எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர் மொழியைக் கற்றுக் கொண்டு போவது அல்லது அந்த ஊருக்கு போய் மொழியைக் கற்றுக் கொள்வது, என்பது வேற்று மொழி பேசும் ஊருக்கு பிழைப்புத் தேடி போகிறவர்களின் வழக்கம். ஆனால், வியாபாரம் செய்ய வந்ததாக சொல்லிக் கொண்ட வெள்ளையர்கள் தங்கள் துப்பாக்கி முனைக்குப் பதிலாக நம் நாட்டையே விலையாகப் பெற்றனர்.

Lady இப்படி முறையற்ற முறையில் நாட்டுக்குள் நுழைந்து செல்வங்களைச் சூறையாடியவர்கள், இங்கேயே தங்கி இந்தியர்களின் உழைப்பைச் சூறையாட ஆரம்பித்தார்கள். இந்தியர்களை ஆள ஆரம்பித்த அவர்களுக்கு மொழி ஒரு பெரிய தடையாக இருந்தது.

தங்கள் அடிமைகளை அதட்ட, விரட்ட, சொல்வதை உடனே புரிந்து கொண்டு சேவகம் செய்ய, தனது அதிகாரத்தை விஸ்தரிக்க, தங்கள் ஆதிக்க எண்ணத்தை மொழியால் புரிய வைத்து, அதை செயலாக்க, அரசு என்ற எந்திரத்தை நிர்மாணிக்க மொழி, பிரிட்டிஷாருக்கு ஒரு பெரிய பிரச்சினையாகத்தான் இருந்தது.

அதனால், தமிழ் பேசுகிற பகுதியில் இருந்த வெள்ளையர்கள் தமிழும், தெலுங்கு பேசுகிற பகுதியில் இருந்த வெள்ளையர்கள் தெலுங்கும், இந்தி பேசுகிற பகுதியில் இருந்த வெள்ளையர்கள் இந்தியும் படிக்க ஆரம்பிக்கவில்லை.

மாறாக, இங்கு பண்டிட்டுகளாக இருந்தவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்து - இந்தியர்களை ஆள, அரசு எந்திரத்தை நிறுவிக் கொண்டார்கள். பண்டிட்டுகளின் மூலமாக தங்களின் எண்ணங்களைச் சொல்லி, இந்தியர்களை விரட்ட, அடக்க, சுரண்ட, அடக்கு முறையை எதிர்த்தால் அடித்து ஒடுக்க இந்தியர்களையே தயார் செய்து கொண்டார்கள். சுதந்திரப் போராட்டக் காலத்தில் கூட ஆங்கிலேய எதிர்ப்பு இருந்த அளவிற்கு ஆங்கில எதிர்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, அடிமைகளை உருவாக்குவதற்கும், அடிமைகளை அடக்குவதற்கும் உண்டாக்கப்பட்ட இந்தக் கல்வி முறையை தயார் செய்துக் கொடுத்த ஆங்கிலேயர்தான் மெக்காலே.

அதனால் தான் ஆங்கிலம் தெரிந்தவன் அறிவாளி என்றும், தெரியாதவன் முட்டாள் என்றும் ஒரு அடிமை புத்தி நாடு முழுவதும் பரவி கிடக்கிறது. இந்த அடிமைப் புத்தி பிரிட்டிஷார் எந்த நாட்டை எல்லாம் ஆண்டார்களோ, அந்த நாட்டில் எல்லாம் விரவி இருக்கிறது. பிரான்சில் ஆங்கிலம் பேசினால் உங்களுக்கு மரியாதை இல்லை. இந்த நிலை இத்தாலி, ஜெர்மன், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் இருக்கிறது.

ஆங்கிலேயர்கள் பயிற்றுவித்த அடிமை கல்வி முறையில் இன்னும் அப்படியே தொடர்வதினால்தான் இந்தக் கல்விமுறையில் நன்கு தேர்ந்தவர்கள் தங்களின் முன்னாள் எஜமானனான வெள்ளையனிடம் சேவகம் பார்க்க விசுவாசமாக வெளிநாடு கிளம்பி விடுகிறார்கள்.

மொழி ரீதியாக அடிமையாக கட்டுண்டு இருக்கிற இந்த உணர்வு, தமிழைக் கூட ஆங்கிலமாக்கிப் பயன்படுத்துகிற வரை சென்று இருக்கிறது. அதை ஒரு எடுத்துக்காட்டு மூலம் பார்ப்போம். மனிதர்களின் அடையாளம் அவர்களுடைய பெயர், க.இளங்கோ என்ற பெயர் கொண்ட ஒருவரை, உங்கள் பெயரை எழுதுங்கள் என்று சொன்னால், உடனே அவர் K. Elango என்று எஸ்.எம்.எஸ் பாணியில் எழுதுவார், இதையே தமிழில் எழுதுங்கள் என்றால், கே.இளங்கோ என்று எழுதுவார். கே வை க வாக மாற்ற வேண்டும் என்கிற உணர்வை இயல்பாகவே அவர் இழந்திருப்பார்.

