உலகிலே எங்கும் இல்லாத ‘விதவை’ என்ற சமூகக் கொடுமையை பெண்கள் மீது திணித்தது, இந்து பார்ப்பனிய மதம் தான். இதில் கூடுதல் பாதிப்புக்குள்ளானவர்கள் பார்ப்பனப் பெண்கள். மொட்டை அடித்து, ரவிக்கையை கழற்றி, காவி உடை போர்த்தி, மூளையில் உட்கார வைத்து விடுவார்கள். எந்த ‘மகிழ்ச்சி’யான நிகழ்வுகளிலும் பங்கேற்க அவர்களுக்கு உரிமை கிடையாது. பார்ப்பனர்களை பின்பற்றி அவர்கள் வழியில் வாழ முயன்ற, வேறு உயர் வர்ணத்தவரிடமும் இது வேகமாகப் பரவியது. ஆனால், இந்து சாஸ்திர சம்பிரதாயங்களை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனர்கள், தங்கள் சமூகத்துக்கு  அதனால் பாதிப்பு ஏற்படும்போது அதைக் கைவிடத் தயங்க மாட்டார்கள். இன்று மொட்டையடித்து காவிப் புடவை சுற்றிக் கொள்ளும் பார்ப்பனப் பெண்களைப் பார்ப்பது அபூர்வம். ஆனால், பார்ப்பனியத்தைப் பின்பற்றத் துடிக்கும் ஆதிக்கசாதி சக்திகளிடம் விதவைக் கோலத்தைப் பார்க்க முடிகிறது.

‘காதரைன் மேயோ’ என்ற அமெரிக்கப் பெண், இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தபோது, இங்கே நடந்த சமூகக் கொடுமைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து 1928-இல் ஒரு நூலை ஆங்கிலத்தில் எழுதினார். அந்த நூலின் பெயர் ‘இந்திய மாதா’. இந்த நூல் வெளிவந்த பிறகு, உலகம் முழுதும் இந்தியாவில் நடக்கும் சமூக அவலங்கள் பரவியது. உலகம் முழுதும் பேசப்படும் நூலாகிவிட்டது. ஆத்திரமடைந்த காந்தியார், ‘இது சாக்கடை ஆராய்ச்சி என்றும், மேயோ குப்பைத் தொட்டிகளைத் தேடிப் போய் ஆராய்ச்சி செய்யும் குப்பைக்காரி’ என்றும் கடுமையாக விமர்சித்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் நூலில் கூறப்பட்டுள்ள கருத்துகள் உண்மையா, இல்லையா என்று கேள்வி எழுப்பியது. பெரியாரின் நெருங்கிய நண்பரும் சுயமரியாதைக்காரருமான கோவை அய்யாமுத்து, “மேயோ கூற்று மெய்யா? பொய்யா?” என்ற நூலை எழுதி காந்திக்கு பதிலடி தந்தார். அந்த மேயோ, இந்தியாவில் விதவைகள் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்.

“ஒரு பெண் விதவையாய் விட்டால் அவளை, புருஷன் வீட்டிலுள்ள அனைவரும் வேலைக்காரியைப் போலவே நடத்துகிறார்கள். மிகவும் கடினமான வேலைகளையே அவள் செய்ய நேரிடும். அவளுடைய சௌகரியத்தை வீட்டில் எவரும் கவனிப்பதில்லை. ஒரு வேளை சாப்பாடுதான் அவளுக்குக் கிடைக்கும். வீட்டில் ஏதாவது சுபகாரியங்கள் நடந்தால் அதில் விதவையாயுள்ளவள் கலந்து கொள்ள முடியாது. விதவை வீட்டிலிருப்பதே மிகவும் அபசகுணமென இந்துக்கள் கூறுகின்றனர். வீட்டிலுள்ளவர்களில் எவருக்காவது உடம்பு அசௌகரியமாய் விட்டால், அதை கவனிக்க வேண்டியது வீட்டிலுள்ள விதவையின் கடமையாகும்.

“எங்கள் மனைவிகளை மிகவும் கொடுமையாக நடத்துகிறதால், அவர்கள் ஒரு வேளை விஷம் கொடுத்துக் கொன்று விட்டாலும் கொன்றுவிடலாமெனக் கருதியே எங்கள் முன்னோர்கள் விதவையாய்ப் போய் விட்டால் அவளுக்குப் பலவித துன்பங்களையும், நிபந்தனைகளையும் ஏற்படுத்தினார்கள்” என ஒரு பிரபல இந்து என்னிடம் கூறினார்.

விதவைகள் விஷயத்தில் இன்னும் சில பரிதாபகரமான சம்பவங்கள் நிகழ்கின்றன. சிறு வயதுள்ள ஒருத்தி விதவையாய்விட்டால், உடனே தன்னுடைய ஆடைகள் மீது எண்ணெயை ஊற்றிக் கொண்டு தன்னையே தீக்கிரையாக்கிக் கொள்கிறாள். விதவையாயிருந்து வீட்டிலுள்ள அனைவரும் துன்பப்படுத்துவதைச் சகித்துக் கொண்டிருப்பதைவிட இறந்து விடுவதே மேலென எண்ணுகிறாள்” - என்று படம் பிடித்தார், மேயோ.

