அரசு உதவி பெறும் தனியார் நிறுவனங்களிலும், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும், சமூக கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்து, கடந்த ஜனவரி மாதம், மத்திய அரசு நாடாளுமன்றத்தில், சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்த மத்திய அரசு, பார்ப்பனர்களின் மிரட்டலுக்கு பணிந்து, இந்த 27 சதவீத இடஒதுக்கீட்டை அமுலாக்குவதற்காக பரிந்துரைக்க  கருநாடக மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி தலைமையில்  ஒரு மேற்பார்வைக் குழுவை கடந்த மே 27 ஆம் தேதி நியமித்தது.

குழுவின் விசாரணை வரம்பிலேயே மத்திய அரசு தனது எண்ணத்தை வெளிப்படுத்திவிட்டது. அதாவது, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு செய்யும்போது, அதனால் பார்ப்பன, உயர் சாதியினருக்காக குறைகிற இடங்களை குறையும் எண்ணிக்கைக்கேற்ப உயர்த்த அரசு முடிவு செய்து விட்டது. அப்படி இடங்களை உயர்த்துவதற்குத் தேவையான கட்டமைப்புகள், நிதி ஆதாரங்களைப் பற்றி, பரிந்துரைக்க வேண்டும் என்பதே, மத்திய அரசு நிர்ணயித்துள்ள விசாரணை வரம்பாகும்.

எனவே, வீரப்ப மொய்லிக் குழு, மத்திய அரசு, கோரியதன் அடிப்படையிலேயே, ஒரு பரிந்துரையை, கடந்த ஆகஸ்டு 31 ஆம் தேதி அரசுக்கு அளித்துள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்வதைவிட - ஏற்கனவே சிறுபான்மைக் கூட்டமான பார்ப்பன உயர் சாதியினர் அனுபவித்து வரும் 77.5 சதவீத இடங்களை உறுதி செய்யவே மத்திய அரசு விரும்புகிறது. வீரப்ப மொய்லி குழு தனது பரிந்துரை மூலம், இதை வழிமொழிந்துள்ளது.

வீரப்ப மொய்லி குழுவின் முக்கிய பரிந்துரைகள்:

1. பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம்; தாழ்த்தப்பட்டோர்  பழங்குடியினருக்கு 22.5 சதவீதம் இடங்களை ஒதுக்குவதால்  பொதுப் போட்டிக்கான இடங்களில் (அதாவது பார்ப்பனர், உயர்சாதியினருக்கானது). தற்போதுள்ள இடங்களைவிட 54 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

2. 27 சதவீத இடஒதுக்கீட்டை  9 சதவீதமாக மூன்று ஆண்டுகளில் கட்டம் கட்டமாக அமுல் நடத்தலாம். இதற்காக அடுத்த அய்ந்து ஆண்டுகளில் அரசு ரூ.16,563.34 கோடி ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்.

3. உயர்கல்வி நிறுவனங்களில்  குறிப்பாக அய்.அய்.டி.- அய்.அய்.எம். போன்ற நிறுவனங்களில் பேராசிரியர்களுக்கான பதவிகள் ஏற்கனவே காலியாகவே இருக்கின்றன. இந்த நிலையில், இடங்களை மேலும் அதிகரிப்பதால், அண்மையில் ஓய்வு பெற்றவர்கள், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஓய்வு பெற இருப்பவர்களை பேராசிரியர் பதவிகளில் அமர்த்தலாம். ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தலாம். 70 வது வரை மூன்று ஆண்டு ஒப்பந்தம் செய்து பணியில் அமர்த்தலாம். (இதனால் வேலைவாய்ப்புகளில், பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே இருக்கும் பார்ப்பன உயர்சாதியினருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கும்).

4. அய்.அய்.டி., அய்.அய்.எம்., ஏ.அய்.அய்.எப்.எஸ். போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் உலகத் தரம் வாய்ந்தவை. எனவே, அந்தத் தரங்களைக் காப்பாற்ற - மாணவர் சேர்க்கைக்கான முறைகளை தற்போதுள்ளதைப் போல, அந்தந்த நிறுவனங்களே தீர்மானிக்க வேண்டும்.

5. இந்த உயர்கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் குழுவுக்கு ‘தன்னாட்சி’ வழங்கப்பட வேண்டும்; பதவி நியமனங்களை அவர்களே முடிவு செய்வார்கள்; அப்போதுதான் விசேட நியமனங்கள் விரைவாக நடக்கும்; ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் - தொகையை - இந்தக் குழுவே தீர்மானிக்க வேண்டும்.

Pin It