இனத் தூய்மைப் பேசுகிறவன் - ஜாதித் தூய்மை பேசுகிறான்; ஜாதித் தூய்மை பேசுகிற சுத்தத் தமிழன்தான் இந்துத்துவத்துக்கும் ஜாதி வெறிக்கும் துணை போகிறான் என்று குறிப்பிட்டார், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்.
பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரின் இந்தத் தெளிவான ஆழமான பேச்சு சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது. உரையின் முக்கியத்துவம் கருதி ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது.
பெரியாரைப் போய் அவர் தமிழர் இல்லை என்று சில அரைவேக்காடுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தந்தை பெரியார் தமிழர் அல்ல கன்னடர் என்று அவர்கள் சொல்வதை அங்கீகரித்தால் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையே புறந்தள்ள வேண்டிய நிலை வரும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தமிழ் உணர்வு உள்ளது. தமிழ் உணர்வு என்பது வேறு, இனத்தூய்மை என்பது வேறு. தமிழனுக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பது இன உரிமை. தமிழனின் தாய் மொழியான தமிழுக்கு மரியாதை வேண்டும் என்பது இன உரிமை.
தமிழனுக்கென்று ஒரு நாடு ஈழம் பிறக்க வேண்டும் என்பது இன உரிமை. அது இன உரிமையில் இருந்து உருவாகின்ற களங்கள். ஆனால், இவன் தமிழனல்ல இவன்தான் சுத்தத் தமிழன் என்றால், சுத்தத் தமிழன் தான் தருமபுரியிலே தீ வைத்தான். சுத்தத் தமிழன் தான் நாட்டுக்குடியிலே வெடிகுண்டு வீசினான். அந்த சுத்தத் தமிழன் தான் பித்துக்குளிப் பிடித்து இந்த களத்திலே நிற்கிறான். அந்த சுத்தத் தமிழன் தான் இந்துத்துவத் திற்கு துணை போகிறான். அந்த சுத்தத் தமிழன் தான் மத வெறியர்களுக்குத் துணை நிற்கிறான். மத வெறியர்களுக்குத் துணை நிற்கிற சுத்தத் தமிழனை விட, மத வெறியர்களுக்கு எதிராகத் தமிழர் அல்லாத வேறொரு இனத்தில் பிறந்த அந்த போராளி தான் மேலானவர் தந்தைப் பெரியார். மனிதநேயப் போராளி, பகுத்தறிவுப் போராளி, ஆதிக்க எதிர்ப்புப் போராளி அந்த போர்க் குணம் தான் நம்மையும் அவரையும் பிணைக்கிறது, இணைக்கிறது. ஆகவே இந்த இடத்தில் மொழி என்பது முக்கியமில்லை. அவர்கள் உள்வாங்குகிற, உள் வாங்கிப் பரப்புகிற கருத்தியல் தான் முக்கியமானது.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தார் என்பதற்காக நாம் அம்பேத்கரை உயர்த்திப் பிடிக்கவில்லை. நம் விடுதலைக்காக உழைத்தார் என்பதற்காகத்தான் உயர்த்திப் பிடிக்கிறோம். அம்பேத்கர் அளவிற்கு இல்லாமல் மிக உயர்ந்த பதவிகளைப் பெற்றவர் தான் நம் மதிப்பிற்குரிய பாபு ஜெகஜீவன்ராம். இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர். அம்பேத்கர் பெரிய கோடீஸ்வரர் அல்ல. ஆனால், பாபு ஜெகஜீவன் ராம் பெரிய கோடீஸ்வரர். ஆனால் தினந்தோறும் இன்று நாம் பேசிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில்கூட, இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் ஒரு குக் கிராமத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் உருவப் படத்தை அல்லது சிலையைத் திறந்து வைத்து அவருடைய பிறந்தநாளை ஒரு ஒடுக்கப் பட்டவன் கொண்டாடிக் கொண்டிருப்பான். அதுதான் புரட்சியாளர் அம்பேத்கரின் வெற்றி. அதற்குக் காரணம் அவர் உள்வாங்கிய கொள்கை, அவர் முன் வைத்த கொள்கை, அவர் கட்டியமைத்த களம், அவர் நடத்திய போராட்டம், அவருடைய இலட்சியம் அதுதான் முக்கியமானது. ஆகவே நாம் எப்படி இந்த இடத்தில் மொழியின் அடிப்படையில் தந்தை பெரியாரை அந்நியப்படுத்த முடியாதோ அதே போலத்தான் புரட்சியாளர் அம்பேத்கரையும் கொள்கையின் அடிப்படையில் நாம் கோட்பாட்டுத் தலைவராக உள்வாங்கியிருக்கிறோம்.
கோட்பாடுதான் அனைத்தையும் தீர்மானிக்குமே தவிர இனமும், மொழியும் அடையாளங்களே தவிர அவை தீர்மானிக்கும் சக்திகள் அல்ல. இனத் தூய்மை ஞாயமானதென்றால்! ஜாதித்தூய்மை ஞாயமானதாகிவிடும். இனத்தூய்மைவாதம் ஞாய மானதென்றால் ஜாதித் தூய்மை பேசுகிற ஜாதி வெறியர்கள் சொல்லுகிறவாதம் ஞாயமானதாகி விடும். அவன் சொல்கிறான் இந்த ஜாதியும், இந்த ஜாதியும் கல்யாணம் பண்ணக் கூடாது என்கிறான்.
