் அணிக்கான தேடல் கொண்டவர்களே என்பதில் ஐய மில்லை.
ஆக மூன்றாவது அணி என்கிற கருத்தாக்கத்திற்கு மக்கள் தயார், கட்சித் தொண்டர்கள் தயார், என்பது தெளிவு. ஆனால் இதற்கு கட்சிகளின் தலைவர்கள் தயாரா என்பதுதான் தற்போது கேள்வி.
பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என்கிற இவர்களையடுத்து, இவர்களை வழி நடத்தும் இவர்களுக்கு வழிகாட்டும், இடத்தில் இருப்பவர்கள் கட்சித் தலைவர்கள்தாம். தலைவர்களைப் பொறுத்த வரையில் பெருபாலும் தனிப்பட்ட முறையில் எல்லோரும் மிக நல்லவர்களே. மக்களுக்குத் தங்களால் இயன்றதைச் செய்யவேண்டும், மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்க வேண்டும். மக்க ளிடையே தங்கள் பெயர் நிலைக்க வேண்டும் என்று நினைப்பவர்களே.
ஆனால் கட்சி என்கிற நிறுவனம், அந்த நிறுவனத்தை நடத்த அதைக் காப்பாற்றிக் கொள்ளத் தேவைப்படும் சாகசங்கள். கட்சி அணிகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடிகள் இவை எல்லாமுமாகச் சேர்ந்துதான் அவர்களை எப்படிப்ட்ட சமரசத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் இட்டுச் செல்கின்றன.
கட்சிகள் என்றால் பொதுவில் அவற்றை இரு வகைப்படுத்தலாம். ஒன்று தேர்தல் கட்சிகள். மற்றொன்று தேர்தலை நம்பாத, தேர்தல் பாதையை நிராகரிக்கிற அல்லது தேர்தல் சாகசங்களுக்கும் சமரசங்களுக்கும் தங்களை உட்படுத்திக் கொள்ளாத போராட்டக் கட்சிகள்.
இப்படிப்பட்ட போராட்ட கட்சிகள் தொடக்க முதலே, அதாவது உறுப்பினர் தேர்வு முதலே அவர் களைக் கொள்கைப் பிடிப்புடனும் அர்ப்பணிப்பு தியாகம் மக்கள் தொண்டு முதலான பண்புகளுடனும் தெரிந்தெடுத்து வளர்ந்து பயிற்று வித்து விடுவதால், இங்கு பதவி, பந்தா சம்பாத்தியம் போன்ற போக்குகளுக்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் பாலும்இடமில்லாமல் போகிறது. பெரும்பாலும் யாரும் அதற்கு இரையாகாமலும் பார்த்துக் கொள்ள முடிகிறது,
ஆனால் தேர்தல் கட்சிகள் நிலை அப்படியல்ல. கட்சித் தலைவரை, அல்லது பகுதித் தலைவரை ஏற்று அவர் வாழ்க என்று சொல்லும் தகுதி இருந்தால் போதும், யாரும் அதில் உறுப்பினராக்கி விடலாம். இப்படிச் சேரும் உறுப்பினர்களுக்குத் தேவைப் படுவ தெல்லாம் இவர்களது நடவடிக்கைகளுக்கு கட்சியின் ஆதரவு பாதுகாப்பு அவ்வளவுதான் . இதை வைத்து அவர் தன் சாமர்த்தியத்துக்கு தன்னாலானதைச் சம்பாதித்துக் கொள்ளலாம். சாதித்துக் கொள்ளலாம். அது உள்ளூர் கட்டைப் பஞ்சாயத்தோ, கான்ட்ராக்ட் ஊழலோ, பிற காவல் நிலைய, வட்ட, மாவட்ட ஆட்சியர் அலு வலகக் காரியங்களோ எதுவானா லும். தன் பங்குக்கு உரிய வரும் படியைஅவர்பார்த்துக் கொள்ளலாம். இவை எல்லாவற்றுக்கும் கட்சி அடையாளம் அவருக்குத் துணை புரியும். பதிலுக்கு இவர் கட்சிக்கு நிதியுதவி, கட்சி மாநா டுகள் நிகழ்ச்சிகளுக்கு ஆட்களைத் திரட் டுதல், தலைவர்கள் வருகையை அவரவர் பெயரில் சுவரொட்டி போட்டும், நவீன பதாகைகள் வைத்தும் கொண்டாடுவது முதலான திருப்பணிகளைச் செய்வார்.