முதன்முதலாக பிரிட்டிஷ் ஆட்சியில், 1885 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி லண்டனிலுள்ள ‘கவர்னர் ஜெனரல்’ ஆலோசனைக் குழுவில் ‘இந்து விதவைகள் மறுமணம்’ எனும் மசோதாவை கிராண்ட் என்ற உறுப்பினர் அறிமுகம் செய்தார். பார்ப்பன வைதீக பிற்போக்கு இந்துக்களிடமிருந்து இதற்கு கடும் எதிர்ப்பு வந்தது. எதிர்ப்புகளைப் புறக்கணித்து, 1856 இல் ‘இந்து விதவைகள் மறுமணம்’ சட்டமாக இயற்றப்பட்டது. 1871 இல் ‘விதவைகள் மறுமணச் சங்கம்’ அமைக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் 1856 டிசம்பர் 7இல் வங்காளத்தில் முதன்முதலாக விதவை மறுமணம் நடத்தப்பட்டது.

சென்னை மாகாணத்தில் விதவைகள் மறுமணத்துக்கு பலத்த ஆதரவு இருந்தது. 1898 இல் வீரேசலிங்கம் பந்துலு என்பவர், சென்னையில் விதவைகள் காப்பகம் ஒன்றைத் தொடங்கினார். அதை முன் உதாரணமாகக் கொண்டு சென்னை மாகாண அரசு 1903 இல் இந்து மற்றும் முஸ்லீம் விதவைகளுக்குக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் நிதி உதவி வழங்கும் திட்டம் ஒன்றை அறிவித்தது. சென்னை நகரத்தில் இது தொடர்பாக திவான் பகதூர் ஆர். ரெங்கநாதராவ் மற்றும் பி.சென்ட்சல் ராவ் ஆகியோர் விதவை மறுமணத்தை ஆதரித்து பல நூல்களையும் சிறு வெளியீடுகளையும் வெளி யிட்டனர். சென்னை மாகாணத்தில் வீரேசலிங்கம் முயற்சியால் முதல் விதவை மறுமணம் நடத்தப் பட்டது. அதற்கு பலத்த எதிர்ப்புகள் வந்ததால், ஆங்கிலேய காவல்துறை மேலதிகாரி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகளை செய்தார். சென்னை மாகாணத்தில் அடுத்த ஏழு ஆண்டுகளில் மூன்றே மூன்று விதவைகள் மறுமணம் மட்டுமே நடந்தது.

1925களுக்குப் பிறகு சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, விதவை மறுமணத்துக்கான கருத்துகள் வீரியத்துடன் மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கப்பட்டது. பெரியார் தனது சொந்த குடும்பத்திலேயே விதவை மறுமணத்தை நடத்தி வைத்தார். ஆனாலும், பெண்களை புறக்கணிக்கும் பார்ப்பன ‘மனுதர்ம சிந்தனை’ இன்னும் உயிர்த் துடிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

உத்தரபிரதேசம் மதுரா மாவட்டத்தில் ஆதரவற்ற ‘விதவை’ப் பெண்களுக்கான மறுவாழ்வு இல்லம் 2006 ஆம் ஆண்டு உ.பி. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. பின்னர் விருந்தாவன்  ‘அகிலா பாரதிய மாசாரதா சமாஜ் கல்யாண் சமிதி’ என்ற அரசு சாராத அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ‘விருந்தாவன் விதவை’கள் காப்பகத்தில் மரணமடையும்  “விதவைகள்” சடலம் குப்பை எடுப்பவர்களிடம் அளிக்கப்படுகிறது. காரணம், விதவைப் பெண்கள் மரணமடைந்தால் அவர்களை அடக்கம் செய்ய அந்த அரசு சாரா அமைப்பு மறுத்துவிட்டதுதான். எனவே அவர்கள் உடல்களை குப்பை எடுப்போரிடம் எடுத்து வீசப்படுகிறது. அவர்களோ துண்டு துண்டுகளாக வெட்டி சணல் சாக்குகளில் திணித்து தூக்கி எறிகிறார்கள்.

சாக்கில் மூட்டை கட்டிப் போடப்பட்டுள்ள இந்தப் பெண்களின் உடல்கள் பணம் தந்தால்தான் அங்கிருந்து எடுக்கப்படும் நிலை. மாவட்ட சட்ட சேவை ஆணையகம் நேரில் ஆய்வு நடத்தியபோது இந்த அதிர்ச்சியான உண்மைகள் வெளி வந்தன. ஆங்கில நாளேடு ஒன்றும் இந்த உண்மைகளை வெளிக் கொண்டு வந்தது. விதவைப் பெண்களை ‘மனு தர்ம’த்தை பொது புத்தியில் ஏற்றிக் கொண்ட சமூகம், அதே பார்வையில் அவர்களை வெறுப்புக்குரியவர்களாகவே பார்க்கிறது. சட்டசேவை மய்யம் உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு வழக்கு ஒன்றின் மூலம் கடந்த மே முதல் வாரம் கொண்டு சென்றது. இது பற்றி விசாரித்து அறிக்கை அளிக்க 7 பேரடங்கிய குழு ஒன்றை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

‘மனுதர்ம சிந்தனை’ - பெண்கள் பிணமான பிறகும்கூட அவர்களை வெறுத்து ஒதுக்குகிறது; குப்பைக் கூடையில் உடல்களை வெட்டிக் கூறு போட்டு வீசி எறிகிறது; கவுரவமான உடல் அடக்கத்தைக்கூட செய்ய மறுக்கிறது; இந்த ‘மனுதர்ம சிந்தனை’ தீ வைத்துப் பொசுக்கப்பட வேண்டுமா? வேண்டாமா?    

Pin It