(1938இல் திசம்பரில் சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநில மாநாட்டில் பெரியாரின் தலைமையுரை-சென்ற இதழ் தொடர்ச்சி...)

தோழர்களே!

நம் தற்கால நிலைமையைச் சற்று யோசித்துப் பாருங்கள்.

மேலும் அரசியல் துறையில் நாம் மிகப் பிற்போக்காளர்கள் என்றும், உத்தியோக வேட்டைக்காரர்கள் என்றும் தேசீய உணர்ச்சியற்றவர்களென்றும் ஜமீன்தார் கட்சியினர் என்றும் நம் எதிரிகள் நம்மை அழைக்கின்றனர்.

அரசியலில் நாம் எவ்வகையில் பிற்போக்காளர்கள்? நமது அடிப்படையான அரசியல் கொள்கை எல்லா மக்களும் சம நீதியும், சம உரிமையும், சம சந்தர்ப்பமும் பெற வேண்டுமென்பதே. இக்கொள்கையை இந்நாட்டுத் தீவிர அரசியல் கட்சியான காங்கிரஸ் கைக்கொண்டிருக்கின்றதாவென்று கேட்கின்றேன்?

அப்படியிருந்தால் இன்று காங்கிரசில் பார்ப்பனர்களே ஆதிக்கம் பெற்றிருக்கவும், மற்றவர்கள் கைதூக்க மாத்திரம் உரிமை கொண்டவர்களாகவும் இருக்க யாது காரணம்?

அரசியல் துறையில் காங்கிரஸ்காரர்கள் அந்நியர்கள் இந்நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டுமென்று சொன்னால் நாங்கள் வேண்டாமென்கிறோமா? காங்கிரஸ்காரர்கள் பூரண சுயேச்சை வேண்டுமென்றால் நாங்கள் கூடாது; கால் சுயேச்சை, அல்லது அரை சுயேச்சையே போதுமென்கிறோமா?

காங்கிரஸ்காரர்கள் குடிகளுக்கு வரியே போடக்கூடாதென்றால், நாங்கள் வரி போட்டுத் தான் ஆகவேண்டுமென்று சொல்லுகிறோமா? காங்கிரஸ்காரர்கள் மக்கள் எல்லாம் எழுதப் படிக்கத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாம் அது தப்பு; ஒரு ஜாதி மட்டுந்தான் படிக்க வேண்டும்; மற்றவர்கள் படிப்பது குற்றமென்கின்றோமா? காங்கிரஸ்காரர்கள் ஜாதி வேற்றுமை கூடாது; எல்லோரும் ஒரு குலம் என்றால், நாங்கள் ஜாதி வேற்றுமை இருக்கத்தான் வேண்டும் என்கின்றோமா?

காங்கிரஸ்காரர்கள் மக்களெல்லாம் கோவிலுக்குள் யாதொரு தடையுமின்றி நுழையலாம் என்றால், அது தவறு என்று கூறுகிறோமா? காங்கிரஸ்காரர்கள் இந்நாட்டில் வரிகொடுக்கும் சகல ஜாதி, மத, வகுப்புக்களுக்கும் நிர்வாகத்திலும், நீதியிலும், பதவியிலும் சம உரிமையளிக்கப்பட வேண்டும்; அதற்குள்ள குறைகள் தகர்க்கப்பட வேண்டும் என்றால், அது கூடாது என்கிறோமா? எந்த வகையில் நாம் பிற்போக்காளர் என்பதை அவர்கள் தக்க ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுவார்களா?

நாம் உத்தியோக மோகங்கொண்டவர்கள் என்று குறை கூறப்படுகின்றோம். ஆனால் நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விகிதாசாரத்திற்கு அதிகப்படியான உத்தியோகம் பெறவேண்டும் என்று விரும்புகின்றோமா? பார்ப்பனர்கள் தங்கள் விகிதாச்சாரத்துக்குப் பெற்றுள்ள அளவுக்கு மேல் உத்தியோகம் பெறவோ, அன்றி உத்தியோகங்களெல்லாம் நமக்குமாத்திரந்தான் இருக்க வேண்டு மென்றோ ஆசைப்படுகின்றோமா? அல்லது கடந்த 17 வருட ஆட்சியில் எந்த வகுப்பார்களை அவர்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய விகிதத் தைப் பெறமுடியாமல் செய்துவிட்டோம்? அல்லது அவ்விகிதாசாரத்தைக் குறைத்து விட்டோம்? உத்தியோகம் பெற அனை வர்க்கும் உரிமை உண்டு. எல்லோரும் அதற்குத் தகுதியுடை யவர்களாக வேண்டியவர்களேயாவார்கள்.