தேர்தல் கட்சிகளின் கட்ட மைப்புகள் செயல்பாடுகள் பெரும ளவும் இவ்வாறே இருப்பதனால்தான் இக்கட்சிகள் தங்கள் அணிகளைத் தக்கவைத்துக் கொள்ளவும், அவற்றுக்குத் தீனி போடவும் கட்சியின் தலைவர்கள் அதிகாரப் பதவிகளை வேட்டையாடி வென்று தம் அணிகளுக்குத் தர வேண்டியிருக்கிறது. இந்த நெருக்கடி தேவைதான் சில சட்ட மன்ற, நாடளுமன்ற, உறுப்பினர் பதவிகளை, பல்வேறு வாரிய, மற்றும் குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர் பதவிகளைப் பெற எப்படிப்பட்ட சமரசத்துக்கும் சந்தர்ப்ப வாதத்திற்கும் தலைவர்கள் இறங்கி வரச் செய்கிறது. இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்சி அமைப்பு இவர்களை இப்படிச் செய்ய நிர்பந்தப்படுத்துகிறது. தலைவர் களும் அதற்கு இறங்கி வரும் நிலையில் இருக்கிறார்கள். எனவே இப்படிப்பட்டநெருக்கடிகளில் இக்கட்சிகளின் தலைவர்கள் மூன்றாவது அணிக்கு வருவார்களா, வர இசைவார்களா என்பதுதான் கேள்வி.
பொதுவில் இப்படிப்பட்ட மூன்றாவது அணிக்கு வர விரும்புபவர்கள் இழப்பதற்கு எதுவுமில்லாதவர்களா இருக்க வேண்டும். இழக்க எதாவது வைத்திருப்பவர்கள் நிச்சயம் இந்த அணிக்கு வரமாட்டார்கள். இந்நிலையில் இந்தத் தலைவர்கள் தி.மு.க. அ.தி.மு.க. அணியோடு சேர்ந்து ஏதாவது ஆதாயம் தேட முற்படுவார்களா, அல்லது இருப்பதையும் இழந்து, அல்லது இழக்க நேரும் என்று அறிந்தே மூன்றாவது அணிக்கு வருவார்களா என்று கேட்டால் நிச்சயம் வர மாட்டார்கள் என்பதுதான் தர்க்க ரீதியான முடிவு.
இவர்கள் இதையெல்லாம் தாற்காலிகமாக இழந்து சில சோதனைகளுக்கு உள்ளானாலும், உருவாக்கப்படும் மூன்றாவது அணி தொடக்கத் தில் சில இழப்புகளைச் சந்தித்தாலும் எதிர்காலத்தில் தமிழகத்தின் நம்பிக்கை மிக்க அணியாக, தமிழக உரிமைகளை யும், தமிழர் நலன்களையும் பாதுகாக்கும் அணியாக அது உருவாகும், உருவாக வேண்டும் என்பதுதான் உணர்வாளர்களது பெரும்பான்மை மக்களது விருப்பம் என்றாலும் புறச்சூழல் அதற்கு கிஞ்சித்தும் வாய்ப்பாக இல்லை, யாரும் இதற்குத் தயாராயும் இல்லை என்பதே யதார்த்தம்.