எவனுக்காகப் பெரியார் பேசினாரோ அவனே செருப்பை எடுத்து வீசினான், எவனுக்காகப் பேசினாரோ அவனே அழுகிய முட்டையை எடுத்து வீசினான், அவர் மேல். எவனுக்காகப் பேசினாரோ அவனே நரகலை எடுத்து வீசினான். எல்லாவற்றையும் சகித்துக் கொண்டார். இந்த மாதிரியான யுத்தக் களத்தில் என் தன்மானத்தை விட இனமானம் தான் பெரிது என்றார். ஏன் இனமானம் பெரிது என்று கூறினார் என்றால், இனமானத்தின் மூலமாவது ஒவ்வொருவனுக்கும் தன்மானத்தை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையினால் தான் தந்தை பெரியார் அவை அனைத்தையும் சகித்துக் கொண்டார்.
தந்தை பெரியாருக்கு முன்னால் தலித் சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் இந்த கருத்தியலைப் பேசி யிருக்கிறார்கள், இல்லை என்று மறுக்க முடியாது. ஆனால், அடித்தட்டு வரையில், உழைக்கிற மக்களிடம் ஊர்ஊராய்ப் போய், அரசியல்வாதி ஊர்ஊராய்ப் போகிறான் என்றால் ஓட்டுக்காக, அரசியல்வாதி திருமணங்களில் கலந்து கொள்கிறார்கள் என்றால் அது வாக்குகளுக்காக! அரசியல்வாதிகள் காதணி விழாவுக்கு, சாவுக்குப் போகிறார்கள் என்றால் அது வாக்குகளுக்காக. போகவில்லையென்றால் ஓட்டு கிடைக்காது. போனால் தான் ஓட்டு கிடைக்கும். ஆனால், ஓட்டுகளைப் பற்றியே கவலைபடாமல் ஊர்ஊராய் ஒரு தலைவர் போனார் என்றால் அது தந்தைப் பெரியார். எவ்வளவு பெரிய சமூக அக்கறை என்று யோசித்து பாருங்கள். அவர் ஊட்டிய தன்மானத்தைப் பெற்றவர்கள் அவரையே தமிழர் இல்லையென்று சொல்வது தான் வேதனையாக இருக்கிறது.
திமுகவின் மீது உங்களுக்கு விமர்சனம் இருக்கலாம், அது அரசியல் கட்சி. அதிமுகவின் மீது உங்களுக்கு விமர்சனமிருக்கலாம் அதுவும் அரசியல் கட்சி. அதில் நான் தலையிட விரும்ப வில்லை. திமுகவில் ஜாதி பார்த்தார்கள், ஜாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தினார்கள், அதிமுகவில் ஜாதி ஆதிக்கம் நிலைபெற்றது, அது திராவிட அரசியல் கட்சிகள். திராவிடர் கழகம் குறிப்பாக பெரியார் எடுத்த அந்த இயக்கம் என்பது ஜாதி ஒழிப்புக் களத்தில் மகத்தான பங்களிப்பு அது. ஜாதி வாழ்க என்று சொல்லுகிறவன் தந்தை பெரியாரை எதிரியாகப் பார்ப்பான். திருமாவளவன் தந்தைப் பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்ட தற்குக் காரணம்? புரட்சியாளர் அம்பேத்கரைப் போல அவரை உள்வாங்கிக் கொண்டதற்குக் காரணம்? ஜாதி ஒழிக ஒழிக ஒழிக என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் பேசு வதனால் தான் திராவிடர் கழகமும், தந்தை பெரியாரும் நமக்கு நட்பு சக்திகளாகத் தெரிகின்றனர்.
எந்த ஒருவன் திராவிடர் கழகத்தையும், தந்தை பெரியாரையும் பகை சக்திகளாக அடையாளப் படுத்துகிறானோ அவன் ஜாதியவாதிகளுக்கு துணை போகின்றான் என்று பொருள், இந்துத்துவத்திற்கு துணை போகிறான் என்று பொருள், இந்து மதத்தை காப்பாற்றத் துணை போகிறான் என்று பொருள். இந்த மண்ணில் நீண்ட நெடுங்காலமாக நிலைத்து நிற்கிற பார்ப்பனர் சமூகத்தினரின் ஆதிக்கத்திற்கு துணை போகிறான் என்று பொருள். பழமைவாதத்தைக் கட்டிக் காப்பாத்த துணை போகிறான் என்று பொருள். பெண்கள் விடுதலை பெறக்கூடாது என்று நினைக்கிறான் என்று பொருள். தலித்துகள் விடுதலைப் பெறக்கூடாது என்கிறான் என்று பொருள். தலித்துகளை விரோதமாகப் பார்க்கிறான் என்று பொருள். அப்படிப்பட்டவர்களால் மட்டும் தான் பெரியாரை எதிராகப் பார்க்க முடியும்.
பெரியாரை நாம் நண்பராக, தோழராக, தலைவராகப் பார்ப்பதற்கு காரணம்? புரட்சியாளர் அம்பேத்கர் முன்மொழிந்த அதே ஜாதி ஒழிப்புக் கருத்தியலை தந்தை பெரியார் உயர்த்திப் பிடித்தார், களமாடினார், பல கடுமையான அச்சுறுத்தல்களை எதிர் கொண்டார், விமர்சனங்களை சகித்துக் கொண்டார். அவமதிப்புகளைப் பொறுத்துக் கொண்டார். அதனால் தான் அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்றைக்கு அவருடைய கொள்கை உயிர்ப்போடு இருக்கிறது. இன்றைக்கும் அது வலுப்பெற்று நிற்கிறது. அந்தக் களத்திலே விடுதலைச் சிறுத்தைகளும் கை கோர்த்து நிற்கிறது. தொடர்ந்து இந்தக் களத்தில் நாம் கை கோர்த்து நிற்போம்.