உத்தியோகத்திற்குரிய அதிகாரம், பொறுப்பு, செல்வாக்கு எல்லாம் நாட்டு மக்களை நன்கு நடத்தவும், அவர்களுக்குத் தொண்டாற்றவுமேயாகும். உத்தியோகத்திற்கு ஏற்பட்டுள்ள சம்பளம் இந்நாட்டு மக்கள் கொடுக்கும் வரிப் பணத்திலிருந்தே கொடுக்கப்படுகின்றது. அத்தகைய உத்தியோகத்தைப் பெற விரும்புவது நாட்டிலுள்ள எல்லா வகுப்பு மக்களின் பிறப்புரிமை என்று சொல்வதும் உத்தியோகம் பெற முயற்சிப்பதும் எப்படி உத்தியோக வேட்டையாகு மென்பது நமக்கு விளங்கவில்லை.

நமக்குத் தேசீய உணர்ச்சியில்லையா? ‘தேசீய’ என்ற ஆரிய (வட) மொழிச் சொல்லுக்குச் சரியான ஆங்கில மொழிச் சொல் நேஷனல் (National) என்பதாகும். ‘நேஷனல்’ என்ற சொல்லுக்கு ‘ஜாதியம்’ என்பதுதான் சரியான கருத்து எனக் கற்றோர் கூறுகின்றனர். அகராதியும் சொல்லுகிறது.

ஐரோப்பாக் கண்டம் என்ற ஒரு பூபாகத்தில் ஜெர்மனி நேஷன் வேறு; இத்தலி நேஷன் வேறு. ஐரோப்பிய மகாயுத்தத்திற்கு முன்பு போலிஷ் ஜனங்கள் தனி நாடின்றி ருஷிய, ஆஸ்திரிய, பிரஷிய ஆதிக்கங்களுக்குட் பட்டிருந்தும் தங்களை ஒரு நேஷன் என்று சொல்லி வந்தனர். யூதர்களுக்கெனத் தனிப்பட்ட நாடொன்று தற்போது இல்லாவிடினும் யூதர்களும் ஒரு நேஷனே.

மேலே காட்டியபடி நேஷன் என்ற வார்த்தைக்கும் பொருள் கொண்டு பார்த்தால் இந்தியாவை ஒரு நேஷன் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? மொழிகளை அடிப்படையாக வைத்துப் பிரித்தால் இந்தியாவை அநேக நேஷன்களாகப் பிரிக்கலாம். அல்லது அங்கமச்ச அடையாளத்தின் மீது பாகுபாடு செய்தாலும் ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள் எனப் பல (நேஷன்) பிரிவுகளாகும். பழக்கவழக்க சமுதாயக் கோட்பாடுகளைக் கொண்டு பிரித்தாலும், அதுவும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாத இந்துக்கள் எனப் பல ஜாதி வகுப்புக்களாகப் பிரிக்கப்படும். மற்றும் எவ்வகையில் பார்த்தாலும் ‘இந்திய நேஷன்’ என்பதற்கு இந்தியா முழுமையும் சேர்ந்த நிலப்பரப்பு மாத்திரம் என எவ்வாறு பொருள்படும்?

ஆந்திர தேசீயவாதிகள் சென்னை மாகாணத்தை விட்டுப் பிரிந்து தனி மாகாணமொன்று ஏற்படுத்தி அதன் நிர்வாகத்தைத் தாங்களே மேற்கொள்ள வேண்டுமென்று முயற்சிக்கின்றனர். அவ்வாறே ஒரிசாவும், சிந்துவும் தனித்தனி மாகாணமாய் விட்டன. பர்மாக்காரர்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து ‘பர்மா பர்மியருக்கே’ (Burma for Burmans) என்று தீவிர கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றது நாம் அறிந்ததே. இலங்கைக்காரர்களும் இப்படியே. மற்றொரு வகையில் வடமேற்கெல்லை முஸ்லீம்கள் இந்துக்களிடமிருந்து பிரிந்து கொண்டார்கள். இப்படியே ஒரே மதத்தினரும், ஜாதியினரும் கூடத் தனித்தனி பிரிந்துபோக ஆசைப்படும்போது, இந்திய தேசிய சங்கம் என்னும் காங்கி ரஸும் இதை அனுமதிக்கும்போது, “தேசீயம்”, “தேசீயம்” என்று பறையறைவதின் அர்த்தந்தான் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.

