ரிவோல்ட்பக்கங்களிலிருந்து....(7)

 (1928 ஆம் ஆண்டிலிருந்து 1930 ஆம் ஆண்டு வரை பெரியார் நடத்திய ‘ரிவோல்ட்’ ஆங்கில வார ஏட்டிலிருந்து சில வரலாற்றுத் தகவல்கள்)

 தேசியம் மற்றும் தீவிர சாதி எதிர்ப்பு எனும் தலைப்பில் ‘ரிவோல்ட்’ கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ன. காங்கிரசின் தேசியம் பார்ப்பனியமாகவும், சாதி வெறியாகவுமே வெளிப்பட்டதை காங்கிரஸ் மாநாடுகளில் நடந்த சம்பவங்களிலிருந்து ‘ரிவோல்ட்’ எடுத்துக்காட்டியது. பிரிட்டிஷ் ஆட்சியை ‘சாத்தான்களின் ஆட்சி’ என்று பேசிய தேசியப் பார்ப்பனர்கள், தங்கள் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் பிரிட்டிஷ் ஆட்சியில் கொழுத்த சம்பளம் பெற்று, பிரிட்டிஷ் விசுவாசிகளாக செயலாற்றியதை ‘ரிவோல்ட்’ பட்டியலிட்டு அம்பலப்படுத்தியது. ‘இது தான் தேசியமா’ என்ற தலைப்பில் ‘ஈ.வி.ஆர்.’ என்ற பெயரில் பெரியார் எழுதிய கட்டுரை, பார்ப்பனர் களின் ‘தேச பக்தியை’ அம்பலப்படுத்தியது. (27 மார்ச் 1929)

 காங்கிரஸ் கட்சி செயலாளர் ரெங்கசாமி அய்யங்கார் மேடைகளில், “பிரிட்டிஷ் அரசை செயல்படாது தடுக்க வேண்டும்; சிங்கத்தை அதன் குகையில் சந்திக்க வேண்டும்” என்று முழங்குவார். அவரது சகோதரர் எஸ். சீனிவாச அய்யங்கார், அதே குகைக்குள் சாதுரியமாக நுழைந்து கொண்டு, வழக்கறிஞர் தொழில் நடத்தி, ஒவ்வொரு நாள் காலையிலும் பிரிட்டிஷ் நீதிபதிகளின் காலை நக்கிக் கொண்டிருப்பார். பிரிட்டிஷ் பிரதி நிதிகளை ‘கனவான்களே’ என்று அழைத்துக் கொண்டிருப்பார்.

 தேசபக்தியில் ஊறிப் போய் நிற்பதாகக் காட்டிக் கொள்ளும் சீனிவாச சாஸ்திரி, டி.ரெங்காச்சாரி, மணி அய்யர், வி.கிருஷ்ண சாமி அய்யர், சி.பி. இராமசாமி அய்யர், சி. விஜயராகவாச்சாரிகள் எல்லாம் தங்கள் குடும்பத்தினரை எல்லாம் அரசு உயர் பதவிகளுக்கு அனுப்பி - அரசிடமிருந்து கொழுத்த சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்கள். 3 சதவீதமுள்ள பார்ப்பனர்கள் 97 சதவீத பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டு, பிரிட்டிஷ் ஆட்சியை முடக்குவோம்; விரட்டி அடிப்போம் என்று மேடைகளில் வீரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே புதிய புதிய அரசியல் கட்சிகள், சுதந்திரக் கட்சி, சுயராஜ்யக் கட்சி, ஹோம் ரூல் இயக்கம் என்று முளை விட்டு ஏழைகளுக்கு பாடுபடுவதாகக் கூறிக் கொண்டு, அதற்காக புதிய பதவிகள், புதிய குழுக்கள், வெளிநாட்டுக்குச் செல்லும் பிரதிநிதிகள் என்று புதிய பதவிகளை உருவாக்கிக் கொண்டனர். ‘ஆங்கிலம் அன்னிய மொழி அதைப் படிக்காதீர்கள்’ என்று மேடைகளில் பேசிக் கொண்டு தங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்த்தனர். சத்திரச் சோறு சாப்பிட்ட பார்ப்பனர்கள், சத்திரத்தின் உரிமையாளர்களாகவே பதவி வாங்கிக் கொண்டு விட்டனர். தேசியப் பார்ப்பனர்கள் பதவிகளுக்கு வராத காலத்தில் அரசாங்கம் வரி மூலம் வசூலித்த தொகை ரூ.25 கோடியிலிருந்து ரூ.30 கோடி வரை தான்.