யாராவது ஒருவர் அப்படி இச்சோதனைகளை எதிர்கொள்ளத் தயாராக முன் வருவதானாலும் மற்றவர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்த முயற்சி ஈடேறும். இல்லா விட்டால் முன்வருபவர் ஏமாளியாகவும் மற்றவர்களெல்லாம் காரியவாதிகளாகவும் ஆகிவிடுவர். அப்புறம் அவர் தன் கட்சியைக் காப்பாற்ற கட்சி அணிகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. எல்லாம் பசையுள்ள இடத்தை நோக்கிப் பாயத் தொடங்கிவிடும். இந்த நிலைக்குக் காரணம் இது வெறும் நபர் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல கட்டமைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை
இப்படிப்பட்ட சூழலில் அப்புறம் யாரை, எந்த அமைப்புகளை வைத்து மூன்றாவது அணியை உருவாக்குவது? இவற்றைத் தாண்டி இருப்பவை பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த் தேசிய அமைப்புகள்தான் இவற்றை வைத்துதான் மூன்றாவது அணி. இது எந்த அளவு சாத்தியம் என்று யோசிப்போம்.
கடந்த கால அனுப வங்கள்: தமிழகத்தில் தி.மு.க. அ.தி.மு.க. வுக்கு மாற்றாகத் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பதுதான் விழிப்புள்ள பெரும் பான்மை மக்களது கட்சித் தொண்டர்களது கருத்து என்றாலும், தேர்தல் கட்சிகள் எதுவும் இதற்குத் தயார் இல்லை என்கிற நிலையில், இத்தேர்தல் கட்சிகளுக்கு அப்பால் உள்ள இதர கட்சிகளாவது ஒன்று சேர்ந்து ஓர் அணியை உருவாக்காதா என்றால் அதற்கான வாய்ப்பும் மிகவும் அரிதாகவே தெரிகிறது.
தேர்தல் பாதை அல்லாத போராட்டக்கட்சிகளின் கடந்த பத்தாண்டு கால வரலாற்றை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால் அவை மார்க்சிய அமைப்புகளோ, அல்லது பெரியாரிய அமைப்புகளோ எதுவானாலும் அவை மேலும் மேலும் பிளவுபட்டோ, உடைந்தோ, சிறு சிறு அமைப்புகளாகப் பிரிந்தோதான் சென்றிருக்கின்றனவேயின்றி எதுவும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பில் இல்லை. ஒவ்வொரு அமைப்பின் சமீபகால வரலற்றையும் எடுத்துக் கொண்டு யோசிக்க இதுபுரியும். தனித் தனியாகப் பட்டியலிட வேண்டும் என்கிற தேவை இல்லை.
தனித்தனிக் கட்சிகளின் கதை தான் இப்படி என்றால், இது போன்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் உருவாக்கிய கூட்டமைப்புகளின் கதையும் இதுதான். சாதாரண காலங்களில் ஈழத்துக்காக ஒரு குரலில் ஓர் அணியில் நின்று போராடிய கட்சிகள்தான் நெருக்கடியான தருணத்தில் பல கூட்ட மைப்புகளாகப் பிரிந்தன. ஒவ்வொன் றும் தனித்தனிக் கூட்டணியாகப் பல போராட்டங்களை நடத்தின.
இவை ஏன் இப்படி நேர்கின்றன என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதாவது கொள்கை பூர்வமாய் எல்லோரும் ஓர் இலக்கில் இருக்கி றார்கள். ஆனால் அனைவரும் ஒரு அமைப்பில் இல்லை. தனித் தனியாக இருக்கிறார்கள். ஏன் என்று சிந்தித்துப் பார்த்தால். இவையனைத்திற்கும் நமக் குத் தெரியும் ஒரே காரணம் அமைப்புகளின் சனநாயகமற்ற தன்மைதான். எவரும் எந்த அமைப்பும் மாற்றுக் கருத்தை மாற்றுச் சிந்தனைகளை மதிப்பதில்லை. மாற்றுக் கருத்துகளுக் கான விவாதத்திற்கு கட்சியில் இட மளிப்பதில்லை. கட்சிகளின் உடைவு களுக்கான காரணங்களானாலும் சரி, கூட்டமைப்புகளின் உடைவுகள் பெருக்கங்களுக்கான காரணங்களா னாலும் சரி எல்லாவற்றுக்கும் அடிப்படை இதுவேதான் என்று தோன்றுகிறது.