வங்காளிகளிடமிருந்தும், குஜராத்திகளிடமிருந்தும், காஷ்மீரி களிடமிருந்தும், சிந்திகளிடமிருந்தும், தமிழ்நாட்டினர், ஆந்திர நாட்டினர், மலையாள கன்னட நாட்டவர் பிரிந்து போக வேண்டு மென்று எண்ணுவது தேசீயத்திற்கு விரோதமா? அதேபோல் ஆரியர்களிடமிருந்தும் மங்கோலியர்களிடமிருந்தும், திராவிடர்கள் பிரிந்துபோக நினைப்பது தேசீயத்திற்கு விரோதமாகுமா? வெள்ளையர் ஆட்சியின்கீழ் இல்லாவிட்டால் அந்நியர் படையெடுப்பினின்று நம்மைக் காத்துக் கொள்ள முடியாதெனக் கூறப்படுமானால் சிலோன், பர்மா இவைகளைப் போலவோ அன்றி கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இவைகளைப் போன்றோ தமிழ்நாடோ திராவிட நாடோ பிரிந்திருக்கலா

மல்லவா? வெள்ளையர் ஆட்சியின் கீழேயே இருக்கலாகாது; பூரண சுதந்தரம் பெற்ற தேசமாக இருக்கலாம் எனப்படுமானால் ஐரோப்பாவில் 3 கோடி 4 கோடி ஜனத்தொகை கொண்ட பெல்ஜியம், ஹாலண்டு, ஸ்விட்ஸர்லாண்டு, டென்மார்க் போல சென்னை மாகாணமோ, தமிழ்நாடோ தனித்த நாடாக இருப்பது அசாத்தியமா?

அப்படிக்கின்றி இந்திய தேசீய சபையின் சர்வாதிகாரி குஜராத்தி நேஷனைச் சேர்ந்தவர்; பெருந்தலைவர் களிலே ஒருவர் காஷ்மீரி நேஷனைச் சேர்ந்தவர்; மற்றொருவர் வங்காளி நேஷனைச் சேர்ந்தவர். நிர்வாக சபையினர் அனைவரும் தமிழர்களோ, தமிழ் நாட்டினரோ அல்லாமல் இதரர்களாயிருந்துகொண்டு தேசீயம் பேசுவதென்றால் காங்கிரஸ் உண்மையில் எவ்வாறு தேசீய சபையாகும்? அன்றியும் இந்தியா முழுவதும் ஒரே நாடு என்று தான் எவ்வாறு சொல்வது? அவ்வாறு கூறுவதற்குப் பூகோளப் படம் தவிர வேறு என்ன ஆதாரமிருக்கிறது? ஐரோப்பிய பூகோளப் படத்தைப் போலவே இந்தியப் பூகோளப் படமும் வருடத்திற்கு ஒருமுறையில்லாவிட்டாலும் அடிக்கடி திருத்தப்படுவதை நாம் பார்க்கிறோம். இரண்டு ஜில்லாக்கள் ஒரு ஜில்லா வாகின்றன; பெரிய மாகாணங்கள் சிறியனவாகவும், சிறியன பெரியனவாகவும், மாற்றியமைக்கப்படுகின்றன. சென்னைக் காரனும் வங்காளியும் சுரண்டுவதை பர்மாக்காரன் பொறுக்க முடியாமல் துடிக்கிறான்.

தென்னாட்டான் சுரண்டுவதைப் பொறுக்கமாட்டாமல் சிங்களத்தான் சீறுகிறான். குஜராத்தி சுரண்டலும் இந்து மார்வாடி சுரண்டலும் தமிழ்நாட்டைப் “பாப்பரா”க்குகிறது. இதற்கு நாம் துடிதுடித்தால் தேசீயத்திற்கு விரோதமாய் விடுகிறது! திராவிட மக்கள் (தமிழ் மக்கள்) மீது ஆரீய மதம் சுமத்தப்பட்டு அத்தமிழர் உழைப்பின் பலனையெல் லாம் தமிழரல்லாத ஒரு சிறு கூட்டத்தவர்கள் பகற்கொள்ளை போல் சுரண்டுவதை, உறிஞ்சுவதை, இது நீதியா, முறையா, அடுக்குமா என்று கேட்கப் புகுந்தால் அது தேசீய துரோக மாவதுடன் ராஜதுவேஷமும், வகுப்புத் துவேஷமுமாகி விடுகிறது. இம்மாதிரி தேசீய வேஷம் போட்டு நாம் அழிந்து போவதா? அல்லது அதைக் கண்டு பயந்து தற்கொலை செய்து கொள்வதா? தோழர்களே! ஆழ்ந்து யோசியுங்கள்.