 40 ஆண்டுகளில் பார்ப்பனர்கள் பதவிகளுக்கு வந்து கொழுத்த சம்பளம் வாங்கியதால் மக்களிடமிருந்து கூடுதல் வரி விதித்து 140 கோடியிலிருந்து 150 கோடி வரை, அரசு வருவாயை அதிகரித்துக் கொண்டது. “சுதந்திர வீரர்களாக” கூறிக் கொண்டு நாட்டின் வருவாயைச் சுரண்டிய பார்ப்பனர்கள், ஒரு காலத்தில் புரோகித பிச்சை எடுத்தவர்கள். ஆனால் பார்ப்பனரல்லாதார் விவசாயிகளாக வும், வணிகர்களாகவும், தொழிலாளர்களாகவும்  இருந்தவர்கள். அவர்கள் எல்லாவற்றையும் இழந்து வெளிநாடுகளுக்கு கூலிகளாக வேலை தேடி ஓட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், இந்த மண்ணில் தேசபக்தி நாடக வேடம் கட்டிக் கொண்டு காங்கிரஸ் ஆட்டம் போடுகிறது என்று அடுக்கடுக்கான வாதங்களை பெரியார் முன் வைத்தார்.

 “அவதூறு பிரச்சாரங்களால் சுயமரியாதை இயக்கத்தை அழித்துவிட முடியாது. சுயமரியாதை இயக்கம் வெற்றி பெற்றே தீரும் என்று துணிவுடன் கூறுவேன்” என்று “ஆர்.எஸ்.” என்ற புனைப் பெயரில் அதற்கு 12 ஆண்டுகளுக்கு முன் காங்கிரசில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்த தோழர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். (‘ரிவோல்ட்’ ஏப்.17, 1929)

 அதில் காங்கிரஸ் கட்சியில் நடந்த ‘வர்ணாஸ்ரம’ங்களை அம்பலப்படுத்தியுள்ளார். 1910 ஆம் ஆண்டு லக்னோவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பார்ப்பனர்கள் சாப்பிடுவதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு முதலில் உணவு பரிமாறப்பட்டது. அதற்குப் பிறகு எஞ்சிய உணவுதான் பார்ப்பனரல்லாதாருக்கு தனியாக பரிமாறப்பட்டது. இரண்டாவது நாள் இன்னும் மோசம். பார்ப்பனர்கள் சாப்பிட்ட இலைகளை அப்படியே கட்டுரையாளர் உள்பட பார்ப்பனரல்லாத பிரதிநிதிகள் தங்கிய அறையில் கொண்டு வந்து போட்டிருந்தனர். இலையிலிருந்து கழிவுகள் அறை முழுதும் வழிந்தோடி துர்நாற்றம் வீசியது. அந்த சூழ்நிலையில் பார்ப்பனரல்லாதார் உணவருந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

 கட்டுரையாளர் உள்ளிட்ட பார்ப்பனரல்லாத பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளியே ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றனர். இத்தனைக்கும் பார்ப்பனரல்லாதார் பிரதிநிதிகள், உணவுக்கான கட்டணத்தை செலுத்தி மாநாட்டுக்கு வந்தவர்கள். பார்ப்பனரல்லாத வர்களை ‘பார்ப்பன வெறுப்பாளர்கள்’ என்று பட்டியலிட்டு, தனியாக ஒதுக்கி வைத்து அவமதித்தார்கள். சுயமரியாதை இயக்கத்தை கடுமையாக விமர்சித்து எழுதி வந்த பார்ப்பனரல்லாத தலைவரான திரு.வி.க.வும் அவமானத்திலிருந்து தப்பவில்லை. ஒரு முறை ‘படித்த பார்ப்பனர்’ ஒருவர், திரு.வி.க.வை அவரது வீட்டுக்கு சாப்பிட அழைத்திருந்தார்.

 பார்ப்பனர் மட்டும் தனது வீட்டின் சமையலறைக்குள் சென்று வயிறு முட்டச் சாப்பிட்டு, திரும்பி வந்து வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொண்டே, திரு.வி.க.வைப் பார்த்து, வீட்டுக்கு வெளியே சென்று சாப்பிடுமாறு கூறினார். “எச்சில் இலை எடுத்து, சாணம் போட்டு கழுவுவதற்கு சங்கடமிருந்தால், வேலைக்காரி அதைச் செய்வாள். நீங்கள் செய்ய வேண்டாம்” என்று திரு.வி.க.விடம் கூறினார், அந்த ‘படித்த நாகரிகமான பார்ப்பனர்’.

 எதற்காக இப்படி, உணவுக்கு அழைத்து அவமானப்படுத்த வேண்டும்? இந்த பார்ப்பனர்கள் தான் சுயமரியாதை இயக்கத்தை நோக்கி குற்றம் சாட்டுகிறார்கள். சுயமரியாதை இயக்கத்தின் வெற்றியை இவர்களால் தடுக்க முடியாது என்று எழுதினார் கட்டுரையாளர் “ஆர்.எஸ்.”.

 (காங்கிரஸ் கட்சியில் இருந்த காலத்தில் பெரியாரும் இப்படி பார்ப்பனர்களால் அவமானப்படுத்தப்பட்ட நிகழ்வுகளை பெரியார் ‘குடிஅரசில்’ பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.)

Pin It