இவைகளையெல்லாம் சுட்டிக்காட்டி, சமூக அக்கறையும் தாய்மொழி உணர்வும் உள்ளடக்கமாக இல்லாத கல்வி வெறும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற உணர்வை மட்டுமே ஏற்படுத்தியிருக்கிறது என்ற நாம் சொன்னால்,

இன்றைய நவீன வடிவமான எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்றவற்றிற்கு ஆங்கிலம்போல் தமிழ் பொருத்தமாக வராது என்று வறட்டுப் பிடிவாதமே பதிலாக வருகிறது.

ஜெராக்ஸ் எந்திரத்தில் தமிழில் மட்டும்தான் ஜெராக்ஸ் எடுக்க முடியும் என்பது எவ்வளவு அபத்தமானதோ? அதுபோல்தான் இதுவும். கணினியில் நாம் என்ன தருகிறோமோ அதைத்தான் அது திருப்பித் தரும். ஆங்கிலத்தில் தந்தால் ஆங்கிலத்திலும் தமிழில் தந்தால் தமிழிலும் தரும்.

உலகளவில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னணியில் இருக்கும் நாடுகள் சீனாவும் ஜப்பானும்தான். இவர்கள் தங்கள் தாய்மொழியில்தான் தொழில்நுட்ப அறிவைப் பெற்றார்கள். தாய்வழியாகத்தான் சிந்திக்கிறார்கள்.

ஆக, அறிவியல் பூர்வமான விளக்கங்களோடு, எதையும் ஏன்? எதற்கு? என்று தர்க்க அறிவை வளர்க்கிற, சமூக அக்கறையை சொல்கிற, சக மனிதர்களின் துயரங்களை புரிந்து கொள்கிற, சிறந்த குடிமகன்களை உருவாக்குகிற கல்வியை தமிழால் தருவதுதான் சரியான மாற்று. மாறாக பிற்போக்குத்தனமான வெறும் பணம் சம்பாதிக்க மட்டுமே தயார் செய்கிற கல்வியை ஆங்கிலத்தில் இருந்து தமிழ்படுத்தி தருவதல்ல. அது கேவலத்திருந்து கழிசடைக்கு மாறியதுபோல் இருக்கும்.

தெலுங்கு கீர்த்தனைகளையே பாடிக் கொண்டிருந்த கர்நாடக சங்கீத வித்வான்களை தமிழிலும் பாடுங்கள் என்று கேட்ட போது அவர்கள் மக்களுக்கு பயன்பெறாத பழமை வாய்ந்த மூடக் கருத்துக்களை, தமிழாய் பாடியபோது தந்தை பெயார் சொன்ன குட்டிக்கதை ஞாபகத்திற்கு வருகிறது.

மருமகனின் பல் ஊத்தை பிடித்திருந்ததைப் பார்த்த மாமியார், மருமகனிடம் ஒழுங்காக பல்லை விளக்கு என்று சொல்ல கூச்சப்பட்டு, அவனிடம் பணம் கொடுத்து, கரும்பு வாங்கி சாப்பிட்டு வாருங்கள் என்றாராம். மாமியார் கொடுத்த பணத்தை வாங்கிச் சென்ற மருமகன் கரும்புக்கு பதில் எள்ளுப் புண்ணாக்கை வாங்கி தின்று விட்டு வந்தானாம்? அதுபோல் இருக்கிறது தமிழிசை என்றாராம் பெரியார்.

தமிழ் வழிக் கல்வியும் அதுபோல் ஆகிவிடக்கூடாது.

பின் குறிப்பு:

தமிழர்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் வாழும் பிற மொழிக்காரர்களும் தமிழை கட்டாயம் விரும்பி படிக்க ஒரே வழி, தமிழக அரசு நிறுவனங்களில் தமிழ் வழியில் கல்வி படித்தவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சட்டம் கொண்டு வருவதே. அப்படி ஒரு சட்டம் வந்தால், இரண்டாம் உலக போரில் ஹிட்லர் ஜெயித்து விடுவான் என்று நம்பி ஜெர்மன் படிக்க ஆரம்பித்தவர்களே தற்பொழுது பேஷாக தமிழ் வழியில் படிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்றால் பாருங்களேன்.

ஆம், ஒரு செய்தியை ஆயிரம் வழிகளில் விளக்குவதை விட, ஒரு செயல் அதை எளிதாக புரிய வைத்துவிடும்.
Pin It