உலக ஒற்றுமையை நான் வெறுப்பவனல்ல. உலக மக்கள் சமதர்ம வாழ்வை மேற்கொள்வதை வேண்டாமென்று கூறவில்லை. மக்கள் யாவரும் விகிதாசாரம் உழைத்து அவ்வுழைப்பின் பலனை விகிதாசாரம் பகிர்ந்து, தத்தம் தகுதிக்கும் தேவைக்கும் அவசியமான அளவு அனுபவிப்பதை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் தேசீயம் என்றும், தேச சேவையென்றும், தேச பக்தி என்றும், தேச விடுதலை என்றும், தேச ஒற்றுமை என்றும், ஆத்மார்த்தம் என்றும், பிராப்தம் என்றும் பல பல சொற்களைக் காட்டி மெய்வருந்திப் பாடுபட்டுப் பொருளீட்டும் பொது மக்களை, கட்டின ஆடை கசங்காமல், மெய்யில் வெய்யில் படாமல் வாழ்க்கை நடத்தும் ஒரு சிறு கூட்டத்தார், வஞ்சித்து, ஏமாற்றி வயிறு வளர்ப்பதை, ஏன்? உழைப்பாளிகளைவிட அதிகச் சுகமான வாழ்வு வாழ்வதை அடியோடு ஒழிக்க வேண்டுமென்பதற்காகவே நான் இதைச் சொல்லுகிறேன். ஆகவே தேசீயம் என்கின்ற பேச்சு ஆத்மார்த்த விஷயத்தில் மோக்ஷம் வாங்கித் தருவது என்ற கூற்றுக்குச் சரியான கருத்தைக் கொண்டதேயாகும்.

நாம் செய்தவை

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்னும் பார்ப்பனரல் லாத மக்களடங்கிய ஸ்தாபனத்தின் பெயரால் 1920ஆம் ஆண்டு தொடங்கி 17 வருடகாலம் அரசியல் அதிகாரத்திலே ஆலோசனை கூறுபவர்களாகவும், சில இலாக்காக்களின் நிர்வாகத் தலைவர் களாகவுமிருந்து நம்மவர் நாட்டிற்குச் சேவை செய்துவந்த காலத்தில் சுயராஜ்யம் பெருவதற்குத் தடையாக அவர்கள் செய்த காரியம் யாவை என்றும், நாட்டு மக்கள், நலத்திற்குச் செய்ய வேண்டுவனவற்றில் செய்யத் தவறியன யாவை என்றும் யாராவது சொல்ல முன்வருவார்களா என நான் அவர்களை அறைகூவி அழைக்கின்றேன்.

சமுதாயத்தில் ஜாதிபேதக் கொடுமைகளை ஒழிக்க அரும்பாடுபட்டு, மக்களாயிருந்தும் கேவலம் விலங்குகள் போல நடத்தப்பட்ட, தெருவிலும் நடக்கத் தகுதியற்றவர்கள் எனக் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களுக்குச் சமுதாய உரிமைகளை வாங்கிக் கொடுத்தது யார்? சகல ஜாதி, மத வகுப்பினருக்கும் சமுதாய சேவையிலும், அரசாங்க சேவையிலும் பங்கெடுத்துக் கொள்ளச் சந்தர்ப்பம் அளித்தது யார்? கல்வித் துறையில் பிற்போக்கடைந்திருந்த மக்களுக்கு பலவகை வசதிகளையுண் டாக்கி அவர்களும் கல்விபெற்று எத்தகைய பணிக்கும், பதவிக்கும், சேவைக்கும் அருகதையுடையவர்களாகும்படி செய்தது யார்? ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளல்லவா?