இதற்கு முக்கிய காரணம் கட்சிகளின் பொறுப்பாளர்கள் காலப் போக்கில் தங்களைக் கட்சியின் உரிமை யாளர்களாக் கருதிக் கொண்டு அனைத்தும் தாங்கள் விரும்பியபடி தான், நடக்கவேண்டும் தங்கள் சொற்படி தான் செயலபட வேண்டும் என் கிற சர்வாதிகாரப் போக்கிற்கு இரையா கிறார்கள். இதனால் கட்சியின் பொறுப்பாளர்கள் சக தோழர்க ளையும், கூட்டமைப்பின் தலைமைக் கட்சிகள் சக கட்சிகளையும் மந்தை களாய் பாவித்து நடத்த முயல்கின்றன அறையில் சில பேர் கூடி முடிவு செய்து கொண்டு அப்புறம் பேருக்கு ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தி முடிவுகளை அறிவிக்கும் சனநாயக மற்ற போக்கு தலைதூக்குகிறது. மொத்தத்தில் தாங்கள் நினைப்பது தான், தாங்கள் எடுக்கும் முடிவுதான் சரியாய் இருக்க முடியும் என்று கருதுவதின் வெளிப்பாடு இது. ஆக இப்படிப்பட்ட கடந்த கால அனுப வங்களிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். அதன் படிப்பினைகளி லிருந்து தெளிவு பெற்று, நாம் தி.மு.க அ.தி.மு.க. வுக்கு மாற்றான மூன்றாவது அணியை உருவாக்க முயல வேண்டும்.
செய்ய வேண்டியது என்ன: மூன்றாவது அணிக்கான தேவைக ளையும், அதற்கான நியாயங்களையும் முன்வைத்து பலமுறை பேசப்பட்ட, தொடக்கத்தில் குறிப்பிட்ட கூட்டங் களில் பரிசிலனைக்காக முன்வைக்கப் பட்ட அதே கருத்துகளே இங்கே மீண் டும் பரந்துபட்ட வாசகர்களின் சிந்த னைக்கும் முன் வைக்கப்படுகின்றன.
மூன்றாவது அணி என்பது முக்கி யமான இரு கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது எனலாம். ஒன்று இந்த அணிக்கு வரும் நோக்கோடும் முனைப்போடும் இருக்கிற கட்சிகளின் சேர்க்கை. அதாவது அணியின் உருவாக்கம். மற்றொன்று இப்படிச் சேரும் கட்சிகளைக் கொண்டு அமையும் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அதன் செல்பாடுகள் இதனடிப்படையிலான சில ஆலோசனை கள் மட்டும் பரிசீலனைக்காக இங்கு முன்வைக்கப்படுகின்றன.
1. தமிழக உரிமைகளை மீட்கவும், தமிழர் நலன்களைப் பாதுகாக்கவுமான ஓர் நிலைத்த கூட்டமைப்பை உருவாக்க, தமிழகத்தில் உயிர்ப்போடு போராடி வருகிற கட்சிகள் அமைப் புகள் அனைத்திற்கும் அழைப்பு விடுத்து முதலில் இது தொடர்பான விரிவான ஒரு ஆலோசனைக் கூட் டத்தை நடத்தவேண்டும்.
2. இப்படிக் கூட்டப்படும் முதல் கூட்டத்தில். அனைத்து அமைப்பு களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விரிவான குறைந்த பட்சச் செயல் திட்டத்தை வரையறுத்து இத்திட் டத்தின் அடிப்படையில் அதில் சேர விரும்பும், அனைத்து, அமைப்புகளை யும் இணைத்து ஓர் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
3 இந்தக் கூட்டமைப்புக்கான பெயர், அமைப்பு விதிமுறைகள் அனைத்தும் அந்தக் கூட்டமைப்பில் சனநாயக முறைப்படி விவாதிக் கப்பட்டு, பெரும்பாலும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் உருவாக் கப்பட வேண்டும்.