1920ஆம் ஆண்டில் 1,25,00,000 ரூபாய் கல்விக்காக நம்மாகாணத்தில் சர்க்காரால் செலவு செய்யப்பட்டது. அத் தொகையில் பெரும்பாகம் மேல் ஜாதிப் பிள்ளைகள் படிக்கும் உயர்தரப் படிப்பிற்கே செலவிடப்பட்டு வந்தது. கல்வியிலாகா நிர்வாகமும், உத்தியோகமும் இந்துக்களில் 100க்கு 95ஙூ விகிதம் பார்ப்பனர் கையிலேயே இருந்து வந்தது.

இக்காரணத்தால் பார்ப்பனரல்லாத மக்களின் பிள்ளைகள் ஆரம்பப் படிப்பு கூடப் படிக்க முடியாமற் போய்விட்டது. ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்தில் தாங்கள் விரும்பியபடி நிர்வாகத்திலும் உத்தியோகங்களிலும் போதிய அளவு மாறுதல்கள் செய்ய இயலவில்லை யெனினும் முன்பு கல்விக்குச் செலவு செய்யப்பட்ட தொகையைவிட இரண்டு மடங்கு தொகையான ரூ.2,50,00,000 செலவிட்டிருக்கின்றார்கள். 1937இல் கல்விக்காக 2,55,00,000 ரூபாய் செலவிட்டிருக்கின்றனர். இத்தொகையில் பெரும்பாகம் ஆரம்பக் கல்விக்கே செலவிடப்பட்டது. இம்மாதிரியே சுகாதாரம், வைத்தியம் முதலிய இலாக்காக்களும் பலவழிகளிலும் அவர்களாட்சியில் முன்னேற்றமடைந்து வந்திருக்கின்றன.

பொருளாதாரம்

சர்க்கார் அதிகாரிகள் சம்பளச் செலவில் சுமார் ஒரு கோடி ரூபாய் குறைப்பதற்கு வேண்டிய பிரயாசையை ஜஸ்டிஸ் கட்சியார் பதவிக்கு வந்தவுடன் எடுத்துக் கொண்டனர். வரி விஷயத்தில் 100க்கு 25 விகிதம் வரையில் குறைக்க ஏற்பாடு செய்தனர். பல துறைகளிலும் அபிவிர்த்தியும் செய்துகொண்டு, வரியையும் குறைப்பதென்றால் அதுவும் இன்று இருப்பதுபோல் பூரண அதிகாரமும், சட்டப்படி உரிமையும் இல்லாத காலத்தில் எவ்வளவு சிரமம் என்பதை ஆலோசியுங்கள். இதற்குமேல் அவர்களிட மிருந்து அதிகமாக யார் எதிர்பார்க்கக்கூடும்?

இன்றைய மந்திரிகள்

பூரண அதிகாரம் பெற்ற இன்றைய மந்திரிகளோ பள்ளிக்கூடங்களை எடுக்கின்றார்கள். பிள்ளைகள் சம்பளங்களை உயர்த்துகிறார்கள். கல்வி விஷயத்தில் பிற்போக்கான ஜாதி யார்களுக்கு இதுவரை இருந்து வந்த சில வசதிகளையும் குறைக்கின்றனர். பல உத்யோகங்களையும் நீக்குகின்றார்கள். ஆனால் கூடவே புது வரியும் போடத்தவறுவதில்லை. வரவு செலவுத் திட்டத்தைச் சரிப்படுத்த முடியாமல் புதுப் புதுக் கடன்கள் வாங்கி வருகின்றார்கள். ஏற்கனவே 18 மாதத்தில் 4ஙூ கோடி ரூபாய் கடன் வாங்கியாகிவிட்டது.

நிர்வாகத் திறமை

ஜஸ்டிஸ் மந்திரிகளுக்கு நிர்வாகத் திறமையில்லை யெனக் குறைகூறினார்கள். இன்று காங்கிரஸ் மந்திரிகள் தங்களால் நிர்வாகம் செய்ய முடியவில்லையே என வெளிப்படையாகவே சொல்லிக் கொள்ளுகின்றனர். தாங்கள் போட்ட நிர்வாக உத்தரவுகளை அடிக்கடி மாற்றிவருவதும் நாம் அறிந்ததே. அவர்கள் செய்யும் காரியங்கள் வகுப்புணர்ச்சியைக் கொண்டு செய்யப் படுவதாகப் பொது ஜனங்களால் குறைகூறப்படவும் அதைச் சரியென ஒப்புக்கொண்டு தங்கள் காரியங்களைத் திருத்திக்கொண்டு வருவதையும் யாரே உணராதார்? உத்தியோகங்களைச் சிருஷ்டிப்பதிலும், உத்யோகஸ்தர்களை நியமிப்பதிலும், தள்ளுவதிலும் வகுப்புணர்ச்சி ததும்பி நிற்பதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். தங்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் அதிகமான நட்பும் நம்பிக்கையும் வளரும் படியே நிர்வாகம் நடத்துகிறார்கள். இந்த அரசியலைத் தகர்த்துப் பொடி பண்ண தாங்கள் தான் தகுதியுள்ளவர்கள் எனத் தமுக்கடித்து ஓட்டுப் பெற்ற இவர்கள் அரசியலை நடத்துவதற்குத் தங்களாலன்றி வேறு யாராலும் முடியாதென பெருமை பாராட்டிக் கொள்ளுகிறார்கள். வைஸ்ராய் பிரபு, கவர்னர் பிரபு இன்னுமுள்ள இதர ஆங்கில அதிகாரிகளும் பலே பேஷ்! சபாஷ்! நல்ல அடிமைகள்! என மெச்சித் தட்டிக்கொடுத்து வருகின்றார்கள்.

தங்களால் நிர்மாணிக்கப்படாத எந்த அரசியல் திட்டத்தையும் தாங்கள் ஒப்புக்கொண்டு நடத்த முடியாது என்று வீம்பு பேசியவர்கள் எப்படிப்பட்ட மோசமான, பிற்போக்கான திட்டமானாலும் எங்களால் நடத்தமுடியுமென்று ஜம்பம் பேசுகிறார்கள். நம்மை வகுப்புவாதிகள் என்றும் தங்களுக்கு வகுப்புவாத உணர்ச்சியே கிடையாதென்றும் சொல்லி வந்த இவர்கள் மந்திரிசயைமைப்பில், கிறிஸ்தவர்களைப் புறக்கணித் தார்கள். தொழிலாளர் வகுப்புகளைப் புறக்கணித்தார்கள். பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. அம்மட்டோ? இவர்களுடைய நலன்களைப் பாதிக்கும் விதத்திலும் நடந்து வருகிறார்கள்.

“ஜஸ்டிஸ் கட்சி ஜாதி அபிமானமுடையது; கட்டுப்பாடற்றது” என்றெல்லாம் குறைகூறினவர்கள் காங்கிரஸுக்கே இழிவு தேடினவர்களையும் காங்கிரசுக்குத் துரோகம் செய்தவர்கள் என்று காங்கிரஸ்காரர்களாலேயே குற்றஞ் சாட்டப்பட்டுத் தண்டிக்கப்பட்டவர்களையும் அவர்களிடமிருந்து மன்னிப்புக் கூடப் பெறாமல் கட்டுப்பாட்டை உதறித்தள்ளிவிட்டு சுயஜாதி அபிமானத்தால் மந்திரிகளாக்கிக் கொண்டனர்.

ஸ்தல ஸ்தாபனங்களில் முனிசிபல் கமிஷனர்களை ஏற்படுத்தியதைக் குறைகூறினார்கள். ஜில்லா போர்டுகளை எடுக்க வேண்டுமென்றார்கள். இவர்கள் பதவிக்குவந்து பதினெட்டு மாதங்களாகியும் பல காங்கிரஸ் மகாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தும் மேற்கண்ட மாறுதல்களைச் செய்யவோ அல்லது செய்யப் போவதாகச் சொல்லவோ முன்வரவில்லை. சகல துறைகளிலும் நடைபெற்றுவரும் பழைய முறையே சரியெனச் சொல்லிக் கொண்டு அம்முறைகளைத் தங்கள் வகுப்பிற்கு அனுகூலம் தரத்தக்க முறையில் மட்டும் மாற்றிக்கொண்டு ஆட்சி நடத்தி வருகின்றார்கள்.

தேர்தல் காலத்தில் பொது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளெல்லாம் காற்றில் தூற்றிவிடப்பட்டன. காங்கிரஸ் திட்டங்களுக்கும், பொது ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும் நேர்மாறான பல காரியங்களை மட்டும் செய்து வருகின்றனர். பொதுஜன அபிப்பிராயத்தையோ, உணர்ச்சியையோ ஒரு சிறிதும் பொருட்படுத்துவதாகக் காணோம்.

- தொடரும்

Pin It