4 கூட்டமைப்பை வழிநடத்த ஒரு தலைமைக் குழுவை சனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்து. அதி லேயே ஓர் ஒருங்கிணைப்பாளர், அல்லது தலைவர், செயலார், பொரு ளாளர் செயற்குழு உறுப்பினர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
5 கூட்டுத் தலைமையின் வழி காட்டலிலும் , சனநாயக முறைப்படி விவாதித்து எடுக்கப்பட்ட கூட்டு முடிவுகளின் அடிப்படையிலும் அமைப்பு இயங்கப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இக் கூட்டமைப்பின் குறைந்த பட்சத் திட்டத்தை ஏற்கும் எந்த அமைப்பும் இதில் இடம் பெறலாம் ஆனால் அகில இந்திய ஆதிக்க கட்சிகளோ, அல்லது அந்த ஆதிக்க கட்சிகளோடு கூட்டு சேர்ந்துள்ள கட்சிகளோ இக் கூட்டமைப்பில் நிச்சயம் இடம் பெற இயலாது என்கிற புரிதலில் இதற்கான விதிமுறைகள் செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
இப்படியெல்லாம் ஏதாவது மாற்று முயற்சிகளில் இறங்கினால் தான் தமிழனுக்கு தமிழகத்துக்கு ஒரளவாவது விடிவு காலம் பிறக்கும். அல்லாது இதே நிலையை நீடிக்க விட்டால் தமிழகம் காலா காலத் துக்கும் தில்லியின் கொத்தடிமையாகவே கிடந்து அண்டை மாநிலங்களால் வஞ்சிக்கப்பட்டும் அண்டை சுண்டைக்காய் நாட்டவர்களால் தாக்கப்பட்டும் தமிழனை யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அளவுக் குத் தமிழன் அனாதையாகத் திரிய வேண்டிய அவலமே தொடரும். எனவே, தலைவர்கள் காலத்தே சிந்தித்து நல்லதொரு முடிவை விரைந்து எடுப்பது நல்லது. இந்த நல்ல முடிவவைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் மக்களும் தொண்டர்களும்.
(தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் எழுதிய ‘மூன்றாவது அணி மக்கள் தயார் கட்சிகள் தயாரா’ என்கிற தலைப்பிட்டது உள்ளிட்ட பல்வேறு கட்டுரைகள் அடங்கிய நூல் தொகுப் பின் அறிமுகக் கூட்டங்கள் தமிழகமெங்கும் வாய்ப்புள்ள இடங்களில் நிகழ்த்தப்பெற்றன. அப்படி நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மதுரை, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களில் இந்நூலை அறிமுகம் செய்து உரையாற்றும் வாய்ப்பு கிட்டிது. அதன்படி அந்நூலை அறிமுகம் செய்து ஆற்றிய உரையின் சுருக்கத்துடன் நேரம் கருதி முழுமையாக அங்கு வெளிப்படுத்த வாய்க்காது மனத்திலேயே தங்கிப்போன சில கருத்துகளையும் சேர்த்து தற்போது இதழுக்கான கட்டுரையாக இது இங்கே தரப்படுகிறது.
நூல் பற்றி: நூலாசிரியர் பல்வேறு தருணங்களில் தினமணி, தென்செய்தி மற்றும் தமிழன் எக்ஸ்பிரஸ் ஆகிய இதழ்களில் எழுதிய கட்டுரைகள் ஒரு மொத்தமாகத் தொகுக்கப்பட்டு ‘மூன்றாவது அணி - மக்கள் தயார் கட்சிகள் தயாரா’ என்கிற தலைப்பில் வெளிவந்துள்ளது.)